பக்கங்கள்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

ஷைத்தான் ஏன் குசு விட்டு ஓடுகிறான்.

 

“ஷெய்தான்” ஷாத்தான் பாங்கொலியைக் கேட்டால் முதுகு காட்டி குசு உட்டவனாக அது கேட்காத இடத்துக்கு ஓடிவிடுகிறான். 

(நபி மொழி)

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا سَمِعَ الشَّيْطَانُ الْأَذَانَ بِالصَّلَاةِ أَدْبَرَ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَهُ»


 தலைப்பில் நான் எழுதியது எம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்ன நபீ மொழியாகும். 


 ஏன் அவன் ஓட வேண்டும்? ஏன் குசு விட்டுக் கொண்டு ஓட வேண்டும்?


 எந்த இடத்தில் பாங்கு சொல்லப்படுகிறதோ அந்த இடத்திலிருந்து அது கேட்காத இடத்தை நோக்கி அவன் ஓடுகிறான். 


 அவன் ஏன் ஓடுகிறான் என்றால் அவன் நெருப்பால் படைக்கப்பட்டவன். பாங்கொலி - பாங்கின் சத்தம் ஆகாயத்தில் எந்தளவு தூரம் நாற்திசையிலும் பரந்து கேட்கிறதோ அந்த திசை முழுவதும் குளிர் பரந்து விடுகிறது. இப்படியொரு தன்மையை அல்லாஹ் பாங்கொலிக்கு வழங்கியுள்ளான். அந்த சத்தம் மறையாமல் ஆகாயத்தில் பரவி நிற்கும் வரை அந்தப் பகுதி கடுங்குளிராய் மாறிவிடுகிறது. நெருப்பும், குளிரும் ஒன்றுக்கு மற்றது எதிரானது. இதனால் நெருப்பால் படைக்கப்பட்ட ஷெய்தான் குளிரின் தாக்கத்தை பயந்து அதி வேகமாக ஓடுகிறான். அவன் ஓடும் வேகத்திலும் குசுப் பறக்க இடமுண்டு. அல்லது பயந்தாலும் குசுப் பறக்க இடமுண்டு. 


 நபீ மொழியில் குசுப் பறக்க ஓடுகிறான் என்றுதான் வந்துள்ளதே தவிர இதற்கான எந்தவொரு காரணமும் கூறப்படவில்லை. நான் எந்த ஒரு தத்துவ நூலிலும் பார்த்ததுமில்லை. 


 ஆயினும் எதார்த்தம், தத்துவம் பேசும் இறைஞான மகான்கள் இதற்கு மேற்கண்டவாறு விளக்கம் சொல்லியுள்ளார்கள். بُرُوْدَةٌ குளிருக்கு சூடு எதிரானது. حَرَارَةٌ சூட்டுக்கு குளிர் எதிரானது. இரண்டும் ஒரே இடத்தில் ஒன்று சேராது. 


 இந்த அடிப்படையில் ஷெய்தான் நரகத்திற்குச் சென்றால் அவன் நெருப்பால் படைக்கப்பட்டவனாதலால் நெருப்பால் அவன் வேதனை செய்யப்படாமல் زَمْهَرِيْرْ எனும் கடுங்குளிரினால் அவன் வேதனை செய்யப்படுவான். 


 இத் தத்துவத்தை அஷ்ஷெய்குல் காமில், அல்குத்புல் வாஸில் அப்துல் அஸீஸ் அத்தப்பாகு றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக அவர்களின் விஷேட சிஷ்யர் அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல் இப்ரீஸ்” என்ற நூலில் எழுதியுள்ளார்கள். பக்கம் எனது நினைவில் இல்லை. ஆயினும் நூல் என்னிடம் உள்ளது. விரும்புகின்றவர்களுக்கு பார்வைக்காக வழங்க முடியும். 


 அப்துல் அஸீஸ் அத்தப்பாகு என்ற மகான் அவர்கள் மொறோக்கோ - பாஸ் நாட்டில் அடக்கம் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ஒரு தர்ஹாவும் அங்கு உண்டு. மொறோக்கோ பிரதேசங்களில் வாழும் மக்கள் “சியாறத்” தரிசிப்பதற்காக வருவார்கள். குறித்த மகான் விரும்பி அழைத்தால் நானும், லண்டனிலுள்ள இன்னொருவரும் செல்வோம். இன்ஷா அல்லாஹ்!


 பாங்கு சொல்லும் “முஅத்தின்” தனது “நப்ஸ்” எதிரியை அடக்கி ஒடுக்கியவராய் இருந்தால் மட்டும்தான் அவரால் சொல்லப்படுகின்ற “அதான்” பாங்கிற்கு நான் மேலே சொன்ன சிறப்பு இருக்கும். “தக்வா” என்ற இறையச்சம் இல்லாதவர் சொல்லும் பாங்கிற்கு இப்படியொரு சிறப்பு இருக்காது. 


 நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் “பாங்கு” சொல்வதற்கென்று பலர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அதிகம் பாங்கு சொல்லும் வாய்ப்பு நபீ தோழர் பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கே இருந்தது. இவர்கள் சொல்லும் பாங்கின் சத்தம் “அர்ஷ்” என்ற இடத்துக்கு செல்லக் கூடியதாகவும், அங்குள்ள மலக்குகள் அந்த ஒலியைக் கேட்பவர்களாகவும் இருந்தார்கள். 


 ஒரு நாள் “முஅத்தின்” பிலால் அவர்களுக்கு நோய் ஏற்பட்டதால் அன்று “அஸ்ர்” தொழுகைக்கு அவர்களால் பாங்கு சொல்ல முடியாமற் போயிற்று. அவருக்குப் பதிலாக இன்னொருவர் பாங்கு சொன்னார். 


 அதே நாள் “அஸ்ர்” தொழுகை முடிந்த பின் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெருமானார் அவர்களிடம் வந்து இன்று பள்ளிவாயலில் “அஸ்ர்” தொழுகைக்கான பாங்கு சொல்லப்படாதது ஏன்? என்று கேட்டார்கள். நபீ பெருமானார் அவர்கள் இன்று பிலால் சுகயீனமாயிருந்ததால் வேறொருவரே இன்று பாங்கு சொன்னார் என்று கூறினார்கள். அவரின் பாங்கொலி இன்று அர்ஷுக்கு வரவில்லை என்று ஜிப்ரீல் கூறினார்கள். 


 நடந்தது என்ன? பிலால் அவர்களுக்கும், தற்காலிகமாக பாங்கு சொன்னவருக்கும் ஆன்மிக “மர்தபா” பதவியில் வித்தியாசம் இருந்ததேயாகும். அதாவது பிலால் அவர்களின் பாங்கில் நூறு வீதமும் “இக்லாஸ்” கலப்பு இல்லாத நிலை அதாவது தூய்மையாக இருந்தது. தற்காலிகமாகச் சொன்னவரின் பாங்கில் கலப்பு இருந்தது. தூய்மையாக இருக்கவில்லை. இதுவே காரணம். 


 பாங்கு சொல்பவர் “இக்லாஸ்” கலப்பு இல்லாத மன நிலையோடு பாங்கு சொல்ல வேண்டும். தனது குரல் அழகாக இருக்க வேண்டும், தனது பாங்கை செவிமடுப்பவர் தன்னைப் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற எண்ணத்தோடு பாங்கு சொன்னால் அந்த பாங்கு அர்ஷுக்கும் போகாது, அடுத்த வீட்டுக்கும் போகாது. 


 ஒரு பள்ளிவாயலில் 50 வருடங்களாக ஒரு “முஅத்தின்” பாங்கு சொல்லிக் கொண்டிருப்பார். அந்தப் பள்ளிவாயலில் ஏதாவது ஒரு விஷேடம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு அமைச்சர் அழைக்கப்பட்டு, வெளியூர் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டு, ஒலி பெருக்கிகளும் அதிகம் ஒழுங்கு செய்யப்பட்டு, ஒலி பெருக்கியில் ஊரெல்லாம் அறிவித்தல் செய்தால் மக்கள் திரண்டு வருவது வழக்கம். அன்று அந்த நிகழ்வின் போது ஐம்பது வருடங்களாக பாங்கு சொன்ன முஅத்தினுக்கு பாங்கு சொல்ல வாய்ப்புக் கிடைப்பதில்லை. முஅத்தினுக்குப் பதிலாக குரல் வளம் உள்ள ஒரு இளைஞனைத் தெரிவு செய்து அவனுக்கு அந்த வாய்ப்பை அந்த நிர்வாகம் வழங்கும். 


 அவனின் கல்பில் ஷெய்தான் ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவான். மக்கள் உன்னைப் பாராட்ட ஆயித்தமாய் உள்ளார்கள். மாலை சூடி பாராட்ட ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று சொன்னவுடன் அவனின் தலையில் “பிர்அவ்ன்” ஏறி அமர்ந்து விடுவான். அவன் என்றுமில்லாதவாறு முழங்குவான். ஆனால் அவனின் பாங்கொலி அர்ஷுக்கும் போகாது. அடுத்த வீட்டுக்கும் போகாது. 


 தேவைக்காக மா இடிக்க வேண்டுமேயன்றி பெருமைக்காக மா இடிப்பது கூடாது. ஏழைகள் மீது அனுதாபம் கொண்டு உணவு, பணம் கொடுக்க வேண்டுமேயன்றி பெயருக்காகவும், புகழுக்காகவும் கொடுப்பது கூடாது.


 எனதூரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் நோன்பு மாதம் “சகாத்” கொடுப்பான். அவன் “சகாத்” பணத்தை தனது பொக்கட்டில் வைத்துக் கொண்டு நான் இருக்கும் இடத்துக்கு வருவான். நான் தனிமையாக இருப்பதைக் கண்டால் திரும்பிச் சென்று விடுவான். பணம் தரமாட்டான். சற்று நேரம் கழித்து மீண்டும் வருவான். என்னைச் சுற்றி ஆட்கள் இருந்தால் மட்டும் உள்ளே வருவான். பொக்கட்டிலிருந்து பணத்தை எடுத்து மளமளவென்று எண்ணுவான். அதன் பிறகு பலரும் பார்த்திருக்க என்னிடம் தருவான். இவனின் கொடையால் இவனுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. 


 இதனால்தானோ என்னவோ சில மனிதர்கள் குருடன் கையில் மட்டுமே பணம் கொடுப்பார்கள். கொடுப்பவன் யாரென்று எடுப்பவன் தெரியாமலிருப்பதற்காக இவ்வாறு செய்வார்கள். 


 எந்தவொரு நல்லமலாயினும் அதை அல்லாஹ்வுக்காக “இக்லாஸ்” அடிப்படையில் நாம் செய்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். 


தொகுப்பு: 

மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக