பக்கங்கள்

வெள்ளி, 17 ஜூன், 2022

அளவுக்கு மிஞ்சினால் அலைப்பேசியும் நஞ்சாகும்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அதிகமாக செல்ஃபோனில் மூழ்கி இருக்கும் இன்றைய தலைமுறையினரின் போக்கை நினைத்தால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது....

 

ஏனென்றால் இவர்களுக்கு பிடித்த ஒரே பொருள்  - செல்ஃபோன்..

 

இவர்களின் எண்ணம் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.

 

கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...

 

யாருக்குமே மரியாதை தரக்கூடாது..

 

தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற எண்ணுகிறார்கள்...

 

எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எண்ணுபவர்களாக

 

சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம் என்று நாள் முழுவதும் அதிலேயே மூழ்கி இருப்பவர்களாக..

பெண்களை போகப் பொருளாக பார்க்கும் வீடியோ காட்சிகளை அதிகம் காண்பவர்களாக...

அருகில் இருப்பவர்களிடம் பேசாமல் அவர்களின் உணர்வுகளை புரியாமல் செல்போன் வழியாக தூரத்தில் உள்ளவர்களிடம் பேசக்கூடியவர்களாக.

அந்த தூரத்தில் உள்ள உறவு அருகில் வந்தால் அப்போதும் அவர்களிடம் பேசாமல் மற்றொரு தூரத்தில் இருப்பவரிடம் சாட் செய்து கொண்டிருப்பவர்களாக..

 

ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி நினைப்பவர்களாக

 

வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லாதவர்களாக...

ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாதவர்களாக

புத்தகங்களில் ஒரு வரி கூட வாசிக்க பிடிக்காதவர்களாக...

தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராதவர்களாக

ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல தெரியாதவர்களாக...

வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும் அதையும் செல்பி எடுத்து  போட கூடியவர்களாக...

இவர்களின் கையில் உள்ள செல்ஃபோனை பிடுங்கி விட்டால் ஏதோ ஒன்றுமில்லாத பாலைவனத்தில் உள்ளது போல தவிக்க கூடியவர்களாக..

பள்ளிச் சீருடையுடன் டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌ கொண்வர்களாக...

சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை‌ பேசுவதை ஃபேசனாக நினைப்பவர்களாக..

எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை கொண்வர்களாக...

பொறுமையற்று எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம் கொண்டவர்களாக

ஜட்டி தெரிய பேண்ட் போட்டு,

காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி,

புள்ளைங்க மாதிரி தெரியாமல் புள்ளீங்கோ மாதிரி திரிவதை விரும்புபவர்களாக.

எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன்  டெல்ஃபோனை பார்த்துக் கொண்டு நடப்பவர்களாக உருவாகி வருகிறார்கள்.

நாம் இந்த அபாயத்தை இன்னும் முழுமையாக உணராமல் இருந்து கொண்டு இருக்கிறோம்.

இதற்கு காரணம்

பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான்.

 

பெற்றோர்கள் தங்களையும் அறியாமல் செல்லம் கொடுக்கிறேன் என்ற பெயரில் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...

 

பார்ப்பதற்கு இவர்கள் பிள்ளைகள் போல தோற்றமளித்தாலும் உண்மையில் அவர்கள் உணர்ச்சிகளற்ற பிள்ளைகளாக உருவாகி வருகிறார்கள்.

 

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இவர்களுக்கும் முன் சென்ற தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது.

 

நான் இதுவரை சொன்னது ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று நினைச்சிறாதிங்க.  பொம்பள பிள்ளைகளுக்கும் தான் சொல்லுறேன்.

 

இதை மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக நினைக்காதிங்க.

 

கடந்த பல்லாயிரம் வருடங்களில் இப்படி ஒரு ரசனை கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட  தலைமுறையை இந்த உலகம் சந்திக்கவே இல்லை.

 

 

`கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து,

கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம்…’ என்று ஒரு கவிஞர் சொன்னார்.

 

முன்பெல்லாம் அவ்வப்போது பேசுவதற்கு மட்டுமே அதிகளவில் செல்போன்கள் பயன்பட்டது ஆனால் இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்து ஸ்மார்ட் போன்கள்என்ற பெயரில், செல்போன்கள் சமர்த்தாக மாறிவிட்டது.

செல்போன்களின் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்துவிட்டது.

விரல் நுனியில் உலகம், நினைத்த நேரத்தில் மற்றவரை தொடர்பு கொள்ளலாம், கருத்துப் பரிமாற்றம், பாதுகாப்பு, செய்திகள்... என செல்போன்களால் பலவித நன்மைகள் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுஎன்ற பழமொழி இன்று செல்போன் பயன்படுத்துவோருக்கும் இது பொருந்தும்.

பேசுவதற்கும், பல விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே கிடையாது. ஆனால் கால வரைமுறை இல்லாமல் செல்போன்களைப் பயன்படுத்தத் துடிப்பதுதான் தவறு.

`வேறு வேலை செய்துகொண்டிருந்தாலும், செல்போன் எப்படா அடிக்கும் என, வாட்ஸ்அப் பேஸ்புக் போன்ற செயலிகளின் ஒலிகளுக்காகவோ பெரும்பாலோரின் மனம் ஏங்கிக்கிடக்கின்றனஎன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழைப்பு ஒலிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வரவில்லையெனில், உடலுக்குள் பதற்றமான சூழ்நிலை (Anxiety) உருவாவதாகக் மருத்துவர்கள் கூறுகிறார்கள்

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

மதுவைப்போல செல்போன்களும் போதைப் பொருளாக உருமாறி இருப்பது, இன்றைய காலத்தில் பேச வேண்டிய ஒன்று. இருபத்தி நான்கு மணி நேரமும் செல்போன்கள் நமது உடலோடு ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. காலையில் விழிக்கச் செய்யும் அலாரத்தில் தொடங்கி, மணிக்கணக்கில் பேசுவது, வியாபரம், அரட்டை என நீண்டு, இரவில் தாலாட்டுப் பாடி நம்மை உறங்கச் செய்வதுவரை செல்போன்கள்தான்.

சில நேரத்தில் தூக்கத்தைக் கெடுப்பதும் செல்போன்களே. நாம் உறங்கும்போது, நம் தலைக்கு அருகிலேயே, நம்மை ரசித்துக்கொண்டே கொட்டக் கொட்ட விழித்திருக்க செல்போன்கள்! செய்கின்றன

நேரம் இல்லாத பிஸ்னெஸ்மேன்கள் போல சாப்பிடும்போதும் செல்போனில் பேசிக்கொண்டு. குளிக்கும்போதுகூட பிளாஸ்டிக் பேப்பரால் செல்போனை மூடி, ’லவுடு ஸ்பீக்கரில்பேசவேண்டிய கட்டாயத்தில் இந்த இளைய சமுதாயம் இருக்கிறது.

நமது உடலில் புதிதாகத் தோன்றிய நவீன உறுப்பு என்றுகூட செல்போனைச் சொல்லலாம். அப்படி புதிதாக உருவாகியிருக்கும் செல்போன் எனும் உறுப்பை அதிகமாகப் பயன்படுத்தினால் ஆபத்தான உறுப்பாக மாறலாம்,

அல்லாஹ்வின் நல்லடியார்களே..

இன்று செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தினால், உடல் நிலை பாதிக்கப்படும்என்று குரல் கொடுத்தால், நம்மை விநோதமாகப் பார்க்கும் சமுதாயத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தேசத்துக்கு எதிரானவன்’ (Anti-Indian) என்பதுபோல, ’அறிவியலுக்கு எதிரானவன்’ (Anti-Science) என்று நம்மை சொல்வார்கள்.

தொடர்ந்து நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தினால் உடல் பாதிக்கப்படும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லைஎன்பதாக பெரிய நிறுவனங்கள் கூறுகின்றது நான் பத்து வருசத்த்துக்கும் மேலாக செல்போன் பயன்படுத்திவருகிறேன். எனக்கு எந்த பாதிப்பும் வரவில்லையேஎன்று பலர் எதிர்வாதமும் செய்றாங்க. ஆனால், அதிகளவில் செல்போன் பயன்படுத்தும்போது, நமது உடலில் உண்டாகும் மாறுதல்களை நாமே கவனிக்க முடியும்.

செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட்டால்தான் பாதிப்பு என்று இல்லை. தலைவலி, எரிச்சல், சோர்வு, பதற்றம் போன்றவை தோன்றினாலும் பாதிப்புதான். பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகளைத் தவிர வேறு யாருக்கும் பாதிப்பில்லைஎன்றுதான் அதை முதலில் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், அவற்றால் நமது சூழலே மாறிவிட்டதை அவர்களால் மறுக்க முடியுமா? 

நேரடியாக செல்போன்களைக் காதில் வைத்துப் பேசும்போது, காது மடல்கள் எவ்வளவு சூடாகுதுன்னு கொஞ்சம் பாருங்க. நீண்ட நேரம் பேசிய பிறகு, ’விங்ங்...என்ற ஒலி காதுக்குள் கேட்பதை உணர்ந்திருக்கலாம். செயற்கையாக ஓர் ஒலி தன்னிச்சையாக எழுகிறது என்றால் செவிப்பறை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்?

இரவில் இருட்டறைக்குள் செல்போன் வெளிச்சத்தை நேரடியாகக் கண்ணில்பட அனுமதிக்கும்போது, பார்வை சில நிமிடங்கள் மங்குவதை உணரலாம். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மேலும் சில செயலிகளைப் பயன்படுத்திய பின்னர், நமது மனநிலையில் உண்டாகும் வித்தியாசமான மாறுதல்களை உணர்ந்திருப்போம்.

இவையெல்லாம் உடல்நிலையை பாதிக்காமல், மேம்படுத்தவா செய்கின்றன என்று நாம் சிந்திகக வேண்டும்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

செல்போன்களைப் பயன்படுத்துவதில் கடந்த தலைமுறைக்கும் இப்போதைய தலைமுறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? கடந்த தலைமுறையினர், தேவைக்கேற்ப செல்போன்களைப் பயன்படுத்தினார்கள். நாமோ தேவைக்குப் போக, முழு நேரமும் செல்போன்களின் துணையுடனேயே வாழ்கிறோம்.

சிலசில பாதிப்புகள் இருப்பது தெரிந்தும், அதற்குப் பழகிவிட்டது நமது வாழ்க்கை முறை. செல்போன் இல்லாமல் ஒரு நாள் நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா?’ என்பது நியாயமான கேள்விதான். ஒரே ஒருநாள், செல்போன் தொடர்பு இல்லாத மலைப்பகுதியில் நேரத்தைச் செலவிட்டு பின்னர் தினசரி அலுவல்களுக்குத் திரும்புங்கள். மன நிம்மதி என்பதற்கான முழு அர்த்தமும் தெளிவாக விளங்கும். 

கால் நூற்றாண்டுக்கு முன்னர், தெருவில் உள்ள ஏதோ ஒரு வீட்டில்தான் தொலைபேசி வசதி இருந்தது. அவசரச் செய்திகளைப் பரிமாற, அந்தத் தொலைபேசிதான் மிக முக்கியச் சாதனமாக இருந்தது. இன்றோ ஒவ்வொருவர் கையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள்.

இது என்னோட குழந்தையோட போன்இது என்னோட மனைவி ஃபோன் என்ற தனித்த பெருமை வேற சிலருக்கு உண்டு. என்னோட மூணு வயசுக் குழந்தை, இப்பவே அவனுக்குப் பிடிச்ச பாட்டை யூடியூப்ல போட்டு மணிக்கணக்குல பார்த்துக்கிட்டே இருக்கான்செல்போன் இருக்கிறதால நமக்குக் கொஞ்சம் ரிலாக்ஸா ருக்க முடியுது என்று சிலர் ரொம்ப பெருமையா பேசிக்கிறாங்க…’

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இந்தச் சூழலைப் பெற்றோர்களாகிய நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால், உங்கள் பிள்ளைகளுக்கு சூனியம் வைக்கிறீர்கள் என்று அர்த்தம். தயவுசெய்து அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு, பிறந்தது முதலே செல்போன்களை அறிமுகப்படுத்தாதிங்க. குழந்தைப் பருவத்திலேயே மூக்குக்கண்ணாடி அணிய வேண்டிய சூழல் நிச்சயமாக உருவாகும். வருங்காலத்தில் செல்போன் சார்ந்த சில பாதிப்புகளை உருவாகலாம்

பெரும்பாலோனோர் காலையில் கண் திறப்பது, வெளிச்சம் நிறைந்த செல்போன் திரையில்தான். காலை எழுந்தவுடன் அலைபேசியைத்தானே நாம் தேடுகிறோம்?

எனவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அமிர்தம் மட்டுமல்ல அலைப்பேசியும் நாம் உபயோகிக்கும் செல்போனும் அளவுக்கு மிஞ்சினால் அதுவும் நஞ்சாகும்.

யாஅல்லாஹ் எங்கள் கண்களை குர்ஆனை அதிகமாக பார்க்கும் கண்களாக...

எங்கள் நாவுகளை உனது வேதத்தை அதிகமாக ஓதும் நாவாக

எங்கள் விரல்களை குர்ஆனின் பக்கங்களை அதிகமாக புரட்டும் விரல்களாக..

எங்களது சிந்தையை உன்னை அதிகமாக சிந்திக்கும் சிந்தையாக.

எங்கள் தனிமையை உனது ஆற்றலை நினைக்கும் தனிமையாக நீ ஆக்குவாயாக.

என்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக