பக்கங்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2017

மாநபி ஸல் அவர்களின் மாண்புயர் சபை.











لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏ 


33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.



மனிதனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வும் வழிகாட்டுதலும் நபி ஸல் அவர்களின் வாழ்வில் இருப்பதாக இந்த இறைவசனம் எடுத்து இயம்புகிறது.


சபை ஒழுக்கம்.


நபி ஸல் அவர்கள் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் போதிக்கவில்லை. தனி மனித ஒழுக்கங்கள், சமூக ஒழுக்கங்கள் என எதையும் விட்டு வைக்காமல் தற்பித்து சென்றுள்ளார்கள். அதில் ஒன்றுதான் நண்பர்களுடன் மக்களுடன் அமர்ந்திருக்கும் சபையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கமாகும்.

அவரவர் தகுதிக்கேற்ப மக்களுக்கு கண்ணியம் செலுத்துங்கள் என்று போதித்த நபி ஸல் அவர்கள் பிறர் வியக்கும் அளவுக்கு தம் நடைமுறை வாழ்வில் அதை கடைபிடித்து காட்டினார்கள்.

இது அவர்களின் சபைகளில் காணலாம். தனது சபைக்கு யார் வந்தாலும் அவரே வியந்து போகுமளவுக்கு தகுந்த கண்ணியம் அளிப்பார்கள். இதற்கு பல சான்றுகளை காணலாம்.


தலையணை மரியாதை.

1. ஹஸ்ரத் அப்துல்லாஹ் ப்னு உமர் ரலி அவர்கள் அறிவிப்பதாவது. நான் ஒருமுறை நபியவர்களை சந்திக்க சென்றேன். அப்போது நபியவர்கள் என்னை கண்ணியப்படுத்தும் விதமாக பேரிச்ச நார்களால் செய்யப்பட்ட தலையணையை எனக்கு அளித்தார்கள். நான் நபியின் மீதுள்ள மரியாதையின் காரணமாக அதில் அமரவில்லை. அத்தலையணை எனக்கும் நபிக்கும் இடையில் வெறுமனே இருந்தது.


2. ஹஸ்ரத் சல்மான் பார்ஸி ரலி அவர்கள் ஒருமுறை ஹஸ்ரத் உமர் ரலி அவர்களை சந்திக்கச் சென்றார்கள். அப்போது ஹஸ்ரத் உமர் ரலி அவர்கள் தலையணை மீது சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். ஹஸ்ரத் சல்மான் ரலி அவர்களை கண்டதும் தமது தலையணையை அவர்களுக்கு ஹஸ்ரத் உமர் ரலி வழங்கிவிடார்கள். இதை கண்ட சல்மான் ரலி அவர்கள் ஸதகல்லாஹு வரசூலுஹு அல்லாஹ்வும் அவனது ரஸூலும் உண்மை உரைத்து விட்டார்கள். என்று கூற, ஹஸ்ரத் உமர் ரலி அவர்கள் அச்செய்தி யாது ...? அதை எங்களுக்கும் தெரிவிப்பீராக...! என ஹஸ்ரத் சல்மான் ரலி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.

ஹஸ்ரத் சல்மான் ரலி அவர்கள் கூறினார்கள். ஒருமுறை நான் நபியவர்களிடம் சென்ற போது அன்னார் தலையணை மீது சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அத்தலையணையை எனக்கு தந்து விட்டு "சல்மானே ஒரு முஸ்லிம் தனது முஸ்லிம் சகோதரரை சந்திக்கச் செல்லும் போது அவர் தனது சகோதரரை கண்ணியப்படுத்த தலையணையை வைத்தால் அல்லாஹ் அவரது குற்றங்களை மன்னித்து விடுவான்." என்று நபியவர்கள் கூறினார்கள்.


போர்வை மூலம் மரியாதை.

3. ஹஸ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் பஜலி ரலி அவர்கள் நபியவர்களை காண சென்ற போது, நபியவர்கள் தமது வீட்டில் அமர்ந்திருந்தார்கள். வீட்டில் ஸஹாபாக்கள் குழுமியிருந்தார்கள். ஹஸ்ரத் ஜரீர் ரலி அவர்கள் வாசலிலேயே நின்று விட்டார்கள். தமது தோழர் வாசலில் நிற்பதை கண்ட நபியவர்கள் தமது போர்வையை வீசி அதை விரித்து அமருமாறு கூறினார்கள்.

ஹஸ்ரத் ஜரீர் ரலி அவர்களோ அதை தமது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். அதை முத்தமிட்டு நபியவர்களிடம் திருப்பிக்  கொடுத்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் அவர்களே... எனக்கு தாங்கள் கண்ணியம் செலுத்தியது போல் அல்லாஹ் தங்களுக்கு கண்ணியம் செய்வானாக. என்று கூறினார்கள். பின்னர் நபியவர்கள் உங்களிடம் ஒரு சமுதாயத்தில் மதிக்கப்படும் நபர் வந்தால் அவருக்கு சங்கை செய்யுங்கள். என்று கூறினார்கள்.       நூல் தப்ரானி.


நபி ஸல் அவர்கள் சில நேரம் ஸஹாபாக்களுடன் உலகவிசயங்களையும் பேசிக்கொள்வார்கள். ஸஹாபாக்கள் தங்களுக்கிடையே பேசக்கூடிய விசயங்களை அமைதியுடன் கேட்பார்கள். சில சமயம் நபியின் அவையில் கவியரங்கம் நடைபெறும். ஸஹாபாக்கள் முற்கால சரிதைகளை தங்களிடையே அசைபோடுவார்கள்.


கலகலப்பை ஏற்படுத்தும்.

ஹஸ்ரத் ஜாபிர் ப்னு சமூரா ரலி அவர்கள் கூறியதாவது. நபிகளாரின் சபையில் நூறு முறைகளுக்கு மேலாக இருந்துள்ளேன். ஸஹாபாக்கள் கவிபடிப்பார்கள், அறியாமை காலத்து சம்பவங்களை எடுத்துரைப்பார்கள். நபியவர்கள் இவற்றை தடுக்காது அமைதியாக இருப்பார்கள். சிலவேளை ஸஹாபாக்களுடன் சேர்ந்து நபியவர்களும் சிரிப்பார்கள்.
                                       நூல் ஷமாயில் திர்மிதி.


ஹஸ்ரத் ஸைத் ப்னு ஸாபித் ரலி அவர்கள் கூறுகிறார்கள். நான் நபி ஸல் அவர்களுக்கு அருகில் இருந்து வந்தேன். நபிக்கு வஹி அருளப்பெற்றால் என்னை அழைத்து எழுத வைப்பார்கள். நாங்கள் உலக பேச்சில் ஈடுபட்டால் எங்களுடன் சேர்ந்து நபியவர்களும் உலக விசயங்களைப் பற்றி பேசுவார்கள். நாங்கள் மறுமையை பற்றி பேச ஆரம்பித்தால் நபியவர்களும் மறுமையை பற்றி பேசுவார்கள். நாங்கள் உண்பது குடிப்பது பற்றி பேசினால் நபியவர்களும் அப்பேச்சில் கலந்து கொள்வார்கள். இப்படி நபியவர்களின் சபையில் பலதரப்பட்ட பேச்சுகள் நடைபெற்றுவந்தன. இதனால் ஸஹாபாக்கள் சந்தோசமைவார்கள்.


சில ஒழுக்கங்கள்,

நபியின் சபையில் அமரும் ஒவ்வொருவருமே தாமே நபக்கு மிக நெருக்கமானவர்கள் என்று எண்ணும் அளவுக்கு நடைமுறை அமைந்திருந்தது.

நபியவர்களை சந்திக்க வருபவர் அவராக எழுந்திருக்கும் வரை நபியவர்கள் எழுந்திருக்க மாட்டார்கள். காரணம் இருப்பின் அதை கூற எழுந்திருப்பார்கள். நபியவர்கள் சபையில் கால் நீட்டி அமர மாட்டார்கள். சபைகளில் தமக்காக தனி அந்தஸ்தை விரும்ப மாட்டார்கள். தமக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் புதிதாக வெளியிருந்து வருபவர் நபி யார் என்று கேட்டு தெரிந்து கொள்ளுமளவு மற்றவர்களுடன் சரி சமமாகவே அமர்வார்கள். நபி ஸல் அவர்கள் வெளியிடங்களுக்கு சென்றால் இடம் எங்கு கிடைக்குமோ அங்கு அமர்ந்து கொள்வார்கள். உயர்ந்த இடத்தில் அமர விரும்ப மாட்டார்கள்.

மற்றவர்களுக்கும் கிடைத்த இடத்தில் அமருங்கள். பிரத்யோகமான இடத்தை தேடாதீர்கள் என்றே போதித்துள்ளார்கள்.
நபி ஸல் அவர்களின் சபையில் நேரத்திற்கு மிகுந்த மதிப்பு இருந்தது. நேரத்தை வீணடிப்பதற்கு அறவே அனுமதியில்லை. படைப்பினங்களுக்கு பயன் தரும் விசயங்கள் அல்லாஹ்விடம் நன்மை தரும் விசயங்கள் பற்றியே பேசப்படும்.


தமக்காக நிற்பதை விரும்பாத நபி.

நபி ஸல் அவர்கள் தமக்காக எவரும் எழுந்து நிற்பதை விரும்பியதில்லை. அவ்வாறு நிற்பது நபி ஸல் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. நபியவர்களின் இவ்வழமையை சஹாபாக்கள் நன்கு விளங்கியிருந்தால், எழுந்து நின்றால் வருத்தப்படுவார்கள் என்பதற்காக நபி ஸல் அவர்கள் வரும் போது நிர்பந்தமாக அமர்ந்திருப்பார்கள். நபியின் உள்ளம் கவலையடைவதை இதன் மூலம் தவிர்த்தார்கள்.

தேவையுடைய மக்கள் தங்களின் தேவைகளை என்னிடம் கூற தயங்குகின்றார். அதை நீங்கள் எனக்கு தெரியபடுத்தி நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள் என சபையோர்க்கு நபியவர்கள் கூறி வந்தார்கள். அனைவரிடமும் முகத்தில் புன் சிரிப்பு தவழ மலர்ந்த முகத்துடன் சந்திப்பது நபியவர்களின் தனித்தன்மையாகவே இருந்தது

நபி ஸல் அவர்கள் சபைக்கு வந்தவர் வராதவர் அனைவரையும் தெரிந்து வைத்திருந்தார்கள்.

ஸஹாபாக்கள் நபியவர்களை தந்தை போன்று மதித்து வந்தனர். ஒரு தோழர் சபையில் தென்படவில்லையெனில் அவரது நலனை விசாரிக்கப்படும். அவர் நோயாளி எனத் தெரிந்தால் அவரை நலம் விசாரிக்க அவரது வீட்டிற்கு நபியவர்கள் செல்வார்கள்.

பயணம் புறப்படும் தோழர்களை துஆ செய்து வழியனுப்பி வைப்பார்கள்.
கவலையுற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவார்கள்.


நபி ஸல் அவர்கள் தமது சபையிலிருந்து எழுந்து வீட்டிற்கு செல்லும் போது உடனே மீண்டும் சபைக்கு வருவதாக இருந்தால் செருப்பு அணியாமல் வெறும் காலுடன் வீட்டிற்கு செல்வார்கள். வீட்டில் இருந்து திரும்பி வரும் எண்ணம் இல்லையெனில் செருப்பு அணிந்து வீட்டிற்கு செல்வார்கள். இதை வைத்து சபையோர் நபியின் வருகையை அறிந்து கொள்வார்கள்.


சபையில் கூறக் கூடாதவை.

சபையில் பிறர் குறை பேச அனுமதிக்க மாட்டார்கள். நபியவர்கள் மூன்று விசயங்களுக்கு கட்டுப்பாடு விதித்தார்கள்.

1. இழிவாக பேசுதல்.

2. பிறரது குறையை வெளிப்படுத்துதல்.

3. ரகசியங்களை வெளிப்படுத்துதல். என்று ஹஸ்ரத் ஆயிஷா ரலி அவர்கள் கூறினார்கள்.

நபியின் சபையில் மக்களின் நிலைகளை எண்ணங்களை முழுமையாக ஆராயப்படும். நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் வெளிப்படுத்தப்பட்டால் அதற்கு ஊக்கமளிக்கப்படும். தீய எண்ணங்கள் தோன்றினால் அதை தடுக்கப்பட்டு அதன் கெடுதிகளை சம்பந்தப்பட்டவரின் உள்ளத்தில் பதிய வைக்கப்படும்.


ஒரு மஸ்அலா குறித்து நபியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் எவராவது கேள்வி கேட்டால் நபியவர்கள் அதை கவனிக்காததை போன்று தமது பேச்சை தொடர்வார்கள். ஆனால் தமது பேச்சு நிறைவுற்றதும் அவரிடம் அக்கேள்வியை கேட்டு அதற்கான பதிலை கூறுவார்கள்.

நபி ஸல் அவர்கள் சிலவேளை விகடமான பேச்சுக்களையும் கூறுவார்கள். ஆனால் ஒரு போதும் நபியின் வாயிலிருந்து பொய் வெளிப்பட்டதில்லை. எல்லா செயல்களிலும் நடுநிலையை கடைபிடித்த நபி தமது சபையில் மறைக்கப்பட வேண்டிய விசயங்களை அமானிதமாக கருதி மறைத்தும் வந்தார்கள்.

சிறியவர்கள் மீது அன்பும், பெரியவர்களுக்கு மரியாதையும் செலுத்திய நபி ஸல் அவர்கள் பிரயாணிக்கும் வறியவர்களுக்கும் உதவி ஒத்தாசை செய்து வந்தனர்.


சபையில் பிறரை வரவேற்றல்.

தன்னை சந்திக்க வருபவர்களை சில சமயங்கள் எழுந்து நின்று வரவேற்பார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பு நிகழ்ந்தால் முஆனகா செய்து கொள்வார்கள். ஹஸ்ரத் ஜாபர் ப்னு அபீதாலிப் ரலி அவர்கள் ஹபஸாவிலிருந்து திரும்பி வந்த போது எழுந்து நின்று வரவேற்ற நபியவர்கள் ஸலாம், முஸாபஹாவுக்கு பின் முஆனகா செய்தார்கள்.


சபை துஆ

இறுதியாக "சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாஇலாஹா இல்லா அன்த அஸ்தஃபிருக்க வஅதூபு இலைஹி" என்று கூறி சபையை நிறைவு செய்வார்கள் மேலும் அல்லாஹ்வின் திருநாமத்தை கூறியே சபையில் அமர்வார்கள் : எழுவார்கள்.
ஆதாரம். ஷமாயில் திர்மிதி, ஹாக்கிம், தப்ரானி, பிதாயா வந்நிஹாயா.


                                   அல்ஹுதைபா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக