பக்கங்கள்

வியாழன், 2 ஜூலை, 2026

நிம்மதியின் திறவுகோல் திக்ர்”

 


“நிம்மதியின் திறவுகோல் திக்ர்”


اَلْحَمْدُ لِلّٰهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوْذُ بِاللّٰهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللّٰهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ۔

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ، وَيَسِّرْ لِي أَمْرِي ، وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي ، يَفْقَهُوا قَوْلِي

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لا يَذْكُرُ رَبَّهُ، مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ


உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான். நிம்மதி, மகிழ்ச்சி, அமைதி — இதுவே எல்லோருடைய இறுதி இலக்கு. வசதிகள் பெருகிவிட்டன, வீடுகள் ஏசியாக மாறிவிட்டன, ஆனால் உள்ளங்களில் ஏனோ இன்னும் நிம்மதி இல்லை. ஏன் இந்த நிலை?


மனித உடல் மண்ணால் படைக்கப்பட்டது, எனவே அதன் பசிக்கு மண்ணிலிருந்து விளையும் உணவு தேவைப்படுகிறது.ஆனால், மனிதனின் ஆன்மா (ரூஹ்) அல்லாஹ்விடமிருந்து வந்தது. அதற்குரிய உணவு உலகப் பொருட்கள் அல்ல; மாறாக அதன் உணவு அல்லாஹ்வின் நினைவு (திக்ரு) மட்டுமே.


இஸ்லாத்தில் உள்ள பெரும்பாலான வணக்கங்களுக்கு (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றுக்கு) நேரம், காலம், உடல் தகுதி, அல்லது பண வசதி தேவைப்படுகிறது.ஆனால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, படுத்த படுக்கையாக இருந்தாலும், வாகனத்தில் சென்றாலும், நாவசைத்த மாத்திரத்தில் நன்மைகளை அள்ளித் தரும் ஒரே இபாதத் திக்ரு மட்டுமே.


உலகில் நாம் யாருக்காவது நன்றி சொன்னால், அவர்கள் "தேங்க்ஸ்" என்று சொல்லி நகர்ந்து விடுவார்கள். ஆனால், அல்லாஹ்வோடு நாம் செய்யும் திக்ரு வியாபாரம் முற்றிலும் வேறானது.அல்லாஹ் கூறுகிறான்: "ஃபத்குரூனீ அத்குர்கும்" — நீங்கள் என்னை நினைத்துப் பாருங்கள், நான் உங்களை நினைப்பேன்! (அல்குர்ஆன் 2:152). அகிலங்களின் அதிபதி நம்மை நினைப்பதைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு வேறு என்ன பெருமை வேண்டும்?


மனிதன் எப்போதெல்லாம் அல்லாஹ்வை மறந்து விடுகிறானோ, அப்போதெல்லாம் அவனது உள்ளத்தை ஷைத்தான் ஆக்கிரமித்துக் கொள்கிறான். அவனுக்குக் கவலைகளையும், வீண் பயங்களையும் ஊட்டுகிறான்.

எப்போது ஒரு அடியான் "லா இலாஹ இல்லல்லாஹ்" அல்லது "சுப்ஹானல்லாஹ்" என்று திக்ரு செய்கிறானோ, அப்போது ஷைத்தான் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறான். திக்ரு என்பது ஈமானின் கவசம்.


எனவே, நம்முடைய கவலைகள் மாற, உள்ளங்கள் குளுமை பெற, நம்முடைய நாவுகள் எப்போதும் அல்லாஹ்வின் நினைவால் நனைந்திருக்க வேண்டும்.


இத்தகைய திக்ரை நாம் எவ்வாறு நம் வாழ்வில் கொண்டு வருவது, அதன் மூலம் ஸஹாபாக்கள் அடைந்த உயர்வுகளைப் பற்றி இப்போது நாம் சிந்திப்போம்…


உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தேடுவது மனநிம்மதியையும் சந்தோஷத்தையும் தான். அது இறை நினைவில் திக்ரில் தான் இருக்கிறது.


உலகப் பொருட்களின் எல்லை:


மனிதன் பணம், சொத்து, திருமணம் அல்லது பெரிய அதிகாரப் பதவி கிடைத்துவிட்டால் நிம்மதி கிடைத்துவிடும் என எண்ணுகிறான். ஆனால், யதார்த்தத்தில் பொருளாதாரம் கூடும்போது அதற்கேற்ப கவலைகளும், திருமணம் மற்றும் பதவிக்கு பின்னால் புதிய சவால்களும் தான் முளைக்கின்றனவே தவிர, எதிர்பார்த்த முழுமையான நிம்மதி கிடைப்பதில்லை.


நெருக்கடியான வாழ்வு திருக்குர்ஆனில் அல்லாஹ், "யார் எனது திக்ரை (நினைவை/தியானத்தை) புறக்கணிக்கிறானோ அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே அமையும்" என எச்சரிக்கிறான்.


அல்லாஹ்வை திக்ரு செய்வது தர்மம் செய்வதை விட, 

ஜிகாதை விடச் சிறந்தது


أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ ، وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالْوَرِقِ ... قَالُوا : بَلَى قَالَ : ذِكْرُ اللَّهِ تَعَالَى

"உங்களுடைய செயல்களில் மிகச் சிறந்த, உங்கள் இறைவனிடம் தூய்மையான, உங்கள் அந்தஸ்துகளை உயர்த்தக்கூடிய, தங்கத்தையும் வெள்ளியையும் தர்மம் செய்வதை விடவும் உங்களுக்கு மிகச் சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று நபியவர்கள் கேட்டபோது, தோழர்கள் "ஆம்" என்றனர். அதற்கு நபியவர்கள், "அல்லாஹ்வை திக்ரு செய்வது தான்" என்றார்கள். (நூல்: திர்மிதி)


நாவிற்கு இலகுவான இரு வார்த்தைகள் 

كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي المِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ العَظِيمِ

"இரண்டு வார்த்தைகள் உள்ளன; அவை நாவிற்கு மிக எளிதானவை, (மறுமையின்) தராசில் மிகக் கனமானவை, அளவற்ற அருளாளனாம் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானவை. (அவை): சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அழீம்." (நூல்: புகாரி)


ஒரு முஸ்லிமின் வாழ்வில் திக்ர் இல்லாத நேரமே இருக்க முடியாது. மனிதன் அசுத்தமான கழிவறைக்குள் இருக்கும் போது மட்டுமே இறைவனை தியானிக்க முடியாது. அதனால் தான், கழிவறையை விட்டு வெளியே வந்ததும் ஓதும் துஆவில் ஆரம்பமே "இறைவா என்னை மன்னிப்பாயாக" (குஃப்ரானக) என்று தொடங்குகிறது. அதாவது "இவ்வளவு நேரம் உன்னை தியானிக்காமல் இருந்துவிட்டேனே, என்னை மன்னித்து விடு" என்ற ஆழமான பொருளில் அந்த திக்ர் அமைந்துள்ளது.


يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا 

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ரு (நினைவு) செய்யுங்கள்!" (அல்குர்ஆன் 33:41)


திக்ரின் ஏழு வகையான பலன்கள் 


1: ஷைத்தானிடமிருந்தும் பாவங்களிலிருந்தும் முழுமையான பாதுகாப்பு


திக்ர் ஒரு மனிதனை தீய எண்ணங்களில் இருந்தும் ஷைத்தானின் ஊசலாட்டங்களிலிருந்தும் அரணாகப் பாதுகாக்கிறது.


ஷைத்தானின் பிடியிலிருந்து ஒருவன் தப்பித்துவிட்டாலே அவனது வாழ்வில் பாவங்கள் குறையத் தொடங்கும்.


கொடுக்கல்-வாங்கலில் நேர்மை, வியாபாரத்தில் நாணயம், பேச்சில் உண்மை மற்றும் அழகிய குணங்கள் யாவும் பாவங்களிலிருந்து விலகி திக்ரின் நிழலில் வாழும்போதே சாத்தியமாகிறது. அடுத்தவர் உரிமைகளைப் பறிக்காமல் இருக்கவும், கடமைகளில் தவறாமல் இருக்கவும் இது உதவுகிறது.


யஹ்யா (அலை )அவர்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து கட்டளைகள்


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை தங்களின் உன்னதத் தோழர்களிடம். அல்லாஹ் தன் தூதர்களான யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்திய ஒரு வரலாற்றைக் கூறினார்கள்.


அல்லாஹ் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஐந்து மிக முக்கியமான கட்டளைகளை வழங்கி, அவற்றை அவரும் பின்பற்றி, பனூ இஸ்ரவேல் மக்களுக்கும் கட்டளையிடுமாறு வஹி அனுப்பினான். ஆனால், அந்தப் பொறுப்பின் கனம் காரணமாக யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சற்றுத் தாமதம் செய்தார்கள். இதைக் கவனித்த அவர்களின் சமகாலத்து நபியும், உறவினருமான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்தார்கள்.


ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்: "என் சகோதரரே! ஐந்து விஷயங்களை நீங்களும் செயல்படுத்தி, மக்களுக்கும் கட்டளையிடுமாறு அல்லாஹ் உங்களுக்கு வஹி அனுப்பியுள்ளானே! ஒன்று நீங்கள் அதனை மக்களிடம் கூறுங்கள், இல்லையெனில் அல்லாஹ்விடம் அனுமதி பெற்று நான் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன்."


அதற்கு யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நடுங்கிக் கொண்டே கூறினார்கள்: "என் சகோதரரே! நீங்கள் எனக்கு முன்பாக அதைச் செய்துவிட்டால், அல்லாஹ் என் மீது கோபம் கொள்வானோ அல்லது பூமி என்னை விழுங்கிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே, நானே மக்களைக் கூட்டுகிறேன்."


யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உடனடியாக ஜெருசலமிலுள்ள பைத்துல் முகத்தஸ் (அக்ஸா பள்ளிவாசல்) நோக்கிச் சென்றார்கள். பனூ இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் அங்கு கூடுமாறு அழைப்பு விடுத்தார்கள்.


மக்களால் பள்ளிவாசல் முழுமையாக நிரம்பியது. இடமில்லாமல் மக்கள் பால்கனிகளிலும், உயர்ந்த மாடங்களிலும் அமர்ந்திருந்தனர். அனைவரும் அமைதியாக வீற்றிருக்க, யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மேடையில் ஏறி, அல்லாஹ்வைத் துதித்துவிட்டுத் தன் உரையைத் தொடங்கினார்கள்:

"மக்களே! அல்லாஹ் எனக்கு ஐந்து விஷயங்களைக் கட்டளையிட்டு, அவற்றை நானும் செய்து உங்களுக்கும் ஏவச் சொல்லியிருக்கிறான்..."


முதலாவது கட்டளை (தவ்ஹீத்):

அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனையே வணங்க வேண்டும். இதற்கு உவமையாக, "ஒரு எஜமான் தன் சொந்தப் பணத்தைக் கொடுத்து ஒரு அடிமையை விலைக்கு வாங்குகிறான். அந்த அடிமை உழைத்து வரும் லாபத்தை தன் எஜமானுக்குக் கொடுக்காமல் வேறு ஒரு அந்நிய மனிதனுக்குக் கொடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் அல்லாஹ் உங்களைப் படைத்துவிட்டு, நீங்கள் அவனல்லாத வேறு எதற்கோ நன்றி செலுத்துவது இருக்கிறது" என்றார்கள்.


இரண்டாவது கட்டளை (தொழுகை):

நீங்கள் தொழுகையை நிலைநாட்ட வேண்டும். நீங்கள் தொழும்போது அங்கும் இங்கும் பராமுகமாகப் பார்க்காதீர்கள். ஏனெனில், அடியான் தொழுகையில் இருக்கும்போது அல்லாஹ் தன் முகத்தை அடியானின் முகத்திற்கு நேரே வைக்கிறான். அடியான் முகத்தைத் திருப்பும் வரை அல்லாஹ் தன் பார்வையை எடுப்பதில்லை.


மூன்றாவது கட்டளை (நோன்பு):

நீங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதன் உதாரணம், கஸ்தூரி வாசனை திரவியம் நிறைந்த பையைத் தன் வசம் வைத்திருக்கும் மனிதனைப் போன்றது. மக்கள் கூட்டத்தில் அவன் செல்லும்போது அந்த நறுமணம் எல்லோரையும் கவரும். நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்தது.


நான்காவது கட்டளை (தர்மம்):

நீங்கள் தர்மம் (ஸதகா) செய்ய வேண்டும். இதன் உதாரணம், எதிரிகளிடம் சிறைபிடிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்றது. அவனது கழுத்து கட்டப்பட்டு வெட்டப்படப் போகும் நேரத்தில், "என் உயிரைக் காப்பாற்ற என்னிடமிருக்கும் அத்தனையையும் பிணையாகத் தருகிறேன்" என்று கூறி, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் செல்வத்தைக் கொடுத்துத் தன் உயிரை மீட்டுக் கொள்வதைப் போன்றது.


ஐந்தாவது கட்டளை: திக்ரு எனும் இரும்புக் கோட்டை 


நீங்கள் அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ரு செய்ய வேண்டும் (நினைவுகூர வேண்டும்). இதன் உதாரணம் என்னவென்றால்..."


"ஒரு மனிதனை அவனுடைய ஆயுதம் தாங்கிய எதிரிகள் மிக வேகமாகத் துரத்திக் கொண்டு வருகிறார்கள். அவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாப்பக்கமும் ஓடுகிறான். அவனுக்கு முன்னால் ஒரு பிரம்மாண்டமான, பாதுகாப்பான, இரும்பினால் ஆன கோட்டை தென்படுகிறது. அவன் வேகமாக ஓடி, அந்தக் கோட்டைக்குள் நுழைந்து, கதவுகளைப் பூட்டிக் கொள்கிறான்.

இப்போது கோட்டைக்கு வெளியே நிற்கும் எதிரிகளால் அவனை தீண்ட முடியாது. அவன் முழுமையான பாதுகாப்பில் இருக்கிறான்."


உவமையைக் கூறி முடித்த யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களிடம் சத்தமிட்டுக் கூறினார்கள்: "இதேபோல்தான் அல்லாஹ்வின் அடியானும்! ஷைத்தானின் கொடிய அம்புகளிலிருந்தும், அவனது தீய தூண்டுதல்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் ஓர் அடியான் தன்னை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரே இரும்புக் கோட்டை — அல்லாஹ்வை திக்ரு செய்வதுதான்!"


னஷைத்தான் எப்போது தாக்குவான்?: மனிதன் திக்ரை விட்டும் எப்போது பராமுகமாக (அலட்சியமாக) இருக்கிறானோ, அப்போது அவன் இரும்புக் கோட்டையை விட்டு வெளியே வந்து விடுகிறான். ஆயுதமில்லாத அவனை ஷைத்தான் எளிதாகத் தாக்கிப் பாவங்களில் வீழ்த்துகிறான்.

திக்ரின் வலிமை: நாம் ஓதும் ஒவ்வொரு "சுப்ஹானல்லாஹ்", "அல்ஹம்துலில்லாஹ்", "லா இலாஹ இல்லல்லாஹ்" என்பதும் அந்தக் கோட்டையின் சுவர்களை இன்னும் பலப்படுத்துகிறது.


இந்த வரலாற்றைக் கூறி முடித்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நானும் உங்களுக்கு ஐந்து விஷயங்களைக் கட்டளையிடுகிறேன்: ஜமாஅத்தோடு இருப்பது, (தலைவருக்குக்) கட்டுப்படுவது, கீழ்ப்படிவது, ஹிஜ்ரத் செய்வது மற்றும் அல்லாஹ்வின் பாதையில் ஜிகாத் செய்வது/திக்ரு செய்வது" என்று கூறி இந்த உவமையை உறுதிப்படுத்தினார்கள். (நூல்: ஜாமிஃ அத்-திர்மிதி: 2863, முஸ்னத் அஹ்மத்,)


2: உலகப் படைப்புகளின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு


இறைவனை திக்ர் செய்யும் ஒரு மனிதனுக்கு உலகிலுள்ள எந்தவொரு படைப்பினாலும் (மனிதர்கள், ஜின்கள் அல்லது வேறு எந்தப் பொருட்களாலும்) எவ்வித தீங்கும் செய்ய முடியாது.


ஹஜ்ஜாஜை நடுங்கச் செய்த திக்ர்


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனிப்பட்ட உதவியாளராகப் பத்தாண்டுகள் சேவை செய்த உத்தமத் தோழர் ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தம் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் ஈராக்கிலுள்ள பஸ்ரா நகரில் வசித்து வந்தார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான் என்ற கலீஃபாவின் அதிகாரியாக ஈராக்கை ஹஜ்ஜாஜ் பின் யூசுப் ஆண்டு வந்தார். அவர் அநீதிக்கும் கொடுங்கோன்மைக்கும் பெயர் பெற்றவர்.


ஒருநாள், ஹஜ்ஜாஜ் தன் அதிகாரத் தோரணையைக் காட்டுவதற்காகத் தான் வளர்த்து வந்த பிரம்மாண்டமான, மிக உயர்ந்த அரபுக் குதிரைகளைக் காட்சிக்கு வைத்திருந்தார். சுற்றியிருந்தவர்கள் அவனது அதிகாரத்திற்கு அஞ்சி அந்தக் குதிரைகளைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அங்கே வந்த அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், "அபு ஹம்ஸாவே! (அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனைப்பெயர்) என் குதிரைகளைப் பார்த்தீர்களா?" என்று பெருமையுடன் கேட்டான்.


அதற்கு அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறிதும் அஞ்சாமல், நபியவர்களின் ஹதீஸை அவனது முகத்திற்கு நேராகவே சுட்டிக்காட்டினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: குதிரைகள் மூன்று வகைப்படும்.


அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குப்) பயன்படுத்துவதற்காக வளர்க்கப்படும் குதிரை — இதன் மூலம் அதன் உரிமையாளருக்கு நன்மைகளும் கூலியும் கிடைக்கும்.


தன் வறுமையைப் போக்கிக் கொள்ளவும், பிறரிடம் கையேந்தாமல் இருக்கவும் வளர்க்கப்படும் குதிரை — இது அவனுக்குப் பாதுகாப்பாக அமையும்.


பெருமைக்காகவும், ஆடம்பரத்திற்காகவும், முஸ்லிம்களுக்கு எதிராகப் பகமையைக் காட்டவும் வளர்க்கப்படும் குதிரை — இது நரகத்தின் சுமையாகும்.


ஹஜ்ஜாஜே! நீ வளர்க்கும் இந்தக் குதிரைகள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவை; உனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடியவை!" என்றார்கள்.


மக்களின் முன்னிலையில் தன் முகத்தில் அடித்தாற்போல் பேசியதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் கடுமையான கோபமடைந்தார். அவரது கண்கள் சிவந்தன. ஆத்திரத்துடன், "அனஸே! நான் யார் என்று உனக்குத் தெரியுமா? யாரிடம் பேசுகிறாய் என்று புரிகிறதா? உன்னை விடச் சிறந்தவர்களையே நான் வெட்டி வீழ்த்தியிருக்கிறேன்!" என்று மிரட்டினான்.

அதற்கு அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அசைக்க முடியாத ஈமானியத் துணிவோடு பதிலளித்தார்கள்:


"நீ யார் என்பதும் எனக்குத் தெரியும், உன்னால் என்ன செய்ய முடியும் என்பதும் எனக்குத் தெரியும். நீ அல்லாஹ்வின் பூமியில் அவனது அடியார்களைத் துன்புறுத்தும் ஒரு கொடுங்கோலன்! ஆனால், நீ நன்றாகத் தெரிந்து கொள்... உன்னால் மட்டுமல்ல, உலகிலுள்ள எந்த சக்தியாலும் என் உடலின் ஒரு பகுதியைக் கூடத் தீண்ட முடியாது!"


வியப்பும் ஆத்திரமும் அடைந்த ஹஜ்ஜாஜ், "எந்தத் துணிச்சலில் இப்படிப் பேசுகிறாய்?" எனக் கேட்டார். அதற்கு அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்:

"ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு ஒரு திக்ரை (துஆவை) கற்றுத் தந்துள்ளார்கள். அதை ஓதி வருபவருக்கு அந்த நாளில் எந்த விஷத்தாலோ, மந்திரத்தாலோ அல்லது உன்னைப் போன்ற எந்தக் கொடுங்கோலனின் அநீதியாலோ எந்தத் தீங்கும் நேராது என்று நபியவர்கள் எனக்கு உறுதியளித்துள்ளார்கள். அதை நான் தினமும் ஓதி வருகிறேன்!" என்று கூறினார்கள்.


இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், ஹஜ்ஜாஜின் உடல் நடுங்கத் தொடங்கியது. அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் அவர் அப்படியே தலைகுனிந்து நின்றார்.


அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ஜாஜை நடுங்கச் செய்ய ஓதியதாக வரலாற்று நூல்களில் பதியப்பட்டுள்ள அந்தத் துஆ/திக்ரு இதுதான்:


بِسْمِ اللَّهِ خَيْرِ الأَسْمَاءِ، بِسْمِ اللَّهِ الَّذِي لا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ. بِسْمِ اللَّهِ عَلَى نَفْسِي وَدِينِي، بِسْمِ اللَّهِ عَلَى أَهْلِي وَمَالِي، بِسْمِ اللَّهِ عَلَى كُلِّ شَيْءٍ أَعْطَانِي رَبِّي

மிகச் சிறந்த பெயர்களைக் கொண்ட அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்). அவனுடைய பெயரைக் கொண்டு ஆரம்பித்தால் பூமியிலோ, வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது. அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கிறான். என் உயிரின் மீதும் என் மார்க்கத்தின் மீதும் அல்லாஹ்வின் பெயரால் பாதுகாப்புத் தேடுகிறேன். என் குடும்பத்தாரின் மீதும் என் செல்வத்தின் மீதும் அல்லாஹ்வின் பெயரால் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவன் எனக்கு அளித்திருக்கும் எல்லாவற்றின் மீதும் அல்லாஹ்வின் பெயரால் பாதுகாப்புத் தேடுகிறேன். நூல்:அல்-பிதாயா வந்-நிஹாயா ,இமாம் இப்னு கதீர் (ரஹ்). 


குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் துளைக்க முடியாத ஈமானின் கவசமே திக்ரு ஆகும். ஒரு அடியான் அல்லாஹ்வை முழுமையாக நம்பி திக்ரில் மூழ்கிவிட்டால், இந்த உலகமே அவனுக்கு முன்னால் மண்டியிடும் என்பதற்கு ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த சான்றே ஆகச்சிறந்த உதாரணம்!


3: ராஹத்துல் கல்ப் (அதி உன்னதமான மனநிம்மதி)


திக்ர் உள்ளத்திற்கு ஒரு மாபெரும் பக்குவத்தையும் அமைதியையும் தருகிறது. உள்ளத்தில் நிம்மதி இல்லாத மனிதன், மிகச் சிறிய விஷயங்களுக்குக் கூட பெருங்கோபம் கொள்வான் (உதாரணமாக, தொழுகையின் போது யாராவது மொபைல் போனை சைலண்டில் போட மறந்து ரிங் அடித்தால் ஏற்படும் கோபம்). ஆனால் உள்ளத்தில் திக்ரின் மூலம் பக்குவம் ஏற்படும் போது எவ்வளவு பெரிய சவாலையும் நிதானமாகக் கையாள முடியும். இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் இரு உதாரணங்கள் கூறப்படுகின்றன:


 1. பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த கிராமவாசி: மஸ்ஜிதுந் நபவிக்குள் ஒருவர் வந்து சிறுநீர் கழித்த போது சஹாபாக்கள் கோபமடைந்து தடுக்க ஓடினார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவரைத் தடுக்காதீர்கள், சிறுநீர் கழித்து முடிக்கட்டும்" என்றார்கள். பிறகு அவரை அழைத்து, "இது புனிதமான இடம்" என்று நிதானமாக விளக்கினார்கள். அந்த மனிதர் நபிகளாரின் மென்மையைக் கண்டு வியந்து, "யா அல்லாஹ் எனக்கும் முஹம்மதுக்கும் மட்டும் அருள் செய், வேறு யாருக்கும் செய்யாதே" எனப் பிரார்த்திக்கும் அளவிற்கு மனம் மாறினார்.

 

2. விபச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வாலிபர்:ஒரு வாலிபர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விபச்சாரம் செய்ய அனுமதி கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோபப்படாமல் மிக நிதானமாக, "உன் தாய் அல்லது சகோதரிக்கு யாராவது இப்படிச் செய்வதை நீ விரும்புவாயா?" எனக் கேட்டார்கள். அந்த வாலிபர் தன் தவறை உணர்ந்து அழுதார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரது நெஞ்சில் கைவைத்து துஆ செய்த பிறகு, அந்த தீய சிந்தனையே அவருக்கு வாழ்நாளில் வரவில்லை.


இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) 


இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் இறைநேசராக அறியப்படும் இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ஆரம்பத்தில் 'பல்க்' (Balkh) மாகாணத்தின் சுல்தானாக — பெரும் மன்னராக வாழ்ந்தவர்.


மாளிகை, பட்டு மெத்தைகள், தங்கம், சுவையான உணவுகள், பணியாளர்கள் என உலகத்தின் அத்தனை சுகங்களும் அவரிடம் இருந்தன. ஆனால், அவரிடம் ஏனோ ஒரு நிம்மதியின்மை குடிகொண்டிருந்தது. எத்தனையோ இரவுகள் தூக்கமில்லாமல் தவித்தார்கள்.


அல்லாஹ்வின் நாட்டப்படி ஒரு நள்ளிரவில் தன் அரண்மனை மாடியில் ஏதோ சத்தம் கேட்டுச் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதன் நின்றிருந்தான். "நீ யார்? இங்கே என்ன செய்கிறாய்?" என்று மன்னர் கேட்க, "என் ஒட்டகத்தைத் தேடுகிறேன்" என்றான் அவன். "அரண்மனை மாடியிலா ஒட்டகத்தைத் தேடுவாய்? உனக்கு என்ன பைத்தியமா?" என்று மன்னர் கோபிக்க, அந்த மனிதன் சிரித்துக்கொண்டே கூறினான்: "பட்டு மெத்தையிலும், ஆடம்பர அரண்மனையிலும் அமர்ந்துகொண்டு அல்லாஹ்வையும், மனநிம்மதியையும் தேடும் உங்களுக்குப் பைத்தியம் பிடிக்காதபோது, நான் மாடியில் ஒட்டகம் தேடினால் என்ன தவறு?"


இந்த வார்த்தை மன்னரின் உள்ளத்தைத் தைத்தது. அன்றே தன் பதவியைத் துறந்து, காடுகளுக்கும் பாலைவனங்களுக்கும் சென்று திக்ரிலும், தௌபாவிலும் மூழ்கினார். பிற்காலத்தில் அவர் தன் மாணவர்களிடம் தன் உள்ளத்து நிம்மதியைக் குறித்துக் கூறும்போது 


"நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்வதன் மூலமும், அவனுக்குக் கட்டுப்படுவதன் மூலமும் அடைந்திருக்கும் இந்த உன்னதமான மனநிம்மதியும், உள்ளத்து ராஜியமும் இந்த உலகை ஆளும் அரசர்களுக்குத் தெரியுமானால், எங்களின் இந்த நிம்மதியைப் பறிப்பதற்காக அவர்கள் எங்களோடு வாள் ஏந்திப் போர் செய்ய வருவார்கள்!”


தத்துவ மேதையிலிருந்து திக்ரின் அடியாராக…


இஸ்லாமிய உலகின் 'ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்' (இஸ்லாத்தின் சான்று) எனப் போற்றப்படும் இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், பக்தாத் நகரின் புகழ்பெற்ற 'நிழாமிய்யா' பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்தார்கள்.


உலகப் புகழ், அறிவுப் பெருமை, ஆயிரக்கணக்கான மாணவர்கள் என அனைத்தும் இருந்தும், ஒரு கட்டத்தில் அவர்களின் உள்ளத்தில் கடுமையான குழப்பமும், மனநிம்மதியின்மையும் ஏற்பட்டது. தத்துவங்களோ, வாதப் பிரதிவாதங்களோ அவர்களின் உள்ளத்திற்கு அமைதியைத் தரவில்லை.


இதனால் தன் பதவியைத் துறந்து, அனைத்தையும் விட்டுவிட்டு சிரியாவின் திமிஷ்க் நகருக்குச் சென்றார்கள். அங்குள்ள பள்ளிவாசலில் நுழைந்து பல ஆண்டுகள் தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்வதிலும், தியானிப்பதிலும் (முராகபா) தன்னை முழுமையாக ஒப்படைத்தார்கள்.


நீண்ட திக்ரு மற்றும் ஆன்மீகப் பயணத்திற்குப் பிறகு, தன் புகழ்பெற்ற நூலான 'அல்-முன்கிது மினழ் ழலால்' (வழிகேட்டிலிருந்து மீட்கும் நூல்) என்பதில் இவ்வாறு எழுதுகிறார்கள்:


"நான் தத்துவவாதிகள், அறிஞர்கள் எனப் பலரின் வழிகளையும் ஆராய்ந்து பார்த்தேன். இறுதியாக நான் கண்டுகொண்ட உண்மை என்னவென்றால், அல்லாஹ்வை திக்ரு செய்வதன் மூலம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் ஆன்மீகவாதிகளின் (ஸூஃபியாக்களின்) வழிதான் மிகச் சிறந்தது. அவர்களின் நடத்தைதான் ஆகச்சிறந்தது. உலகிலுள்ள அத்தனை அறிஞர்களின் அறிவையும், தத்துவங்களையும் ஒன்று சேர்த்தாலும், திக்ரின் மூலம் அவர்களின் உள்ளங்கள் அடைந்திருக்கும் அந்த உன்னத நிம்மதியை, ஒளியை யாராலும் விவரிக்க முடியாது!”


எவ்வளவு பெரிய படிப்பும், பதவியும் தராத அமைதியை, "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற திக்ர் உள்ளத்திற்குத் தந்துவிடும்.


أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

"அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் திக்ரைக் கொண்டே தவிர உள்ளங்கள் அமைதி பெறுவதில்லை." (அல்குர்ஆன் 13:28)


4: அல்லாஹ்வின் மாறாத துணை கிடைக்கும் 


எந்நேரமும் திக்ர் செய்யும் மனிதர்களோடு அல்லாஹ் எப்போதும் துணையாக இருக்கிறான். அல்லாஹ் ஒருபோதும் பொய்யர்களுடனோ, அநீதி இழைப்பவர்களுடனோ, தவறான பார்வை பார்ப்பவர்களுடனோ இருப்பதில்லை. மாறாக, திக்ரின் மூலம் தூய்மை அடைந்த உள்ளங்களோடு மட்டுமே இறைவன் இருக்கிறான். அல்லாஹ் ஒருவனோடு இருக்கிறான் என்றால் அவனுக்கு வாழ்வில் வேறு என்ன தேவை இருக்க முடியும்?.


ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரலி 'மதாயின்' கடல் பயணம்


பாரசீகப் பேரரசுக்கு (Persian Empire) எதிராக நடந்த புகழ்பெற்ற 'காதிஸிய்யா' போருக்குப் பிறகு, முஸ்லிம்களின் படைத் தளபதி ஹழ்ரத் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாரசீகத்தின் தலைநகரமான 'மதாயின்' கோட்டையைக் கைப்பற்றச் சென்றார்கள்.


கோட்டைக்கு முன்னால் டைகிரிஸ் நதி பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. பாரசீகர்கள் முஸ்லிம்கள் வரக்கூடாது என்பதற்காகப் படகுகள் மற்றும் பாலங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டனர். நதியோ வெள்ளப்பெருக்கெடுத்து, ஆழமாகக் காட்சியளித்தது.


திக்ரை ஆயுதமாக்கிய ஸஹாபாக்கள்: குதிரைகளோடு ஆற்றைக் கடப்பது சாத்தியமற்றதாகத் தோன்றியபோது, ஸஃத் (ரலி) அவர்கள் தன் படையினருக்கு ஒரு திக்ரைக் கற்பித்து, அதை எந்நேரமும் நாவிலும் உள்ளத்திலும் ஓதியவாறு ஆற்றில் இறங்குமாறு கட்டளையிட்டார்கள். அவர்கள் ஓதிய திக்ர் .


حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

"அல்லாஹ்வே நமக்கு போதுமானவன்; அவனே சிறந்த பாதுகாவலன். உயர்ந்தவனும் மகத்துவமிக்கவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு எவரிடமும் ஆற்றலோ சக்தியோ இல்லை."


ஆயிரக்கணக்கான ஸஹாபாக்கள் இந்தத் திக்ரை முழங்கியபடி, வெள்ளம் கரைபுரண்டு ஓடிய டைகிரிஸ் நதிக்குள் தங்கள் குதிரைகளைச் செலுத்தினார்கள். வரலாற்றாசிரியர்கள் இமாம் தபரி மற்றும் இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோர் குறிப்பிடுகிறார்கள்: "அல்லாஹ்வின் துணை அவர்களோடு இருந்தது. குதிரைகள் தரையில் நடப்பதைப் போல நதியின் தண்ணீருக்கு மேல் அசால்ட்டாக நடந்து சென்றன. ஒரு குதிரை கூட மூழ்கவில்லை, ஒரு பொருளும் ஆற்றில் அடித்துச் செல்லப்படவில்லை."


இதைக் கோட்டைச் சுவரிலிருந்து பார்த்த பாரசீக எதிரிகள், "இவர்கள் மனிதர்கள் அல்லர்; ஜின்கள்!" என்று அலறி அடித்துக் கொண்டு கோட்டையை விட்டு ஓடினர். திக்ரோடு இருக்கும் அடியானுக்குத் தண்ணீரும் பாதையாகும் என்பதற்கு இதுவே சான்று. நூல்:தாரீக் அத்-தபரி (Tarikh al-Tabari) 


“விலங்குகளையும் பணிய வைத்த திக்ர்”

தாபியீன்களின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற உத்தமரும், பெரும் திக்ருடையவருமான ஸிலா இப்னு அஷ்யம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்வில் நடந்தது.


ஒருமுறை அவர்கள் ஒரு போர்ப் பயணத்திற்காகக் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார்கள். இரவு நேரமானதும், தன் படையினர் தூங்கிய பிறகு, அவர்கள் இரவின் தனிமையில் அல்லாஹ்வைத் தொழுது திக்ரு செய்வதற்காகக் காட்டுக்குள் சற்றுத் தள்ளிச் சென்றார்கள்.


அவர்கள் அங்கே தொழுது, திக்ரில் மூழ்கியிருந்தபோது, ஒரு பிரம்மாண்டமான பசி கொண்ட சிங்கம் உறுமிக் கொண்டே அவர்களை நோக்கி வந்தது. சுற்றிலும் இருந்தவர்கள் இதைப் பார்த்தால் பயந்து நடுங்கியிருப்பார்கள். ஆனால், ஸிலா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அல்லாஹ்வோடு திக்ரில் இணைந்திருந்ததால், சிங்கத்தைக் கண்டு சலனமடையவில்லை.


அவர்கள் தன் வழிபாட்டை முடித்துவிட்டு, மிக நிதானமாக அந்தச் சிங்கத்தைப் பார்த்து கூறினார்கள்: "சிங்கமே! நீ இறைவனால் படைக்கப்பட்ட ஒரு பொருள். நீ என் இறைவனை திக்ரு செய்யத் தேடிக் கொள். என்னைத் தொந்தரவு செய்யாதே!"


அல்லாஹ்வின் திக்ருடைய நாவிலிருந்து வந்த அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்யாமல் அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. எந்நேரமும் திக்ரில் இருக்கும் அடியானுக்கு அல்லாஹ் காட்டு மிருகங்களையும் கட்டுப்படுத்துவான் என்பதற்கு இச்சம்பவம் ஒரு வரலாற்றுச் சான்றாகும். நூல்:ஸியர் அஃலாமின் நுபலா (Siyar A'lam al-Nubala) 


5: ரஹ்மத்துடைய மலக்குமார்களின் பிரார்த்தனை


எங்கெல்லாம் இறைவனைப் பற்றிய நினைவும், குர்ஆன் மற்றும் ஹதீஸ் போதனைகளும் திக்ருகளும் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் ரஹ்மத்துடைய (அருள் புரியும்) வானவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.


அந்த அமர்வில் இருப்பவர்களுக்காக மலக்குமார்கள் இறைவனிடம் பாவமன்னிப்பும், துஆவும் செய்கிறார்கள்.


மனிதர்களாகிய நாம் துஆ கேட்க மறந்துவிட்ட நல்ல விஷயங்களையும், நமக்கு எது நல்லது என்பதை உணர்ந்து மலக்குமார்கள் நமக்காக இறைவனிடம் கேட்டுப் பெற்றுத் தருகிறார்கள்.


அர்ஷைச் சுமக்கும் மாபெரும் மலக்குமார்களின் உலகளாவிய பிரார்த்தனை

திருக்குர்ஆனில் அல்லாஹ்வே மிக விரிவாக, அர்ஷைச் சுமக்கக்கூடிய பிரம்மாண்டமான மலக்குமார்கள் பூமியிலுள்ள முஃமின்களுக்காகவும், திக்ரு செய்பவர்களுக்காகவும் எப்படிப் பிரார்த்திக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்துள்ளான்.

اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْا‌ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ‏

அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!(அல்குர்ஆன் : 40:7)


رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ اۨلَّتِىْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ۙ‏

“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.(அல்குர்ஆன் : 40:8)


அல்லாஹ்விற்கு என்றே சில பிரத்தியேக மலக்குமார்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஒரே வேலை பூமியின் வீதிகளிலும், பாதைகளிலும் அலைந்து திரிந்து, எங்கு அல்லாஹ்வை நினைவுகூரும் "திக்ருடைய அமர்வுகள்" (மஜ்லிஸுத் திக்ரு) நடக்கின்றன என்று தேடுவதுதான்.


 பூமியில் ஏதேனும் ஒரு இடத்தில் மனிதர்கள் கூடி "சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்" என்று திக்ரு செய்வதையோ அல்லது மார்க்க உபதேசம் (பயான்) கேட்பதையோ அவர்கள் கண்டுவிட்டால், அந்த மலக்குமார்கள் மற்ற மலக்குமார்களை சத்தமிட்டு அழைப்பார்கள்: "வாருங்கள்! நீங்கள் தேடி வந்த இலக்கு இதோ இங்கே இருக்கிறது!"


உடனே பல்லாயிரக்கணக்கான மலக்குமார்கள் அங்கு கூடி, தங்கள் இறக்கைகளால் அந்த திக்ரு செய்யும் மனிதர்களைச் சூழ்ந்து, முதல் வானம் வரை பந்தல் அமைப்பது போல் நின்றுகொள்கிறார்கள். அந்த அமர்வு முடியும் வரை அவர்கள் அந்த அடியார்களுக்காக ரஹ்மத்தையும் பாவமன்னிப்பையும் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.


அந்த அமர்வு கலைந்த பிறகு, மலக்குமார்கள் அல்லாஹ்விடம் செல்லும்போது, அல்லாஹ் (அனைத்தையும் அறிந்தவனாக இருந்தும்), "என் அடியார்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" எனக் கேட்பான். மலக்குமார்கள், "அவர்கள் உன்னைத் துதித்துக் கொண்டிருந்தார்கள், உன்னிடம் சுவனத்தைக் கேட்டு நரகிலிருந்து பாதுகாவல் தேடினார்கள்" என்பர். அதற்கு அல்லாஹ், "மலக்குமார்களே! நீங்கள் சாட்சியாக இருங்கள், நான் அந்த அமர்வில் இருந்த அத்தனை அடியார்களின் பாவங்களையும் மன்னித்துவிட்டேன்!" என்று பிரகடனம் செய்வான். (நூல்: ஸஹீஹுல் புகாரி: 6408)


6: பிரார்த்தனைகள் (துஆக்கள்) உடனுக்குடன் அங்கீகரிக்கப்படும்


திக்ரில் திளைத்திருக்கும் ஒரு மனிதன் இறைவனிடம் எதைக் கேட்டாலும் அது கபூல் செய்யப்படுகிறது.


ஒரு கிராமவாசி (அஃராபி) நபியவர்களிடம் வந்து சுருக்கமான அமலைக் கேட்க, நபியவர்கள் இந்த நான்கு வார்த்தைகளைக் கற்றுத் தந்தார்கள்:-


سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، فَإِذَا قَالَ: سُبْحَانَ اللَّهِ، قَالَ اللَّهُ: صَدَقْتَ، فَإِذَا قَالَ: الْحَمْدُ لِلَّهِ، قَالَ اللَّهُ: صَدَقْتَ، فَإِذَا قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ اللَّهُ: صَدَقْتَ، فَإِذَا قَالَ: اللَّهُ أَكْبَرُ، قَالَ اللَّهُ: صَدَقْتَ، فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي، قَالَ اللَّهُ: قَدْ فَعَلْتُ، فَقَالَ: اللَّهُمَّ ارْحَمْنِي، قَالَ اللَّهُ: قَدْ فَعَلْتُ، فَقَالَ: اللَّهُمَّ ارْزُقْنِي، قَالَ اللَّهُ: قَدْ فَعَلْتُ

ஒரு கிராமவாசி நபியவர்களிடம் வந்து, "எனக்கு ஒரு நல்ல அமலைக் கற்றுத் தாங்கள்" என்றார். நபியவர்கள் அவரது கையைப் பிடித்துக் கொண்டு: "சுப்ஹானல்லாஹ், வல்ஹம்துலில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்" என்று ஓதச் சொன்னார்கள்.

நபியவர்கள் இதன் விளக்கத்தைக் கூறும்போது:

அடியான் 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூய்மையானவன்) என்று சொல்லும்போது, அல்லாஹ் 'நீ உண்மை உரைத்தாய்' என்கிறான்.

அடியான் 'அல்ஹம்துலில்லாஹ்' (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லும்போது, அல்லாஹ் 'நீ உண்மை உரைத்தாய்' என்கிறான்.

அடியான் 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்று சொல்லும்போது, அல்லாஹ் 'நீ உண்மை உரைத்தாய்' என்கிறான்.


அடியான் 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லும்போது, அல்லாஹ் 'நீ உண்மை உரைத்தாய்' என்கிறான்.

அதன் பிறகு அந்த அடியான் தன் கையேந்தி:

"அல்லாஹும்மஃபிர் லீ" (யா அல்லாஹ், என்னை மன்னிப்பாயாக!) என்று கேட்கும்போது, அல்லாஹ் "நிச்சயமாக நான் மன்னித்துவிட்டேன் (செய்துவிட்டேன்)" என்கிறான்.


"அல்லாஹும்மர்ஹம்னீ" (யா அல்லாஹ், என் மீது கருணை காட்டுவாயாக!) என்று கேட்கும்போது, அல்லாஹ் "நிச்சயமாக நான் கருணை காட்டிவிட்டேன்" என்கிறான்.

"அல்லாஹும்மர்ஸுக்னீ" (யா அல்லாஹ், எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக!) என்று கேட்கும்போது, அல்லாஹ் "நிச்சயமாக நான் உனக்கு வழங்கிவிட்டேன்" என்று பதிலளிக்கிறான். நூல் சுனன் அல்-பைஹகீ (ஷுஅபுல் ஈமான்)


ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் துஆவும், அநியாயக்காரனுக்குக் கிடைத்த உடனடித் தண்டனையும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவினரும், சுவனவாசி என்று நன்மாராயம் கூறப்பட்ட பத்துத் தோழர்களில் ஒருவருமான ஹஸ்ரத் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், எந்நேரமும் திக்ரிலும் இறை சிந்தனையிலும் மூழ்கியிருந்த ஒரு உத்தமர். நபியவர்கள் இவர்களுக்காக, "யா அல்லாஹ்! ஸஃத் உன்னிடம் துஆ கேட்டால் அதை நீ உடனே ஏற்றுக் கொள்வாயாக!" என்று பிரத்தியேகமாக துஆ செய்திருந்தார்கள். எனவே, இவர்களின் துஆக்கள் அம்புகளை விட வேகமாகப் பாயக்கூடியவையாக இருந்தன.


ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஸஃத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூஃபா நகரத்தின் ஆளுநராக இருந்தார்கள். அப்போது 'உசாமா இப்னு கதாதா' என்ற ஒரு மனிதன், ஆளுநர் ஸஃத் ரலியல்லாஹு அன்ஹு மீது பொறாமை கொண்டு மக்கள் மத்தியில் மூன்று பொய் அவதூறுகளைக் கூறினான்: "ஸஃத் நீதமாகத் தீர்ப்பு வழங்குவதில்லை, போருக்கு நேரில் வருவதில்லை, போர்ப் பொருட்களைச் சமமாகப் பங்கீடுவதில்லை" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினான்.


எப்போதும் திக்ரிலும் இபாதத்திலும் இருக்கும் தன் மீது இவ்வளவு பெரிய பழியை மக்கள் மத்தியில் சுமத்தியதைக் கேட்டு ஸஃத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உள்ளம் வேதனைப்பட்டது. அவர்கள் உடனே கையேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்:


"யா அல்லாஹ்! இந்த அடியான் (உசாமா) பெருமைக்காகவும், விளம்பரத்திற்காகவும், என் மீது பொய் அவதூறு சுமத்தியிருப்பது உண்மையானால்... அவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடு! அவனது வறுமையைக் கூட்டு! மேலும், அவனைப் பல சோதனைகளில் (ஃபித்னாக்களில்) சிக்க வைப்பாயாக!"


இந்த துஆவைக் கேட்ட மாத்திரத்தில், அல்லாஹ் அதனை உடனே அங்கீகரித்தான். அந்த உசாமா என்பவர் மிக நீண்ட காலம் வாழ்ந்தார். அவனது முதுமையின் காரணமாக அவனது புருவ முடிகள் கண்கள் மீது வந்து விழுந்தன. வறுமையின் உச்சத்திற்குச் சென்று, பசியால் வீதிகளில் அலைந்தார். அந்த வயதிலும் அவருக்குப் புத்தி மாறாமல், வீதியில் செல்லும் பெண்களிடம் வம்பு செய்து வம்பில் மாட்டிக்கொண்டார்.

மக்கள் அவனிடம், "ஏன் இந்த வயதில் இப்படிச் செய்கிறாய்?" என்று கேட்டபோது, அவர் அழுதுகொண்டே கூறினார்: "நான் என்ன செய்வேன்? ஸஃத் இப்னு அபீ வக்காஸ் செய்த (துஆ) என்னை உடனே பிடித்துக் கொண்டது; நான் சோதிக்கப்பட்ட ஒரு பாவி!" என்று புலம்பினார். (நூல்: புகாரி: )


 பாலைவனத்தில் தண்ணீரை வரவழைத்த திக்ர்


முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பஹ்ரைன் நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்ட மாபெரும் ஸஹாபி ஹழ்ரத் அலா இப்னுல் ஹழ்ரமீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், எந்நேரமும் "யா அலீமு, யா ஹலீமு, யா அலிய்யு, யா அழீம்" என்ற திக்ரைக் கொண்டே அல்லாஹ்வை அழைத்து துஆ செய்யும் வழக்கம் உடையவர்கள்.


ஒருமுறை, அவர்கள் இஸ்லாமியப் படையுடன் ஒரு கடுமையான பாலைவனப் பாதையைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். திடீரென, படையினரிடம் இருந்த தண்ணீர் அனைத்தும் தீர்ந்துவிட்டது. சுற்றிலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. குதிரைகளும், ஒட்டகங்களும், வீரர்களும் தாகத்தால் நா வறண்டு, மரண விளிம்பிற்குச் சென்றனர். படை வீரர்கள் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டனர்.


தளபதி அலா இப்னுல் ஹழ்ரமீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சற்றும் கலங்கவில்லை. அவர்கள் தன் வாகனத்திலிருந்து இறங்கி, இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, தன் வழக்கமான திக்ரைக் கூறி கையேந்தினார்கள்:

"யா அலீமு, யா ஹலீமு, யா அலிய்யு, யா அழீம்! (அனைத்தையும் அறிபவனே, சகிப்புத்தன்மை உடையவனே, உயர்ந்தவனே, மகத்துவமிக்கவனே!) இதோ உன்னுடைய அடியார்கள் உன்னுடைய பாதையில் தாகத்தால் தவிக்கிறார்கள். எங்களுக்கு இப்பொழுதே மழையைத் தந்து, எங்கள் தாகத்தைத் தீர்ப்பாயாக!"


வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்: அவர்கள் துஆவை முடித்துக் கைகளை எடுப்பதற்கு முன்பாகவே, வானத்தில் எங்கிருந்தோ கார்மேகங்கள் திரண்டன. அந்தப் பாலைவனத்தில் பெருமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. 


படையினர் அனைவரும் தாராளமாகத் தண்ணீர் குடித்து, தங்கள் பாத்திரங்களையும் நிரப்பிக் கொண்டனர். ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் படையினர் இருந்த இடத்தை விட்டுச் சற்றுத் தள்ளி ஒரு துளி மழை கூடப் பெய்யவில்லை. எந்நேரமும் திக்ரில் மூழ்கியிருக்கும் அடியானுக்காக அல்லாஹ் மேகங்களுக்கு உத்தரவிட்டு, துஆவைக் கேட்ட உடனே மழையை இறக்கினான்.

(ஆதாரம்: தலாஇலுந் நுபுவ்வா - இமாம் பைஹகீ, ஸியர் அஃலாமின் நுபலா)


"لَقَدْ دَعَا اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ ، وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى

"(நபியவர்கள் கூறினார்கள்:) நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் மிக உன்னதமான திருநாமத்தைக் (இஸ்முல் அஃழம்) கொண்டு பிரார்த்தித்தார். அந்தப் பெயரைக் கொண்டு அவனிடம் துஆ கேட்கப்பட்டால் அவன் நிச்சயமாகப் பதிலளிக்கிறான்; அதைக் கொண்டு அவனிடம் ஏதேனும் கேட்கப்பட்டால் அவன் நிச்சயமாக வழங்குகிறான்.”நூல்: அபூ தாவூத் 


7: மறுமை நாளில் நன்மைகளின் தராசு மிகக் கனமாக அமைதல்


மறுமை நாளில் ஒரு மனிதனின் வெற்றியையும் சொர்க்கத்தையும் தீர்மானிப்பது அவனது நன்மைகளை எடைபோடும் 'மீஸான்' தராசு தான். நாம் செய்யும் பல நன்மைகளில், நாவினால் மிக எளிதாக ஓதக்கூடிய திக்ருகள் தான் மறுமை நாளில் நன்மைகளின் தராசை மிக அதிவேகமாகவும் கனமாகவும் நிரப்பக்கூடிய பொக்கிஷமாகத் திகழும்.


துன்டு சீட்டின் நன்மை 


மறுமை நாளில் அல்லாஹ் தன் அடியார்களில் ஒருவனை விசாரணைக்காக அழைப்பான். அவன் உலகத்தில் வாழ்ந்தபோது ஏகப்பட்ட பாவங்களைச் செய்தவனாக இருப்பான். அவனது விசாரணையின்போது, அவனது பாவங்கள் எழுதப்பட்ட 99 பிரம்மாண்டமான பதிவேடுகள் (Registers) கொண்டு வரப்படும்.

அந்தப் பதிவேடுகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பெரியது தெரியுமா? மனிதக் கண் எட்டும் தூரம் வரை (அடிவானம் வரை) நீளமுடைய பிரம்மாண்டமான புத்தகங்களாக அவை இருக்கும். அதில் அவன் செய்த அத்தனை பாவங்களும் அணு அணுவாகப் பதியப்பட்டிருக்கும்.


அல்லாஹ் அந்த அடியானை நோக்கி, "என் அடியானே! இந்த ஏடுகளில் எழுதப்பட்டிருப்பவற்றை நீ மறுக்கிறாயா? நன்மை தீமைகளை எழுதக்கூடிய என் மலக்குமார்கள் உனக்கு ஏதேனும் அநீதி இழைத்துவிட்டார்களா?" என்று கேட்பான்.


அதற்கு அந்த அடியான் நடுங்கிக்கொண்டே, "இல்லை என் இறைவனே! இதில் உள்ளவை அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான். மலக்குமார்கள் எனக்கு எந்த அநீதியும் இழைக்கவில்லை" என்று தன் குற்றங்களை ஒப்புக்கொள்வான்.

அல்லாஹ் மீண்டும் கேட்பான்: "சரி, இந்தத் தீமைகளுக்குப் பகரமாக உன்னிடம் ஏதேனும் நன்மைகளோ அல்லது உனக்கு ஏதேனும் சாக்குப்போக்குகளோ இருக்கிறதா?"


அதற்கு அவன் முற்றிலும் விரக்தியடைந்து, தலைகுனிந்து, "இல்லை என் இறைவனே! என்னிடம் எந்த நன்மையும் இல்லை. இன்று என் நிலை அவ்வளவுதான் (நான் நரகவாசிதான்)" என்று அழுதுகொண்டே கூறுவான்.


அப்போது அகிலங்களின் அதிபதியான அல்லாஹ் கூறுவான்: "அப்படியல்ல! நிச்சயமாக உனக்கு நம்மிடம் ஒரு பெரும் நன்மை இருக்கிறது. இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்பட மாட்டாது!"


உடனே மலக்குமார்கள் ஒரு சிறிய "பிதாக்" (துண்டுச் சீட்டு) ஒன்றைக் கொண்டு வருவார்கள். அது அந்த 99 பிரம்மாண்டமான புத்தகங்களோடு ஒப்பிடும்போது மிக மிகச் சிறியதாக இருக்கும். அந்தச் சீட்டில் அந்த அடியான் தன் வாழ்நாளில் தூய்மையான உள்ளத்தோடு ஓதிய திக்ரு எழுதப்பட்டிருக்கும்:


أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்."


அவன் அந்தச் சீட்டைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு கேட்பான்: "யா அல்லாஹ்! கண் எட்டும் தூரம் வரையுள்ள இந்த 99 பிரம்மாண்டமான பாவப் புத்தகங்களுக்கு முன்னால், இந்த ஒரு சிறிய துண்டுச் சீட்டு என்ன செய்துவிட முடியும்?"

அதற்கு அல்லாஹ், "நீ பொறுத்திருந்து பார், உனக்கு அநீதி செய்யப்படாது" என்பான்.


இப்போது நீதித் தராசு (மீஸான்) கொண்டு வரப்படும். தராசின் ஒரு தட்டில் அந்த மனிதன் செய்த பாவம் நிறைந்த 99 பிரம்மாண்டமான புத்தகங்களும், மற்றொரு தட்டில் "அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்"...என்ற திக்ரு எழுதப்பட்ட அந்த ஒரு சிறிய துண்டுச் சீட்டும் வைக்கப்படும்.


உலகக் கணக்குப்படி பார்த்தால் 99 புத்தகங்கள் இருக்கும் தட்டுதான் கீழே இறங்க வேண்டும். ஆனால், அங்கே ஒரு மாபெரும் அற்புதம் நடக்கும்!


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:


"அந்தச் சீட்டு வைக்கப்பட்ட மாத்திரத்தில், தராசின் மறுதட்டில் இருந்த 99 பிரம்மாண்டமான பாவப் புத்தகங்களும் பாரமின்றி காற்றில் பறக்கும் பஞ்சுகளைப் போல மேல் நோக்கி எகிறும்(பறந்துவிடும்). அந்தச் சீட்டு இருந்த தட்டு நன்மைகளின் கனத்தால் அப்படியே கீழே இறங்கும்!"


ஏனெனில், அல்லாஹ்வின் திருநாமத்தை (திக்ரை) விடக் கனமான பொருள் இந்த உலகத்திலும் மறுமையிலும் வேறு எதுவுமே இல்லை! அந்த ஒரு திக்ரின் காரணமாக அவனது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, அவன் சுவனவாசியாக அறிவிக்கப்படுவான். நூல்:ஜாமிஃ அத்-திர்மிதி 2639 


சுற்றி நடக்கும் சூழல் எவ்வளவு சவாலானதாக இருந்தாலும், குடும்பத்திலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ நிம்மதியற்ற நிலை இருந்தாலும், எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு திக்ர் இறை நினைவு மட்டுமே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த "சுபஹானல்லாஹ்” அல்ஹம்துலில்லாஹ் ,அல்லாஹு அக்பர், லா இலாஹ இல்லல்லாஹ் ..போன்ற வார்த்தையை நம் நாவுகள் எப்போதும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். 


திக்ரு என்பது ஏதோ ஓய்வு நேரத்தில் மட்டும் சொல்லும் சாதாரண வார்த்தைகள் அல்ல; அது நம் ஆன்மாவின் உணவு, ஷைத்தானிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் இரும்புக் கோட்டை, கவலைகளைப் போக்கி மனநிம்மதி தரும் அருமருந்து!


"அல்லாஹ்வை எந்நேரமும் நினைவுகூர்தல்" என்ற ஒரே ஒரு ஆயுதம் மட்டும்தான். ஆனால் இன்று நம் நாவுகள் எதில் நனைந்திருக்கின்றன? வீண் அரட்டைகளிலும், மொபைல் போன்களிலும், புறம் பேசுவதிலும் அல்லவா நம் காலத்தைக் கழிக்கிறோம்!


நம் நாவுகளை இன்றிலிருந்தே திக்ரால் நனைக்க வேண்டும். நாம் சமையல் செய்யும் போதும், வண்டி ஓட்டும் போதும், கடைகளில் அமர்ந்திருக்கும் போதும் நம் உதடுகள் "சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்" என்று அசைந்து கொண்டே இருக்கட்டும்.


யா அல்லாஹ்! அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் ரஹ்மானே! எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக! எங்களின் குற்றங்களை மறைப்பாயாக! எங்களின் கவலைகளைப் போக்கி, எங்கள் உள்ளங்களுக்கு உன்னதமான மனநிம்மதியைத் தந்தருள்வாயாக!


யா ரஹ்மானே! நபியவர்கள் கற்றுத் தந்த அழகிய திக்ருகளை எந்நேரமும் ஓதும் பாக்கியத்தை எங்கள் நாவுகளுக்குத் தந்தருள்வாயாக! எங்கள் நாவுகளை வீண் பேச்சுகளிலிருந்தும், புறம் பேசுவதிலிருந்தும், பொய்களிலிருந்தும் தூய்மைப்படுத்துவாயாக!


யா அல்லாஹ்! எங்களை விட்டும் ஷைத்தானை விரட்டியடிக்கக்கூடிய 'திக்ரு' எனும் இரும்புக் கோட்டைக்குள் எங்களை எப்போதும் வாழ வைப்பாயாக! ரஹ்மத்துடைய மலக்குமார்கள் எந்நேரமும் எங்களுக்காகப் பா

வமன்னிப்புத் தேடும் அந்த உன்னத அடியார்களின் கூட்டத்தில் எங்களையும், எங்கள் பெற்றோர்களையும், எங்கள் குடும்பத்தாரையும் சேர்த்தருள்வாயாக!


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.




முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.


ஜும்மா பயான்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக