பக்கங்கள்

ஞாயிறு, 18 ஜூன், 2023

பாவம் செய்யாமல் இருக்க முடியவில்லையா..

 


அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அன்றொரு நாள் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (றஹ்) அவர்களை சந்திக்க ஓர் இளைஞன் வந்தான் . அவன் அவர்களிடம் கேட்டான்:

 

"ஷெய்க் அவர்களே, என்னால் பாவம் செய்யாமல் இருக்க முடியவில்லை; எனது உள்ளம் எப்போதும் என்னை பாவம் செய்ய தூண்டிக் கொண்டே இருக்கின்றது. 


எனக்கு நீங்கள் ஏதாவது அறிவுரை கூறுங்கள்." என்றான்

 

இதைக் கேட்ட இமாம் அவர்கள்,

 

"மகனே! நீ பாவம் செய்யலாம். ஆனால் ஐந்து நிபந்தனைகள் உண்டு. அவற்றை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பாவம் செய்ய முடியும்" என்றார்கள்.

 

அதற்கு அந்த இளைஞன், "அந்த நிபந்தனைகள் என்ன? சொல்லுங்கள் இமாம் அவர்களே" என்று கேட்க அவர்கள் அவற்றை ஒவ்வொன்றாக சொன்னார்கள்.

 

"முதலாவது நிபந்தனை நீ பாவம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் ரிஸ்க்கை புசிக்கக் கூடாது."

 

அதற்கு அந்த இளைஞன், "றிஸ்கின் சொந்தக்காரன் அல்லாஹ்வாச்சே..? வேறு யாரிடமிருந்தும் அதனைப் பெறமுடியாதே" என்றான்.

 

அதற்கு இமாம் அவர்கள்,

"அல்லாஹ் அருளிய ஆகாரத்தைப் புசித்து கொண்டு எப்படி நீ அவனுக்கு மாறு செய்ய முடியும்? பாவம் செய்ய முடியும்?" என்றார்கள்.

 

அடுத்து இரண்டாவது நிபந்தனையைக் குறிப்பிட்டார்கள்:

 

"நீ பாவம் செய்ய வேண்டும் என்றால் அல்லாஹ்வின் பூமியிலிருந்து வெளியேறி வேறோரு இடத்திற்குச் சென்று அங்குதான் நீ பாவம் செய்ய வேண்டும்." என்றார்கள்  


இதைக் கேட்ட இளைஞன், "பூமி, வானம் உட்பட முழு பிரபஞ்சமும் அல்லாஹ்வுக்கே சொந்தம். இப்படி இருக்க எங்கு போய் நான் பாவம் செய்வது?" என்றான்.

 

அதற்கு இமாம் அவர்கள், "அல்லாஹ் அருளும் ஆகாரத்தை புசித்துக் கொண்டு, அவனது பூமியில் வாழ்ந்து கொண்டு அவனுக்கு நீ எப்படி மாறுசெய்ய முடியும்?" என்றார்கள்.

 

தொடர்ந்து மூன்றாம் நிபந்தனையைச் சொன்னார்கள் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள்.

 

"நீ பாவம் செய்ய விரும்பினால் அல்லாஹ் உன்னைப் பார்க்காத ஓர் இடத்துக்கு நீ செல்ல வேண்டும். அங்கே போய் நீ பாவம் செய்யலாம்."

 

இதைக் கேட்ட அந்த இளைஞன்,

 

"இது எப்படி சாத்தியமாக முடியும்?

அல்லாஹ் பார்க்காத, கேட்காத ஓர் இடம் எங்கும் இல்லையே" என்றான்.

 

அப்போது அவர், "அல்லாஹ் வழங்கிய ஆகாரத்தைப் புசித்துக் கொண்டு, அவனது பூமியில் வாழ்ந்து கொண்டு, அவன் பார்த்திருக்க அவனுக்கு எப்படி உன்னால் மாறு செய்ய முடியும்?" என்று கூறிவிட்டு அடுத்த நிபந்தனையைக் குறிப்பிட்டார்கள்.

 

"மலகுல் மௌத் ஒருநாள் உனது றூஹைக் கைப்பற்ற வருவார் அல்லவா?

அந்த சந்தர்ப்பத்தில் அவருடன் பேசி, தௌபா செய்வதற்கும் நற்காரியங்களில் ஈடுபடுவதற்குமான ஓர் அவகாசத்தை உன்னால் பெற்றுக் கொள்ள முடியும் என்றால் நீ பாவம் செய்யலாம்." என்றார்

 

அதைக் கேட்ட இளைஞன், "அது எப்படி சாத்தியமாகும்? ஒருவரது அஜல்-தவணை வந்து விட்டால் அவருக்கு எந்த அவகாசமும் கிடைக்காதே" என்று சொன்னான்.

 

அதற்கு இமாம் அவர்கள்,

"மரணம் திடீர் என்று எதிர்பாராத விதமாக வரும்; மலகுல் மௌத் அவகாசம் தரப்போவதும் இல்லை என்றிருக்கும் போது நீ எப்படி தப்பிக்க முடியும்" என்று சொல்லிவிட்டு

கடைசி ஐந்தாம் நிபந்தனையையும் அவனுக்கு கூறினார்கள்:

 

"நாளை மறுமையில் ஸபானியாக்கள்  உன்னை பிடித்து நரகத்திற்கு இழுத்துச் செல்ல வரும் போது நீ அவர்களுடன் போராடி அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து உன்னால் சுவனம்  நுழைய முடியும் என்றால் நீ பாவம் செய்லாம்." என்றார்.

 

இதற்கு அந்த இளைஞன்,

"அவர்களின் பிடியிலிருந்து யார் தான் தப்ப முடியும்? அது ஒருக்காலும் நடக்காதே" என்றான்.

 

"ஓ இளைஞனே!

உன்னைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகின்றேன். அல்லாஹ் தந்த உணவை உண்டு, அவனது பூமியில் வாழ்ந்து, அவன் உன்னை என்றும் எப்போதும் பார்த்திருக்கும் நிலையில், மரணத்தின் பிடியிலிருந்தும் உன்னால் தப்ப முடியாத போது, நரகத்திலிருந்து தப்பி சுவனம் நுழையும் சக்தியைப் பெறாத நீ எப்படி அல்லாஹ்வுக்கு மாறு செய்வாய்? பாவங்களில் ஈடுபடுவாய்?" என்று சொன்னார்கள்.

 

 இதைக் கேட்ட அந்த இளைஞன்,

"போதும் இமாம் அவர்களே, போதும். இதற்கு மேல் எந்த விளக்கமும் எனக்கு தேவையில்லை. நான் இதோ பாவமன்னிப்புக் கோருகிறேன்; இனி எந்தப்பாவத்தையும் நான் செய்யமாட்டேன்" என்று உறுதியளித்து விட்டு இமாம் அவர்களிடமிருந்து விடை பெற்றான்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

ஒரு மனிதன் எப்போது தவறு செய்கிறான் என்றால் அல்லாஹ் நம்மை பார்க்கவில்லை என்ற எண்ணம் அவனுக்கு வருகின்ற பொழுது அவன் எதையும் செய்ய துணிந்து விடுகின்றான்.

நம்மை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் இருந்தால் அவன் என்றும் எங்கும் எப்போதும் தவறு செய்ய மாட்டான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக