பக்கங்கள்

வெள்ளி, 1 மே, 2020

உணவு உண்ணும் முறைகள்


மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் மிக முக்கியமானது உணவு ஏதாவது ஒரு முறையில் இத்தேவை நிறைவேறாவிட்டால் மனிதனால் உயிர் வாழ முடியாது. இத்தேவை முஹம்மது அவர்கள் கூறிய முறைப்படி நிறைவேறினால் தேவையும் நிறைவேறும், சிறந்த அமல் செய்த நன்மையும் கிடைக்கும்.
இங்கு சாப்பிடும் முறை சம்பந்தமான ஹதீஸ்களுடன் நபி ஸல் அவர்களின் முறையில் நவீன விஞ்ஞானத்தின் பிரயோஜனங்களும் கீழே கூறப்படுகிறது. ஆனால் நாம் நபியின் சுன்னத் என்ற நோக்கில் தான் பின்பற்ற வேண்டும். விஞ்ஞானம் கூறுகிறது என்பதற்காக அல்ல! ஏனெனில் மனிதனின் அறிவு *அழிந்துவிடக் கூடியது. நபி ஸல் அவர்களின் வழிமுறை நிரந்தரமானது.

இந்த அதிநவீன நாகரிக காலத்தில் கூட நபி ஸல் அவர்களின் வழிமுறை - நாகரிகத்தை விட சிறந்த நாகரிகம் எதுவும் கிடையாது என்பதை உலகம் சிறிது சிறிதாக உணர்ந்து கொண்டே வருகிறது

சாப்பிடும் முன்பு இரு கைகளை கழுகுவது

ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால் உளூ செய்து கொள்வார்கள். மேலும் சாப்பிட நாடினால் தங்களது கையை கழுகிக் கொள்வார்கள்  நூல் : நஸாயி

விஞ்ஞானம் : மனிதன் கரங்களை பல இடங்களில் உபயோகிப்பதால் அவற்றில் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் (invisible Rays) ஒன்று சேர்ந்திருக்கும் கைகளை கழுகாமலேயே சாப்பிட ஆரம்பித்தால் அக்கிருமிகள் உள்ளே சென்று பல கோளாறுகளுக்கு அடித்தளமிடுகிறது

கார் டிரைவர் ஒருவர் ஓட்டலுக்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சக்கரங்களில் காற்று சரியாக இருக்கின்றதா என்று பரிசோதித்து விட்டு ஓட்டலுக்குச் சென்று கைகளை கழுகாமல் அப்படியே சாப்பிட ஆரம்பித்தார், சாப்பிட்டுக் கொண்டே இருந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து போனார். உணவில் ஏதேனும் விஷம் கலந்து விட்டதோ என்று ஆராய்ந்தால் உணவு உண்ட மற்றவர்களுக்கோ எதுவும் ஆகவில்லை. பிறகு விசாரித்தால் அவர் வாகன சக்கரங்களை தனது கரத்தால் பரிசோதனை செய்தார் என்று தெரிய்வந்து சக்கரங்களை பார்த்தார்கள். அதில் ஒரு விஷ ஜந்து இறந்து ஒட்டிக்கொண்டிருந்தது, அதை அவர் தொட்டு விட்டு கை கழுகாமல் அப்படியே சாப்பிட்டதால் விஷமும் உள்ளே சென்று அவர் இறந்துள்ளார் என்பது தெளிவானது. (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்

ஹலால் ஹராமின் பேணிக்கை

ஒவ்வொரு முஃமினும் சாப்பிடும் முன்பு நாம் ஹலாலான உணவை உட்கொள்கிறோமா? என்பதை சற்று யோசிக்க வேண்டும். மாமிச உணவாக இருப்பின் இது முஸ்லிமால் அறுக்கும் முறைப்பேணி அறுக்கப்பட்டதா? இல்லையா? என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் முஸ்லிமல்லாதோர் அறுத்தது, செத்த மிருகங்கள் வட்டி போன்ற ஹராமான பொருள் கொண்டு வாங்கப்பட்டவை போன்றதெல்லாம் ஹராமாகும். 

அல்லாஹ் குர்ஆனில் 
"அல்லாஹ் உங்களுக்கு அளித்த பரிசுத்தமானவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்" (7:88) என்று கூறுகிறான். 

நாம் ஹலாலான உணவை உட்கொள்வதின் மூலம் நல் அமல்களின் வாய்ப்பும் ஹராமான உணவில் தீய அமல்களின் தூண்டுதலும் இருக்கின்றது. மேலும் ஹராமான உணவை உட்கொண்டால் நமது அமல்களும் துஆக்களும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை

பிஸ்மில்லாஹ் கூறுவது.

ஹள்ரத் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி அவர்கள் கூறுகிறார்கள்: "நான் சாப்பிடும் பொழுது தட்டில் எனது கை முறையின்றி உலாவிக் கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல் அவர்கள் "சிறுவனே! அல்லாஹ்வின் பெயர் 'பிஸ்மில்லாஹ்' கூறி உண்ணு உனது வலது கரத்தினால் சாப்பிடு (இங்கொன்றும் அங்கொன்றுமாக கையை உலாவாமல் ஒரு பக்கத்திலிருந்து) தட்டில் உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு" என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்
(நுல் : புஹாரி

இந்த ஹதீஸின் மூலம் மூன்று விஷயங்கள் விளங்குகிறது.
1. பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
2, வலது கரத்தினால் சாப்பிட வேண்டும்.
3.தட்டில் நமக்கு அருகில் இருப்பதை சாப்பிட வேண்டும்

ஷைத்தானை விருந்தாளியாக்காதீர்

ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி அவர்கள் கூறினார்கள். "யார் வீட்டில் நுழையும் போதும் சாப்பிடும் போது அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பிக்கிறாரோ அப்பொழுது ஷைத்தான் தனது தோழர்களிடம் இங்கு நமக்கு தங்குவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. சாப்பிடுவதற்கும் எந்த ஏற்பாடும் இல்லை. ஏனெனில் இவர் வீட்டில் நுழையும் போதும் அல்லாஹ்வின் பெயர் கூறி விட்டார். சாப்பிடும் போதும் அல்லாஹ்வின் பெயர் கூறிவிட்டார் என்று கைசேதப்பட்டு கூறுகிறான். மாறாக யார் வீட்டில் நுழையும் போதும் சாப்பிடும் போதும் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லையோ உடனே ஷைத்தான் தனது சகாக்களிடம் தோழர்களே! இவர் அல்லாஹ்வின் பெயர் கூறாததின் காரணமாக நமக்கு தாங்குவதற்கு இங்கு ஏற்பாடு உள்ளது. அதே போல் இவர் சாப்பிடும் போது அல்லாஹ்வின் பெயர் கூறாததால் நமக்கு இங்கு உணவு ஏற்பாடும் உள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறான்" என்று கூறினார்கள்
(நூல் : அபூதாவூத்

சாப்பிடுதல், வீட்டில் நுழைதல் மட்டுமின்றி எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அல்லாஹ்வின் பெயர் கூறி ஆரம்பித்தால் அதில் ஷைத்தானின் இடையூறு இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

ஷைத்தானின் முயற்சி

ஹள்ரத் ஹுதைஃபா (ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒருமுறை நபி ஸல் அவர்களுடன் சாப்பிட அமர்ந்திருந்தோம். யாரும் இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை. அந்நேரத்தில் ஒரு சிறுமி ஓடோடி வந்தாள். அவள் மிகவும் பசித்திருப்பதாக உணர்ந்தோம். விரைந்து வந்த அச்சிறுமி அங்கிருந்த உணவில் கை வைக்க முயன்ற போது நபி அவர்கள் அச்சிறுமியின் கையை பிடித்துக் கொண்டார்கள்

சாப்பிடவிடவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு கிராமவாசி அதே போல் வந்து சாப்பிட கை வைக்க முயன்றார். அவர் கையையும் நபி ஸல் அவர்கள் பிடித்துக் கொண்டார்கள். அவரையும் சாப்பிடவிடவில்லை. பிறகு அங்கிருந்த அனைத்து ஸஹாபாக்களையும் பார்த்து "பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிட்டால் இவ்வுணவு ஷைத்தானுக்கு ஹராமாகி விடுகிறது. எனவே இச்சிறுமியின் மூலமும் இக்கிராமவாசி மூலமும் பிஸ்மில்லாஹ் கூறாமல் உண்ண வைத்து இவ்வுணவை ஷைத்தான் தனக்கு ஹலாலாக்க முயன்றான். நான் தடுத்து விட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இச்சிறுமியின் கையுடன் ஷைத்தானின் கையும் இணைந்திருக்கும் நிலையில் நான் தடுத்துவிட்டேன்" என்று கூறினார்கள்
நூல் : முஸ்லிம்

இன்று குழந்தைகளுடன் சாப்பிடும் நாம் அவர்களை பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிட பழக்கப்படுத்தாவிட்டால் அவர்கள் உண்ணும் உணவில் ஷைத்தானும் சாப்பிட ஆரம்பித்து அவ்வுணவு பரக்கத் இல்லாமல் ஆகிவிடும். எனவே இதை நாம் கவனத்தில் கொண்டு குழந்தைகளை பிஸ்மில்லாஹ் கூறி சாபப்பிட பழக்கப்படுத்த வேண்டும்

பிஸ்மில்லாஹ் மறந்து விட்டால்

ஹள்ரத் ஆயிஷா (ரலி அவர்கள் கூறுகிறார்கள்: நபி அவர்கள் "உங்களில் ஒருவர் உணவு உண்ண ஆரம்பித்தால் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறி ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் சாப்பிட்டுக் கொண்டுடிருக்கும் போது எப்பொழுது அவருக்கு ஞாபகம் வருகிறதோ அந்நேரத்தில் அவர் "பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு ஆரம்பத்திலும் இறுதியிலும் இறைவனின் பெயர் கொண்டு இச்செயலை செய்கிறேன்) என்று ஓதிக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்
(நூல்: அபூதாவூத்

ஷைத்தான் வாந்தி எடுக்கிறான்

ஹள்ரத் உமையா இப்னு முஹஷ்ஷி (ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முறை நபி ஸல் அவர்கள் வந்தார்கள். அவர்கள் முன்பு ஒருவர் சாப்பிட ஆரம்பித்தார். பிஸ்மில்லாஹ் கூறவில்லை. முழுவதையும் சாப்பிட்டு முடிக்க ஓரே ஒரு கவளமே மிச்சம் இருந்தது, அதையும் அவர் வாயில் வைக்கும் பொழுது அவருக்கு தாம் பிஸ்மில்லாஹ் கூறவில்லையே என்ற ஞாபகம் வந்து நபி ஸல் அவர்கள் ஏற்கனவே கூறியுள்ள போதனையின் படி பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு என்று கூறினார். இதைப் பார்த்து நபி 2 அவர்கள் சிரித்தார்கள். பிறகு "இந்த மனிதர் பிஸ்மில்லாஹ் கூறாமல் சாப்பிட்டதினால் ஷைத்தானும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவருக்கு ஞாபகம் வந்து பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு என்ற ஓதியவுடன் (அவர் கூறிய அந்த சிறிய வாசகத்தினால்) இதுவரை ஷைத்தான் தான் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டான் என்று கூறினார்கள்
(நூல் : அபூதாவூத்

எனவே பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஞாபகம் வந்தவுடன் பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு என்று ஓதுவதினால் உணவில் ஷைத்தானால் ஏற்பட்ட பரகத்தின்மை நீங்கி பரகத் ஏற்படுகிறது

வலது கையால் உண்போம்

ஹள்ரத் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: "நான் சாப்பிடும் பொழுது தட்டில் எனது கை முறையின்றி உலாவிக் கொண்டிருந்ததைக் கண்ட நபி ஸல் அவர்கள் "சிறுவனே! அல்லாஹவின் பெயர் 'பிஸ்மில்லாஹ்' கூறி உண்ணு உனது வலது கரத்தினால் சாப்பிடு (இங்கொன்றும் அங்கொன்றுமாக கையை உலாவாமல் ஒரு பக்கத்திலிருந்து) தட்டில் உனக்கு அருகில் உள்ளவற்றிலிருந்து சாப்பிடு" என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்
(நுல்: புஹாரி)

இடது கையால் சாப்பிடுவது கூடாது

ஹள்ரத் ஸலமதுப்னு அக்வஃ ரலி அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் நபி ஸல் அவர்களருகிலே அமர்ந்து இடது கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் அதைக் கண்ட நபி ஸல் அவர்கள் வலது கையினால் சாப்பிடு என்று கூறினார்கள் அதற்கு அவர் எனக்கு (வலது கையால்) சாப்பிட முடியவில்லை என்று (பொய்) சொன்னார். (அவர் பொய் கூறியதினால் கோபமுற்ற நபி ஸல் அவர்கள்) நீ வலது கையை உபயோகிக்க முடியாமல் ஆகுக! உனது பெருமைதான் உன்னைத் தடுத்து விட்டது" என்று கூறினார்கள்

(சிலருக்கு அவர்களின் தவற்றை சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக் கொள்வதை தனக்கு கெளரவக் குறைவு என்றெண்ணி அதற்கு சப்பைக்கட்டு கட்டுவார்கள். அதே போல் தான் இந்த மனிதர் நபி அவர்கள் கூறியதை ஏற்காமல் என்னால் முடியாது என்று பொய்யான காரணம் சொன்னார். அவரின் பெருமையை உணர்த்த நபி அவர்கள் உன்னால் இனி வலது கையை உபயோகிக்க முடியாமல் ஆகுக என்று கூறிவிட்டார்கள், வேறு ரிவாயத்தில் அதற்கு பின்னால் அவரது வலது கை வேலை செய்ய வில்லை. அவர் அதை தூக்க நினைத்தாலும் முடியாமல் ஆகிவிட்டது என்றுள்ளது  (நூல் : முஸ்லிம்)


மேலும் ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ஹள்ரத் நபி ஸல் அவர்கள் கூறினார்கள். "இடது கையால் உண்ணாதீர்கள் நிச்சயமாக ஷைத்தான் தான் இடது கையால் உண்ணுவான்." (நூல் : முஸ்லிம்

விஞ்ஞானம் : இயற்கையாக மனிதனின் கரங்களில் INVISIBLE RAYS
சுரக்கிறது. ஆனால் வலது கரத்தில் சுரப்பது நன்மைக்குரியதாகும். இடது கையில் சுரப்பது தீங்கு சுரப்பியாகவும் உள்ளது. எனவே வலது கரத்தால் சாப்பிடும் போது அந்த திரவமும் உள் சென்று மனிதனுக்கு நன்மை பயக்கிறது. மட்டுமின்றி இடது கையை அசுத்தமான மல, ஜலம் சுத்தம் செய்தல் போன்ற செயல்களுக்கு ஈடுபடுத்துவதால் அவற்றால் உண்ணுவது உடலுக்கு ஆரோக்கியமல்ல
(நூல் : சுன்னதே நபவீ அவர் ஜதீத் சையின்ஸ்

மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிடுதல்

ஹள்ரத் கஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி அவர்கள் மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிடுவார்கள். சாப்பிட்டு முடிந்ததும் அதை நன்றாக சூப்பிக் கொள்வார்கள்

வேறு சில ஹதீஸ்களில் நபிஸல் அவர்கள் நான்கு மேலும் ஐந்து விரல்களைக்கொண்டு சாப்பிட்டதாகவும் வருகிறது. எனினும் பெரும்பாலான நேரங்களில் மூன்று விரல்களைக் கொண்டு சாப்பிட்டதீாகவே வருகிறது. அதனால் சிறுசிறு கவளமாக எடுத்துண்ண முடியும். நன்றாக அரைத்து சாப்பிடவும் முடியும்
நூல் : முஸ்லிம்

விஞ்ஞானம் : பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் "உணவை நன்றாக
அரைத்து சாப்பிடா விட்டால் பற்கள் வெகுசீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. வாயில் ஒரு பக்கமாகவே அரைத்து சாப்பிட்டாலும் மறுபக்கம் பழுதடைந்து விடுகிறது எனவே உணவை நன்றாக அரைத்துச் சாப்பிடுங்கள். மட்டுமின்றி சரியாக அரைக்காமல் அப்படியே முழுங்கினால் குடலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வயிறு அழற்சி (Stomack Inflamation) உண்டாகிறது. வயிற்று அமிலத்தன்மை (Stomack Asititie) குறைவு ஏற்பட்டு நோய் உண்டாவதுடன் செரிமானம் (Digestive System) சரியாக ஏற்படுதில்லை" என்று கூறுகிறார்கள். (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஐதீத் சையின்ஸ்)

தன் அருகில் உள்ளதை சாப்பிடவேண்டும்
தன் அருகிலுள்ள உணவிலிருந்து சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு முன் உணவு வைக்கப்பட்டால் அந்த உணவின் நடுப்பகுதியில் இறைவனின் புறத்திலிருந்து பரக்கத் இறங்கிக் கொண்டேயிருக்கிறது. எனவே நடுப்பதியிலிருந்து ஆரம்பித்து விட்டால் பரக்கத் நீங்கி விடும்
(நூல் : திர்மிதி

ஆனால் உணவு பல வகைகளாக இருந்தால் ஆங்காங்கே எடுத்து உண்ணலாம். ஹள்ரத் இக்ராஷ் இப்னு ஜைனப் ரலி) அவர்கள் கூறுகிறார்கள் "ஒரு விருந்தில் நான் நபி அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நான் அங்கொரு கவளமும் இங்கொரு கவளமுமாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் இதைக் கண்ட நபி இ அவர்கள் இக்ராஷே ஒரு பக்கமாக சாப்பிடு ஏனெனில் இது ஒரே வகையான உணவுதான்" என்று கூறினார்கள். (நூல் : திர்மிதி

எனவே வகைகள் பல இருப்பின் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் வகைகளை எடுத்துண்ணலாம்

பல நபர்கள் சேர்ந்து சாப்பிடுவது

பல நபர்கள் சேர்ந்து சாப்பிடுவதின் காரணமாக பரக்கத் ஏற்படுகிறது. ஹள்ரத் ஜாபிர் (ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி அவர்கள் ஒருவரின் உணவு இருவருக்கு போதுமானது, இருவரின் உணவு நால்வருக்கு போதுமானது. நால்வரின் உணவு 8 நபர்களுக்கு போதுமானது என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

ஒருமுறை நபி 2 அவர்களிடம் "யாரகசூலல்லாஹ்' நாங்கள் (தேவையான அளவு) சாப்பிடுகிறோம். ஆனால் வயிறு நிரம்புவதில்லை" என்றார்கள், உடனே நபி அவர்கள் "நீங்கள் தனித்தனியாக சாப்பிட்டிருப்பீர்கள்! என்று கூற ஸஹாபாக்கள் அதை ஆமோதித்தார்கள், உடன் நபி ஸல் அவர்களும் ஒன்று சேர்ந்து (ஒரே தட்டில் சாப்பிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வான்" என்று கூறினார்கள். (நூல் : அஹமது)

இருமடங்காக உண்ணக்கூடாது

ஹள்ரத் ஜப்லதுப்னு ஸஹீம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நாங்கள் (விருந்தில்) பேரீத்தம் பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது ஹள்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களை கடந்து சென்றார்கள். அவர்கள் எங்களிடம் இரண்டிரண்டாக சாப்பிடாதீர்கள். நபி ஸல் அவர்கள் அவ்வாறு சேர்த்து சேர்த்து சாப்பிடுவதை தடுத்துள்ளார்கள் என்று கூறினார்கள். பிறகு ஆனால் அந்த மனிதரும் (ஒரே தட்டில் சாப்பிடும் மற்றொருவர் சேர்த்து சாப்பிடுவதற்கு) அனுமதியளித்தால் சாப்பிடலாம்" என்று கூறினார்கள்
நூல் : புகாரி

ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரே தட்டில் சாப்பிடும் பொழுது அனைவரின் பங்கும் அதில் இருக்கிறது. எனவே வேக வேகமாக சாப்பிடுவது அதிகமாக எடுத்து சாப்பிடுவது அவர்களின் பங்கில் பாதிப்பு ஏற்படும் என்பதினால் அப்படி சாப்பிடக் கூடாது என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். மாறாக ஒரு தட்டில் ஒருவர் சாப்பிடும்போது எப்படி வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்) எனினும் சிறுசிறு கவளமாக சாப்பிடுவதே சிறந்தது

உணவுப் பொருள் கீழே விழுந்தால் பேண வேண்டிய முறை

ஹள்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல் அவர்கள் உங்களில் ஒருவருக்கு (சாப்பிடும் போது) ஒரு வாய் உணவு கீழே விழுந்து விட்டால் அதனுடைய அசுத்தங்களை நீக்கி அதை சாப்பிடட்டும். அதை ஷைத்தானிற்காக (வீணாக) விட்டு விட வேண்டாம்" என்று கூறினார்கள்
(நூல் : முஸ்லிம்

சாய்ந்து கொண்டு சாப்பிடுவது கூடாது

ஹள்ரத் அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல் அவர்கள் "நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்என்று கூறினார்கள்
(நூல் : புகாரி

நின்று கொண்டு சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது

ஹள்ரத் அனஸ் (ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல் அவர்கள் நின்று கொண்டு குடிப்பதை வெறுத்தார்கள்
நூல் : முஸ்லிம்

விஞ்ஞானம் : அமர்ந்து கொண்டு உண்ணுதல், குடிப்பதினால் அவை
குடலிற்கு நிதானமாக மென்மையான முறையில் சென்றடைகிறது. மாறாக நின்று கொண்டு குடித்தால் அவை குடலோடு வேகமாக மோதுகிறது. இப்படி நின்று கொண்டே உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கு சிறிது நாட்களில் குடல் தளர்வு குடல் இறக்கம் ஏற்பட்டு செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது

உணவும் பாணமும் உடலினுள் செல்லும் பொழுது உடலுறுப்புகள் அமைதியான முறையில் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய நிபந்தனையாகும் இந்த நிபந்தனை உட்காந்த நிலையில் மனிதனிடம் பெறப்படுகிறது. மாறாக மனிதன் நிற்கும் பொழுது அவனிடம் ஒரு விரைப்புத் தன்மை ஏற்படுகிறது. அவனின் நரம்பு மண்டலங்கள் அவனின் தசை நார்களை நிலைப்படுத்தி நிலையாக நிற்க வைக்கும் இந்த நிலையில் மனித உடலுறுப்புகள் அமைதியாக இருக்காது. எனவே நின்ற நிலையில் சாப்பிடுவதன் மூலம் கடுமையான நரம்பு அலற்சி ஏற்படும்

குறிப்பு : நபி ஸல் அவர்கள் நின்று கொண்டு சாப்பிட்டதாக வரும் ஹதீஸ்கள் ஜிஹாதுக்கு செல்லுதல் போன்ற மிக அவசரமான சந்தர்ப்பங்களில் தான். எனவே உட்கார்ந்து சாப்பிடுவதே நபி ஸல் அவர்களின் வழிமுறையாகும்

பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்
(அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி நூல் : புகாரி-153)

விஞ்ஞானம் : மனிதன் சுவாசிக்கும் பொழுது உள் இழுக்கும் காற்று OXYGEN ம் வெளியிடும் காற்று CORBON DIE OXIEDE ம் ஆகும். அந்த கார்பன்-டை-ஆக்ஸைடில் எண்ணற்ற கிருமிகள் இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே நாம் ஊதினால் அக்காற்றின் கிருமிகள் உணவில் கலந்து பரவிவிடுகிறது. பிறகு அதை உட்கொள்வது உடல் கெடுதிக்கு அடித்தளமிடுகிறது. பல நபர்கள் சேர்ந்து சாப்பிடும் போது இவ்வாறு ஒருவர் செய்தால் அது அனைவரையும் பாதிக்கக் கூடியதாகவும் ஆகிவிடுகிறது
(நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்

உணவை குறை கூறக் கூடாது

ஹள்ரத் ஆபூஹுரைரா (ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் சாப்பிடும் போது ஒரு போதும் உணவை குறை கூற மாட்டார்கள். அவர்களுக்கு பிடித்திருந்தால் சாப்பிடுவார்கள். பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுவார்கள்
(நூல் : புகாரி

சாப்பிடும் போது பேசுவது

சாப்பிடும் போது பேசுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று சிலர் கூறுவது தவறாகும். இஸ்லாத்தில் அப்படி ஏதும் கூறப்படவில்லை. தேவையான பேச்சுக்களை பேசிக்கொள்வதில் தவறில்லை. நபி அவர்களும் பேசியிருக்கிறார்கள். ஹள்ரத் அஷ்ரஃப் அலி தானவீ (ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் : சாப்பிடும் பொழுது அதிகம் பேசிக்கொண்டே இருப்பது ஒழுக்கமல்ல. ஏனெனில் நம் முன் இருக்கும் உணவிற்கு நாம் கண்ணியமளிக்க வேண்டும். பேச்சில் மட்டும் கவனம் இருக்கும் அளவு பேசிக்கொண்டே இருப்பது மனதில் உணவின் கண்ணியத்தை போக்கிவிடுவதோடு தேவையைவிட அதிகம் சாப்பிட்டுவிடுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. எனவே சிறு சிறு விஷயங்கள் தேவையான அளவு பேச்சுக்கள் பேசிக் கொள்ளலாம்

அளவோடு உண்டு வளமோடு வாழ்

ஹள்ரத் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும் (நூல்: திர்மிதி

ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை தங்களது குத்பாவில் "நீங்கள் வயிறு நிரம்ப உண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அப்படி வயிறு நிரம்ப உண்ணுவதால் தொழுகையில் சோம்பலும் உடலுக்கு நோவினையும் உண்டாகிறது. எனவே உணவில் நடுநிலையைக் கையாளுங்கள். அது உங்களின் பெருமையை தூரமாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். வணக்கம் புரிய சக்தி தரும். அறிந்து கொள்ளுங்கள் மனிதன் தனது மார்க்கத்தை விட மனோ இச்சையை தேர்ந்தெடுக்காதவரை அவன் அழியமாட்டான் என்று கூறியுள்ளார்

விஞ்ஞானம் : பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்

1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்
2. Eyes Diseascs (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)
3. E.N.T.Diseases (காது. மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்
4. Chest & Loung Diseases (தோள் புஜம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்
5. Heart & Volves Diseases (இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
6. Gall Bladder Diseases tபித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்
7. Diabetese (நீரழிவு நோய்) Sugar
8. High Blood Pressure (அதிக இரத்த அழுத்தம்
9. Depression (மன அழுத்தம்)

மேலும் அவர் தேவையை விட அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட நோய்களின் அறிகுறிகள் தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.
நூல் : சுன்னதே நபவீ அவர் ஜதீத் சையின்ஸ்

மெளலானா முஹம்மது யூஸுஃப் காஷிஃபி

2010 நவம்பர் மாத மனாருல் ஹுதா இதழிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக