பக்கங்கள்

புதன், 7 டிசம்பர், 2016

அகில உலகததாரின் அருட் கொடை அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்





ரபிவுல் அவ்வல் என்று சொன்னால் முதல் வசந்தம், முதல் மகிழ்ச்சி, ஆரம்ப ஆனந்தம் என்றொல்லாம் பொருள் கொள்ளப்படும்.


உலகத்தின் உயர்வுக்கும், உலகில் வாழும் மனித மேம்பாட்டிற்கும் முழுக்க முழுக்க காரணமாக அமைந்த நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் பிறந்த மாதம் என்பதால் இம்மாதத்திற்கு முதல் மகிழ்ச்சி, முதல் வசந்தம் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


ஆண்டு முழுக்க வருகின்ற எல்லா மாதங்களும் பல்வேறு வகைகளில் சிறப்புகள் பெற்றிருந்தாலும் இந்த ரபீவுல் அவ்வல் மாதம் முழுக்க முழுக்க நபி பெருமான் صلى الله عليه وسلم அவர்கள் பிறந்ததால் பெருமையும் பேரும் பெற்றிருக்கும் மாதமாக இம்மாதம் திகழ்கிறது.
உலகம் முழுக்க இம்மாதத்தில் அனைத்து பள்ளிகளிலும் மேடைகளிலும், மிம்பர்களிலும் ஆண்டு முழுவதும் உச்சரிக்கப்பட்டாலும் இம்மாதத்தில் தனித்துவத்தோடு உச்சரிக்கப்படும் பெயர் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் صلى الله عليه وسلم அவர்கள்.


அல்லாஹ் குர்ஆனில் அண்ணலாரை எப்படி அறிமுகப்படுத்துகிறான் என்று பார்க்க வேண்டும்.

பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள் பிறப்பை ஒட்டியும், பிறப்பின் போதும், பிறந்த பின்பும் நடைபெற்ற சில நிகழ்வுகளை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அல்லாஹ் நபி صلى الله عليه وسلم அவர்களைப் பற்றி கூறும் போது..
 
 لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بل مؤمنين رؤفر الرحيم

மேற்கூறிய வசனத்தில் நபியவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது உங்களில் இருந்து அவர் வந்திருக்கிறார். அவர் தெய்வமல்ல, தெய்வப்பிறவி அல்ல, வானவரல்ல, மாறாக உங்களில் ஒருவராக நீங்கள் எப்படி மனித குலமோ அதுபோல் அவரும் மனித குலத்தை சார்ந்தவர்கள். இதை ஏன் அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்றால் தெய்வமாக, தெய்வப்பிறவியாக, அல்லது வானவராக இருந்திருந்தால் மக்கள் அருகில் வந்திருக்க மாட்டார்கள். வெகு தூரம் விலகிப் போயிருப்பார்கள்.


உங்களிலிருந்து வந்தவர் என்பதன் பொருள். முன் வந்த பல தூதர்களை அவர்களின் கூட்டங்கள் தெய்வமாக்கி விட்டது. இவரை தெய்வமாக்கி விடாதீர்கள். என்பதாகும்.


இந்த ஆயத்தின் வெற்றியின் பின்புலம் தான் இன்றுவரை உலகில் கடவுளாக்கப்படாத ஒரே தலைவர் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மட்டும் தான்.

தூதுவச் செய்தி சொல்ல வந்த நபி ஈஸா அலை அவர்கள் கடவுளாக்கப்பட்டார்.

நபி உஸைர் அலை அவர்கள் கடவுளாக்கப்பட்டார். குறைந்த பட்சம் கடவுளின் குமாரர்களாக ஆக்கப்பட்டார்கள்.

எல்லா திறமைகளும், தகுதிகளும் அற்புதங்களும் நிறைந்திருந்தும் மக்களால் கடவுளாக்கப்படாமல் மனிதப்பிறவியாகவே வைத்திருக்கின்ற ஒரே தலைவர் நமது பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள் மட்டும் தான்.
நபி صلى الله عليه وسلم அவர்களின் வரலாற்றை எழுதும் ஆசிரியர்கள் தங்களின் நூற்களில் நபியவர்களைப் பற்றி எழுதும் போது لقد جاءكم رسول من انفسكم இதற்கு உங்களில் இருந்து ஒரு தூதர் என்று பொருளல்ல உங்களில் ஆக சிறந்த கோத்திரத்திலிருந்து ஒருவர் உங்களிடம் வந்ததுள்ளார். என்பதாக எழுதுவார்கள்.



நபி صلى الله عليه وسلم அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பாட்டானார் அப்துல் முத்தலீப், அப்து முனாப், ஹாஸிம், பனீ கல்ப்கள் இப்படி நீண்ட அந்த பரம்பரையில் அருமை நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் வம்சம் அனைத்தும் தூய்மையானது.


வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். பெருமானாரின் வம்சத்தில் யாரும் எப்போதும் விக்கிரஹத்துக்கு முன்பு கை கூப்பியது கிடையாது. ஷரீஅத் வராத காலத்தில் கூட விபச்சாரம் மது உள்ளிட்ட மானக்கேடான காரியத்தை பெருமானாரின் பரம்பரையில் யாரும் செய்ததில்லை. அதனால் உங்களில் இருந்து தூதர் நபிகள் வந்துள்ளார் என்று பொருளல்ல உங்களில் ஆக சிறந்த கோத்திரத்திலிருந்து பரிசுத்தமான பரம்பரையிலிருந்து வந்துள்ளார் என்று பொருளாகும்.


நபி பெருமானார் صلى الله عليه وسلم அவர்களை அறிமுகப்படுத்துகின்ற வசனத்தில் அல்லாஹ் சொல்கின்ற இரண்டாவது வார்த்தை عزيز عليه ما عنتم நீங்கள் கஷ்டப்படுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. என்று அறிமுகப்படுத்துகிறான்.

கியாமத் நாள் வரை வர இருக்கின்ற நபி صلى الله عليه وسلم அவர்களின் உம்மத்தினர் படுகின்ற சின்ன சின்ன கஷ்டங்களை கூட பெருமானார் தாங்குவதில்லை. அதனால் தான், நபியவர்கள் தன் குடும்பத்திற்கு செய்த பிரார்த்தனைகளை விட இந்த உம்மத்திற்காக அதிகமாக பிரார்த்தனைகள் செய்துள்ளார்கள்.

ஊணிலும், உறக்கத்திலும், நடையிலும் உள்ளூரிலும் வெளியூரிலும், தளர்ந்த காலத்திலும் ஸகராத்தின் நேரத்திலும் பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள் இந்த உம்மத்தை மட்டுமே நினைத்தார்கள்.

உயிரை கைப்பற்ற மலக்குல் மவ்த் வாசலுக்கு வருகின்ற போது என் உம்மத்தினர் சொர்க்கம் செல்வதைப்பற்றிய தீர்க்கமான முடிவை வாங்கி வந்த பிறகு என் உயிரை கைப்பற்றுங்கள் என்று நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் சொன்னார்கள். வரலாற்றில் முதல் முறையாக வந்த மலக்கு திரும்பி போனார்.

உம்மத்தினரின் சிரமத்தை என்றைக்கும் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் அனுமதித்தது இல்லை.

நிறைய ஹதீஸ்களில் சின்ன வார்த்தைகளாக பார்க்க முடியும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلَاةٍ

لولا أن أشق على أمتي لامرتهن أن يؤخروا العشاء إلى ثلث الليل أو نصفه

என் உம்மதினர் என்னோடு பின்னால் தொழும் போது சிறியவர்கள் முதியவர்கள் கஷ்டப்படுவார்கள் என்பதால் நான் தொழுகையை சுருக்குகிறேன். நீண்ட சூராக்கள் ஓத வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் எனது பின்னால் தொழுபவர்களின் சிறிய குழந்தையின் அழு குரல் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்றார்கள்.

ஹஜ்ஜிக்கு போனவர்கள் தனது குடும்பத்திற்கும், சம்பாத்தியத்திற்கும், இந்த உலகத்திற்கும் நிறைய துஆ செய்வார்கள். ஆனால் நபியவர்கள் ஹஜ்ஜின் போது தனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே துஆவை தான் பெற்ற மகள் பாத்திமா ரலி அவர்களுக்கோ அல்லது தனது குடும்பத்திற்கோ பேரக்குழந்தைகளுக்கோ கேட்கவில்லை இந்த உம்மத்தினரின் மன்னிப்பிற்காக அல்லாஹ்விடம் மன்றாடிவிட்டு திரும்பி விட்டார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் தனது சொந்த குடும்பத்திற்கு ஹஜ்ஜின் போது துஆ செய்யவில்லை என்றுதான் மார்க்க அறிஞர்கள் எழுதுகிறார்கள்.

அல்லாஹ் நமது அண்ணலம் பெருமானாரை அறிமுக்கப்படுத்தும் போது அவர் உங்களில் ஒருவர் என்றால் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்பதாகும். சுமார் 175 கோடி குடும்பங்களிலும் குடும்பத்தலைவர் எம்பெருமானார் முஹம்மது صلى الله عليه وسلم அவர்கள் தான். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் வேண்டும் என்றால் நமது பெயர் இருக்கலாம். ஆனால் நபியவர்கள் நமது குடும்பத்தில் உடலில் உதிரத்தில் ஏன் நமது உயிரில் ஒருவர் இருக்கின்றார்கள்.


திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

النبي اولى بالمؤمنين من انفسهم முஃமின்களுக்கு அவர் உயிரினும் மேலானவர்.

முஸ்லிம்களிடம் உங்களின் உயிர் பெரிதா அல்லது முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பெரிதா என்றால் குர்ஆன் சொல்கிறது முஸ்லிம்களிடத்தில் நபியவர்கள் அவர்களின் உயிரைக் காட்டிலும் மேலானவர்களாக இருக்க வேண்டும்.

நபி பெருமானார் صلى الله عليه وسلم அவர்களை அறிமுகப்படுத்துகின்ற வசனத்தில் அல்லாஹ் சொல்கின்ற மூன்றாவது வார்த்தை حريص عليكم بل مؤمنين முஸ்லிமான முஃமினான மக்களின் விசயத்தில் அவர் அதிக பேராசையுடையவர் என்று அறிமுகப்படுத்துகிறான்.


எனது பிள்ளை டாக்டராக, கலெக்டராக, ஜனாதிபதியாக ஆகவேண்டும் என்று எத்தனை தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை நினைப்பார்களோ அதைவிட இந்த உம்மத்தின் உயர்வின் மீது அக்கறை கொண்டவர்களாக பேராசை கொண்டவர்களாக இருந்தார்கள்.


பேராசை என்றால் என் உம்மத்தினர் அனைவரும் சுவனம் செல்ல வேண்டும். என் உம்மத்தினர் சென்ற பிறகு தான் அனைவருக்கும் சுவனம் கிடைக்க வேண்டும். என் உம்மத்தினரின் தாகம் தனிப்பதற்கு கவ்ஸர் தடாகம் வேண்டும். ஆக இப்படி உம்மத்து உம்மத்து என்று அல்லாஹ்விடம் தனி சிறப்புகளை மன்றாடிப் பெற்றதால் தான் அவரை அல்லாஹ் அறிமுகப்படுத்துகின்ற போது அவர் உங்களின் மேல் மிகுந்த பேராசை கொண்டவர் என்கிறான்.



நபி பெருமானார் صلى الله عليه وسلم அவர்களை அறிமுகப்படுத்துகின்ற வசனத்தில் அல்லாஹ் சொல்கின்ற நான்காவது வார்த்தை رؤفر الرحيم அவர் உங்கள் மீது ஆக கிருபையாளர், கருணையாளர் என்று அறிமுகப்படுத்துகிறான்.

உங்களுக்கு தெரியும் ரஹ்மான் என்பதும் ரஹீம் என்பது அல்லாஹ்வின் திருநாமம். இங்கு தனது திருநாமத்தை அல்லாஹ் நபிகளாருக்கு சொல்கிறான். ரஹீம் என்றால் உச்சகட்ட கிருபையாளர் என்று பொருள். நபி صلى الله عليه وسلم அவர்கள் கொண்ட கருணைக்கும் கிருபைக்கும் அளவிட வார்த்தைகள் கிடையாது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் மண்ணிலே தோன்றி இம்மண்ணிலே 63 ஆண்டுகாலங்கள் இந்த நிலத்தை சீர்திருத்தம் செய்து விட்டு அவர்கள் அல்லாஹ்விடம் செல்லவேண்டும் என்பது அல்லாஹ்வின் நியதி.


நபி صلى الله عليه وسلم அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறக்கின்றார்கள். அவர்களின் பிறப்பை ஒட்டி பல நிகழ்வுகள் அதிசயங்கள் நடைபெற்றது.
ஒரு நபி பிறந்த பின் அற்புதங்கள் காட்டினால் அதன் பெயர் முஃஜிஸா. ஒரு நபி பிறப்பதற்கு முன்பே அற்புதங்கள் நிகழ்ந்தால் அதற்கு احراس என்று பெயர்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறப்பதற்கு முன்பே நிறைய இஹ்ராசாத்துகள் நிகழ்ந்துள்ளன.

வரலாற்று ஆசிரியர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், ஹதீஸ்கலை வல்லுனர்கள் தரம் பிரித்து நிறைய பட்டியலிட்டுகின்றார்கள்.

கஃபாவை இடிக்க யானைப்படையோடு வந்த அப்ரஹா மன்னன் தடுக்கப்பட்டது முதல் அடையாளம்.
யானைப்படையோடு கஃபாவை இடிக்க வந்த அப்ரஹா மன்னன் தனது கூட்டத்தாரோடு வந்தான். அவர்கள் அனைவரும் அஹ்ல கிதாபுகள் குர்ஆனுடைய பாணியில் சொல்வதென்றால் வேதக்காரர்கள். இவர்கள் எந்த ஊரின் மீது படையெடுக்க சென்றார்கள் என்றால் சிலைவணக்கத்தில் ஈடுபடும் மக்காவாசிகள் முஷ்ரிக்குகள் மீது படையெடுத்து சென்றார்கள்.
அவர்கள் வேதக்காரர்கள் இவர்கள் முஷ்ரிக்குகள். இருவரில் சண்டை என்று வரும் போது அல்லாஹ் யாருக்கு உதவுவான் என்றால் வேதக்காரர்களுக்குத் தான் உதவுவான். முஷ்ரிக்குகளுக்கு உதவி வராது.
இந்த வரலாற்று நியதிக்கு மாற்றமாக மக்கத்து முஷ்ரிக்குகள் காப்பாற்றப்படுகிறார்கள். வேதக்காரர்களான அப்ரஹா மன்னனும் அவனது படையினரும் அபாபீல் பறவையினால் அழிக்கப்பட்டார்கள்.

இங்கு வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

அல்லாஹ்வின் நோக்கம் மக்காவின் முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ் பரிந்து வந்த்தால் அப்ரஹா மன்னன் அழிக்கப்பட்டான் என்பதல்ல மாறாக இந்த ஆலயம் மக்கா இருக்க வேண்டும் அந்த ஊர் துவம்சம் செய்யப்படாமல் இருக்க வேண்டும் வெகு சமீபத்தில் அந்த ஊரில் பிறக்க இருக்கின்ற முஹம்மதுர் ரசூலுல்லாஹ்வினுடைய  வாழும் ஸ்தலமாக இந்த மக்கா இருக்கின்றது என்பதினால் தான் நியதிக்கு மாற்றமாக மக்காவில் முஷ்ரிக்குகள் காப்பாற்றப்படுகிறார்கள். வேதக்காரர்களான அப்ரஹாவும் அவனது கூட்டத்தினரும் அழிக்கப்பட்டார்கள். இதுவே பெருமானார் வரவுக்கு முன் நடந்த அற்புதங்களில் முதல் அற்புதம்.


இரண்டாவது அற்புதம். ஸம்ஸம் நீரை அல்லாஹ் உலகத்திற்கு வெளிப்படுத்திக் கொடுத்தான்.


வரலாற்றின்படி இஸ்மாயீல் அலை அவர்களின் பாதம்பட்டு வெளியான ஸம்ஸம் நீர் சிலகாலம் இருந்து விட்டு மக்களை விட்டு மறைந்து போனது. எந்த இடத்தில் இருந்தது என்ற சுவடு கூட இல்லாமல் போனது. நீண்ட காலம் கழித்து நபி صلى الله عليه وسلم அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலீப் அவர்களின் கனவில் பர்ரா என்ற இடத்திற்கு வாருங்கள் அங்கு குழி தோண்டுகள் தண்ணீர் வரும் என்று சொல்லப்பட்டது. அவர்களும் தோண்டினார்கள் அது போலவே அங்கிருந்து ஸம்ஸம் நீர் பீறிட்டு எழுந்தது. நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தில் அது பிராதகம் எடுத்தது. அது இன்று வரை மட்டுமல்ல இறுதி நாள் வரை வற்றாது.

வற்றாத ஜீவ நதிகளில் வற்றாத ஊற்றுகளில் வற்றாத இறைவனின் பொங்கும் கருணைகளில் ஸம்ஸம் முதலிடமானது.

வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

அப்துல் முத்தலீபின் கைகளிலிருந்து ஸம்ஸம் இவ்வுலகிற்கு அற்பணமாகி கியாமத் வரை ஊறிக் கொண்டிருப்பதை போல் இந்த அப்துல் முத்தலீபின் குடும்பத்தில் ஒருவர் பிறப்பார் அவர் கியாமத் நாள் வரை ஊறிக் கொண்டிருப்பார். இன்று ஒவ்வொரு ஊரிலும் தெருவிலும் முஹம்மது என்ற பெயர் இருப்பதைப் போல கியாமத் வரை இருந்து கொண்டே இருக்கும்.

ஸம்ஸம் என்ற நீர் சுணை வற்றாமல் ஊறிக் கொண்டிருப்பதை போல முஹம்மது என்ற வற்றாத சுணை கியாமத் நாள்வரை நீடிக்கும். இந்த உம்மத்திலுள்ள கடைசி மனிதன் சொர்க்கம் செல்லும் வரை முஹம்மது என்ற அந்த வற்றாத நதி ஜீவ ஊற்றாய் ஊறிக் கொண்டே இருக்கும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறக்கின்ற ஒருநாளைக்கு முன்பாக நடைபெற்ற அற்புதங்கள் பல அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளில் வருகிறது.

பாரஸீக கோட்டைகளின் பல மாடங்கள் சரிந்து விழுந்தன.

ரோமானிய கோட்டை கொத்தளங்களில் திடிரென நெருப்பு பிடித்தன.

வழக்கமாக வானிற்கு சென்று ஒட்டுக் கேட்டு செய்தி சேகரித்து வரும் ஜின்கள் அன்று இரவு மட்டும் கல்வீசி அடித்து துரத்தப்படுகிறார்கள்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறந்த போது ஒரு தேசம் ஒளிர்ந்தது.


ஒரு ஒளி வீசியது என்றால் அந்த ஒளியினால் ஒரு தெரு அல்லது ஊர், அல்லது ஒரு கிராமம் ஒளிரும். ஆனால் நபி صلى الله عليه وسلم பிறந்த அந்த நிமிடம் வீசிய ஒளி ஒரு நாடே ஒளியினால் இலங்கியது.


நாயகம் صلى الله عليه وسلم பிறந்த மாதம் என்பதால் அவர்களின் குடும்பத்தை அவர்களை பிறப்பை அதிகாரப்பூர்வமான வரலாறுகளின் வழியாக நாம் நமது சிந்தனைக்கு கொண்டு வர வேண்டும்.

நபி صلى الله عليه وسلم அவர்களின் தந்தை அப்துல்லாஹ்.ரலி அவர்கள் அன்று அரபுலகத்தில் இருந்த ஆண் அழகர்களில் பேரழகர் என்று சொல்லலாம். வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அப்துல்லாஹ் ரலி அவர்கள் இவ்வுலகிற்கு வந்த நோக்கமே ஆமினா ரலி அவர்களின் வயிற்றில் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களை வைக்கத்தான். வைத்தவுடன் வேலை முடிந்தது அல்லாஹ் அவர்களை உடனே அழைத்துக் கொண்டான். என்கிறார்கள்.


25 வயதில் காரணமே இல்லாமல் அவர்களுக்கு மரணம் வருகிறது.
அவர்களின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து 9 பேர்களில் இவர் மட்டும் குணத்தால் அழகால் எல்லா விதமான சிறப்பம்சங்களாலும் தனித்துவம் பெற்றிருந்தார்கள்.

ஆமினா அம்மையாரை திருமணம் செய்து அவர்கள் கருத்த போது அவரது தந்தை மதினாவிற்கு சென்று நல்ல பேரித்தம் பழங்களை வாங்கி வா என்று அனுப்பினார்கள். பழம் வாங்கி விட்டு திரும்பும் வழியிலே இறந்து மதினாவிலேயே அடக்கப்பட்டார்கள்.


வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

தந்தை இறந்த பின் அடக்கம் செய்யப்பட்ட அந்த ஊர் தான் பிற்காலத்தில் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்களின் ஹிஜ்ரத் செய்து வரும் 

நபியவர்களின் இருப்பிடம் என்பதற்கான சிக்னல் இதில் இருக்கின்றது.
நபி صلى الله عليه وسلم அவர்களின் தாயார் ஆமினா ரலி அவர்களின் தலைமுறை நபி صلى الله عليه وسلم அவர்களின் தலைமுறையில் மூன்று தலைமுறைக்கு முன்னால் பிரிந்து அதில் வந்தவர்கள் தான் அன்னை ஆமினா ரலி அவர்கள்.  ஆக இருவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் தான்.


நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்னை ஆமினா அம்மையார் அவர்களின் வயிற்றில் இருந்த போதும் அதன் பின்பும் நடந்த அற்புதங்கள் ஏராளம் ஏராளம்.


நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்னை ஆமினா அம்மையார் அவர்களின் வயிற்றில் இருந்த போது பிரசவ வலியோ பிரசவத்தின் போது அசுத்தங்களோ எதுவுமே இல்லாமல் பரிசுத்த குழந்தையாய் பெருமானார் صلى الله عليه وسلم அவர்கள் ரபீவுல் அவ்வல் பிறை 12 திங்கட்கிழமை அதிகாலை கத்னா செய்தவர்களாக, ஸஜ்தா செய்தவர்களாக, ஆட்காட்டி விரலால் இறைவன் ஒருவன் என்று சமிக்கை செய்தவர்களாக, சுர்மா இடப்பட்டவர்களாக, எல்லா நிலையிலும் தாயார் செய்து வைக்கப்பட்ட குழந்தையைப் போல சாதாரண குழந்தையை போல பிரசவத்தின் தீட்டும் ரத்தமும் எதுவும் இல்லாமல் பரிசுத்த குழந்தையாய் பிறந்தார்கள்.


ஜெர்மனியில் ஒரு கவிஞர் கற்பனையாக சொன்னார்.

பிறந்த குழந்தையின் மீது தண்ணீர் ஊற்றிய போது தான் தண்ணீர் முதன் முதலாக சுத்தமானது. என்று சொன்னார்.


தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லாத நிலையில் நபியவர்கள் இவ்வுலகில் பிறந்தார்கள்.
அன்னை ஆமினா அம்மையார் அவர்களுக்கு அருகிலிருந்து சுவைபா ரலி அவர்கள் பிரசவம் பார்த்தார்கள். ஆமினா ரலி அவர்களும் சுவைபா ரலி அவர்களும் நபியவர்களுக்கு பாலூட்டினார்கள்.

அருகிலிருந்து பிரசவம் பார்த்த நபி صلى الله عليه وسلم அவர்களின் சிறிய தந்தையின்  அடிமைப் பெண், நபியவர் அவர்கள் பிறந்த செய்தியை ஒடோடிப் போய் "இறந்து போன உங்களின் சகோதரர் அப்துல்லாஹ்விற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது " என்றார். இந்த மகிழ்ச்சியான செய்தியை சொன்னதற்காக உடனடியாக அபூலஹப் சொன்னான் சுவைபா உன்னை உரிமைவிடுகிறேன். என்றான்.


நபியவர்கள் நபி என்று சொன்ன பிறகு அதை மறுத்த பின்பு தான் சபிக்கப்பட்ட அபூலஹபாக மாறினான். இப்போது அவர் தன் சகோதரருக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் குடும்பத்தில் ஒருவராக இருந்தார்.

இன்று வரை நபியவர்களின் பிறந்த அந்த நொடி மகிழ்ச்சியுற்று சுவைபாவை விடுதலை செய்ததற்காக அவர் சபிக்கப்பட்டிருந்தாலும் 
அல்லாஹ் அவருக்கு அருள் புரிகின்றான்.


تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ‏ 
111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.

مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ‏ 
111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

முபஸ்ஸிரீன்கள் இந்த ஆயத்திற்கு விளக்கம் சொல்கின்ற போது
முதல் "தப்ப" என்பது பத்வா சாபம். இரண்டாவது "தப்ப" என்பது இனிமேல் வரப்போகும் அழிவு. என்கிறார்கள். இவ்வளவு சாபத்தை பெற்ற அபுலஹபை மரணத்திற்கு பின்பு அவரது மற்றொரு சகோதரர் கனவில் கண்டு அபூலஹப் كيف فعل بك ربك உன்னுடைய ரப்பு உன்னோடு எவ்வாறு நடந்து கொண்டான் என்று கேட்டார்கள்.  
மிக மோசமாக வைத்திருக்கின்றான். ஆனால் அன்று நபியவர்களின் பிறந்த சேதி சொன்ன அடிமைப் பெண்ணை மகிழ்ச்சியில் உரிமை விட்ட காரணத்தால் ஒவ்வொரு திங்கட்கிழமை மட்டும் எனக்கு வேதனை இல்லை. எனது ஆட்காட்டி விரலில் ஒரு வித அமுதம் சுரக்கின்றது அதை சாப்பிட்டுக் கொள்கின்றேன். என்றார். இச்செய்தி எல்லா தப்ஸீர்களிலும் வரலாறுகளிலும் இச்செய்தி அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.


நிச்சயமாக அல்லாஹ் அபூலஹபிற்கே ஒவ்வொரு திங்கட்கிழமை விருந்து தருகிறான் என்றால் எம் பெருமானார் நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறப்பை கொண்டாடுபவர்களை, நேசித்தவர்களை அவர்களை ஈமான் கொண்டு  பின்பற்றியவர்களை அவர் கொண்டு வந்த அனைத்தும் சத்தியம் என்று நாவாலும் உள்ளத்தாலும் நம்பி ஏற்றுக் கொண்டவர்களை கை விடவா போகிறான்....!


நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறந்த பிறகு அவரின் தாய் இறந்தது, பாட்டனார்களின் பராமரிப்பில் வளர்ந்தது, பின்பு உலகத்தலைவராக ஆன பின்பு யாரும் சாதித்து காட்டிராத சாதனைகளை சாதித்து காட்டிய, தலைமைத்துவ பண்புகளை உள்ளடக்கிய, பண்முகங்களை தாங்கியிருக்கிற, உலகித்தின் அனைவருக்கும் முன்மாதிரியாக ஆகின்ற வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் குறை கூற முடியாத, உலகின் உயர்வான பதவிக்கு போனதன் பின்பும் கூட சாதாரண பிரஜையாக எளிமையான கோலத்தில் ஏழையான கோலத்தில் வாழ்க்கை வாழ்ந்த உத்தம தலைவர். என்பது மட்டுமல்ல

உலகம் போற்றுகின்ற அளவுக்கு அவரை கொண்டாடுவதற்கு ஒரே காரணம் என்னவென்றால் இதுவரை வந்த தலைவர்கள் சொல்லி விட்டார்கள் ஆனால் அதன்படி நடக்கவில்லை. ஆனால் நபியவர்கள் அனைத்தையும் செய்து விட்டு ஹஜ்ஜில் வைத்து நான் அனைத்தையும் செய்து விட்டேனா என எல்லோரிடமும் கேட்டு ஆமாம் நீங்கள் செய்து விட்டீர்கள் சொல்லி விட்டீர்கள் என்று கொண்டு வந்த நுபுவ்வத்தை நிறைவு செய்து  மரணித்த பூரண ஆத்மா நபி صلى الله عليه وسلم அவர்கள் மட்டும் தான்.


உலகெங்கிலும் இந்த ரபீவுல் அவ்வலில் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் புகழ்பாடுகின்ற, புகழ் பாக்களை பாடுகின்ற, அவரைப் பற்றி பேசுகின்ற சப்தம் எல்லா பள்ளிகளிலும் ஒலிக்கும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் பெருமானாரின் மீது நமக்கு முஹப்பத்தை தருவானாக. அவரை நேசிக்கின்ற அவரின் பிறப்பால் மகிழ்ச்சியுறுகின்ற அவரை பின்பற்றுகின்ற, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எனது நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் என்று நினைத்து புழகாங்கிதம் அடைகின்ற அந்த பேரின்பத்தை மறுமையிலும் நாயகத்தோடு வாழும் நல்ல தவ்பீக்கையும் அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக. ஆமீன்.


மதிபபிற்குரிய ஷதீதுத்தீன் பாகவி  ஹழரத் அவர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்...

தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக