இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹிமஹுழ்ழாஹ் அவர்களின் காலத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவம் மதீனாவில் ஒரு பெண் வஃபாத்தாகின்றாள்.
ஜனாஸாவை குளிப்பாட்டி, கஃபனிடுவதற்கு பெண்கள் ஒன்று கூடுகின்றனர். அப்போது அந்த இடத்திற்கு ஒரு பெண் வருகின்றாள்.
"இவள் ஒரு விபச்சாரி!" என்று ஜனாஸாவை பார்த்துக் கூறியவாறு ஜனாஸாவின் பிற்தட்டில் கையை வைக்கின்றாள்.
என்ன ஆச்சரியம்! அவளின் கை ஜனாஸாவின் பிற்தட்டுடன் பலமாக ஒட்டிக் கொள்கின்றது. அவள் எவ்வளவோ முயற்சித்தும் கையை ஜனாஸாவின் பிற்தட்டிலிருந்து எடுக்க முடியவில்லை.
ஜனாஸாவை குளிப்பாட்டி, கஃபனிட வந்த பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சிக்கின்றனர். கொஞ்சமேனும் அசைக்க முடியவில்லை.
விடயம் வெளியேப் பரவுகின்றது. அப்போதைய மதீனா கவர்னரின் காதுக்கும் செல்கின்றது. அவர் உடனடியாக ஆலிம்களை ஒன்று கூட்டி, "இதற்கு என்ன செய்வது?" என்று வினவுகின்றார்.
ஆலிம்களும் இரண்டு வெவ்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
1. அது ஒரு மைய்யித். உயிரற்ற ஜடம். ஆகவே, ஜனாஸாவின் பிற்தட்டிலிருந்து சிறிய ஒரு பகுதியை வெட்டி அகற்றி அந்த பெண்ணின் கரத்தைப் பாதுகாப்போம்.
2. அது ஒரு மைய்யித். அதனால் அதனை நோவினைச் செய்யக் கூடாது! அது பாவம்! அந்தப் பெண்ணின் கரத்தைத் துண்டிப்போம்.
கவர்னர் குழம்பிப் போகின்றார். "என்னதான் செய்வது?" என்று யோசிக்கின்றார்... சட்டென தெளிவு பிறக்கின்றது. "இமாமுல் மதீனா இமாம் மாலிக் ரஹிமஹுழ்ழாஹ் அவர்களிடம் போய் ஃபத்வா கேட்போம்" என்று விரைவாகப் போகின்றார்.
விடயத்தை அறிந்துக் கொண்ட இமாம் மாலிக் ரஹிமஹுழ்ழாஹ் அவர்கள்:
"ஜனாஸாவிலிருந்து எந்தவொரு பகுதியையும் வெட்டி அகற்றக் கூடாது! அதே சமயம் அந்தப் பெண்ணின் கரத்தையும் துண்டிக்கத் தேவையில்லை! அந்தப் பெண் ஜனாஸாவாக இருக்கின்ற அப்பாவிப் பெண்ணின் மீது அவதூறு சுமத்தியுள்ளாள். அதனால் அந்த மைய்யித் அதன் உரிமையைக் கேட்கின்றது. அவதூறு சுமத்தியதற்கான தண்டனையான எண்பது கசையடிகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். இன்ஷா அழ்ழாஹ், எல்லாம் சரியாகும்!"
என்று கூறினார்கள்.
உடனே, அந்தப் பெண் வரவழைக்கப்பட்டாள். கசையடி தண்டனை ஆரம்பமானது. எழுபத்தொன்பது கசையடிகள் வழங்கப்பட்டு விட்டன. எந்தவொரு மாற்றமும் இல்லை. எண்பதாவது கசையடி அடிக்கிறார்கள். பிற்தட்டுடன் ஒட்டிய கரம் பிரிந்து வருகின்றது. சுப்ஹானழ்ழாஹ்!
[இர்ஷாதுஸ் ஸாரி ஃபீ ஷர்ஹ் ஸஹீஹ் புஃகாரி லி இமாமி கஸ்தலானி]
அவதூறு!!! பெரும் பாவங்களில் ஒன்று. அதிலும் கற்புள்ள; பத்தினித்தனமான பெண்கள் மீது அவதூறு சுமத்துவது பாவத்தில் இன்னும் கனமானது! அவதூறு சுமத்தப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டு தௌபா செய்யா விட்டால் ஈருலகிலும் இழிவும், அழிவும், நாசமும் நிச்சயம்!
பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக