பக்கங்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2026

விடுமுறையை பயனுள்ளதாக ஆக்குவோம்


விடுமுறையை பயனுள்ளதாக ஆக்குவோம்


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْمُرْسَلِينَ، سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ اما بعد. بسم الله الرحمن الرحيم

وَالْعَصْرِۙ‏ اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ ‏اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ‏


காலத்தின் மீது சத்தியமாக.நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்குர்ஆன் : 103:3)


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ: الصِّحَّةُ وَالْفَرَاغُ" 

"இரண்டு அருட்கொடைகளில் அதிகமான மனிதர்கள் (ஏமாற்றப்பட்டு) நஷ்டமடைகிறார்கள். ஒன்று: ஆரோக்கியம், மற்றொன்று: ஓய்வு." (நூல்: புகாரி)


எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வாரி வழங்கியுள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒரு அருட்கொடை தான் ஓய்வு. அதை நாம் எவ்வாறு இந்த விடுமுறை காலத்தில் பயன்படுத்தப் போகிறோம். 


இரண்டு அருட்கொடைகளில் அதிகமான மனிதர்கள் ஏமாந்து விடுகிறார்கள்; ஒன்று ஆரோக்கியம், மற்றொன்று ஓய்வு நேரம்."


இன்று நம் கைகளில் இருக்கும் இந்த 'விடுமுறை' என்பது அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு அமானிதம்.


நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடியைப் பற்றியும் மறுமையில் விசாரணை உண்டு. குறிப்பாக இளைஞர்களே! உங்கள் வாலிபத்தை எதில் செலவிட்டீர்கள் என்று கேட்கப்படும் போது, "ரீல்ஸ்கள் (Reels) பார்த்தும், வீடியோ கேம்கள் விளையாடியும் ஊர் சுற்றியும் கழித்தோம்" என்று நம்மால் சொல்ல முடியுமா?

நேர மேலாண்மை 


இஸ்லாமியப் பார்வையில் "நேரம்" என்பது அல்லாஹ் நமக்கு வழங்கிய முதலீடு. மற்ற இழப்புகளை ஈடுகட்ட முடியும், ஆனால் இழந்த நேரத்தை ஒருபோதும் மீட்க முடியாது.


குர்ஆன் கூறும் காலத்தின் மதிப்பு அல்லாஹ் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் காலத்தின் மீது சத்தியம் செய்கிறான்.


ஒரு விஷயத்தின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான் என்றால், அந்த விஷயம் எவ்வளவு மகத்தானது என்பதை நாம் உணர வேண்டும். காலம் என்பது வெறும் கடிகார முட்கள் அல்ல; அது நமது வாழ்நாள்.


"ஓய்வு" என்பதன் உண்மையான அர்த்தம் இஸ்லாமியப் பார்வையில் ஓய்வு என்பது சோம்பேறித்தனமாகப் படுத்துக் கிடப்பதல்ல. குர்ஆன் கூறுகிறது:

فَإِذَا فَرَغْتَ فَانصَبْ

"எனவே, நீர் (ஒரு வேலையிலிருந்து) ஓய்வு பெற்றால், (மற்றொரு வேலையில்) முனைப்புடன் ஈடுபடுவீராக!" (அல்-குர்ஆன் 94:7).

 

அதாவது, ஒரு வேலையை முடித்துவிட்டு மற்றொரு பயனுள்ள வேலையைத் தொடங்குவதே உண்மையான ஓய்வு. பள்ளிப் பாடங்களிலிருந்து விடுமுறை கிடைத்தால், அந்த நேரத்தை மார்க்கக் கல்விக்கோ அல்லது புதிய திறன்களை வளர்ப்பதற்கோ (Skill Development) அல்லது மற்ற நல்ல பணிகளை மேற்கொள்ள பயன்படுத்துவதே இந்த வசனத்தின் நோக்கமாகும்.


நிச்சயமாக, கால மேலாண்மை (Time Management) என்பது ஒரு முஸ்லிமின் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


ஒரு சிறந்த டைம் டேபிள் ஒரு முஸ்லிமுக்கு கால மேலாண்மையைச் சொல்லித் தரும் மிகச்சிறந்த கருவி ஐந்து நேரத் தொழுகை.


அதிகாலையில் (சுபஹ்) எழுவது உங்கள் நாளை மற்றவர்களை விட முன்னதாகத் தொடங்க உதவுகிறது.


ஒவ்வொரு தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தை ஒரு 'Target' ஆக வைத்து நம் வேலைகளைத் திட்டமிடலாம்.


நேரத்திற்குத் தொழுவது என்பது நேரத்தைக் கடைப்பிடிக்கும் (Punctuality) ஒழுக்கத்தை நமக்குள் வளர்க்கிறது.


விடுமுறையில் நேரத்தை நிர்வகிப்பதற்கான வழிமுறைகள்

அதிகாலைப் பொழுதைப் பயன்படுத்துதல் 

"اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا"

"என் சமுதாயத்திற்கு அதன் அதிகாலைப் பொழுதில் பரக்கத் (அருள்) செய்யப்பட்டுள்ளது" நூல்: அபூ தாவூத் என்பது நபிமொழி. விடுமுறை என்பதற்காக மதியம் வரை உறங்காமல், அதிகாலையிலேயே அன்றைய வேலையைத் தொடங்க வேண்டும்.

இந்த ஹதீஸை அறிவித்த ஸஹ்ர் இப்னு வதாஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு வியாபாரி. அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் இந்தத் துஆவின் பலனைப் பெறுவதற்காக, தனது வியாபாரக் கூட்டத்தை எப்போதும் அதிகாலையிலேயே அனுப்பி வைப்பார்கள். இதன் காரணமாக அவர்கள் மிகப்பெரிய செல்வந்தராக மாறினார்கள்.


இன்று உலகம் போற்றும் வெற்றியாளர்கள் அனைவரும் அதிகாலையில் எழுபவர்களாகவே (Early Risers) இருக்கிறார்கள். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் அவர்கள் அந்த நேரத்தில் இறைவனின் அருள் (பரக்கத்) இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள்.


விடுமுறை என்பதால் நள்ளிரவு வரை கண்விழிப்பதும், சுபஹ் தொழுகைக்குப் பின் நீண்ட நேரம் உறங்குவதும் அந்தப் 'பரக்கத்தை' நம்மிடமிருந்து தட்டிப்பறித்துவிடும். எனவே, அதிகாலையில் எழுந்து அன்றைய வேலையைத் தொடங்குவதே ஒரு முஃமினின் பண்பாகும்.


முக்கியமான வேலை எது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். தேவையற்ற அரட்டைகள், சமூக வலைதளங்களில் பல மணிநேரம் செலவிடுவது போன்றவை காலத்தை அழிக்கும் 'நேரத் திருடர்கள்'.


தொடர்ந்து வேலை செய்யாமல், இடையில் சிறிது நேரம் மார்க்கச் சிந்தனை அல்லது உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுவது மூளையைப் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.


நேரத்தை வீணாக்குவதால் ஏற்படும் நஷ்டங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் அவர்கள் கூறினார்கள்:

"لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ: عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ، وَعَنْ شَبَابِهِ فِيمَا أَبْلَاهُ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ، وَعَنْ عِلْمِهِ مَاذَا عَمِلَ فِيهِ”

மறுமை நாளில் ஒரு அடியான் நான்கு விஷயங்களைப் பற்றி விசாரிக்கப்படும் வரை அவனது பாதங்கள் (இறைவன் முன் இருந்து) நகர முடியாது:

1.தனது ஆயுளை அவன் எப்படிக் கழித்தான்? 2.தனது வாலிபத்தை (இளமையை) எதில் செலவிட்டான்? 3.தனது செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்? மற்றும் அதை எதில் செலவு செய்தான்? 4.தான் கற்ற கல்வியின் படி எவ்வாறு செயல்பட்டான்?


 " அதில் ஒன்று தனது ஆயுளை அவன் எப்படி கழித்தான்?


விடுமுறை நாட்களில் நாம் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவும், விளையாடும் ஒவ்வொரு விளையாட்டும் இந்தத் தராசின் கீழ் வரும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


To-Do List: நாளை செய்ய வேண்டிய 3 முக்கியமான வேலைகளை இன்றே குறித்து வையுங்கள்.


Digital Detox: ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மொபைல் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி எடுங்கள்.

புதிய திறன்: இந்த விடுமுறை முடிவதற்குள் ஒரு புதிய மொழியோ அல்லது ஒரு தொழில் நுட்பமோ கற்றுக்கொள்ளுங்கள்.


நேரத்தை நிர்வகிப்பவன் தன் வாழ்க்கையை நிர்வகிக்கிறான். இந்த விடுமுறை காலத்தை நம் மறுமைக்கும் துனியாவுக்கும் பயன் தரும் ஒரு முதலீடாக மாற்றுவோம்.


இமாம் அபூ யூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், புகழ்பெற்ற இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் முதன்மையான மாணவர் மற்றும் அப்பாஸியப் பேரரசின் தலைமை நீதிபதியாக (காழி அல்-குழாத்) இருந்தவர்.


இமாம் அபூ யூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தார்கள். அவர்கள் உயிர் பிரிவதற்குச் சில நிமிடங்களே இருந்த அந்த இக்கட்டான நிலையிலும், அவர்களைப் பார்க்க வந்த ஒரு மாணவரிடம் ஒரு சட்டச் சிக்கலைப் பற்றி விவாதித்தார்கள். அந்த மாணவர் ஆச்சரியத்துடன் கேட்டார்: "இமாம் அவர்களே! இந்த நிலையிலுமா நாம் கல்வி பற்றி விவாதிக்க வேண்டும்?"


அதற்கு அந்த மாமேதை அளித்த பதில் காலத்தால் அழியாதது:

"நாம் இந்த விஷயத்தை விவாதித்து ஒரு தெளிவு பெறுவது, ஒருவேளை யாராவது ஒரு மனிதனின் வாழ்விற்குப் பயன் தரக்கூடும் அல்லவா? நேரத்தை வீணாகக் கழிப்பதை விட, மரணத் தறுவாயிலும் ஒரு பயனுள்ள விஷயத்தைப் பேசிவிட்டுச் செல்வதே சிறந்தது."


அந்த மாணவரிடம் விவாதித்து முடித்த சில நிமிடங்களிலேயே அவர்களின் உயிர் பிரிந்தது. அந்த இறுதி வினாடியையும் அவர்கள் ஒரு பயனுள்ள கல்விக்காகவே செலவிட்டார்கள்.


மரணம் நம்மை நெருங்கும் போது கூட, "சரி, இனி என்ன செய்யப் போகிறோம்?" என்று சோர்ந்து அமராமல், அந்த நொடியையும் ஆக்கப்பூர்வமாக மாற்ற வேண்டும்.


இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவார்கள்: 

"சில மனிதர்களை நான் பார்க்கிறேன், அவர்கள் நேரத்தை எப்படிக் கடத்துவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். வீணான பேச்சுகளிலும், ஊர் சுற்றுவதிலும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்கள் அறியவில்லை, காலம் என்பது மீண்டும் வராத ஒரு பொக்கிஷம் என்று!"


இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பொன்மொழி:

"காலம் என்பது ஒரு வாள் போன்றது; நீ அதை (பயனுள்ள காரியங்களால்) வெட்டவில்லை என்றால், அது உன்னை (வீணான காரியங்களால்) வெட்டிவிடும்.”


இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்களின் "நேரத்தைச் சேமிக்கும் கலை"

இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியவர். அவர்கள் தனது நேரத்தை எவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டார்கள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பெரிய பாடம்.


அந்தக் காலத்தில் அறிஞர்களைப் பார்க்கப் பலர் வருவார்கள். வரும் விருந்தினர்கள் சில நேரங்களில் பயனுள்ள விஷயங்களைப் பேசாமல், வீணான அரட்டைகளில் ஈடுபட்டு இமாம் அவர்களின் நேரத்தை விரயம் செய்வார்கள். அவர்களைத் துரத்தவும் முடியாது, அதே சமயம் நேரத்தை வீணாக்க இமாம் அவர்களுக்கும் விருப்பமில்லை.


இதற்காக இமாம் அவர்கள் ஒரு புத்திசாலித்தனமான வழியைக் கையாண்டார்கள்:

விருந்தினர்கள் வரும்போது, அவர்களுடன் பேசிக்கொண்டே தான் செய்ய வேண்டிய "இயந்திரத்தனமான வேலைகளை" செய்து முடிப்பார்கள்.


எழுத்தாணிகளை (Pens) சீவுவது, காகிதங்களை அடுக்குவது, புத்தகங்களைத் தைப்பது போன்ற வேலைகளை விருந்தினர்களுடன் பேசிக்கொண்டே செய்வார்கள். இதன் மூலம், விருந்தினர்கள் சென்ற பிறகு, அவர்கள் தனது "சிந்தனை மற்றும் எழுத்துப் பணிக்காக" (Creative work) வைத்திருந்த நேரம் முழுமையாக அவர்களுக்குக் கிடைத்தது.


நம்மைச் சுற்றி எப்போதும் நேரத்தை வீணடிக்கும் நண்பர்களோ அல்லது சமூக வலைதளங்களோ இருக்கும். அவற்றைக் கையாளும் போது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


பல்முனைத் திறன் (Multitasking): பயனுள்ள வேலைகளைச் செய்ய எப்போதுமே நேரம் ஒதுக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.


"நண்பர்களுடன் இருக்கிறேன், அதனால் என்னால் படிக்கவோ அல்லது பயனுள்ளதைச் செய்யவோ முடியவில்லை" என்று சாக்கு போக்கு சொல்லாமல், அந்த நேரத்திலும் ஏதேனும் ஒரு நன்மையைச் செய்யப் பழக வேண்டும்.


இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? இஸ்லாமிய வரலாற்றில் மிக அதிக நூல்களை எழுதிய அறிஞர்களில் ஒருவர். அவர்களின் அசாத்தியமான நேர மேலாண்மை காரணமாக, சுமார் 500-க்கும் மேற்பட்ட நூல்களை அவர்கள் எழுதியுள்ளார்கள்.அவர்கள் தனது வாழ்நாளில் எழுதிய பக்கங்களை கணக்கிட்டால், ஒரு நாளைக்குச் சராசரியாக 9 முதல் 10 பக்கங்கள் வரை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் தனது எழுத்தாணிகளைச் சீவிய போது வெளிவந்த துகள்களைச் சேகரித்து வைத்தார்கள். அவர்கள் மரணித்த போது, அந்தத் துகள்களைக் கொண்டே அவர்கள் குளிப்பாட்டத் தேவையான சுடுதண்ணீர் காய்ச்சப்பட்டது என்றால் பாருங்களேன்! அந்த அளவிற்கு அவர்கள் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தினார்கள்.

"மனிதன் இழக்கும் ஒவ்வொரு வினாடியும், சொர்க்கத்தில் அவனுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு அந்தஸ்து குறைகிறது.”


விடுமுறை காலத்தை ஒரு மூஃமின்  

பயனுள்ளதாக கழிக்க என்ன செய்யலாம்..?


1)பள்ளிவாசலில் ஜமாஅத்துடன், குறிப்பாக முதல் தக்பீருடன் தொழுவது என்பது ஒரு முஃமினின் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியாகும். 

விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழித்ததாக அமையும்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ: بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ”

"யார் அல்லாஹ்வுக்காக நாற்பது நாட்கள் ஜமாஅத்துடன், முதல் தக்பீரைப் பெற்றுத் தொழுகிறாரோ அவருக்கு இரண்டு விடுபாடுகள் (விடுதலைகள்) எழுதப்படுகின்றன. ஒன்று: நரக நெருப்பிலிருந்து விடுதலை, மற்றொன்று: நிஃபாக் (நயவஞ்சகம்) என்பதிலிருந்து விடுதலை." (நூல்: திர்மிதி)

விடுமுறை என்பது இந்த 'நாற்பது நாள்' பயிற்சியைத் தொடங்க மிகச்சிறந்த வாய்ப்பாகும்.


ஸயீத் இப்னுல் முஸய்யப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் உறுதி

தாபியீன்களின் தலைவராகக் கருதப்படும் ஸயீத் இப்னுல் முஸய்யப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்:

"கடந்த 40 ஆண்டுகளாக, முஅத்தின் பாங்கு சொல்லும்போது நான் பள்ளிவாசலில் இல்லாமல் இருந்ததில்லை." மற்றொரு அறிவிப்பில், "30 ஆண்டுகளாக இமாமின் பிடரியைத் தவிர (அதாவது முதல் வரிசையில் முதல் தக்பீருடன் இருப்பதைத் தவிர) வேறு எதையும் நான் பார்த்ததில்லை" என்று குறிப்பிட்டார்கள்.


ஒரு நாளைக்கு 5 முறை வீதம் 30 ஆண்டுகள் என்றால், அவர்கள் எவ்வளவு தூரம் காலத்தைப் போற்றியிருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!


அஃமாஷ் (ரஹ்) அவர்களின் கவலை

பிரபல ஹதீஸ் கலை அறிஞர் இமாம் அஃமாஷ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சுமார் 70 ஆண்டுகள் முதல் தக்பீரைத் தவறவிட்டதே இல்லை. ஒருமுறை எதிர்பாராத விதமாக அவருக்கு முதல் தக்பீர் தவறிவிட்டது. அதற்காக அவர் எவ்வளவு அழுதார் என்றால், மக்கள் அவரிடம் வந்து மரணத் துக்கம் விசாரிப்பது போல் ஆறுதல் சொன்னார்கள்.


ஒரு தக்பீர் தவறுவதையே பெரிய இழப்பாக அவர்கள் கருதினார்கள். ஆனால் இன்று நாம் பல தொழுகைகளைத் தவறவிட்டும் கவலையின்றி இருக்கிறோம். இது நமது ஈமானிய பலவீனத்தைக் காட்டுகிறது.


இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரிகாரம்

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒருமுறை இஷா தொழுகையின் ஜமாஅத் தவறிவிட்டது. அந்த ஒரு ஜமாஅத் தவறியதற்காக அன்றைய இரவு முழுவதும் தூங்காமல் அழுது தொழுது கொண்டே இருந்தார்கள்.


ஒரு தக்பீர்... ஒரு பேரிழப்பு!

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்தபோதிலும், அவர்களின் இதயம் எப்போதும் மஸ்ஜிதுந் நபவியிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.


ஒருமுறை மக்ரிப் தொழுகையின் பாங்கு மற்றும் இகாமத் சொல்லப்பட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையைத் தொடங்கிவிட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரத்துல் அஸ்ர் (காலத்தின் மீது சத்தியமாக...) எனும் அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.


அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் ஜமாஅத்தில் கலந்துகொள்ள முடிந்தது, ஆனால் அந்த முதல் தக்பீர் (தக்பீர் தஹ்ரீமா) தவறிவிட்டது.


தொழுகை முடிந்ததும், அவர்கள் மிகுந்த கவலையடைந்தார்கள். "காலத்தின் மீது சத்தியமாக... மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்" என்ற வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டதும், அந்த ஒரு தக்பீர் தவறியதால் தான் எவ்வளவு பெரிய நஷ்டத்தைச் சந்தித்துவிட்டோம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.


அதற்குக் கைம்மாறாக (பரிகாரமாக), அன்று தனது வியாபாரத்தின் மூலம் கிடைத்த லாபம் முழுவதையும் (சில அறிவிப்புகளில் அது ஒரு பெரிய ஒட்டகக் கூட்டத்தின் மதிப்புள்ள செல்வம் எனக் கூறப்படுகிறது) அல்லாஹ்விற்காக ஏழை எளியவர்களுக்குத் தர்மம் செய்தார்கள்.


இன்று நாம் ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் என அலைபேசியில் (Mobile) நேரத்தை வீணாக்குகிறோம். ஆனால், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு வினாடி நீடிக்கும் தக்பீர் தவறியதற்காகத் தனது சொத்தையே தர்மம் செய்தார்கள். நாம் அந்த ஒரு வினாடிக்காக என்ன செய்யப் போகிறோம்?"


2) இந்த விடுமுறை காலத்தில் முறையான மார்க்கக் கல்வியைப் பெற கவனம் செலுத்த வேண்டும்.


கட்டாயமாகப் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்

அகீதா (கொள்கை): அல்லாஹ்வின் ஏகத்துவம் (தவ்ஹீத்), மலக்குகள், வேதங்கள், தூதர்கள் மற்றும் மறுமை நாள் பற்றிய சரியான புரிதல்.

பிக்ஹ் (சட்டதிட்டங்கள்): அன்றாட வாழ்வில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளின் சட்டங்கள்.

உளு மற்றும் குளிப்பின் முறைகள்.

தொழுகையின் நிபந்தனைகள் மற்றும் வாஜிபுகள்.

நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ்ஜின் அடிப்படைச் சட்டங்கள்.

குர்ஆனை அதன் அரபி உச்சரிப்பு மாறாமல், தஜவீத் சட்டங்களுடன் முறையாக ஓதக் கற்றுக்கொள்ளுதல்.


உங்கள் பகுதியில் உள்ள பள்ளிவாசல் இமாம்கள் அல்லது ஆலிம்களிடம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் ஒதுக்கி, அடிப்படை கிதாபுகளை (நூல்களை) ஓதலாம்.


தன்னார்வ வகுப்புகள் (Summer Classes): கோடை விடுமுறையை முன்னிட்டு பல மதரஸாக்களிலும், பள்ளிகளிலும் 'சம்மர் கிளாஸ்' நடத்துவார்கள். அதில் இணைந்து அரபி மொழி மற்றும் மார்க்கச் சட்டங்களைக் கற்கலாம்.


இமாம் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்களின் பயணம்:


ஒருமுறை ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரே ஒரு ஹதீஸைக் கேட்பதற்காக, மதீனாவிலிருந்து ஷாம் தேசத்திற்கு (தற்போதைய சிரியா) ஒரு மாதம் முழுவதும் ஒட்டகத்தில் பயணம் செய்தார்கள். அந்த ஒரு ஹதீஸை உறுதிப்படுத்திக் கொண்டு திரும்பினார்கள்.


இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் நினைவுத்திறன்:


அவர்கள் ஒரு ஹதீஸைத் தேடி பல நாடுகளுக்குப் பயணம் செய்தார்கள். ஒருமுறை ஒருவரிடம் ஹதீஸ் கேட்கச் சென்றபோது, அவர் தனது கையில் உணவு இருப்பதாகப் பொய் சொல்லித் தனது குதிரையை ஏமாற்றிப் பிடிக்க முயன்றதைக் கண்டார்கள். "ஒரு மிருகத்தையே ஏமாற்றுபவரிடம் இருந்து நான் ஹதீஸைப் பெற மாட்டேன்" என்று கூறி, அந்த ஹதீஸைப் பெறாமலேயே திரும்பி வந்துவிட்டார்கள். கல்வியின் மீது அவர்கள் வைத்திருந்த கண்ணியம் அத்தகையது.


இஸ்லாம் வாசிப்பதையும், சிந்திப்பதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மார்க்கம். அதன் முதல் கட்டளையே 'இக்ரஃ' (ஓதுவீராக!) என்பதுதான்.


பத்ருப் போர் கைதிகளின் விடுதலைப் பத்திரம்


இஸ்லாமிய வரலாற்றில் கல்வியின் முக்கியத்துவத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பத்ருப் போரில் சிறைபிடிக்கப்பட்ட எதிரிகளில் பலர் படித்தவர்களாக இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் போர்க் கைதிகளை விடுவிக்கப் பணம் (ஈட்டுத் தொகை) பெறுவதுதான் வழக்கம். ஆனால், கல்வி அறிவை வளர்க்க விரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு புரட்சிகரமான அறிவிப்பைச் செய்தார்கள்:

"யார் ஒருவரிடம் பணம் இல்லையோ, அவர் மதீனாவின் சிறுவர்கள் பத்து பேருக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுத்தால், அதுவே அவர் விடுதலைக்கான ஈட்டுத் தொகையாகக் கருதப்படும்."


 பைத்துல் ஹிக்மா (அறிவின் இல்லம்)

அப்பாஸியப் பேரரசின் காலத்தில் பக்தாத் நகரில் 'பைத்துல் ஹிக்மா' (House of Wisdom) என்ற ஒரு மாபெரும் நூலகமும், ஆய்வு மையமும் நிறுவப்பட்டது. இது உலக வரலாற்றிலேயே கல்வியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.

உலகெங்கிலும் இருந்த முக்கியமான புத்தகங்கள் அனைத்தும் இங்கு கொண்டு வரப்பட்டு அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன.


ஒரு புத்தகத்தை மொழிபெயர்க்கும் அறிஞருக்கு, அந்தப் புத்தகத்தின் எடைக்கு சமமான தங்கம் வெகுமதியாக வழங்கப்பட்டது. அறிவுத் தேடலுக்கு அவர்கள் கொடுத்த மதிப்பு அத்தகையது.


இமாம்களின் அறிவுப் பயணம் (ரிஹ்லா)

இன்றைய காலத்தைப் போல ஒரு கிளிக்கிலோ அல்லது இணையத்திலோ அன்றைய நாளில் தகவல்கள் கிடைக்கவில்லை.

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு ஹதீஸைத் தேடி பல ஆயிரம் மைல்கள் நடந்தும், ஒட்டகத்திலும் பயணம் செய்தார்கள். பல நேரங்களில் உணவின்றி காய்ந்த இலைகளை உண்டு பசியைப் போக்கிக்கொண்டு கல்வி கற்றார்கள்.


இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் முதுமைப் பருவத்திலும் கையில் மையையும், காகிதத்தையும் வைத்துக்கொண்டு கல்வித் தேடலில் ஈடுபட்டார்கள். மக்கள் கேட்டார்கள், "இமாம் அவர்களே! இந்த வயதிலும் இப்படியா?". அதற்கு அவர்கள், "மையுடன் (கல்வித் தேடலுடன்) மையவாடி கப்ருஸ்தான் வரை நான் செல்வேன்" என்று பதிலளித்தார்கள்.


இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் பொன்மொழி:


"مَنْ أَرَادَ الدُّنْيَا فَعَلَيْهِ بِالْعِلْمِ، وَمَنْ أَرَادَ الْآخِرَةَ فَعَلَيْهِ بِالْعِلْمِ، وَمَنْ أَرَادَهُمَا مَعًا فَعَلَيْهِ بِالْعِلْمِ”

யார் உலகத்தை விரும்புகிறாரோ அவர் கல்வி கற்கட்டும்; 

யார் மறுமையை விரும்புகிறாரோ அவரும் கல்வி கற்கட்டும்; 

யார் இவை இரண்டையுமே விரும்புகிறாரோ அவரும் கல்வி கற்கவே வேண்டும்!”


இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் இளமைப் பருவம் என்பது இன்றைய கால இளைஞர்களுக்கு, குறிப்பாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாடமாகும். நேரத்தை அவர்கள் எவ்வாறு ஒரு ‘வாள்’ போலக் கருதிச் செயல்பட்டார்கள்.


இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனது 19-வது வயதில் மதீனா நகருக்குக் கல்வி கற்க வந்தார்கள். 

அவர்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஆசிரியர்களிடம் 12 விதமான பாடங்களை முறையாகக் கற்றார்கள்.

பிக்ஹ் (ஸஹீஹ் முஸ்லிம் விரிவுரை): இரண்டு பாடங்கள்.

பிக்ஹ் (அல்-முஹத்தப்): ஒரு பாடம்.

ஜம்உ பய்னஸ் ஸஹீஹைன்: (புகாரி மற்றும் முஸ்லிம் தொகுப்பு) ஒரு பாடம்.

ஹதீஸ் கலை (அஸ்மாஉர் ரிஜால்): அறிவிப்பாளர்கள் பற்றிய பாடம்.

உஸூல் அல்-பிக்ஹ்: (சட்டக்கலை அடிப்படை) இரண்டு பாடங்கள்.

அரபி இலக்கணம் (ஸர்ஃப்): ஒரு பாடம்.

அரபி இலக்கணம் (நஹ்வு): ஒரு பாடம்.

அகீதா (உஸூல் அத்-தீன்): கொள்கை விளக்கம்.

லுகத் (அரபி இலக்கியம்): ஒரு பாடம்.

மன்திக் (தர்க்கவியல்): ஒரு பாடம்.


இந்த 12 பாடங்களையும் அவர்கள் சும்மா படிக்கவில்லை. ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான குறிப்புகளை எழுதுவது, அந்த ஆசிரியரின் விளக்கங்களை ஆய்வு செய்வது என ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் கல்வியிலேயே மூழ்கியிருந்தார்கள்.

அவர்கள் நேரத்தை மிச்சப்படுத்தக் கையாண்ட முறைகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்:


அவர்கள் ஒருபோதும் படுக்கைக்குச் சென்று உறங்கியதில்லை. படித்துக் கொண்டிருக்கும் போதே களைப்பு ஏற்பட்டால், தான் வைத்திருக்கும் புத்தகங்களின் மீதே சாய்ந்து சிறிது நேரம் கண் அயருவார்கள். விழிப்பு வந்தவுடன் மீண்டும் வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.


ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்பார்கள் (அதுவும் இஷா தொழுகைக்குப் பிறகு). பகல் நேரத்தில் உணவு உண்பது, கைகளைக் கழுவுவது போன்றவற்றுக்காகச் செலவாகும் நேரத்தைக் கூட அவர்கள் கல்வியில் பயன்படுத்த விரும்பினார்கள்.


அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது வீணாக வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்ல மாட்டார்கள். கையில் ஒரு புத்தகத்தை வைத்து ஓதிக் கொண்டே செல்வார்கள் அல்லது தான் மனனம் செய்த ஹதீஸ்களை அசைபோட்டுக் கொண்டே செல்வார்கள்.


இன்று நாம் ஒரு பாடத்தைப் படிப்பதற்கே "நேரம் இல்லை" என்று கூறுகிறோம். ஆனால் இமாம் நவவீ அவர்கள் 45 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார்கள். அந்தச் குறுகிய காலத்திற்குள் அவர்கள் செய்த சாதனைகள் மலைக்கத்தக்கவை.


இமாம் இப்னு அகீல் (ரஹ்) அவர்கள்


இமாம் இப்னு அகீல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹன்பலி மத்ஹபின் மிகப்பெரிய அறிஞர்களில் ஒருவர். அவர்கள் நேரத்தை வீணாக்குவதை ஒரு 'பாவமாகவே' கருதினார்கள்.


அவர்கள் நேரத்தைச் சேமிப்பதற்காகத் தனது உணவுப் பழக்கத்தையே மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்:

"நான் ரொட்டியை மென்று சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன். அதற்குப் பதிலாக, ரொட்டியைத் தண்ணீரில் நனைத்து அது மென்மையானதும் அப்படியே விழுங்கிவிடுவேன். ஏனென்றால், மென்று சாப்பிடுவதற்கும், தண்ணீரில் நனைத்துச் சாப்பிடுவதற்கும் இடையே உள்ள நேர இடைவெளியில், என்னால் குறைந்தது 50 வசனங்களை ஓத முடிகிறது அல்லது சில பக்கங்களை எழுதி முடிக்க முடிகிறது."

அதாவது, அந்த ஒரு சில நிமிடங்களைச் சேமிப்பதற்காகக் கூட அவர்கள் மென்று சாப்பிடும் வேலையைக் குறைத்துக் கொண்டார்கள்.


அதாவது, அந்த ஒரு சில நிமிடங்களைச் சேமிப்பதற்காகக் கூட அவர்கள் மென்று சாப்பிடும் வேலையைக் குறைத்துக் கொண்டார்கள்.


அவர்கள் தனது நேரத்தைப் பற்றிச் சொல்லும்போது இப்படிக் கூறுவார்கள்:

"எனது வாழ்நாளில் ஒரு நிமிடம் கூட வீணாகக் கழிவதை என்னால் அனுமதிக்க முடியாது. நான் பேச முடியாதபோது (உதாரணமாக உணவு உண்ணும்போது அல்லது நடக்கும்போது) எனது சிந்தனையை வாசிப்பதிலும், எழுதுவதிலும் வைத்திருப்பேன். நான் ஓய்வெடுக்கப் படுத்திருக்கும்போது கூட, எதைப் பற்றி எழுதலாம் என்று யோசிப்பேன். எழுந்தவுடன் அந்தச் சிந்தனையைத் தாள்களில் வடிப்பேன்."


'அல்-ஃபுனூன்' (Al-Funun) இந்த அசாத்தியமான நேர மேலாண்மையின் காரணமாக அவர்கள் எழுதிய நூல்தான் 'அல்-ஃபுனூன்'.

இது சுமார் 800 பாகங்களைக் கொண்ட ஒரு மாபெரும் கலைக்களஞ்சியம்.

இன்றைய அறிஞர்கள் கூறுகிறார்கள்: "உலக வரலாற்றிலேயே ஒரு தனி மனிதன் எழுதிய மிகப்பெரிய நூல் இதுவாகத்தான் இருக்கும்."


இன்று நாம் உணவகங்களில் அமர்ந்து மணிக்கணக்காக அரட்டை அடித்துக் கொண்டும், அலைபேசியைப் பார்த்துக் கொண்டும் நேரத்தை வீணடிக்கிறோம். ஆனால், இமாம் இப்னு அகீல் அவர்கள் ஒரு சில நிமிடங்கள் மிச்சமானால் கூட அதில் மார்க்கத்திற்காக ஏதேனும் ஒன்றை எழுதிவிடலாம் என்று துடித்தார்கள்.


அவர்கள் ஒருமுறை சொன்னார்கள்: "எனது 80-வது வயதிலும், நான் 20 வயதில் இருந்த அதே அறிவுத் தேடலுடனும், ஆர்வத்துடனும் இருக்கிறேன்." இந்த நீண்ட கால விடாமுயற்சிதான் 800 பாகங்களை எழுத அவருக்குத் துணையாக இருந்தது.


புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் இமாம் தஹபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: "உலகில் இந்த நூலைப் போன்ற ஒரு பெரிய நூலை எவரும் இதுவரை எழுதியதில்லை."


துரதிர்ஷ்டவசமாக, காலப்போக்கில் ஏற்பட்ட போர்கள் மற்றும் நூலக அழிவுகளால் இந்த நூலின் பெரும்பகுதி மறைந்துவிட்டது. தற்போது சில பாகங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன.


3)இந்த விடுமுறை காலத்தில் புத்தக வாசிப்பு பழக்கத்தை உருவாக்குதல் 


புத்தக வாசிப்பு என்பது அறிவின் திறவுகோல். குறிப்பாக இஸ்லாமிய வரலாறுகளையும், ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றையும் வாசிப்பது நமது ஈமானை (இறைநம்பிக்கையை) உறுதிப்படுத்துவதோடு, வாழ்க்கையில் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பதையும் கற்றுத்தரும்.


ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நீங்கள் ஒரு மேதையின் அல்லது ஒரு மாபெரும் வீரரின் பல வருட அனுபவத்தை சில மணிநேரங்களில் பெற்றுவிடுகிறீர்கள்.


வாசிப்பு உங்கள் கற்பனைத் திறனை வளர்க்கும். மொபைல் பார்ப்பதை விட, வாசிப்பு மூளைக்கு அதிகப் புத்துணர்வைத் தரும்.


ஸஹாபாக்களின் வரலாற்றைப் படிக்கும்போது, சினிமா நடிகர்களையோ அல்லது மற்றவர்களையோ விட ஸஹாபாக்களே நம் வாழ்வில் சிறந்த "ஹீரோக்கள்" என்பதை உணர்வீர்கள்.


"இன்று ஒரு வாசகனாக இருப்பவன் நாளை ஒரு தலைவனாக உருவெடுப்பான்.”


ஒரு அறிஞர் தனது வாழ்நாள் முழுவதும் சேகரித்த அறிவை ஒரு புத்தகத்தில் வடித்து வைத்திருப்பார். நீங்கள் அந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது, அவருடைய 50 ஆண்டுகால அனுபவத்தை வெறும் 5 நாட்களில் பெற்றுவிடுகிறீர்கள்.


வாசிப்பு உங்கள் மூளைக்குச் சிறந்த உடற்பயிற்சி. இது மற்றவர்களுடன் பேசும்போதும், முடிவுகள் எடுக்கும்போதும் உங்களுக்குத் தனித்துவமான தெளிவைத் தரும்.


சிறந்த புத்தகங்கள் ஒரு நல்ல நண்பனைப் போல உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். தனிமையில் இருக்கும்போது வாசிப்பு உங்களை ஒருபோதும் சோர்வடையச் செய்யாது.


நம்முடைய முன்னோர்கள் வாசிப்பைத் தனது மூச்சாகக் கருதினார்கள்.


இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வாசிக்கும்போது ஒரு பக்கத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த பக்கத்தைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக மற்றொரு கையை அதன் மேல் மூடி வைப்பார்களாம். அந்த அளவிற்கு அவர்களின் வாசிப்பு வேகம் மற்றும் கவனம் இருந்தது.


இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவார்கள்: "நான் ஒரு புதிய புத்தகத்தைப் பார்த்தால், எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி ஒரு பொக்கிஷத்தைக் கண்டெடுப்பதை விட அதிகமாக இருக்கும்." அவர்கள் தனது வாழ்நாளில் 20,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.


சிலகாலம் முன் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் மிகப்பெரிய நூலகங்கள் இருந்தன. தொழுகை முடிந்தவுடன் மக்கள் புத்தகங்களை ஏந்தி வாசிப்பதைக் காண முடியும்.

இன்று நம் நிலை…?


நபிமார்கள் வரலாறு 

சஹாபாக்கள் வரலாறு 

இறைநேசர்கள் வரலாறு 

போன்ற வரலாறுகளை வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

நம் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.


4) பெற்றோருக்கு உதவி செய்வது


பெற்றோருக்கு உதவி செய்வது என்பது வெறும் ஒரு வேலை மட்டுமல்ல, அது இஸ்லாமிய அடிப்படையில் மிகப்பெரிய 'இபாதத்' (வணக்கம்) ஆகும். விடுமுறை நாட்களில் நாம் செய்யும் சிறு சிறு உதவிகள் கூட அவர்களின் உள்ளத்தை மகிழ்வித்து, அல்லாஹ்வின் அருளைப் பெற்றுத் தரும்.


அல்லாஹ் தன் வணக்கத்திற்கு அடுத்தபடியாகப் பெற்றோருக்கே முக்கியத்துவம் அளிக்கிறான்:

"وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

(அல்குர்ஆன் : 17:23)


நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கூறினார்கள்:

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ”

"பெற்றோரின் திருப்தியிலேயே இறைவனின் திருப்தி இருக்கிறது; பெற்றோரின் கோபத்திலேயே இறைவனின் கோபம் இருக்கிறது." (நூல்: திர்மிதி)


தாய்க்கு உதவி விடுமுறையில் நீங்கள் செய்யக்கூடிய எளிய உதவி சமையல் அறை வேலைகளில் காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பது, பாத்திரங்களை அடுக்க உதவுவது அல்லது வீட்டைத் துப்புரவு செய்வதில் பங்கெடுப்பது.


தந்தைக்கு உதவி: வெளியே கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி வருவது, வங்கி அல்லது மின்சார அலுவலக வேலைகளைக் கவனிப்பது, அல்லது தந்தையின் தொழில் சார்ந்த பணிகளில் ஒரு உதவியாளராக இருப்பது.


வீட்டில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றுவது, வாகனத்தைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை நீங்களாகவே முன்வந்து செய்யலாம்.


உவைஸ் அல்-கர்னி (ரஹ்)


தாபியீன்களிலேயே மிகச்சிறந்தவராகக் கருதப்படும் உவைஸ் அல்-கர்னி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தும் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. அதற்குக் காரணம்: அவர்களின் தாயார்.


தனது முதிய தாயாரைப் பராமரிக்கும் கடமையில் இருந்ததால், அவர்களால் மதீனா சென்று நபிகளாரைச் சந்திக்க முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தனது ஸஹாபாக்களிடம் கூறினார்கள்: "உவைஸ் அல்-கர்னி ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பவரிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யக் கோருங்கள். அவர்கள் தனது தாயாருக்கு மிகச் சிறந்த முறையில் பணிவிடை செய்பவர். அவர்கள் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதைத் தருவான்."


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)


ஒருமுறை ஒரு மனிதர் தனது தாயைத் தோளில் சுமந்தபடி கஃபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். அவர் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "நான் என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றிவிட்டேனா?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: "இல்லை, அவர்கள் உன்னைப் பெற்றெடுக்கும்போது அனுபவித்த பிரசவ வேதனையின் ஒரு மூச்சுக்குக் கூட இது ஈடாகாது."


விடுமுறை என்பது நமக்கு ஓய்வு, ஆனால் நம் வீட்டிலுள்ள தாய்க்கு ஒருபோதும் விடுமுறை கிடையாது.


அவர்கள் தினமும் நமக்காகச் சமைக்கிறார்கள். இந்த விடுமுறையில் அவர்களின் பாரத்தைச் சற்று நீங்கள் குறைத்தால், அது அவர்களுக்குப் பெரிய நிம்மதியைத் தரும்.


பெற்றோரின் துஆ (பிரார்த்தனை) உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றும்.

"சொர்க்கம் உங்கள் தாயின் பாதத்தின் கீழ் இருக்கிறது." இந்த விடுமுறையை அந்தச் சொர்க்கத்தைப் பெறும் வாய்ப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.


ஒரு மனிதன் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த விரும்பினால், அவன் காடு மேடெல்லாம் அலையத் தேவையில்லை. தன் வீட்டில் இருக்கும் பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருந்தாலே போதும், அல்லாஹ் அவனைக் குறித்துத் திருப்தி அடைந்துவிடுகிறான்.


ஒருவர் எவ்வளவு தான் தொழுது, நோன்பு நோற்றாலும், அவருடைய பெற்றோர் அவர் மீது கோபமாக இருந்தால், அந்தத் தொழுகையும் நோன்பும் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை இந்த ஹதீஸ் எச்சரிக்கிறது.


5) விடுமுறை நாட்களில் உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்வது, அவர்களுக்கு இடையே அன்பையும் பிணைப்பையும் அதிகப்படுத்துகிறது.


குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: 


  وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)


"நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்:

"قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ

"உறவுகளைத் துண்டிப்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்." (நூல்: புகாரி, முஸ்லிம்)


 உறவுகளைப் பேணுவதால் கிடைக்கும் நன்மைகள்

உறவினர்களைச் சந்திப்பதும் அவர்களுக்கு உதவுவதும் வெறும் நன்மையைத் தருவது மட்டுமல்ல, அவை நம் உலக வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும். 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"யார் தனது வாழ்வாதாரம் (ரிஸ்கு) பெருக வேண்டும் என்றும், தனது ஆயுள் நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறாரோ, அவர் தனது உறவினர்களைப் பேணி நடக்கட்டும்." (நூல்: புகாரி)


விடுமுறை நாட்களில் நீங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்று நலம் விசாரிப்பது, உங்கள் செல்வத்திலும் ஆயுளிலும் அல்லாஹ்வின் அருளை (பரக்கத்) கொண்டு வரும்.

மதீனாவில் அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு 'பைருஹா' என்ற மிக அழகான தோட்டம் இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அந்தத் தோட்டம் மிகவும் பிடிக்கும். குர்ஆனில் "உங்களுக்குப் பிடித்தமானவற்றிலிருந்து நீங்கள் தானம் செய்யாதவரை நன்மையை அடைய மாட்டீர்கள்" (3:92) என்ற வசனம் இறங்கியபோது, அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தத் தோட்டத்தை அல்லாஹ்விற்காகத் தர்மம் செய்ய முன்வந்தார்கள்.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அபூ தல்ஹாவே! இது சிறந்த தர்மம். ஆனால், இதை உனது நெருங்கிய உறவினர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்துவிடு என்று நான் கருதுகிறேன்."


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆலோசனையின்படி, அபூ தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தத் தோட்டத்தைத் தனது உறவினர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்தார்கள். தர்மத்திலேயே சிறந்தது 'உறவினர்களுக்குச் செய்வது' என்பதை இது உணர்த்துகிறது.


அலைபேசியில் பேசுவதை விட, நேரில் சென்று அவர்களைச் சந்திப்பது அதிக நெருக்கத்தைத் தரும்.


பெரிய அளவில் இல்லாவிட்டாலும், இனிப்புகள் அல்லது அவர்களுக்குப் பிடித்தமான சிறு பொருட்களை வாங்கிச் செல்லலாம்.


அவர்களின் உடல்நலம், குழந்தைகளின் கல்வி மற்றும் தேவைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வது அவர்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தரும்.


உறவினர்களுக்குள் ஏதேனும் கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தால், இந்த விடுமுறையில் நீங்களாகவே முன்வந்து பேசி அந்த விரிசலைச் சரிசெய்யுங்கள்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-

لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنَّ الْوَاصِلَ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا”

"உறவினர்களைப் பேணுபவர் என்பது, அவர்கள் தன்னிடம் காட்டும் அதே அன்பைத் தானும் காட்டுபவர் அல்ல; மாறாக, அவர்கள் உறவைத் துண்டித்தாலும் தான் அதைச் சேர்த்து வைப்பவரே உண்மையான உறவைப் பேணுபவர் ஆவார்." (நூல்: புகாரி)

முகாஃபிஉ (الْمُكَافِئِ): இதற்கு "பதிலுக்குப் பதில் செய்பவர்" என்று பொருள். அதாவது, உறவினர்கள் நமக்குச் சீர் கொடுத்தால் நாமும் கொடுப்பது, அவர்கள் நம் வீட்டிற்கு வந்தால் நாமும் செல்வது - இது ஒரு கைமாறு (Deal) போன்றது. இது சிறந்ததுதான் என்றாலும், இதுவே முழுமையான 'ஸிலத்துர் ரஹிம்' அல்ல.


அல்-வாஸில் (الْوَاصِلُ): இவரே உண்மையான உறவைப் பேணுபவர். உறவினர்கள் தன்னைத் தள்ளி வைத்தாலும், தன்னைப் பற்றிப் புறம் பேசினாலும், கோபித்துக் கொண்டாலும் - அவற்றைப் பொருட்படுத்தாமல் அல்லாஹ்விற்காகத் தேடிச் சென்று அந்த உறவைச் சேர்த்து வைப்பவரே சிறந்தவர்.


6) விடுமுறை நாட்களில் சமூக சேவை செய்தல்


இஸ்லாம் ஒரு மனிதனைத் தனித்து வாழச் சொல்லவில்லை; மாறாகச் சுற்றியுள்ள மக்களுக்கும், இயற்கைக்கும் பயனுள்ளவனாக வாழச் சொல்கிறது.


ஒரு முஃமினின் பொறுப்பு தெருக்களைச் சுத்தப்படுத்துதல் (தூய்மைப் பணி) இஸ்லாம் தூய்மையை ஈமானின் ஒரு பகுதியாகக் கருதுகிறது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் அவர்கள் கூறினார்கள்:

"قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَتُمِيطُ الْأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ

"பாதையில் இடையூறு தரும்பொருட்களை (முள்,கல்,குப்பை) அகற்றுவது தர்மமாகும்."நூல் புகாரி


விடுமுறை நாட்களில் உங்கள் தெருவில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது அல்லது நீர்நிலைகளைப் பாதுகாப்பது மிகப்பெரிய நன்மையைத் தரும்.


இயற்கையைப் பாதுகாப்பது ஒரு நிலையான தர்மம் (ஸதக்கத்துல் ஜாரியா).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யாராவது ஒரு மரத்தை நட்டு, அதன் கனிகளை ஒரு மனிதனோ அல்லது பறவையோ உண்டால், அது அந்த மரத்தை நட்டவருக்குத் தர்மமாக எழுதப்படும்." (ஆதாரம்: முஸ்லிம்).


இந்த விடுமுறையில் உங்கள் வீட்டின் அருகிலோ அல்லது பொது இடங்களிலோ குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரிக்க உறுதி எடுங்கள்.


ஏழை எளியவர்களுக்கு உதவுதல் பணம் கொடுத்து உதவுவது மட்டுமல்லாமல், உழைப்பால் உதவுவதும் சமூகக் கடமையே.

முதியவர்களுக்குச் சாலை கடக்க உதவுவது, ஏழை மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது அல்லது நோயாளிகளை நலம் விசாரிப்பது போன்றவை இதில் அடங்கும்.


'ஹில்ஃபுல் ஃபுளுல்' (சிறந்தவர்களின் உடன்படிக்கை)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நுபுவ்வத் (இறைத்தூது) கிடைப்பதற்கு முன்பே, அவர்கள் ஒரு சமூகப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார்கள். மக்காவில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சில பெரியவர்கள் இணைந்து 'ஹில்ஃபுல் ஃபுளுல்' என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.


வாலிபப் பருவத்தில் இருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அமைப்பில் மிக ஆர்வத்துடன் பங்கெடுத்தார்கள். பிற்காலத்தில் நபித்துவத்திற்குப் பின் அவர்கள் கூறினார்கள்: "அறியாமைக் காலத்தில் அந்த உடன்படிக்கையில் நான் கலந்துகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இப்போதும் அத்தகைய ஒரு பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நான் அதில் கலந்துகொள்வேன்."


ஒரு நல்ல காரியத்திற்காகச் சமூகத்தோடு இணைந்து பணியாற்றுவது நமது நபியின் வழிமுறை (சுன்னத்).


விடுமுறையில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவது உங்களுக்குப் பல அனுபவங்களைத் தரும்:


தலைமைப் பண்பு (Leadership): ஒரு குழுவாக இணைந்து பணியாற்றும்போது மற்றவர்களை வழிநடத்தும் திறன் வளரும். கஷ்டப்படும் மக்களை நேரில் காணும்போது, அல்லாஹ் நமக்குத் தந்துள்ள அருட்கொடைகளுக்காக அவனுக்கு நன்றி செலுத்தும் குணம் (ஷுக்ரு) வளரும்.


விடுமுறை நேரத்தை வீணான கேளிக்கைகளில் செலவிடாமல், ஆக்கப்பூர்வமான பணிகளில் செலவிட்ட திருப்தி கிடைக்கும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-

"قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ”

"மனிதர்களில் மிகச் சிறந்தவர், மற்ற மனிதர்களுக்குப் பயன் தருபவரே!" 


இந்த விடுமுறையில் உங்கள் ஊரில் உள்ள ஒரு சிறிய சமூகப் பணியிலாவது உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அது உங்கள் உள்ளத்திற்கு அமைதியையும், மறுமையில் நன்மையையும் பெற்றுத் தரும்.


அபு தர் (ரலி) அவர்களின் பாடம்

அபுதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாதையில் கிடந்த அந்த முள் கிளையை அப்புறப்படுத்தியபோது, மக்கள் கேட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் 


"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்: 'ஒரு மனிதன் முஸ்லிம்களின் பாதையில் அவர்களுக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்த ஒரு மரத்தின் கிளையை அப்புறப்படுத்தினார். அதன் காரணமாகவே அல்லாஹ் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கினான்.' எனவே, அந்த நன்மையை அடையவே நான் இதைச் செய்கிறேன்."


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமானுக்கு 60 அல்லது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பதாகக் கூறினார்கள். அதில் மிக உயர்ந்தது 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்வது; அதன் மிகச் சாதாரண (கடைசி) கிளை 'பாதையில் கிடக்கும் இடையூறுகளை நீக்குவது' ஆகும்.


அதாவது, ஒரு முஃமின் தனது ஆன்மீக வளர்ச்சியில் முன்னேற வேண்டுமானால், அவன் தனது சமூகத்திற்கும் பயனுள்ளவனாக இருக்க வேண்டும்.


அபுதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதைச் செய்யும்போது அங்கிருந்த மக்கள் பாராட்ட வேண்டும் என்றோ அல்லது ஆட்சியாளர் வெகுமதி தர வேண்டும் என்றோ எதிர்பார்க்கவில்லை.

ஒரு சிறு கல்லையோ அல்லது முள்ளையோ பாதையில் இருந்து எடுப்பது என்பது ஒரு 'ஸதகா' (தர்மம்) ஆகும்.


இன்றைய காலத்தில், சாலையில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வாழைப்பழத் தோல்கள் அல்லது போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் கற்களை அகற்றுவது கூட இந்த சுன்னத்தைப் பின்பற்றுவதாகும்.


சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது மேலைநாட்டு கலாச்சாரம் அல்ல; அது 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் கற்றுத் தந்த பாடம்.


பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதும், மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் அகற்ற முற்படுவதும் ஒரு உண்மையான இறைநம்பிக்கையாளரின் அடையாளம்.

இந்த விடுமுறையில் நீங்கள் உங்கள் வீதி அல்லது தெருவில் நடந்து செல்லும்போது, அங்கிருக்கும் ஏதேனும் ஓர் இடையூறை அபுதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவாக அகற்றுங்கள்.


அது ஒரு சிறிய காகிதமாக இருக்கலாம் அல்லது பாதையை மறைக்கும் ஒரு கிளையாக இருக்கலாம்.

நீங்கள் செய்யும் அந்தச் சிறு செயல், மலக்குகளால் ஒரு 'தர்மமாக' பதியப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

"إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ"

"பாதையிலிருந்து இடையூறுகளை அகற்றுவது தர்மமாகும்." (நூல்: புகாரி)


ஸலாஹுத்தீன் அய்யூபியின் 'பிமாரிஸ்தான்' (மருத்துவமனை) புரட்சி


ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எகிப்தைக் கைப்பற்றிய பிறகு, கெய்ரோவில் (Cairo) ஒரு மாபெரும் மருத்துவமனையை நிறுவினார். இது அன்றைய காலத்திலேயே நவீன மருத்துவ வசதிகளுடன் ஒரு முன்மாதிரி நிறுவனமாகத் திகழ்ந்தது.


இந்த மருத்துவமனையில் பணக்காரர், ஏழை, ஆண், பெண் மற்றும் அடிமைகள் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்துகள் மற்றும் உணவுகளுக்காக மக்களிடம் ஒரு காசு கூட வசூலிக்கப்படவில்லை.


உடல் ரீதியான நோய்களுக்கு மட்டுமன்றி, மனநல பாதிப்புகளுக்கும் அங்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. கதைகள் சொல்லும் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு, நோயாளிகளுக்குக் கதைகள் கூறப்பட்டன. மருத்துவமனையைச் சுற்றி அழகான பூந்தோட்டங்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன, இதனால் நோயாளிகள் இயற்கையோடு இணைந்து விரைவில் குணமடைய முடிந்தது.


நோயாளி சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது, அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவரால் வேலைக்குச் செல்ல முடியாமல் போயிருக்கும். இதைக் கருத்தில் கொண்டு, அவர் குணமடைந்து வெளியேறும்போது அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இது அவர் மீண்டும் தனது வாழ்வாதாரத்தைத் தொடங்கப் பேருதவியாக இருந்தது.


ஒரு மாபெரும் வெற்றியாளராக இருந்தும், ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சாமானிய மக்களின் ஆரோக்கியத்திலும், நிம்மதியிலும் அக்கறை காட்டினார். விடுமுறை காலத்தில் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.


தனிப்பட்ட முறையில் உதவி செய்வதோடு நின்றுவிடாமல், ஒரு சமூகத்திற்கு நிலையான பலன் தரும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அல்லது நூலகங்களை உருவாக்குவது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது.


போர்க்களத்தில் எதிரியாக இருந்தவர்களுக்கும் அவர் காட்டிய கனிவு, மருத்துவமனையில் அவர் காட்டிய மனிதநேயம் இவை அனைத்தும் இஸ்லாம் வலியுறுத்தும் 'அல்கித்மா' (மக்களுக்குச் சேவை செய்தல்) என்ற உயரிய பண்பின் வெளிப்பாடாகும்.


ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மரணிக்கும்போது, ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதியாக இருந்தும், அவரின் தனிப்பட்ட சொத்தில் அவரது கஃபன் (மரணத் துணி) வாங்குவதற்குக் கூடப் பணம் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அவர் தனது செல்வம் முழுவதையும் மக்கள் சேவைக்காகவும், தர்மத்திற்காகவும் செலவிட்டிருந்தார்.


நேரம் என்பது நழுவிச் செல்லும் மணலைப் போன்றது. நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கும் இந்த வினாடிகள் கூட மீண்டும் நம் வாழ்நாளில் திரும்பப் போவதில்லை. நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான்: "நம் முன்னோர்கள் நேரத்தைக் காதலித்தார்கள்; அதனால் வரலாறு அவர்களை இன்றும் நேசிக்கிறது.”


இந்த விடுமுறையில்:


இனிமேல் தக்பீர் தஹ்ரிமாவுடன் ஜமாஅத் தொழுகையை நிலைநாட்டுவோம்.


ஒரு புதிய மார்க்கக் கல்வியைக் கற்கத் தொடங்குவோம்.


நம் பெற்றோரின் சுமையைக் குறைக்கும் பிள்ளைகளாக இருப்போம்.


உறவினர்களை ஆதரிப்போம். 


புத்தகங்களை வாசிப்போம்.


நம் சமூகத்திற்குப் பயன் தரும் நற்பணிகளைச் செய்வோம்.


எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த விடுமுறை காலத்தை நமது மறுமை வாழ்வின் வெற்றிக்கு அச்சாணியாக ஆக்கி வைப்பானாக!


யா அல்லாஹ்! எங்களுடைய நேரங்களில் பரக்கத் செய்வாயாக! எங்களுடைய வாலிபத்தை உனது ஏவல்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் வாலிபமாக ஆக்கி வைப்பாயாக!


யா ரஹ்மானே! வீணான காரியங்களிலும், பாவமான செயல்களிலும் எங்களுடைய நேரங்கள் கழிந்துவிடுவதிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!

யா ரஹீமே! எங்கள் பெற்றோருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தைத் தந்து, அவர்களின் துஆவை எங்களுக்குப் பெற்றுத் தருவாயாக!


யா அல்லாஹ்! நாங்கள் கற்ற கல்வியின் படி அமல் செய்யும் தௌஃபீக்கை எங்களுக்கு வழங்குவாயாக! இந்த விடுமுறை முடிந்த பிறகு, நாங்கள் ஈமானிய ரீதியாக முன்னேற்றம் கண்டவர்களாக மாற அருள் புரிவாயாக!


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்.

1 கருத்து: