பக்கங்கள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

திரும்பி பார்.




மனித வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகளை கொண்ட ஒரு பாதையாகும் வாழ்வின் அடி கோட்டில் இருப்பவர்கள் எப்போதும் அடி கோட்டிலேயே இருப்பதில்லை ஒரு நேரம் இல்லாவிட்டாலும் மற்றொரு நேரம் உயர்ந்த நிலையை அவர்கள் அடைவார்கள்.

அவ்வாறு உயர்ந்த நிலையை அடைந்த சிலர் தனது முற்கால நிலையை முற்றும் மறந்து விடுகின்றார்கள் ஏதோ தலைமுறை தலைமுறையாக செல்வந்தர்களாக வாழ்ந்தவர்களை போன்று பாவனை செய்கின்றார்கள் பெருமை கொள்கிறார்கள்.

ஆனால் தனது கடந்தகாலத்தை என்றும் நினைவிலிருத்தி அதற்குத் தக்கவாறு தனது வாழ்க்கையை நிலையை அமைத்துக்கொண்ட அவரே சிறந்தவர்.  இக்கருத்தை இந்த திரு வசனங்கள் மூலம் இறைவன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு போதிப்பது போன்று சமுதாய அரங்கில் சமர்ப்பிக்கின்றான்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவர்களின் மருமகனார் ஹழ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கொத்து திராட்சையை அன்பளிப்பாக தருகிறார்கள். நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அதை உண்ணத் துவங்கும்போது வாசலில் பசியாக இருக்கிறது ஏதாவது தாருங்கள் என்று ஒரு குரல் கேட்கிறது. உடனே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருமனதுடன் திராட்சை பழத்தை குரலுக்கு உரியவரிடம் கொடுக்கும்படி உத்தரவிடுகிறார்கள்.

சுவையான கனியை நாயகம் உண்டு மகிழ வேண்டும் என ஆசைப்பட்ட உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மிக்க ஏமாற்றமாக போய்விட்டது உடனே அந்த ஏழையிடம் சென்று இந்த பழத்திற்கு உரிய விலையை நான் உனக்கு தருகிறேன் இந்தப் பழத்தை தருகிறீரா...?என்று கேட்கிறார்கள். அந்த ஏழை சம்மதிக்கவே உரிய தொகையை அளித்து பழத்தைப் பெற்று மீண்டும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் உண்ணத் துவங்கும் போது அதே ஏழையிடம் இருந்து அதே குரல் ஒலிக்கிறது கருணை நாதருக்கு அக்குரலை அலட்சியம் செய்யத் தோன்றவில்லை. திரும்பவும் அவருக்கே அப்பழத்தை ஈந்து விடுகிறார்கள்.

அதனால் மனம் வருந்திய உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த ஏழையிடம் அக்கனியை இரண்டாம் முறையாக விலை கொடுத்து வாங்கி நாயகத்துக்கு சமர்ப்பிக்கிறார்கள். நாயகமும் உண்ணத் துவங்குகிறார்கள். அதே குரல் அந்த ஏழையிடம் இருந்து திரும்பவும் ஒலிக்கிறது அதை செவியுற்ற நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அ பய்யாஉன் அன்த்த ஆம் ஸாயிலுன். ( நீ என்ன வியாபாரியா...? அல்லது யாசகம் கேட்பவரா...? என்று யாசகம் கேட்பவரை கடிந்து கொள்கிறார்கள்.

அப்போது இறைவன் இந்த திருவசனங்களை அருளச் செய்கிறான்.

நீங்கள் அனாதையாக இருந்த போது அவன் ஆதரவளிக்கவில்லையா..? நீங்கள் நேரிய வழி அறியாதவராக இருந்தபோது அவன் வழி காட்ட வில்லையா...? நீங்கள் ஏழ்மை நிலையில் இருந்தபோது அவன் செல்வந்தராக்கவில்லையா...? எனவே நீங்கள் அனாதைகளை அடக்க வேண்டாம். யாசித்த வரை விரட்ட வேண்டாம்.

                        அல்குர்ஆன். 94 : 06.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வினோதமான யாசகரை கடிந்து கொண்டது இறைவனுக்கு பொருத்தமாகப் படவில்லை எனவே உமது முற்காலத்தை சிந்தனை செய்து பார்ப்பீராக என்று உபதேசிக்கிறான்.

வாழ்க்கையின் உயர்ந்த நிலையில் உள்ளோர் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தார்கள் என்றால் பெருமையையும் அகம்பாவமும் கொள்ளமாட்டார்கள் அவர்களிடம் தர்மமும் தயாளமும் நிரம்பி வழியும்.

முதியோர் தாங்களும் ஒரு காலத்தில் இளைஞராக இருந்த வர்கள் தான் என்பதை மனதில் கொண்டால் இளைஞர் மீது வெறுப்பை உமிழ மாட்டார்கள்.

அறிஞர்கள் தங்களுக்கு அறியாமைக்கு பின் தான் ஞானம் கிடைத்துள்ளது என்பதை சிந்தனையில் கொண்டால் அறியாதவர்களை அற்பமாக கருத மாட்டார்கள்.

அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த வாழ்வு புதியது தான் என்ற உண்மையை மனதில் நிறுத்தினால் அடக்குமுறை செய்ய மாட்டார்கள்.

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் இரண்டாம் ஜனாதிபதி ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பொதுமக்களின் மனு, நீதிகளை கவனிப்பதற்காக பள்ளிவாசலில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் அமர்ந்து இருக்கும் பழக்கம் உடையவர்கள்.

ஒருநாள் அவ்வாறு அமர்ந்து விட்டு வீட்டுக்கு திரும்பியபோது ஒருவர் ஓடோடி வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி முறையிட்டார் அப்போது ஜனாதிபதி அவர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டு விட்டது நான் நியாயம் வழங்குவதற்காக காத்திருக்கும்போது ஒருவரும் வரமாட்டீர்கள் பின்னர் எனக்கு சொந்த வேலையில் ஈடுபடும்போது வந்து தொல்லை கொடுப்பீர்கள் என்று கடிந்து வந்தவரை சாட்டையால் விரட்டி அடித்து விட்டார்கள்.

அவர் அவ்விடத்தை விட்டு அகன்று பிறகு ஜனாதிபதி அவர்களுக்கு தான் செய்தது முறையாக தோன்றவில்லை அதற்காக மிகவும் வருந்திய வர்களாக தனது இல்லத்தில் சென்று உமரே ஒட்டகம் மேய்க்க கூட தகுதி இல்லாதவன் என்று உன் தந்தையால் ஒதுக்கப்பட்ட உன்னை இறைவன் நாடாளும் தலைவன் ஆக்கவில்லையா வழியறியாது தடுமாறிய உனக்கு அவன் வழிகாட்டவில்லை ஏழையாக இருந்த உன்னை இறைவன் செல்வந்தன் ஆக்கவில்லையா அல்லாஹ் இவ்வாறு உனக்கு அருள் புரிந்ததற்காக வா அநியாயமாக உன்னிடம் முறையிட வந்த வரை அடித்து விரட்டினால் என்று கூறிக் கொண்டே தன் மேனியின் மீது சாட்டையால் அடித்துக் கொண்டார்கள் 

ஆம் அவர்களின் நடவடிக்கை அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும்.


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.

9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக