பக்கங்கள்

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அர்த்தமுள்ள ஆன்மீகம். 1

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குவோமாக.

அல்லாஹ்வினுடைய அன்பும் அருளும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக.

அர்த்தமுள்ள ஆன்மீகத்தில் இன்றையதினம் குர்ஆனிலும் ஹதீஸிலும் அதிகமாக வந்திருக்கின்ற  மட்டுமல்ல நமது செவிகளில் அதிகமாக கேள்விப்பட்டிருக்கின்ற ஒரு நிகழ்ச்சியை இப்போது நாம் நினைவுகூர இருக்கின்றோம்.

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றில் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

அதில் முதலாவது செய்தி என்னவென்றால் அல்லாஹ்வை பயப்படுகிறவர்கள் உடனடியாக தவ்பா செய்து விடுவார்கள். பாவம் செய்வது பெரிய விஷயம் அல்ல எல்லோரும் பாவம் செய்வார்கள்.

ஆனால் அல்லாஹ்வை பயப்படுகிறவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் உடனே தவ்பா செய்து விடுவார்கள்.  

இரண்டாவது செய்தி என்னவென்றால் நல்ல வாழ்க்கையை இறைவன் கொடுத்தாலும் அதை தூக்கி எறிந்துவிட்டு கஷ்டமான வாழ்க்கையை நோக்கி செல்வது தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் இன்று வரை நாம் செய்யக் கூடிய தவறாக இருக்கின்றது.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொர்க்கத்தில் அனைத்தும் சுலபமாகக் கிடைத்தது உழைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு அங்கு இல்லை. ஆனால் அதை பிடிக்காமல் அவ்வாழ்க்கையை முடித்துவிட்டு வெளியே வந்து கஷ்டப்பட்டார்கள்.  அது போல் தான் நாமும் இன்று இருந்து கொண்டிருக்கின்றோம்.

மனிதனுடைய இயற்கையே இப்படித்தான் இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் ஒரு அற்புதமான வாழ்க்கையை மனதில் ஏற்படும் பேராசையின் காரணமாக அதை தூக்கி எறிந்துவிட்டு கஷ்டமான வாழ்க்கையின் பக்கம் செல்வான். இது தான் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மட்டுமல்ல அவர்களுடைய மக்களிடத்திலும் காணப்படுகின்ற வரலாறாக இருக்கின்றது.

திருமணம் செய்வதில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய  இரு மகன்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்களுக்கிடையில் வந்த சண்டை கொலை வரை சென்றது என்று சொல்லப்படுகின்ற வரலாற்றை அது எவ்வளவு தூரம் சரி என்பதில் உலமாக்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கின்றது காரணம் என்னவென்றால்

ஒரு பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையில் ஒரு பெண்ணிற்காக இருவரும் சண்டையிட்டார்கள் என்ற விஷயத்தை மறுக்கிறார்கள் இது போன்ற அறிவிப்புகள் இஸ்ராயிலி அறிவிப்பை சேர்ந்தது என்பதாகக் கூறுகிறார்கள். 

இச்செய்தி திருக்குர்ஆனில் எப்படி வருகிறது என்றால்


وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்என்று கூறினார். அதற்கு (முன்னவர்) மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்என்று கூறினார்


ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வினுடைய நெருக்கத்தை பெறுவதற்காக வேண்டி ஆளுக்கு ஒரு ஆட்டை குர்பானியை கொடுக்கும்படி கூறினார்கள்.

அக்கால வழக்கப்படி வானில் இருந்து வரக்கூடிய நெருப்பு எந்த குர்பானியை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றானோ அந்த குர்பானி பிராணியை நெருப்பு கரித்துவிட்டு சென்றுவிடும் ஏற்றுக்கொள்ளாத குர்பானியை அந்த நெருப்பு கரிக்காது.  இந்நிலையில் இருவருடைய குர்பானி பிராணியில் ஒன்று ஏற்கப்பட்டு மற்றொன்று ஏற்கப்படாமல் போன போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு கொலை வரை நீடித்தது என்ற வரலாறு திருக்குர்ஆனில் இருக்கின்றது.

அதன்பிறகு கொலை செய்யப்பட்ட வரை மறைப்பதற்காக வேண்டி அவர் வழி தெரியாமல் நின்ற பொழுது அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான் அந்த காகம் மனித உடலை எப்படி அடக்கம் செய்வது என்ற விஷயத்தை அங்கே கற்றுக் கொடுத்தத வரலாற்றை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.

இந்நிகழ்வில் இருந்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முதலாவது விஷயம்.

1. கொலை என்பது இவ்வுலகத்தின்  மிகப்பெரிய குற்றம். அல்லாஹ்வுக்கு இம்மண்ணில் பிடிக்காத மிகப்பெரிய ஒரு செயல் ஒரு உயிரை கொள்வதாகும்.

2. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான் அநியாயமாக ஒரு மனிதன் மற்றொருவனை கொலை செய்துவிட்டால் அவன் முழு சமுதாயத்தையே கொலை செய்ததை போன்றவன் ஆகிறான். அதேபோல் இவ்வுலகில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வாழ வைத்தால் அவன் முழு சமுதாயத்தையும் வாழ வைத்ததை போன்றவனாகிறான்.

3. உலக இறுதி நாள் வரை யார் கொலை செய்தாலும் அந்த பாவத்திலிருந்து ஒரு பங்கு முதலில் கொலை செய்தவனுக்கு போய்க்கொண்டே இருக்கும்.

ஒரு பாவமான காரியத்தை ஒருவன் துவங்கி வைத்தால் அதன் பிறகு அந்த பாவத்தை யார் செய்தாலும் அதிலிருந்து ஒரு பங்கு அவனுக்கு சென்று கொண்டே இருக்கும். 

இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் ஆரம்பித்து வைக்கக்கூடிய நல்ல காரியம் அல்லது கெட்ட காரியம் அதை செய்பவர்களின் மூலமாக நன்மைகளோ அல்லது தீமைகளும் நமக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

யாராவது ஒரு மனிதர் ஒரு நற்செயலை துவக்கி வைக்கிறார் அந்த நற்செயல் பின்னால் உள்ளவர்களாளும் பல நூறு வருடங்கள் இவ்வுலக மக்களால் செய்யப்படுகிறது.  என்று வைத்துக்கொள்வோம் அதிலிருந்து ஒரு பங்கு அவருக்கு போய் சேர்ந்து கொண்டே இருக்கும்.

அதேபோல்தான் தீமையும் . இவ்வுலகில் முதல் கொலை செய்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய மகன் காபிலுக்கு உலக இறுதி நாள் வரை எங்கு கொலை நடந்தாலும் அதிலிருந்து ஒரு பங்கு அவருக்கு போய் சேர்ந்து கொண்டே இருக்கும். 

நாம் எந்த ஒரு செயலையும் ஆரம்பித்து வைப்பதற்கு முன்னால் அதனுடைய நன்மை தீமை நமக்கு வந்துகொண்டே இருக்கும் என்று யோசிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு  நமக்கு இருக்கின்றது. 

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றில் மட்டுமல்ல எல்லா காரியங்களிலும் காலங்களிலும் யோசித்து செயல்படக்கூடிய நல்ல மேன்மக்களுடைய பட்டியலில் அல்லாஹ் நம்மை சேர்ப்பானாக.

மௌலவி, ஹாபிள், அஃப்ஜலுல் உலமா 
M. சதீதுத்தீன் பாஜில் பாகவி M.A., M.Phil., P.hd
(தலைமை இமாம், அடையாறு பள்ளிவாசல்)
  

அவர்களின் அர்தமுள்ள ஆன்மீகம்.1  வீடியோ உரை எழுத்து வடிவில்.

வீடியோ காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக