பக்கங்கள்

புதன், 3 ஜூலை, 2024

ஜகாத் பற்றி சில விளக்கங்கள்.

 


கேள்வி : ஜக்காத் கொடுப்பது பர்ளா அல்லது வாஜிபா?


பதில்: ஜக்காத் (பர்ளு) கடமை ஆகும். இதை மறுப்பவர் காபிர். கொடுக்காதவர் பெரிய பாவி ஆவார். கொடுக்கத் தாமதிப்பவர் குற்றவாளி ஆவார்.


கேள்வி: ஜக்காத் (பர்ளு) கடமை ஆகுவதற்கு விதிகள் என்ன?


பதில் : சில விதிமுறைகள் உள்ளன. முஸ்லீமாக வயது வந்த (பாலிங்) புத்தி உள்ளவராகவும் (நிஸாபு)அளவுக்கு அதிகமான பொருள்களுக்கு சொந்தக்காரராகவும் இருக்க வேண்டும். 


தீனை பற்றி தெரிந்தவராக இருக்க வேண்டும்.தங்கம், வெள்ளி மற்றும் உள்ள பொருட் களுக்கு ஒரு வருடம் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.


கேள்வி : தங்கம், வெள்ளி உடைய (நிஸாபு) அளவு எவ்வளவு? இதன்மீது ஜக்காத் எவ்வளவு கடமையாக உள்ளது?


பதில் : தங்கத்தின் அளவு ஏழரை தோலாவாகும் அதாவது 82 1/2 கிராம். 


வெள்ளிக்கு உரிய (நிஸாபு)அளவு 52 1/2 தோலாவாகும். (612)கிராம்.இந்த அளவுள்ள தங்கம் அல்லது வெள்ளி இதில் 40 பங்கு பிரித்து ஒரு பங்கு கொடுக்கவேண்டும்.


மார்க்கட் விவரத்தை விசாரித்து ஒரு பங்கின் விலையுடைய பணத்தையும் கொடுக்கலாம்.


கேள்வி: தங்கம், வெள்ளி மீதும் ஐக்காத் கடமை ஆகுமா?


பதில் :தங்கம், வெள்ளி நகைகள் மீதும் ஜக்காத் கடமையாகும்.


கேள்வி: வியாபாரத்தின் பொருளின் ஜக்காத் அளவு என்ன?


பதில்: வியாபாரத்தின் பொருளின் விலையை மதிப்பிட்டு தங்கம், வெள்ளி அளவின் விலையை கணக்கிட்டு அதிகமாக இருக்கும் தொகைக்கு ஜக்காத் கொடுக்கவேண்டும்.


கேள்வி: குறைந்தது எவ்வளவு பணத்திற்கு ஜக்காத் கொடுப்பது (வாஜிபு) ஆகும்?


பதில்: தங்கம், வெள்ளி இன்றி பணமாக இருந்தால் (82 1/2)கிராம் தங்கம் அல்லது (612)கிராம் வெள்ளி வாங்கும் அளவிற்கு பணம் இருந்தால் ஜக்காத் வாஜிபு ஆகும்.


கேள்வி: யார் இடமாவது (82 1/2)கிராம் தங்கம், (612)கிராம் வெள்ளிக்கு குறைவாகவும் வியாபாரம் பணம் இல்லை எனில் இதன்மீது ஜக்காத் கடமை ஆகுமா? 


பதில் : வெள்ளியின் விலை தங்கத்திற்கு பூர்த்தி ஆனாலும், தங்கத்தின் விலை வெள்ளிக்கு பூர்த்தி ஆனாலும் ஜக்காத் கடமை ஆகும். இதற்கு குறைவாக இருந்தால் கடமை இல்லை. 


கேள்வி: நாம் வைத்திருக்கும் பொருட்களில் எதன்மீது ஜக்காத் கிடையாது?


பதில் : நமது வாழ்க்கைக்குத் தேவையான வீடு, சமையல் பொருட்கள், கோடைகாலம், மழைகாலம் பனி காலங்களில் உடுத்தும் உடை, மற்ற உடைகள், பிரயாண வாகனம், இல்மைக் கற்றுக்கொடுக்கும் கித்தாபுகள், தானியங்கள் இதன்மீது ஜக்காத் கடமையில்லை.


கேள்வி: பொருட்கள் மீது ஒரு வருடம் பூர்த்தி ஆக வேண்டுமா?


பதில்: நமக்கு தேவைக்கு உட்பட்ட பொருட்களை விட எந்த தேதியில் உபரி ஆகிறதோ அன்றே ஜக்காத் அளவு ஆரம்பமாகி விடும். அதே தேதியில் வருடம் வந்தால் அதிகமாக இருந்தால் ஜக்காத் வாஜிபாகும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் வருடம் வருவதற்குள் குறைந்து விட்டால் கொடுக்கத் தேவையில்லை.


கேள்வி : ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?


பதில் : ஜக்காத் பெறத் தகுதியுடையவர்கள் ஏழை என்று சொல்லப்படும் அந்த நபருக்கு குறைவான பொருள் இருக்கும் ஆனால் ஜக்காத் கொடுக்கும் அளவிற்கு இல்லாத நிலை. 


2.மிஸ்கீன் என்று சொல்லப்படும் அந்த நபரிடம் தானியங்கள், உடுத்த உடைகள் இல்லாமலிருக்கும்.

 

3.கடனாளியாக இருந்து கடனைத்தர எந்தப் பொருளும் அவரிடம் இல்லாதவர்.


4.முஸாபராக இருக்கும் நிலையில் அவரிடம் செல்வதற்கு தேவைப்படும்அளவு வசதிஇல்லாதவர். 


இவர் களுக்கு ஜக்காத் கொடுக்கலாம். ஷரியத்தில் ஆகுமாக்கப்பட்டது.


(ஆலம்கிரி, துர்ருல்முக்தார்)


கேள்வி : யாருக்கு ஜக்காத் கொடுக்கக் கூடாது?


பதில் : ஜக்காத் கொடுப்பதற்கு கடமையானவர். 

2.பணகாரர் 

3.நபி ஹாசிமுடைய குடும்பத்தினர்.

4.நம்முடைய தாய், தந்தை, ராதா, ராதி, நன்னா, நன்னி, மகன், மகள், பேத்தி, பேரன், கொள்ளுபேத்தி, பேரன், கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ, அல்லது தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கோ இத்தாவில் இருக்கும் நிலையிலே வசதியுள்ள ஆணுக்கும் வயதுவராத பிள்ளைக்கும் ஜக்காத் கொடுக்க சட்டத்தில் அனுமதியில்லை. 


வசதியுள்ள மகளுக்கு ஜக்காத் கொடுக்குமளவிற்கு வசதியில்லையெனில் கொடுக்கலாம் 


வஹாபிக்கு அல்லது மார்க்கத்தை சீர்குலைக்கும் பிரிவினருக்கு ஜக்காத் கொடுக்க அனுமதியில்லை.


(ஆலம்கிரி துர்ருல்முக்தார் ரத்துல்முக்தார்)


கேள்வி : ஜக்காத்துடைய பணத்தை பள்ளிக்கும் பயன்படுத்தலாமா?


பதில் : ஜக்காத்துடைய பொருளைக் கொண்டு பள்ளிக்கோ, மதரஸாகட்டிடத்திற்கோ, இறந்தவர்களுக்கு

கஃபன் இடுவதோ, தண்ணீருக்காக கிணறு தோண்டுவதற்கும் ஜக்காத்துடைய பொருளை செலவு செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லை அப்படி செய்தால் ஜக்காத் நிறைவேறாது.


கேள்வி : ஏழையிடம் பாக்கியிருப்பின் அதை மன்னித்து விட்டால் ஜக்காத் நிறைவேறிவிடுமா?


பதில்: மன்னித்துவிட்டால் ஜக்காத் நிறைவேறாது ஜக்காத்துடைய பொருளை அவரிடம் கொடுத்து

பிறகு திருப்பி வாங்கிக்கொண்டால் நிறைவேறிவிடும். 


கேள்வி : சிலர் எங்கள் குடும்பம் பக்கீர் குடும்பம் என்று சொல்லி ஜக்காத் பணம் கேட்கிறார்கள். இவர்களுக்கு கொடுக்கலாமா?


பதில்: அவர்கள் ஜக்காத் கொடுக்கும் அளவிற்கு வசதியிருந்தால் அனுமதியில்லை.


கேள்வி : யாருக்கு ஜக்காத் கொடுத்தல் நன்மையானது?


பதில்: ஜக்காத்திலும் தர்மங்களிலும் நன்மையடைய தன்னுடைய சகோதரி, சகோதரன், இவர்கள் பிள்ளைகளுக்கும் மாமு, காலாம்மா, சச்சா, குப்பி, இவர்கள் பிள்ளை களுக்கும் சொந்தத்திலும்

அருகில் இருப்பவர்களுக்கும், நம்மிடம் இருப்பவர் களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும், கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், மதரஸா வில் இல்மைக் கற்றுக் கொள்ளும் வசதியில்லா

மாணவர்களுக்கும் கொடுப்பது சிறந்ததாகும். மார்க்கத்தில் அனுமதி உள்ளது.


(பஹாரே சரிஹத்)


கேள்வி : சதக்கத்துல் பித்ர் கொடுப்பது யார் மீது வாஜிபு ஆகும்?


பதில் : ஒவ்வொரு (நிஸாபு) அளவுக்கு அதிகமான பொருள் உள்ளவர் மீதும் அவருடையதில் இருந்து தன்மக்கள் (பாலிங்) பருவம் அடையாதவர்கள் மீதும் ஒவ்வொரு சதக்கத்துல் பித்ர் கொடுப்பது வாஜிபு ஆகும்.


கேள்வி : சதக்கத்துல் பித்ருடைய எடை என்ன?


பதில் : சதக்கத்துல் பித்ருடைய எடை, கோதுமை அல்லது மாவு அரைமரைக்காலும் பேரிச்சம்பழம்-தொழி கோதுமை-முந்திரிப்பழம் இவைகள் ஒரு மரைக்காலும், மாவாக இருந்தால் அரை மரைக்காலும் கொடுக்கலாம். இந்த நான்கு பொருள் அல்லாத, அரிசி, சோளம், தானியங்கள், துணி, மற்ற பொருட்கள் கொடுப்பதாக இருந்தால் கோதுமை அரை மரைக்கால் அல்லது ஒரு மரைக்கால் உள்ள பொருள் விலையை மதிப்பிட்டு கொடுப்பது அவசியமாகும். (துர்ருல் முக்தார்)


கேள்வி : மரைக்கால் உடைய தற்போது உள்ள எடை அளவு என்ன?


பதில் : தற்போது உள்ள எடை ஒரு மரைக்காலுக்கு 4கிலோ -94கிராம்ஆகும். அரை மரைக்கால்

2கிலோ-47கிராம் ஆகும்.


கேள்வி : கோதுமை மற்ற பொருள்கள் கொடுப்பதற்கு பதிலாக அதன் கிரயத்தை கொடுக்கலாமா?


பதில்: கோதுமை அல்லது மற்ற பொருள்கள் கொடுப்பதை விட அதன் விலையை நிர்ணய செய்து பணமாக கொடுப்பது மிக சிறந்ததாகும். 


கேள்வி :சதக்கத்துல்பித்ர் யாருக்கு கொடுப்பது கூடும்?


பதில் : யாருக்கு எல்லாம் ஜக்காத் கொடுக்க அனுமதி உள்ளதோ அவர்களுக்கு கொடுக்கலாம் யாருக்கு தடுக்கப்பட்டு உள்ளதோ அவர்களுக்கு கொடுப்பது கூடாது.

(துர்ருல்முக்தார்.)


தொடர்புக்கு: 9042211019


தாரூல் உழும் அல்-ஹுசைனியா சுன்னத் ஜமாஅத் அரபிக் கல்லூரி,

424, சின்னக் கடைவீதி, தாராபுரம் - 638656,

திருப்பூர் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக