பக்கங்கள்

வெள்ளி, 21 நவம்பர், 2014

கடனில் பேணுதல்







ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
பனூ இஸ்ராயிலின் சந்ததியினரில் ஒருவர் மற்றொருவரிடம் ஆயிரம் பொற்காசுகள் கடன் கேட்டார். அதற்கு அவர் சாட்சிக்காக எவரையாவது அழைத்து வாரும். நான் அவரை சாட்சியாக்கி பணமே தருகிறேன் எனக்கூறினார். அதற்கு (கடன் கேட்பவர்) அல்லாஹ் சாட்சியாக போதுமானவன் என்று கூறினார்.


ஜாமீன் (பொறுப்பு) ஏற்றுக் கொள்ள ஒருவரை என்னிடம் அழைத்துவாரும் என்று கூறினார். அதற்கு கடன் கேட்பவர் அல்லாஹ்வே எனக்கு பொறுப்பு இருக்க போதுமானவன். என்று கூறினார். அதற்கு அவர் "நீர் உண்மையை கூறினீர்." என்று சொல்லிவிட்டு அவருக்கு ஆயிரம் பொற்காசுகளை ஒரு குறிப்பிட்ட தவணைவரை கடனாக கொடுத்தார்.


பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர் கடல் வழியாக பிரயாணம் செய்து தம் தேவைகளை முடித்து கொண்டு (பொருளீட்டிக் கொண்டு) குறிப்பிட்ட தவணைக்குள் திரும்பி விட கப்பலை தேடினார். ஒரு கப்பலும் அவருக்கு கிடைக்கவில்லை.


எனவே அவர் ஒரு மரத்துண்டை எடுத்து அதில் துளையிட்டு அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும், அதற்குரியவருக்கு ஒரு கடிதமும் எழுதிவைத்து, பின்னர் அத்துளையை ஒழுங்காக மூடி மறைத்து கடல் ஓரமாக அதை கொண்டு வந்து, "யா அல்லாஹ்...  நான் இன்னாரிடம் ஆயிரம் பொற்காசுகளை கேட்டதற்கு அவர் சாட்சி கோரினார். அதற்கு நான் அல்லாஹ்வே சாட்சியாக இருக்க போதுமானவன் என்று கூறினேன். அவரும் இதனை ஏற்று கொண்டார்.


மேலும் அவர் என்னிடம் பொறுப்பு ஏற்கும்படியான ஜாமீன் ஒருவர் வேண்டும் என்றார். அதற்கு நான் அல்லாஹ்வே பொறுப்பு ஏற்கக் கூடியவனாக இருக்கிறான். எனக் கூறினேன். அவர் அதையும் ஏற்றுக்கொண்டு பொற்காசுகளை குறிப்பிட்ட தவணைவரை கடணாக கொடுத்தார்.


நான் (குறிப்பிட்ட தவணைக்குள் அவரை சென்றடைய) கப்பலை தேடினேன். அது எனக்கு கிடைக்கவில்லை என்பதை நீ அறிவாய் ஆகவே, (கடனை நிறைவேற்றும் பொருட்டு) இம்மரத்தை உன்னுடைய பாதுகாப்பில் விட்டுவிடுகிறேன். (நீ அதை உரியவரிடம் சேர்ப்பாயாக." என்று கூறி கடலில் எறிந்து விட்டு சென்று விட்டார்.


பின்னர் கடன் கொடுத்தவர் (தவணைவேளை வந்ததும்) தன் கடன் பொருள் ஏதும் கப்பலில் வந்திருக்ககூடும் என்று பார்ப்பதற்காக கடற்கரை ஓரமாக புறப்பட்டு வந்தார். அப்போது மரம் ஒன்று ஓரமாக அவர் பார்வையில்பட்டது. அவர் அதனை தன் வீட்டினர் விறகாக பயன்படுத்த உதவும் என நினைத்து அதனை எடுத்து கொண்டு வந்து (விறகிற்காக) உடைத்தார்.


அப்போது அதில் பணத்தையும், கடிதத்தையும் கண்டார். சில நாட்களுக்குபின் கடன் வாங்கியிருந்தவர் தவணைக்கு பிறகு தாமதமாக ஊர் அடைந்து, கடன் கொடுத்தவரிடம் சென்று, குறிப்பிட்ட தவணைக்கு வந்து சேர தனக்கு கப்பல் கிடைக்கவில்லை என்று வருந்தி கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், நீ மரத்தில் அனுப்பியதை உரிய நேரத்தில் அல்லாஹ் என்னை வந்தடையச் செய்து விட்டான் என்று கூறி, ஆயிரம் பொற்காசுகளையும் நீயே திரும்ப வைத்து கொள் என்று அன்பளிப்பாக கொடுத்துவிட்டார்.


                                             நூல். புகாரி.


கடன் வாங்கியவரிடம் திரும்ப கொடுக்க வேண்டும் என எண்ணம் உண்மையானதாக இருந்ததால், அல்லாஹ் அவருக்கு இவ்விதம் உதவி செய்துள்ளான். வாக்கையும் கடனையும் நிறைவேற்றுவதில் உறுதி இருந்ததற்கு கிடைத்த உதவியை இச்சம்பவத்தின் மூலம் விளங்கலாம்.


             நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.



திருப்பி கொடுக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் மக்களின் பொருட்களை ஒருவன் கடனாக பெறுகிறான் என்றால் அவன் சார்பில் அக்கடனை அல்லாஹ் நிறைவேற்றித் தருகிறான். ஆனால் கடனை திருப்பி தரும் எண்ணமே இல்லாமல் ஒருவன் வாங்கினால் அதன் காரணமாக அவனை அல்லாஹ் அழித்துவிடுகிறான்.  ஹழ்ரத் அபூஹுரைரா ரலி.

1 கருத்து: