பக்கங்கள்

புதன், 31 அக்டோபர், 2018

ஆரோக்யத்தின் அவசியம்.




                  ஆரோக்யத்தின் அவசியம்.

( ஆடியோ உரை : மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ்
              S.S அஹ்மது பாஜில் பாகவி.
தலைமை இமாம். மஸ்ஜித் இந்தியா. கோலாலம்பூர் மலேசியா.)



பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த மணி மொழிகளில் அனேகமான மருத்துவ குறிப்புகளும் மருத்துவ ஆலோசனைகளும் அதிலே காணக்கிடைக்கிறது.  அதில் ஆரோக்கியத்தின் அவசியங்களும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 


عن النبي صلى الله عليه وسلم قال ما أنزل الله داء إلا أنزل له شفاء

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் எந்த வியாதியையும்  இறக்குவதில்லை அதற்கான நிவாரணத்தையும் இறக்கியே தவிர.

( நூல். புகாரி. 5678  )

عن أبي الدرداء رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: (إن الله 
أنزل الداء والدواء وجعل لكل داء دواء فتداووا ولا تداووا بحرام) رواه أبوداود.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
எல்லா வியாதிக்கும் மருந்துண்டு. ஆகவே மருந்தெடுங்கள் ஹராமான விலக்கப்பட்டதைக் கொண்டு மருந்திடாதீர்கள்.

( நூல்: அபூதாவூத்.)

عن ابن مسعود أن النبي صلى الله عليه وسلم قال: ما أنزل الله عز وجل داء إلا أنزل له دواء، علمه من علمه وجهله من جهله

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
எல்லா வியாதிக்கும் மருந்துண்டு அதை அறிந்தவர்கள் அறிந்து கொண்டனர். தெரியாதவர்கள் தெரியாமல் இருக்கிறார்கள்

( நூல்: நஸயீ இப்னுமாஜா.)


நோயை இறக்கியவன் மருந்தை இறக்காமல் இல்லை. எந்த நோய்க்கும் மருந்து இல்லாமல் இல்லை. அதைத் தெரியாமல் இருக்கலாம் இன்னும் சில நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நோய்க்கு மருந்து இல்லாமல் இல்லை. எல்லா வியாதிக்கும் மருந்து இருக்கிறது மரணத்தை தவிர. எல்லா வியாதிக்கும் மருந்து இருக்கிறது முதுமையை தவிர என்றார்கள் பூமான் நபி ஸல் அவர்கள்.

( நூல்: அஹ்மத்.)

அல்லாமா சமஹ்ஷரி  அவர்கள் எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறது முட்டாள்தனத்தை தவிர. என்று கூறினார்கள். 

فإنما شفاء العي السؤال

அறியாமை என்ற நோய்க்கு நிவாரணம்... தெரிந்து கொள்ள கேள்வி கேட்பதாகும். என்றார்கள் பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

(நூல்: அபூதாவூத் 336.)


தனக்குத் தெரியவில்லை என்ற நோய் இருப்பதை தெரியாதவன், தெரிந்தும் சிகிச்சை செய்யாதவன் அல்லது மருத்துவரைப் பெற்றுக் கொள்ளாதவன், நிவாரணம் பெற்று குணமாக வாய்ப்பே இல்லை. மருந்தை அல்லாஹ் இறக்கினான் என்றால் அவன் அறிவித்தான். அல்லது அதை உலகில் ஏற்படுத்தினான் என்று பொருள்.

சில நோய்களுக்கு நிவாரணியை நபிமார்கள் இறை தீர்க்கதரிசியின் வாயிலாக அறிவித்தான். அதிகமான வியாதிகளுக்கு அனுபவத்தின் மூலமாக மருத்துவ பரிசோதனையின் மூலமாக மனித சமுதாயத்திற்கு அறிவித்துக் கொடுத்தான். 

மருத்துவ அடிப்படைச்சூத்திரங்கள் என மூன்று விஷயங்களைக் கூறுவார்கள்.

1.) தொடர்ந்து ஆரோக்கியத்தை பாதுகாத்து அதை பராமரிப்பது.

2.) உடலுக்கு தீங்கு, பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது.

3.) நோய்க் கிருமிகள் மற்றும் அதற்கான காரணிகளை கண்டுபிடித்து களைவது.

இந்த மூன்று மூல விதிகளையும் திருமறை அல்குர்ஆன் அழகாகச் சுட்டிக் காண்பிக்கிறது.

முதல் விதியை அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான். 

أَيَّامًا مَعْدُودَاتٍ ۚ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ ۚ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ ۖ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

(இவ்வாறு விதிக்கப்பட்ட நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

                                                                 (அத்தியாயம் 2 வசனம் 184.)


இந்த வசனத்திலிருந்து முதல் விதியைப் பெறப்படுகிறது. பயணம் என்பது அசவுகரியம் சம்பவிக்க வாய்ப்புள்ள ஒரு தளம். அது உடல் நிலையை தலைகீழாக புரட்டிப் போடக் கூடியது. நோன்பு நோற்றால் இன்னும் அதிகமாக உடல் நிலை மோசம் அடையலாம் என்பதால் உடல் நிலையை பாதுகாக்க அதன் தொடர் நலத்தை பராமரிக்க நோன்பை விடுவது அனுமதிக்கப்பட்டது. 


இவ்வாறு நோயாளி நோன்பை நோற்றால் நோய் மேலும் அதிகரித்து நிலைமை இன்னும் மோசம் ஆகாமல் தடுப்பதற்கும் இருக்கிற உடல்நிலையை தொடர்ந்து பராமரிப்பதற்கும் நோன்பை விடுவதற்கு அவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வசனம் சொல்லும் செய்தி இதுதான் : உடல் நிலையை சீராக கவனித்து கொள்வதோடு அதை அப்படியே பராமரிக்க வேண்டும் இருக்கும் நிலையை சீர்கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் முதல் சூத்திரம். 


இரண்டாவது சூத்திரம். நம் உயிரை நாம் தற்காத்துக் கொள்ளுதல் .

இந்த கருத்து

 وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ள வேண்டாம்... 

                                                                         (அத்தியாயம்-4 வசனம் 29.)

என்ற திருக்குர்ஆனின் வசனத்தில் இருந்து பெறப்படுகிறது.


அதாவது உடல் நலத்திற்கு தீங்கிழைக்கும் காரியங்களை மேற்கொண்டு உங்களை நீங்களே அழித்துக் கொள்ள வேண்டாம். குளிர்ந்த நீரைப் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படும் என்று பயந்தால் தண்ணீர் கொண்டு ஒழுச் செய்யவோ குளிக்கவோ வேண்டாம். தயம்மும் செய்து கொள்ளலாம் என்ற சட்ட அனுமதியை இந்த வசனத்திலிருந்து இமாம்கள் ஆய்வு செய்து எடுத்துள்ளார்கள்.


உடல்நலத்திற்கு தீங்கிழைக்கும் காரியங்களை விட்டு உடலை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும். இதுதான் மருத்துவத்தின் இரண்டாவது சூத்திரம்.


 மூன்றாவது சூத்திரம். நோய்க் கிருமிகள் மற்றும் அதற்கான    
                           காரணிகளை கண்டுபிடித்து களைவது.



وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّـهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّـهَ وَاعْلَمُوا أَنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

                                                                             (அத்தியாயம் 2 வசனம் 196.)


ஹஜ் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டியவர் அதிலிருந்து விடுபடுவதற்கு முன்பு தலைமுடியை சிரைக்கக்கூடாது. ஆனால் அவர் தலையில் பேன்-புண்-வலி ஆகியவைகளால் இடையூறு உள்ளவராக இருந்தால் முடி இறக்கிக் கொள்ளலாம். பிறகு அதற்கு பரிகாரமாக என்ன செய்ய வேண்டும் என்று மேற்படி வசனம் விரிவாகக் கூறுகிறது. 


நோய்க்காரணிகளை நீக்க வேண்டும் என்ற உடல் நலத்திற்கான மூன்றாவது விதியை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. 

 ஆரோக்கியத்தின் அவசியத்தை அல்குர்ஆனும் நபிமொழியும் பல்வேறு இடங்களில் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. 

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

"நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.


                                                                    (அத்தியாயம் 26 வசனம் 80.)

இது இறை அன்பர் நபி இப்ராஹீம் அலை அவர்களின் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லும் திருமறை வசனம் ஆகும். 

நோய் அடியானை அடையாளப்படுத்தும். அல்லாஹ்வை விட்டும் அவனை வேறுபடுத்தும் ஒரு வேதனை சாட்சியாகும். 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் இது தமிழ் முதுமொழி.

 ஆரோக்கியமின்றி இந்த உலகை அனுபவிக்க முடியாது என்பார் பென் ஜான்சன்.

ஆரோக்கியத்தை கட்டிக் காப்பது என்பது கடமை உடல்நல அறிவியல் என்று ஒன்று இருக்கிறது என்பது அறிந்தவர் சிலரே என்று சொல்லுவார் ஸ்பென்சர்.

இந்த உடல் நல மருத்துவ அறிவியலை விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான தூதர் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிந்து அறிவித்த திப்ப நபவி நபி வழி மருத்துவம் என்ற அத்தியாயத்தில் நிறைவாகவும் விரிவாகவும் காணப்படுகிறது.

இதில் ஆரோக்கியத்தின் அவசியங்களும் ஆலோசனைகளும் நிறையவே கூறப்பட்டுள்ளது. மருந்து வகைகளும் மருத்துவ வழிகளும் கூட  சொல்லப்பட்டுள்ளது. 

உடல்நலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியதைப் போன்று அந்த அளவுக்கு அதன் அவசியத்தை வேறு யாரும் எடுத்துக் கூறியதில்லை என்று கூறலாம். 

وقد قام صلى الله عليه وسلم على المنبر يوما ثم بكى،

فقال: «سلوا الله العفو والعافية؛ فإن أحدًا لم يعط بعد اليقين خيرًا من العافية»

இறைத்தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒருமுறை மிம்பரில் நின்றார்கள். (உணர்வுபூர்வமாக) பிரசங்கம் செய்தார்கள். பிறகு அழுது கொண்டே கூறினார்கள் அல்லாஹ்விடம் சுகமும் மன்னிப்பும் கிடைக்க பிரார்த்தனை செய் ஏனெனில் நிச்சயமாக ஈமானுக்கு பிறகு சுகத்தை விட சிறந்த பாக்கியத்தை எவருக்கும் வழங்கப்பட்டதில்லை என்றார்கள்.


அனஸ் இப்னு மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள். ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்விடம் கேட்பதற்கு எந்த பிரார்த்தனை சிறந்தது எனக் கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள் இம்மையிலும் மறுமையிலும் உனக்கு சுகமும் மன்னிப்பும் கிடைக்க உனது இறைவனிடம் பிரார்த்தனை செய்வது என்றார்கள். அவர் இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் வந்து இதே கேள்வியைக் கேட்க இதே பதிலைத்தான் திரும்பத் திரும்ப அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

உனக்கு இம்மையிலும் மறுமையிலும் சுகமும் மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டால் நீ வெற்றி பெற்று விட்டாய் எனச் சொன்னார்கள்.  
நூல் திர்மிதி 3512.

قال  النبيُّ صلى الله عليه وسلم: ((لا يُرَدُّ الدعاء بين الأذان والإقامة))، قالوا: فماذا نَقول يا رسولَ الله؟ فقال صلى الله عليه وسلم: ((سلوا اللهَ العافيةَ في الدنيا والآخرة)

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொன்ன சத்திய நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடம் அப்போது என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என நபித்தோழர்கள் கேட்டார்கள். இம்மை மறுமையின் சுகத்தை கேளுங்கள் என்று ஏந்தல் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். 

                                                                                     (நூல் திர்மிதி 212.)


ماء زمزم لما شرب له
ஸம்ஸம் தண்ணீரை என்ன பிரார்த்தனை செய்து குடித்தாலும் அது நிறைவேறும் என்று நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அருளினார்கள்.


ஸம்ஸம் தண்ணீரை குடிக்கும் போது மார்க்கம் கற்றுத்தந்த பிரார்த்தனை என்ன தெரியுமா...

للهم إني أسألك علماً نافعاً و رزقاً واسعاً و شفاء من كل داء

பயனுள்ள கல்வி. வளமான வாழ்வாதாரம். எல்லா பிணியிலிருந்து நிவாரணம் தா.. எனக் கேட்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகிறது. 


بأن النبي صلى الله عليه وسلم سمع رجلاً يقول : " اللهم إني أسألك الصبر .، قال: سألت الله البلاء ، فاسأله العافية ).

யா அல்லா உன்னிடம் பொறுமையை கேட்கிறேன் என்று ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த கருணை நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அவரிடம் இந்தப் பிரார்த்தனையின் மூலம் அல்லாஹ்விடம் சோதனையை நீ கேட்டு விட்டாய் அப்போதுதானே பொறுமை தேவைப்படும் அதனால் அதை கேட்காதே நீ அவனிடம் சுகத்தை பிரார்த்தனை செய் என்றுரைத்தார்கள்.

                                                                                          (நூல் திர்மிதி 3,527.)


தினமும் காலை மாலை நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் செய்த பிரார்த்தனைகளில் இப்படி ஒரு துஆ நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது. 

اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت" كررها ثلاثاً
யா அல்லாஹ் எனக்கு உடல்நல ஆரோக்கியத்தை நீ அளிப்பாயாக. எனது செவியில் ஆரோக்கியத்தை நீ வழங்குவாயாக. எனது பார்வையில் நீ சுகத்தை தருவாயாக. இந்த துவாவை மூன்று முறை மடக்கி மடக்கி பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுவார்கள். 

                                                                                (நூல் அபூதாவூத் 5090.)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ما سُئِلَ الله شيئًا أحب إليه من أن يُسأل العافية

அல்லாஹ்விடம் கேட்கப்படும் பிரார்த்தனைகளில் நற்சுகத்தைத் தவிர மிகவும் அவனுக்குப் பிரியமான துஆ வேறு எதுவும் இல்லை என்றார்கள்.
                                                                                 (நூல் திர்மிதி 3548.)


நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஹழ்ரத் அப்பாஸ் ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள் ஒரு துஆவை கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டபோது சச்சா அவர்களே நான் உங்களை விரும்புகிறேன் நீங்கள் இம்மை மறுமை  சுகத்தை அல்லாஹ்விடம் அதிகமாக கேளுங்கள் என்றுரைத்தார்கள். 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு நான் உங்களை விரும்புகிறேன் எனவே உங்களுக்கு விருப்பமான ஒரு செய்தியை சொல்கிறேன் என்று சொன்னபொழுது ஆரோக்கியத்தை கேட்கும்படி வலியுறுத்தினார்கள் என்றால் நாம் ஆரோக்கியத்தின் அவசியத்தை இங்கே உணர்கிறோம் அல்லவா.

அத்தகைய ஆரோக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்கி அருள் புரிவானாக.




(எழுத்தாக்கம் :      A. காதிர் மீரான் மஸ்லஹி.
                                  A.முஹம்மது ஹதீஸ் மஸ்லஹி.


                             ( தொடர்புக்கு : 9952129706. 9003609448.  )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக