பக்கங்கள்

புதன், 22 ஏப்ரல், 2020

சோப்பு எப்படி உருவானது...?



மெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்; Al Hillah & Babil Province) கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர். இதனை ஒரு நாள் தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம் (வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கு வித்திட்டது என்று சொல்லலாம்.


இது குறித்து ஆராய்ந்த அன்றைய பாபிலோனிய வேதியியலாளர்கள், கறைகளை அகற்றி சுத்தம் செய்வதற்க்காக ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்த பொருள் தண்ணீரில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும் அதே நேரம் இலகுவாக கரைந்துவிடாமலும் இருக்க வேண்டும், மிக முக்கியமாக அது கறைகளையும் அகற்றவேண்டும் என்பது அவர்களின் முன்னின்ற சவாலாக இருந்தது.
அதனை தொடர்ந்து, சாம்பலுடன், விலங்குகளின் கொழுப்புகளில் இருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு, மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலை(alkali) சூடுபடுத்தி கொதிக்க வைத்து வற்றச் செய்தனர். காரகரைசல் வற்றி தின்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டது. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரம் (soap) ஆகும். தயாரித்த சோப்புகள் முதலில் தரையை சுத்தம் செய்யவும் பின்பு ஆடைகளை சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தினார்கள். பின்னர் இத்தொழில்நுட்பம் சில வணிகர்களின் வாயிலாக சிரியா, ரோம், எகிப்த்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.

சரி சோப்பு தயாரித்தாகிவிட்டது, இனி இந்த சோப்பிற்கு, சோப்பு என்று எப்படி பெயர் வந்ததது என்று பார்ப்போமா?
Soap என்ற சொல் Sapo என்ற லத்தின் சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
கி.மு.ஏழாம் நூற்றாண்டில் ரோமாபுரி பேரரசின் தலைநகரான ரோமில் (தற்போது Rome, Italy) Sapo என்றொரு மலை இருந்ததாம். அந்த மலை எதிர்பாராத விதமாக ஒரு நாள் தீப்பற்றிகொள்ள அந்த மலையில் வசித்த விலங்குகள் உட்பட மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.
அக்காலகட்டங்களில் சோப்பு தயாரிக்க விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்த காரணத்தினால், முற்றிலும் எரியாமல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் உடலிலிருந்து கொழுப்பை நீக்கிய பின்பே அவற்றின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறந்து போன அந்த விலங்குகளின் நினைவாக அந்த மலையின் பெயரை சோப்புக்கு Sapo என்று பெயரிட்டதாக சில வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கி.பி.78-ஆம் ஆண்டளவில் புகழ் பெற்று விளங்கிய ரோமானிய எழுத்தாளரான பிளினி தி எல்டர் (Pliny the Elder) ‘இயற்கையின் வரலாறு’ (Historia Naturalis)  என்ற தனது நூலில் சோப்பை பற்றி குறிப்பிடுகையில் Sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக Soap என்று குறிப்பிட்டுவிட்டார், உச்சரிப்பதற்கு sapo என்பதை விட Soap என்பது மிக எளிதாக இருந்ததால் அன்று முதல் இன்றுவரை அந்த பெயரே நிலைத்துவிட்டது.
கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய யூனியனிலுள்ள பெரும்பாலான நாடுகள் சோப்புகளை இறக்குமதி செய்ததே தவிர தயாரிக்கும் முயற்ச்சியில் எந்த நாடுகளும் ஈடுபடவில்லை என்று தான் கூற வேண்டும், பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தான் ஐரோப்பிய யூனியனின் தேவைக்கென்று பிரான்ஸிலுள்ள டௌலோன் மற்றும் மார்ஸிய்லீ (Toulon, Marseille) ஆகிய நகங்களில் சோப்பு தயாரிக்கும் பணி துவங்கியது.
பதினாறாம் நூற்றாண்டு வரை மனிதர்கள், துணிகளை துவைப்பதற்க்கும் குளிப்பதற்கும் ஒரே சோப்புகளைத்தான் பயன்படுத்தினார்கள். பிரான்ஸில் சோப்பு தயாரிக்கப்பட்ட சில காலங்களிலேயே அதாவது பதினாறாம் நூற்றாண்டில் துவக்கத்திலேயே மனிதர்கள் குளிப்பதற்க்காக தனியாக மென்மையான சோப்புகள் தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் விலங்குகளின் கொழுப்புக்கு பதிலாக ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், மற்றும் சின்னம் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. கி.பி.1788-ஆம் ஆண்டு வரை சோப்பு தயாரித்தல் என்பது ஒரு கடுமையான தொழிநுட்பமாகவும், அது ஒரு குடிசை தொழிலாகவும் தான் இருந்துவந்தது.
இந்நிலையில் 1789-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஆண்ட்ரூவ் பியர்ஸ் (Andrew Pears) என்பவர் முதன் முதலில் மிக எளிமையான தொழில்நுட்பத்தில் நறுமணத்துடன் கூடிய மென்சோப்புகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டறிந்தார். இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இவரது மருமகனான தாமஸ் ஜே. பார்ட் (Thomas J. Barratt) என்பவர் லண்டன் மாநகரில் உள்ள Isleworth என்ற இடத்தில் 1862-ஆம் அண்டு சோப்பு தயாரிக்கும் கம்பெனி ஒன்றை துவக்கினார். தயாரிக்கப்பட்ட சோப்பிற்க்கும் அந்த சோப்பு கம்பெனிக்கும் தனது மாமனாரின் நினைவாக பியர்ஸ் என்று பெயரிட்டார். இதுதான் உலகில் முதன் முதலில் வணிக நோக்கில் துவங்கப்பட்ட முதல் சோப்பு கம்பெனியாகும்.
தரமான சோப்பாக இருந்த காரணத்தினால் பியர்ஸ் சோப்பின் விலையும் சற்று அதிகமாகத்தான் இருந்தது இந்த காரணங்களால் சோப்புகளை அப்போது மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் தரமான சோப்புகளை குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை வில்லியம் கோசேஸ் (William Gossage) என்பவர் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இதன்பிறகு தான் சோப்புகளை ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
உலகில் அனைத்தும் நாடுகளிலும் உள்ள மக்களை சோப்பு சென்றடைய காரணமாக இருந்தவர்கள் வில்லியம் லீவர் மற்றும் ஜேம்ஸ் லீவர் என்ற இரு சகோதரர்கள் என்று சொன்னால் மிகையில்லை. ஒரு பொருளை தயாரிப்பது மட்டும் முக்கியமல்ல அதனை சந்தைப்படுத்தும் வித்தை அறிந்தவனால் மட்டுமே அப்பொருளை உலககெங்கும் வாழும் அனைத்து நாட்டுமக்களிடமும் கொண்டு போய் சேர்த்திட முடியும் என்ற உண்மையை இவர்கள் தான் உலகிற்கு தெரியச்செய்தவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் இணைந்து 1886-ல் லீவர் பிரதர்ஸ் (Lever Brothers) என்ற பெயரில், பொருட்களை சந்தைப்படுத்தும் கம்பெனி ஒன்றை துவங்கினார்கள். இவர்களில் திறமையால் தான் சோப்பு உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மிகக்குறுகிய காலத்தில் பட்டி தொட்டி எங்கும் சந்தைப்படுத்தப்பட்டது. லீவர் பிரதர்ஸ் என்ற கம்பெனி பின்னாளில் யுனிலீவர்ஸ் (Unilever) என்று பெயர் மாற்றம் அடைந்து மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : முத்துமணி


மேலும் விபரங்களுக்கு.

A. காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக