பக்கங்கள்

சனி, 13 ஜூலை, 2024

அந்த நாய்க்கு ஒண்ணுமே தெரியல.. (கதை)

 

உடல் முழுக்க காயங்களுடன் வந்து கொண்டிருந்தான் அந்த இளைஞன்! எதிரே வந்த பெரியவர் ஒருவர், ''என்னாச்சு?'' என்று பதற்றத்துடன் கேட்டார்.


''ஒரு கலவரம்... பல பேரை அடிச்சுத் தள்ளிட்டு வரேன்...'' - எந்தவித பதட்டமும் இல்லாமல் சொன்னான் இளைஞன்.


பெரியவருக்கு ஆச்சரியம். ''ஏம்பா... கலவரத்துல பல பேரை அடிச்சேன்னு சொல்றே. அப்புறம் எப்படி உன் உடம்புல இவ்ளோ காயம்?'' என்று கேட்டார்.


''அவங்களும் என்னைத் திருப்பி அடிச்சாங்கள்ல.. அதான்!''


பெரியவர் விடவில்லை... ''அது சரி, என்ன கலவரம்?''


''மதக் கலவரம்!'' - அலட்சியமாக சொன்னான் இளைஞன்.


பெரியவருக்கு சலிப்பு! ''ஹும்ம்... மனுஷனும் மனுஷனும் அடிச்சுக்கறதுக்குப் பேரு மதக் கலவரம்!'' என்று தலையில் அடித்துக் கொண்டார்.


இளைஞனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''என்ன சொல்றீங்க?'' - குழப்பத்துடன் கேட்டான்


''புரியற மாதிரி சொல்லட்டுமா? உன்னை நீயே அடிச்சுக்கறே... இதுவும் புரியலியா? என்னோட வா, புரியும்!'' என்றபடி, அவனை இழுத்துக் கொண்டு விறுவிறுவென நடந்தார் பெரியவர்.


அருகே ஒரு கட்டடம்! இளைஞனுடன் உள்ளே நுழைந்தவர், ஓர் அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார். அறை முழுக்க பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிகளில் இவர்களது பிம்பங்கள் தெரிந்தன.


''இந்த அறை முழுக்க மனிதர்களா தெரியறாங்களே... அவங்கள்லாம் யாருன்னு தெரியுதா?'' - பெரியவர் கேட்டார்.


''நீங்களும் நானும்தான்!''- சிரித்தபடி சொன்னான்.


''ஒரு நிமிஷம்...'' என்று கூறிவிட்டு வெளியே சென்றவர் ஒரு நாயுடன் திரும்பினார். இப்போது, ஏராளமான நாய்கள் தெரிந்தன. இதைக் கண்டதும் குரைக்க ஆரம்பித்தது நாய். அதன் பிம்பங்களும் குரைத்தன! 'அட.. நமக்கு இவ்ளோ எதிரிகளா?' என்று ஆவேசம் அடைந்த நாய் அங்குமிங்கும் ஓடியது; பிம்பத்தின் மீது பாய்ந்தது. கண்ணாடி உடைந்து நொறுங்க, உடல் முழுக்க காயங்களுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என தலைதெறிக்க ஓடியது நாய்!


இதைக் கண்ட இளைஞன், ''ஐயோ பாவம்... நாய்க்கு ஒண்ணுமே தெரியலை'' என்று பரிதாபப்பட்டான்.


அவனைப் பார்த்து புன்னகைத்த பெரியவர், ''உனக்கும்தான் ஒண்ணுமே தெரியலை. கண்ணாடியில தெரியறது தான்தான்னு அந்த நாய்க்குத் தெரியலை; எதிரில் நிற்கும் ஒவ்வொருத்தரும் நீதாங்கறது உனக்குத் தெரியல. இந்த உலகம் கண்ணாடி மாதிரி. அதுல நீ பாக்கற பிம்பங்களை உனது எதிரிகளா நினைக்கறே... அதான் பிரச்சனை!'' என்றார்.


இதைக் கேட்ட இளைஞன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். பிறகு, ''ஐயா, அவசரமா ஒரு வேலை இருக்கு, கிளம்பறேன்'' என்றான்.


''என்னப்பா வேலை?'' - பெரியவர் கேட்டார்.


இளைஞன் சொன்னான் ''என்னால காயம் அடைஞ்சவங்களுக்கு மருந்து போடணும். அவங்களைக் காப்பாத்தணும்.


தென்கச்சி சுவாமிநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக