பக்கங்கள்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

நபிகள் நாதரை நாமும் புகழுவோமே..



لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

இதோ... உங்களிலிருந்தே ஒரு தூதர் வந்திருக்கிறார் நீங்கள் சிரமப்படுவது அவருக்கு துன்பமளிக்கிறது அவர் உங்களின் மீது பேராவல்கொண்டவராக இருக்கிறார் ஈமான் கொண்டோருக்கு அவர் அருள்புரிபவரும், அன்பு கொண்டவருமாக இருக்கின்றார்

அல் குர்ஆன் : (9 : 128)

நினைவு கூருதல்என்பது எல்லா அமைப்புக்களிலும் பின்பற்றப்படும்
ஒரு நாகரீகமான நடைமுறையாகும். ஒரு அமைப்பைத் தோற்றுவித்தவர், அந்த அமைப்புக்காகப் பாடுபட்டவர், தியாகங்கள் புரிந்தோரை அந்தந்த அமைப்புக்களில் நினைவு கூறப்படுவதையும், அவர்களின் நினைவு தினங்களில் அவர்களின் வரலாறுகளை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதையும் நாம் அன்றாடம் கண்டு கொண்டிருக்கிறோம். பஸ், இரயில்களை மறித்தவர்களையேசாலை ஆர்ப்பாட்டம் செய்தவர்களையே தியாகி என்று நினைவு கூறப்படும்போது உண்மையான தியாகிகளை நினவு கூறுவது அறிவுடமை அன்றோ....?

இந்த நியதி இஸ்லாத்திலும் வரவேற்கப்பட்ட ஒன்றே! அன்றாடம் பற்பல தடவைகள் தொழுகையில் சூரத்துல் பத்திஹாவில் (ஸிராத்தல்லதீன அன்அம்த்த அலைஹிம்) நீ அருள்பாலித்து விட்டவர்களின் பாதையை எங்களுக்குக் காட்டித்தருவாயாக! என்று நாம் கேட்க வேண்டுமென இறைவனே கற்றுத் தருகிறான். இது இறையருள் பெற்றவார்களை நினைவு கூறவேண்டுமென்ற கட்டளையின் வெளிப்பாடன்றோ

ஐயாயிரம் ஆண்டுகளாக

இறை நேசர் ஹள்ரத் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் தன் மகனை அறுக்கத் துணிந்த தியாகத்தை ஆண்டு தோறும் நினைவு கூருவதற்காகவே ஈதுல் அல்ஹா தியாகப் பெருநாள் கடமையாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கஃபத்துல்லாஹ்வைக் கட்டியதன் நினைனவை நிலைநிறுத்துவற்காக அவர்கள் கால்பதிந்த கல் இருக்குமிடத்தை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ள இறைவன் உத்தரவிடுகிறான்

 وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى
அல்குர் ஆன்: (2 : 125)

தண்ணீர் இல்லாத, மனித சஞ்சாரமற்ற காட்டில் தன்னையும், பால் மணம் மாறா தனது மைந்தன் இஸ்மாயீலையும் விட்டு விட வேண்டுமென்ற இறையுத்தரவை ஏற்றுக்கொண்டு பொறுமை காத்த அன்னை ஹாஜரா அம்மையார் அவர்களின் தியாகத்தை நினைவு கூறுவதற்காக

 إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ
"சபாவும் மர்வாவும் திண்ணமாக அல்லாஹ்வின் சின்னங்களாகும் (அல்குர் ஆன் 2: 158.)என இறைவன் பிரகடனப்படுத்துகிறான்

தியாகச் செம்மல்

உலக நாகரீகமும், இஸ்லாமியப் பண்பாடும் போதிக்கும் அடிப்படையில் சிந்திக்க முற்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாம் நினைவு கூறுவது அவசியமான ஒன்று என அறியக் கிடைக்கிறது. ஏகத்துவத்தை போதித்தற்காக உலகில் எவருமே கண்டிரா அளவு தொல்லைகளை அவர்கள் தாங்கியிருக்கிறார்கள். இந்த விவரத்தை அவர்களே வெளியிடுகிறார்கள் எனவே அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது. பிற தியாகங்களை நினைவு கூறுவது கடமையாக்கப்பட்டிருக்கும் போது அண்ணலாரின் நிகரற்ற தியாகத்தையும், அந்த தியாகத்தால் விளைந்த பலன்களையும் நினைவு கூறல் கடமையென்பதை வார்த்தையால் சொல்லவும் வேண்டுமோ...?

பக்கத்து இலைக்கு பாயாசம்

விருந்துண்டு கொண்டிருப்பவர் தனக்கு சாதம் தேவைப்படும் போது பந்தி பரிமாறுபவரிடம் பக்கத்து இலைக்கு கொஞ்சம் சாதம் போடப்பா! என்று நாகரீகமாகக் கூறுவார். பக்கத்து இலைக்குப்போடும் போது தமக்கும் கிடைக்கும் என்பது அவரின் எதிர்பார்ப்பு! அது போன்று மற்றவர்களின் தியாகங்களை நினைவு கூறுமாறு இறைவன் இயம்புவது, அவற்றை விட உயர்ந்த தியாகங்களைச் செய்துள்ள நபிகள் நாயகத்தை நினைவு கூறுமாறு நமக்கு சூசகமாக அவன் ஆணை பிறப்பிக்கிறானோ என்ற எண்னத்தைத் தோற்றுவிக்கிறது. பிற நபிமார்களின் அற்புதங்களை திருக்குர்,ஆனில் புகழ்ந்துரைக்கும் அல்லாஹ், அதை விட தரத்தில் எவ்வகையிலும் குறைந்திடாத நபிகள் நாயகத்தின் அற்புதங்களைப் புகழும் பொறுப்பை நம் கையில் விடுகிறானோ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

கை விரலும் நீரோடையானதே!

وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ ۖ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا

ஹள்ரத் மூஸா நபி (அலை) அவர்களின் சஹாக்களுக்கு தண்ணீர்த்
தேவையேற்பட்டபோது பாறையில், கைத் தடியால் தட்டுமாறு இறைவன் ஹள்ரத் மூஸா நபி (அலை) அவர்களுக்கு உத்தரவு பிற்பிக்கிறான். அவர்கள் அவ்வாறே செய்ய அந்த பாறையிலிருந்து ஊற்றுக் கண்கள் ஒலித்தோடின, இந்த நிகழ்வை திருக்குர்ஆன் பலவேறு இடங்களில் புகழ்ந்துரைக்கிறது. அல்குர்,ஆன்: (2 ; 60)

பாறை என்பது ஊற்றெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட பொருள்தான். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விரல்களிலிருந்து நீரருவி ஓடியதும் அந்த விரல் பட்டதால் உணவு பெருகியதும் வரலாறு கூறும் உண்மைகளாகும்.

ஹுதைபியா உடன்படிக்கை நிகழ்வு நடைபெற்ற தினத்தின் போது
தண்ணீர் இன்மையால் நபித் தோழர்கள் கடும் தாகமுற்றார்கள். அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் முன் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் இருந்தது அவர்கள் அதே தண்ணீர் கொண்டு ஒழூச் செய்யத் துவங்குகிறார்கள். அது போது நண்பர்கள் ஓடோடிவந்து யாரஸுலல்லாஹ்! நாம் அனை வரும் அருந்துவதற்கும், ஒலுச் செய்வதற்கும் தங்கள் முன் இருக்கும் சிறிதளவு தண்ணீர் தவிற வேறில்லை என்று தெரிவித்தார்கள்.

அதைச் செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது விரல்களை அந்த பாத்திரத்தினுள் நுழைத்து பாத்திரதை சற்று சாய்த்தார்கள். அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து நீரூற்று பீறிட்டு ஓடியது. அங்கிருந்த அனைவரும் தாகம் தீர அந்த நீரூற்றிலிருந்து தண்ணீர் அருந்தினோம். ஒலுவும் செய்து கொண்டோம்.

இவ்வாறு ஹள்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; எத்தனை
நபர்கள் அந்த தண்ணீரைக் கொண்டு பயன் பெற்றீர்கள்? என அவர்களிடம் வினவப்பட்ட து. நாங்கள் ஒரு லட்சம் நபர்கள் இருந்திருந்தாலும் அந்த நீரூற்றைக்கொண்டு பயனடைந்திருக்கலாம். இருப்பினும் நாங்கள் ஆயிரத்து ஐநாறு நபர்களே அங்கிருந்தோம் என ஹள்ரத் ஜாபிர் (ரலி) மறுமொழி பகர்ந்தார்கள்          நூல் : புகாரி முஸ்லிம்

ஹள்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் மேலும் அறிவிக்கிறார்கள் அகழ் யுத்தத்தின் போது நாங்கள் அகளி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது ஒரு பெரும் பாறை குறுக்கிட்டது. அதை உடைக்க முயற்சி செய்து தோல்வி கண்ட நண்பர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த பாறை பற்றிக் குறிப்பிட்டார்கள். உடனே அவர்கள் இதோ நான் முயற்சி செய்கிறேன் என்று கூறி சம்மட்டியை எடுத்து பாறையை ஓங்கி அடித்தார்கள் அது சுக்குநூறாக உடைந்து சிதறியது. அப்போது பெருமானாரை நான் உற்று நோக்கினேன். அவர்களின் வயிற்றில் கல் வைத்து கட்டப்பட்டிருந்தது. நாங்கள் மூன்று நாட்களாக ஏதும் உண்ணவில்லை. உடனே நான் என் மனைவியிடம் சென்று நிலமையை விளக்கி உணவு தயாரிக்க ஏதும் இருக்கிறதாவெனக் கேட்டேன். ஒரு மரக்கால் கோதுமை இப்பதாக அவர் தெரிவித்தார். எங்கள் வீட்டில் நின்ற ஒரு ஆட்டுக் குட்டியை அறுத்துக் கொடுத்தேன் கோதுமையையும் மாவு திரித்துக் கொடுத்தேன். என் மனைவியை உணவு தயாரிக்கக் கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். ரகசியமாக அவர்களும் இன்னும் ஓரிரு நபர்கள் மட்டும் விருந்துண்ண வருமாறு அழைப்புக் கொடுத்தேன்.

ஆனால் அகளிதோண்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த
அனைவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூவி அழைத்தார்கள் எல்லோரும் வாருங்கள்! ஜாபிர் நமக்கு விருந்துணவு தயாரித்துள்ளார் என்று கூறினார்கள். பின்னர் என்னிடம், நான் வரும்வரை சட்டியை அடுப்பிலிருந்து இறக்கிட வேண்டாம்! ரொட்டி ஆரம்பிக்க வேண்டாம்! என்று கூறினார்கள். அவ்வாறே செய்தோம். பெருமானார் (ஸல்) அவர்கள் வந்து மாவிலும், இறைச்சியிலும் உமிழ்ந்தார்கள்  என்னே ஆச்சரியம் ஓரிருவருக்காக தயாரிக்கப்பட்ட உணவுப்பொருளில் அகளி யுத்த வீரர்கள் அனைவரும் சாப்பிட்டும் மாவும் இறைச்சியும் அப்படியே இருந்தது.
நூல் : முஸ்லிம், புகாரி

ஹள்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் மேலும் அறிவிக்கிறார்கள்

எனது தந்தை வபாத்தாகும் போது நிறைய கடனை விட்டுச் சென்றார்கள் என்னுடைய தோப்பில் கிடைத்த பேரீத்தம்பழ மகசூலை கடன்காரர்கள் ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக்கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர்கள் அதை எடுத்துக்கொள்ள மறுத்து, தங்கள் கடன் முழுவதையும் கேட்டார்கள் அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவ்விடம் வந்தார்கள். நான் நிலமையை விளக்கமாகக் கூறினேன்.

பின்னர் அவர்களை எனது தந்தையின் கடன்கார்களை சமாதானப்படுத்துமாறு கூறி அழைத்தேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னோடு தோப்பிற்கு வந்தார்கள். அனைத்து பேரீத்தம்பழங்களையும் ஒரே குவியலாகப் போடுமாறு பணித்தார்கள். அவ்வாறே செய்தேன்.

கடன்காரர்கள் என் வேண்டுகோளுக்கு செவிமடுக்காததைக் கண்ட
பெருமானார் (ஸல்) அவர்கள் அந்தக் குவியலை மூன்று முறை சுற்றி வந்தார்கள் பின்னர் அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டார்கள். பின்னர் அவர்கள் கடன்காரர்களை அழைத்து அவரவர்களுக்கு சேர வேண்டிய அளவை அளந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்

என்னே ஆச்சரியம்! கடன்காரர்கள் அனைவர்க்கும் கொடுத்து
முடித்தும் குவியலில் ஒரு பழம் கூடக் குறையவில்லை. இவ்வாண்டு மகசூலில் ஒரு பழம் கூட வீட்டிற்கு கொண்டு செல்ல இயலாது என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு மகசூலான அனைத்து பழங்களும் கிடைத்தன. கடனும் அடைபட்டு விட்டது
ஆதாரம் : புகாரி

ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபிகள் நாயகம் (ஸல்அவர்களிடம் நான் சிறிது பேரித்தம்பழங்களைக் கொண்டு வந்தேன் சுமார் இருபத்தி ஒரு பழங்கள் இருக்கும். யாரஸுலல்லாஹ்! இந்த பழங்களில் பரக்கத் ஏற்பட துஆச் செய்யுங்கள் என்று கூறினேன். அவற்றைப் பெற்ற பெருமானார் (ஸல்) அவர்கள் பரக்கத்துக்காக துஆச் செய்தார்கள். பின்னர் என்னிடம் அவற்றைக் கொடுத்து இதை ஒரு பையில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்! உங்களுக்கு பழம் தேவைப் படும்போது அதில் கையை விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்தப் பையை தலைகீழாக உதற வேண்டாம் என்று கூறினார்கள்

பெருமானார் கூறியவாரே நான் செய்து வந்தேன். அந்தப் பையிலிருந்து எவ்வளவோ பழங்களை எடுத்து நான் உண்டிருக்கிறேன். பிறருக்கும் உண்ணக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும், அதில் பழங்கள் குறைந்ததேயில்லை. ஹள்ரத் உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிகாலம் வரை அந்தப்பை என்னிடமே இருந்தது. ஹள்ரத் உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நாளில் அந்தப் பை காணாமற் போய்விட்டது
நூல் : திர்மிதி

பெருமானார் (ஸல்) அவர்கள் பொற்கரம் நீரூற்றாக, உணவுச் சுணையாக திகழ்ந்த வரலாறு அனந்தம்! அனந்தம்! பாறையை தட்டி தண்ணீரை வெளிப்படுத்திய ஹள்ரத் மூஸா நபி (அலை) அவர்களை இறைவன் தனது மறையில் புகழ்ந்தரைப்பது ஊற்றெடுத்த விரலுக்குரியவரை புகழ்ந்துரைக்க உத்தரவிட்டதாகாதா..?

சந்திரனும் பிளந்ததே

ஹள்ரத் மூஸா நபி (அலை) அவர்கள் தனது கைத்தடியால் அடித்து ஆழ் கடலைப் பிளந்த அதிசயத்தை வியக்கும் வண்ணம் திருக்குர்ஆன் விளக்குகிறது. அந்த செயல் அதிசயமானால், தனது ஆட்காட்டி விரலினால் கட்டிக்காட்டி சந்திரனைப் பிளந்த பெருமானாரின் செயல் பேரதிசயமல்லவா..?

அந்த சம்பவத்தை, உலக அழிவு காலம் நெருங்கி விட்டது, சந்திரனும்
பிளந்து விட்டது, (54 : 12) என்று சூசகமாகச் சொல்லும் திருக்குர் ஆன் அதை விரித்துக் கூறும் பொறுப்பை நம்மிடம் விட்டு விட்டதோ..?

மதீனாவில் கடுமையான பஞ்சம் தாண்டவமாடிய கால கட்டதில்
பெருமானார் (ஸல்) அவர்கள் குத்பா ஒதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நண்பர் எழுந்து மழைக்காக துஆச் செய்யுமாறு வேண்டுகிறார்
பிரார்த்தனைக்காக பெருமானார் (ஸல்) அவர்கள் கையைத் தூக்கவும்
மேகங்கள் ஈட்டி போன்று பாய்ந்து வந்து மழை பொழிந்தது, அன்று
பிடித்த மழை தொடர்ந்து பெய்ததால் அடுத்த வாரம் பெருமானார் (ஸல்) அவர்கள் குத்பா ஒதிக் கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் எழுந்து மழை நிறுத்தத்துக்காக பிரார்த்தனை செய்யக் கோருகிறார் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிய திசையில் மேகம் விலகிச் சென்றது
அறிவிப்பவர் : ஹன்ரத் அனஸ் (ரலி), நூல் : புகாரி, முஸ்லிம்

பெருமானார் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டிய திசையில் மேகம் விலகிச் சென்றது என்று காணப்படும் இந்த அறிவிப்பிலிருந்து அவர்கள் இங்கிருந்து கொண்டே மேகத்தைப் பிளந்தார்கள் என்பதை அறியப்படவில்லையா..?

மலக்குகளும் பணி செய்தனர்

ஹள்ரத் கலைமான் நபி (அலை) அவர்களுக்கு பணியாளராக ஜின்னுகள் வேலை செய்ததை திருக் குர்ஆன் கூறுகிறது.

கடலில் முத்துக் குளிக்கவும் பெரிய பெரிய இரும்புச் சட்டிகளைச் செய்யவும், உயர உயரமான கட்டங்களைக் கட்டவும், மிகப்பெரிய உருக்கு வார்ப்புகளை உருவாக்கவும் அவர்களுக்காக ஜின்னுகள் பயன்பட்டார்கள். (அல்குர் ஆன் 34 : 13) ஏன்? பைத்துல் முகத்தஸ் ஆலயத்தின் கட்டுமானப் பணியில் ஜின்னுகளை வைத்தே ஹள்ரத் சுலைமான் (அலை) அவர்கள் வேலை வாங்கினார்கள்

இந்த விபரங்களைக்கூறிய இறைவன், ஹள்ரத் நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பத்ருகளத்தில் ஐயாயிரம் மலக்குகள் பணி புரிந்ததை பெருமைபடுத்திக் கூறுகிறான்


إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ مِنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ
: (3: 125)
ஜின்கள் பணி செய்ததை விட மலக்குகள் பணி செய்தது மிகப்
பெருமையளிக்கும் ஒன்றல்லவா கல்லும் கவிபாடும் ஹள்ரத் தாவூது நபி (அலை) அவர்கள் இறைவனை திக்ருச் செய்வதில் பெயர் பெற்றார்கள். அவர்கள் சோர்வடையும் வேளையில் பறவைகளையும் பாறைகளையும் அவர்களுடன் சேர்ந்து திக்ரு செய்யுமாறு இறைவன் பணிப்பான் இத்தகவலை

وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا ۖ يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ ۖ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ
அல்குர்ஆன் (34 : 10) மூலம் இறைவனே நமக்குத் தருகிறான்.

நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன் என்ற இந்திய விஞ்ஞானி
கல்லிலிருந்து ஜெப ஒலி கேட்கிறது என்று கூறுகிறார். பூமியோடு ஒட்டி உறைந்துள்ள பாறைக்கும் உயிருண்டு என இன்றைய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த முடிவுகளுக்கேற்ப உயிரோட்டம் உடைய கற்கள் தஸ்பீஹ் செய்வது பெரிய அதிசயமல்ல. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் முன் சமைத்த உணவுகளே தஸ்பீஹ் செய்ததாக வரலாறு உரைக்கிறது.

ஹள்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அறிவிக்கிறார்கள்
பெருமானாரின் அற்புதங்களை நாங்கள் பரக்கத்தாக எண்ணிக்
கொண்டிருந்தோம் நாங்கள் ஒரு யுத்தத்தில் பெருமானாருடன்
இருந்தோம். அப்போது தண்ணீர் மிகக் குறைவாக இருந்தது. அதில்
அவர்கள் தனது கரத்தை நுழைவித்தார்கள். வாருங்கள்! பரக்கத்தான
தண்ணீர்! என்று நண்பர்களை கூவி அழைத்தார்கள். அவர்களின்
விரல்களுக்கு இடையில் நீரோடை ஓடியதை நாங்கள் கண்டோம்
மேலும் அப்போது உண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் உணவு தஸ்பீஹ்
செய்ததை நாங்கள் செவியுற்றோம்   நூல் : புகாரி.

கல்லையும் கரையச் செய்த ஹள்ரத் தாவூது (அலை) அவர்கள் புகழை இறைவன் பாடும்போது சமைத்த உணவையும் பேசச் செய்த பெருமானாரின் புகழை நாம் பாடுவது தவறாகுமோ...?

ஹன்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் தனது உத்தரவுக்கிணங்க மரித்தவர்களையும் உயிர் பெற்றெழச் செய்த வரலாற்றை இறைவன் தனது (5.1O)  மறையில் சிலாகித்துக் கூறுகிறான். உயிரை இழந்த உடலில் திரும்பவும் உயிரைப் புகுதச் செய்தது அதிசயம் என்றால், உயிருக்கு சம்பந்தமில்லாது, பூமியிலிருந்த வெட்டப்பட்டு ஒரு கூறைக்கு தாங்கு தூணாக நெடுநாட்களாகப் பயன்பட்டு வந்த பேரீத்த அடி மரத்தூணை அழச் செய்தது பேரதிசயமல்லவா.
ஹள்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் குத்பாப் பேருரை ஆற்றும்போது, ஒரு குறிப்பிட்ட தூணின் மீது சாய்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். முதன்முதலாக மிம்பர் படி உருவாக்கப்பட்டபோது அவர்கள் அந்த தூணில் சாய்வதை விட்டு மிம்பரில் ஏறி பேருரையாற்றினார்கள்

அப்போது அந்த தூண் அழ ஆரம்பித்துவிட்டது. அழுது அழுது அது வெடித்து விடுமோவென நாங்கள் அஞ்சி விட்டோம். அதுபோது பெருமானார் (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கிவந்து அந்த தூணைக் கட்டியணைத்தார்கள் அது தனது அழுகையை நிறுத்தி, குழந்தை தேம்புவதைப் போன்று தேம்பித் தேம்பி ஓய்ந்தது
நூல் : புகாரி.

ஹள்ரத் ஈஸா நபி (அலை) அவர்களை வாயாற இறைவன் புகழும் போது பெருமானார் (ஸல்) அவர்களை நாம் நெஞ்சார நினைவு கூற வேண்டாமா?

அதிசயங்கள் மட்டுமல்ல

பிர் அவ்னுக்கு தூதாகச் சென்ற ஹள்ரத் மூஸா (அலை) அவர்கள்
நம்ரூதிடம் வாதம் புரிந்த ஹள்ரத் இப்றாஹீம் (அலை) அவர்கள், பனி இஸ்ரவேலர்களைத் திருத்த அரும்படு பட்ட ஹள்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள், 950 ஆண்டுகள் அயராது உழைத்த ஹள்ரத் நூஹ் நபி (அலை) அவர்கள் போன்ற இறை தூதர்கள் சந்தித்த விலாவாரியாக விளக்கும் போது இடர்பாடுகளையெல்லாம் திருக்குர் ஆன் உலகில் தோன்றியவர்களிலேயே மிக துஷ்டர்களான மக்கா குறைவஷிகளை திருத்த அரும்பாடுபட்டு வெற்றி கண்ட நபிகள் கோமான் முஹம்மது (ஸல்) அவர்களின் சரித்திரத்தை நாவினிக்க கூறுவது தவறாகுமோ..?


திருக்குர் ஆன் நபிமார்களின் புகழ்களைக் கூறும்போது, அதை
ஆதாரமாகக் கொண்டு பெருமானாரின் புகழைக் கூறுவது மட்டும் எப்படி தவறான செயலாக ஆக முடியும்? திருக்குர்ஆனின் திருவசனத்தை ஆழ்ந்து சிந்திக்கும் போது - ஒரு செயல் அனுமதிக்கப்பட்டதற்கான சூசகமனா குறியீடுகள் இருந்தாலேயே அந்த செயல் அனுமதிக்கப்பட்டதாகக் கருதப்படும் அப்படியானால் நபி மார்களை புகழ்வது திருக்குர்ஆனில் தொடராக வெளியிடப்பட்டிருக்க புகழுக்கரசர் பெருமானாரைப் புகழுவது கூடுமென்பதற்கு வேறு ஆதாரமும் வேண்டுமோ...?

பெருமானாருக்கு அருளப் பெற்ற அல்குர்ஆன் அவர்களின் முழு சரித்திர நூலாக அமைவதை இறைவன் விரும்பவில்லை போலும். எனவே பிற நபிமார்களின் சரித்திரங்களை திரும்பத் திரும்ப உரைக்கும் இறைவன், தனது ஹபீபின் சரித்திரத்தை அங்கொன்றும், இங்கொன்றுமாக உரைக்கிறான். அவன் சுருட்டி மடக்கி சூசகமாக உரைத்த அண்ணலாரின் திருப் புகழை நாம் விரித்து விளக்கி அகிலமும் அவர்கள் புகழ் அறிய, அவர்களின் வழி நடக்க பாடுபடுவோம்.


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக