பக்கங்கள்

சனி, 11 ஜூன், 2016

உடலும் உள்ளமும் நலம் பெற...








فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;
                                               அல்குர்ஆன். 2 - 184.

நோன்பு எனும் கடமை மனிதனுக்கு மாபெரும் மருத்துவமாக அமையப் பெற்றுள்ளது. நோன்பின் மூலம் உடலும் உள்ளமும் சார்ந்த ஆரோக்கியம் கிடைப்பதே இறை நாட்டமாகும்.

ஒப்பற்ற மருந்து.

இயற்கை மருத்துவத்தில் "உண்ணாமை" என்பது மருத்துவம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( FASTING IS MESICINE ).

முப்பது நாட்கள் நோன்பிருப்பதால் உடல் பலவீனம் அடைகிறது என்பது தவறான கருத்து என்று டாக்டர் "சூ" கூறுகிறார். உணவில்லாததால் இறந்து விட்டவர்களை விட வேண்டாத வேளைகளில் உணவுண்டு இறந்தவர்கள் அதிகம் என்றும் அவர் கூறுகிறார்.

ஒருமுறை கலீபா ஹாரூன் ரஷீத் பாதுஷா ரஹ் அவர்கள் திறமையான நான்கு மருத்துவர்களை அவைக்கு அழைத்தார். எவ்வித நோயும் உண்டாக்காத மருந்து எது.? என அவர்களிடம் வினவினார். 
ஒவ்வொருவரும் வெவ்வேறு மருந்துகளை கூறினர். மிக ஆழிய அறிவும் அனுபவமும் பெற்றிருந்த அவர்களில் ஒருவர் "நோன்பு தான்" என்றார். இதைக் கேட்ட கலீபா அகமகிழ்ந்து "உண்மை உரைத்தீர்" எனப் பாராட்டினார்.

தொடர் நோன்பு.

நோன்பின் மாண்புகளை நன்கு விளங்கிக் கொண்ட நபித்தோழர்கள் நோன்பு நோற்பதில் அதிக ஆர்வம் காட்டினர்.

அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல் அவர்கள் தொடர் நோன்பு நோற்பார்கள். மக்களும் அவ்வாறு செய்தனர். இது மக்களுக்கு சிரமத்தைக் கொடுத்தது. அப்போது அண்ணல் நபி ஸல் அவர்கள் மக்கள் தொடர் நோன்பு நோற்க தடை விதித்தார்கள். நபித் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே... நீங்கள் மட்டும் தொடர் நோன்பு நோற்கிறீர்கள்... என வினவினர். அதற்கு அவர்கள் நான் உங்களைப் போன்றவன் அல்லன். இறைவனிடமிருந்து உண்ணவும் பருகவும் எனக்கு வழங்க்கப்படுகிறது." என்று பதிலளித்தார்கள்.

                                                நூல் புகாரி - 1922.

இரைப்பையை உள்ளடக்கிய பல்வேறு உறுப்புகளை இணைத்து வடிவமைக்கப்பட்ட இயந்திரம் தான் மனித உடல். இவ்வுடல் 12 மாதங்கள் இடைவிடாது பணியாற்றுகிறது. நோன்பு நோற்பதன் மூலம் சற்று ஓய்வு கிடைக்க வழி ஏற்படுகிறது. இதனால் இழந்த பலனை மீட்டுக் கொள்ளவும் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் முடிகிறது.

தளர்த்தப்பட்ட சட்டம்.

தலைப்பில் கண்ட இறைவசனம் மற்றொரு விசயத்தையும் நமக்கு எடுத்துச் சொல்கிறது. கடமை என்பதில் ஒத்திருந்தாலும் தொழுகை போன்று நோன்பும் எந்நிலையிலும் நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற தரத்தில் வைக்கப்பட்டவில்லை. நோயாளியாக இருந்தாலோ, பயணம் மேற்கொண்டிருந்தாலோ ரமலானல்லாத வேறு மாதங்களில் தவறவிட்ட நோன்பை நிறைவேற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள் மஃரிப் முதல் இஷா வரை உண்ணுவதும், பருகுவதும், உறவு கொள்வதும் முடித்துக் கொள்ளப்பட வேண்டும். இஷா வந்து விட்டால் மறு நாளின் நோன்பு துவங்கும் என்ற சட்டமிருந்தது.

ஒருநாள் ஹஸ்ரத் உமர் ரலி அவர்கள் இஷாவுக்குப் பின் தம் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டார்கள். இது மறதியாக நடந்து விட்டது. மறுநாள் காலையில் நபி ஸல் அவர்களிடம் நடந்ததை தெரிவித்தார்கள். இவர்களைத் தொடர்ந்து வேறு நபித் தோழர்களும் இதையே தெரிவித்தார்கள்.

ஒருசமயம் கைஸ் ப்னு சிர்மா ரலி அவர்கள் நோன்பு நோற்றிருந்தார். நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தனது மனைவிடம் உன்னிடம் உணவு ஏதும் இருக்கிறதா...? எனக் கேட்டார். அவர் இல்லை என்று கூறிவிட்டு, இருந்தாலும் உங்களுக்காக நான் உணவு தேடி எடுத்து வருகிறேன் எனக் கூறிச் சென்றார்.
கைஸ் ப்னு சிர்மா ரலி அவர்கள் அன்றய தினம் கூலி வேலை செய்திருந்த காரணத்தால் உறக்கம் மேலிட்டு தூங்கி விட்டார்கள். அவருடைய மனைவி உணவு எடுத்துக் கொண்டு வந்த போது தூங்கும் தன் கணவரை எழுப்பி "உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது" என்று கூறினார்கள். ( காரணம் உறங்கி விட்டாலே அடுத்த நோன்பு ஆரம்பம் என்ற நிலை இருந்தது)

நண்பகலானதும் கைஸ் ரலி மூர்ச்சையுற்றார். இது குறித்து பெருமானார் ஸல் அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது தான் "நோன்பு கால இரவுகளில் உங்கள் மனைவியருடன் கூடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது." என்ற வசனமும் பின் வரும் வசனமும் அருளப்பெற்றது.

சிரமப்பட வேண்டாம்.

ஒருமுறை வெளியூரைச் சார்ந்தவரான நபித்தோழர் ஹஸ்ரத் பாஹில் ரலி அவர்கள் கண்மணி பெருமானார் ஸல் அவர்களைச் சந்திக்க வந்தார். நபியவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவர் தன்னை பாஹிலி என்று அறிமுகப்படுத்தினார். அப்போது நபி ஸல் அவர்கள் மிகவும் கவலையை வெளிப்படுத்தினார்கள். நண்பரே.. நீங்கள் அழகிய தோற்றமுடையவராயிற்றே...!  உம் நிறமெங்கே..? கட்டுக் கோப்பான உம் உடலெங்கே...? என நலம் விசாரித்தார்கள். அப்போது அந்த நபித்தோழர். தான் தொடர்ந்து நோன்பிருந்து வருவதாக கூறினார். அதைக் கேட்ட நபி ஸல் அவர்கள் அவ்வாறு நோன்பு நோற்க வேண்டாம் என்றும், மாதம் மூன்று நாட்கள் மட்டும் நோன்பிருக்கும்படி அறிவுரை கூறினார்கள்.
                                   நூல் அபூதாவூத். - 2428.

மேற்கண்ட நபிமொழிகள், நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஏற்பட்ட சிரமங்களும் இடையூறுகளும் அகற்றப்பட்டன என்பதற்கு சான்றுகளாகும். எனவே அல்லாஹ் நோன்பை விதியாக்கி அடியார்களுக்கு கஷ்டத்தைத் தர நாடவில்லை என்பது தெளிவாகிறது.

ஆய்வின் முடிவு.

உலகறிந்த உயிரியல் விஞ்ஞானி பேராசிரியர் ஹக்ஸ்ஸி சில மண் புழுக்களை வைத்து ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவற்றுக்கு விருப்பமான வழக்கமான உணவை கொடுத்து வந்தார். ஒரே ஒரு மண் புழுவை மட்டும் தனியாக எடுத்து ஒருவேளை உணவும் மறுவேளை பட்டினியுமாக வளர்த்து வந்தார்.

தொடர்ந்து உணவு சாப்பிட்டு வந்த மண் புழுக்கள் அழிந்து விட்டன. ஆனால் ஒருமுறை மட்டும் உணவு கொடுக்கப்பட்டு வளர்ந்த மண்புழு 19 வது தலைமுறை வந்த பின்பும் உயிர் வாழ்ந்ததாக கூறினார்.
இந்த ஆய்வு நோன்பிருப்பதால் மனித வாழ்நாள் அதிகமாகும் என்பதை நிரூபிக்கிறது.

பேராசிரியர் "சைல்டு" இளமையோடு இருப்பதற்கு நோன்பு உதவி செய்வதாக கூறுகிறார்.

உடல்காக்கும் உண்ணாமை.

எனினும் நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு நிபந்தனையுடன் அல்லாஹ் சலுகை வழங்குகிறான்.

أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ
 يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).

ஹிஜ்ரத் நடைபெற்று 18 மாதங்களுக்கு பின்னரே நோன்பு கடமையானது. அதே மாதத்தில் பத்ரு போர் நடைபெற்றது. போரில் கலந்து கொண்ட நபித் தோழர்கள் அனைவரும் நோன்பு நோற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நோன்பால் உண்டாகும் சில பலன்கள்.

  • v  அதிக இரத்த அழுத்தம் குறைகிறது.
  • v  இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவு குறைகிறது.
  • v  இதய அடைப்பு உருவாகுவதை தடுக்கிறது.
  • v  இரத்தத்தில் சக்கரை அளவு குறைகிறது.
  • v  மூட்டுவலி மற்றும் ஆஸ்துமாவைக் குறைக்கிறது.
  • v  உடல் பருமன், தலைவலி, மலச்சிக்கல், தோல் வியாதி போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது.
v  ஆக உடலும் உள்ளமும் செம்மை பெற்று அல்லாஹ்வின் அன்பைப் பெற நோன்பு ஒரு சிறந்த வழியாகும்.

   மௌலவி மு. முஹம்மது ஹைதர் அலி இம்தாதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக