பக்கங்கள்

வெள்ளி, 15 ஜூலை, 2022

‘ வதந்தி வேண்டாம்”

 


கண்ணியத்திற்குரிய...ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே.. ஜமாஅத்தார்களே.. இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே.. சமூக சேவையாளர்களே.. இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே.. மற்றும் பெற்றோர்களே..என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே.. அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அல்லாஹ் குர்ஆனில் ஒரு வசனத்தில் சொல்கிறான்

முமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (திருக்குர்ஆன் 49:6).

இந்த இறைவசனம் இறங்கியதன் பின்னணியை அறிந்துகொள்வோம்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஜகாத் நிதியை வசூலிப்பதற்கு ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்களை பனீமுஸ்தலிக் எனும் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள்.

இவருக்கும் அந்த கோத்திரத்தாருக்கும் இஸ்லாத்திற்கு வரும் முன் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்தபின் அந்த பகை மறைந்து போனது.

ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் படையை திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள்.

இதை கண்ட ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட இவர்கள் ஒன்று குழுமியிருக்கிறார்கள் என மனதில் நினைத்துக் கொண்டு, வந்த வழியை நோக்கி நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிவிட்டார்கள்.

மேலும் அந்த கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில் பின்வரும் சில வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். 1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், 2) ஜகாத் நிதியை தர மறுக்கிறார்கள், 3) என்னை கொலை செய்யவும் தயாராகி விட்டார்கள்.

இந்த வதந்திகளை நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் நம்பவில்லை. நடந்தது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஹசரத் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி வைத்து, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள்.

அந்த ஊரின் எல்லை அருகே படை வந்ததும், ஹசரத் காலித் (ரலி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள். அந்த நேரம் மக்ரிப் தொழுகை நேரமாகும். ஒற்றர்கள் சென்றபோது அந்த கோத்திரத்தார் தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதை கண்டார்கள்.

இந்த செய்தியை அறிந்து கொண்ட காலித் (ரலி) அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஜகாத் நிதியை வசூலித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னார்கள். அப்போது தான் மேற்கூறப்பட்ட (49:6) இறைவசனம் இறங்கியது.

உடனே நபி (ஸல்) அவர்கள் நிதானம் இறைவனின் செயல். அவசரம் ஷைத்தானின் செயல்என்று கூறினார்கள்.

மேற்கூறப்பட்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் அவசரப்படாமல் நிதானமாக சமயோசிதமாக நடந்து கொண்டதினால் ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது. அந்த நபித் தோழரின் வதந்தியை நம்பி, நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டால் அநியாயமாக ஒரு சமூகத்தாருக்கு அநீதி இழைத்தவர்களாக ஆகியிருப்பார்கள்.

கண்டதை எல்லாம் பேசுவது வதந்தியின் ஆரம்ப நிலையாக அமைந்து விடுகிறது. நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு. வதந்தியால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் அதனை பரப்பியவர் மீதே சாரும்.

எதைப் பற்றி உமக்கு (த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவையாவுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்” (திருக்குர்ஆன் 17:36)

தான் கேட்பதையெல்லாம் ஒருவன் பரப்புரை செய்வது அவன் பொய்யன் என்பதற்கு இதுவே போதுமானதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹசரத் ஹப்இபின் ஆஸிம் (ரலி) அவர்கள், (நூல்:முஸ்லிம்).

தான் கேட்பதையெல்லாம் பரப்புரை செய்பவன் பரிபூரண முஸ்லிமாக முடியாது; மேலும் அவன் ஒரு போதும் தலைமைத்துவத்திற்கு தகுதியும் பெற முடியாது” (பைஹகீ)

ஹசரத் உமர் (ரலி) அவர்கள் கூறும்போது உங்களையும், குழப்பத்தையும் நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனெனில், வாளால் ஏற்படும் அதே பாதிப்பு நாவினாலும் ஏற்படும்என்றார்கள்.

வதந்தியால் பலரின் வாழ்க்கை பாழாகி போயிருக்கிறது. எனவே உணருங்கள் யாரைப்பற்றியும் தவறாக வதந்தியை சொல்லாதீர்கள் வல்ல ரஹ்மான் நமக்கு உதவி செய்வானாக ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 

இத் தகவலை நமக்கு தொகுத்து தந்தவர் : 

மதிப்பிற்குரிய மவ்லானா மவ்லவி B. முஹம்மது ராஃபி ரஷீதி 

ஹழ்ரத் அவர்கள்.  

ஆசிரியர் ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா. அரக்கோணம்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக