பக்கங்கள்

வெள்ளி, 7 ஜூன், 2013

கொலை வழக்கு

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி “உமர் ரலி”யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது.
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.



குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...



அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்...



"யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்...



உடனே, அபு தர்(ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார்.



அப்போது உமர், "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் சொல்கிறார்...



அபுதரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்...



தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நாள் அசர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்...



இரண்டு நாட்கள் ஓடியது.



மூன்றாவது நாள் வந்தது. அசர் (மாலை) தொழுகை நடைபெற்றது.



எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்...



நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு...



தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது...



தண்டனைக்குரிய நபர் வந்துவிட்டார்.....



உமர் அவரிடம் "நீர் ஏன் திரும்ப வந்தீர்..?? என கேட்கிறார்.



அதற்கு அவர் " முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார், என்று நாளை வரலாறு என்னை பழிக்கும். மேலும், இங்கே தப்பிவிடலாம். நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்" என்றார்...



அடுத்து அபு தரிடம் "நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்..??" என்று கேட்டார் உமர்..



உடனே அபூதர் "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ, என அஞ்சினேன். அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்...



பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்...



குற்றம் சாட்டியவர், "நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்" என்றார். ஏனென்று கேட்டதற்கு "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை" என்றார்...



"இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்" என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி - நம்பிக்கையாளர்களின் தலைவர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக