பக்கங்கள்

சனி, 26 அக்டோபர், 2024

நம்பிக்கையே வாழ்க்கை.

நம்பிக்கையின் அடிப்படையில் தான் மனித வாழ்வு இயங்கிக் கொண்டிருக் கிறது. இரண விஷயத்திலும் நம்பிக்கை முக்கிய பங்கை வகிக்கிறது. யானைக்கு தும் பிக்கை எவ்வளவு முக்கியமோ மனிதனுக்கு நம்பிக்கை அதை விட முக்கியம். அது இறை நம்பிக்கையாக பரிணமிக்கின்ற போது மனித வாழ்வு இலங்கத் துவங்குகிறது.

وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا


"ஏவர் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வாரோ அவருக்கு சிரமங்களை விட்டும் வெளியேறும் வழியை அவன் ஏற்படுத்துவான். அவர் அறியா புறத்திலிருந்து ரிஜ்கை (உணவும்) வழங்குவான். அல்லாஹ்வின் மீது எவர் நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவன் போதுமானவன்." 

(அல்குர்ஆன் 65:2,3)


நாணயத்தின் இரு பக்கங்கள் போல ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்விடத்தில் அச்சமும், அவன் மீது நன்நம்பிக்கையும் இருக்க வேண்டுமென்பதை மேற்காணும் வசனம் உணர்த்துகிறது.


படைத்தவனே உணவளிப்பான் :


உலகில் பல கோடி படைப்புகளை உருவாக்கிய இரட்சகன் அல்லாஹ் அவை களுக்குரிய இரணத்தையும் உற்பத்தி செய்துள்ளான். ஜீவராசிகளை படைத்த ரப்புக்கு அவைகளின் ரிஜ்க்கை உண்டாக்குவது பெரிய காரியமல்ல! தரையில் ஊரும் எறும்புகள், நடமாடும் மனிதர்கள். உலாவரும் விலங்குகள் உட்பட வானில் வலம் வரும் பறவைகள் முதல் ஆழ்கடலில் நீந்தி வரும் மீன் இனங்கள் வரை அன்றாடம் அன்ன ஆகாரங்கள் புசித்து வருகின்றன.


நபி அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் மீது நீங்கள் முழுமையாக நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பது போல உங்களுக்கு உணவு வழங்குவான். பறவை காலையில் வயிறு ஒட்டிய நிலையில் செல்கிறது. வயிறு நிரம்பியவாறு மாலையில் திரும்புகிறது. (நூல் : திர்மிதி)


பறவைகள் கற்றுத் தரும் பாடம்


பறவைகள் காலையில் கூட்டிலிருந்து கிளம்பும் போது எந்த தொழிலையும் எந்த இடத்தையும் யாரையும் நம்பிச் செல்வதில்லை, காலியான வயிற்றைப் போலவே காலியான மனதுடனும் தூய்மையான எண்ணத்துடனும் செல்கிறது. அவைகளுக்கு


சொந்தமான தொழிலும் சொந்த இடமும் இல்லை. ஆண்டாண்டு கால சேமிப்பும் கிடையாது. முழுக்க முழுக்க அல்லாஹ்வை மட்டுமே நம்பிச் செல்கின்றன. மனித னோ தனது தொழிலை, வருமானத்திற்குண்டான வழிகளை மட்டுமே நம்புகி றான்.


தன் ஜீவியத்திற்கு மட்டுமல்ல! தன் ஏழேழு தலைமுறையினரும் உட்கார்ந்து சாப்பிடுமளவிற்கு சேமிக்கின்றான். மனிதனைப் பொருத்த வரையில் இறை நம்பிக்கை என்பது இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. 


எனவே பறவைகளிடம் மனிதன் கற்க வேண்டிய பாடம் நிறையவே உள்ளது. "நம்பினோர் கை விடப்படார்" என்பது பறவைகள் விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மையாகும். பறவைகளின் தவக்குல் (நம்பிக்கை) மனிதர்களுக்கு ஏற்பட வேண்டுமென்பதற்காகவே பெருமானார் அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் வழிகாட்டுகிறார்கள்.


அல்லாஹ் பொருப்பெடுத்துள்ளான் :


ஜீவராசிகள் அனைத்திற்கும் அன்ன ஆகாரம் வழங்குவது அல்லாஹ் தன் மீது தனக்குத் தானே கடமையாக்கிக் கொண்ட மாபெரும் கடமை என வான்மறை வசனம் தெளிவு படுத்துகிறது.



பூமியில் எந்த ஊர்ந்து செல்லும் உயிரினமும், அதற்குரிய உணவு அல்லாஹ் வின் மீது (கடமையாக) இருந்ததே தவிர (அது வாழ்வது) இல்லை. (அல்குர்ஆன் 116)


ஹள்ரத் அனஸ் (ரலி) அவர்களுடன் அண்ணல் நபி பெருமான் அவர்கள் வனாந்தரம் வழியே செல்லும் போது கூட்டில் அமர்ந்திருந்த பறவை ஒன்று ஈனக் குரலில் சப்தமிட்டது. பறவையின் கெஞ்சல் மொழி பெருமானாரின் கவனத்தை ஈர்த்தது. "இப்பறவை என்ன கூறுகிறது தெரியுமா?" என நாயகம் கேட்க, 'அல்லாஹ் வும் அவன் தூதருமே நன்கறிவர்' என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “ரப்பேட் எனது கண் பார்வையை பறித்து என்னை குருடாக்கிவிட்டாய்! இப்போது பசியில் வாடும் எனக்கு உண்ண உணவு வழங்கு!" என வேண்டுகிறது என்றார்கள். நடக்கப் போகும் காட்சிகளை இருவரும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். ஒரு வெட்டுக்கிளி விரைந்து வந்து பறவையின் வாயில் அமர அதை அப்பறவை மென்று விழுங்கியது. மீண்டும் ஏதோ குரல் எழும்பியது. இப்போது என்ன கூறுகிறது தெரியுமா? என பெருமானார் அவர்கள் கேட்க, அனஸ் (ரலி) மீண்டும் அதே பதிலைக் கூறினார் கள். இப்போது பறவை அல்லாஹ்வை புகழ்கிறது. "நினைவு கூர்ந்தவனை மறவாது இரட்சிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என நன்றிப் பெருக்கை வெளிப் படுத்துகிறது என்று நாயகம் அவர்கள் விளக்கமளித்தார்கள்.


(நூல்: ரூஹுல் பயான்)


அல்லாஹ் எப்படியும் ரிஜ்கை கொடுத்துவிடுகிறான் :

அரியணையில் அமர்ந்து அரசு கோலோச்சிய இப்ராஹீம் இப்னு அத்ஹம்


(ரஹ்) அவர்கள் அதைத் துறந்து ஆன்மிகத்தில் காலடி வைத்ததற்கு பல நிகழ்ச்சி களை வரலாறு காரணமாக குறிப்பிடுவதுண்டு. அதில் இதுவும் ஒன்று.


அவர்கள் நாட்டில் வேந்தராக இருந்ததை விட காட்டில் வேட்டையாடி பொழுதைக் கழித்ததே அதிகம் அவ்வாறு ஒரு நாள் காட்டில் வேட்டையாடி விட்டு அமர்ந்து உணவுண்ணத் தொடங்கியதும் விரைந்து வந்த காகம் ஒன்று ரொட்டித் துண்டை கவ்விக் கொண்டு பறந்து சென்றுவிட்டது. 


ஆச்சர்யமுற்ற இப்னு அத்ஹம் குதிரையிலேறி அதை விரட்டிச் செல்ல காகம் ஒரு மலைப் பொதும்பிற்குள் சென்றது. காகத்தை பின் தொடர்ந்து சென்று பார்த்த போது வினோத மான காட்சி தென்பட்டது. கை கால்கள் கட்டப்பட்டுக் கிடந்தார் ஒருவர். ரொட்டித் துண்டை தூக்கி வந்த காகம் அதை தன் அலகால் பிய்த்து அவர் வாயில் ஊட்டியது. தண்ணீரை அலகில் எடுத்து வந்து வாயில் ஊற்றியது. இப்னு அத்ஹம் அவரருகில் வந்து விபரம் கேட்டார். "வியாபாரியான நான் காட்டைக் கடந்து செல்லும் போது திருடர்கள் பொருட்களைப் பறித்துக் கொண்டு என்னைக் கட்டிப்போட்டு இந்த இடத்தில் வீசிச் சென்றுவிட்ட னர். ஏழு நாட்களாக இதே நிலையில் இருக்கும் என்னை அல்லாஹ் பட்டினியாக விட்டு விடவில்லை. இந்த காகத்தின் மூலம் உணவு தண்ணீர் வழங்குகிறான்" என்றார் 


அவர் கட்டுக்களை அவிழ்த்து தன்னோடு குதிரையில் ஏற்றிக் கொண்டு இப்னு அத்ஹம் தன் அரண்மனை நோக்கி விரையும் போது அவரின் சிந்தனை அதை விட வேகமாக செயல்பட்டது. அல்லாஹ்வின் அளப்பரிய ஆற்றலையும் அருளையும் உணர்ந்து பார்த்த அவர் தன் தான்தோன்றித்தனத்தையும், சொகுசு வாழ்வையும் எண்ணி மனம் வருந்தி ஆடம்பர ஆடைகளுடன் தன் பதவியையும் கழற்றியெறிந்தார். ஞானிகள் உடுத்தும் முரட்டுக் கம்பளி அணிந்து கொண்டு ஆன்மிகத்தை நோக்கிய பயணமாக கஃபாவின் திசையில் சென்றார்.


(நூல்: ரவ்னகுல் மஜாலிஸ்)


உயிரினங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அவற்றிற்குரிய அன்ன ஆகாரங்களை இறைவன் வழங்கியே தீருவான் என்பதை மேற்காணும் நிகழ்வுகள் எடுத்துரைக்கிறது. எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவை அவை சுமந்து திரிவதில்லை.

وَكَاَيِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۖ اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ‌‌ۖ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

அவைகளுக்கும். உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கிறான். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 29:60)


இரண விஷயதில் அல்லாஹ்வின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கை முழுமை


பெறவே இந்த வசனத்தை அல்லாஹ் கூறுகிறான் உலகில் பிறக்கும் போது


எதுவுமில்லாமல் வெறும் மேனியாக பிறந்த மானிடருக்கு அனைத்தையும்


வழங்கியவன் அல்லாஹ்வே தான்! இந்த நம்பிக்கை நம் உள்ளத்தை ஆக்ரமித்தால்

அதுவே நம் ஈமானுக்கான சான்றாகிவிடும்.


மௌலவி ஹாஃபிழ் அல்ஹாஜ் M.S. அஹ்மது மீரான் பைஜி - 

கூத்தாநல்லூர்.


MANARUL HUDA

ALMUHARRAM-1432

DECEMBER 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக