பக்கங்கள்

புதன், 7 டிசம்பர், 2011

நலிவை ஏற்படுத்தும் நகைக்கடன்!



தமிழகத்தில் அண்மைக்காலமாக புற்றீசல்கள் போல தனியார் நிதி நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. இதில் முன்னணியில் இருப்பவை நகைக்கடன் வழங்கும் நிறுவனங்கள்தான். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தைக் குறி வைத்து இந்நிறுவனங்கள் களம் இறங்குகின்றன. காரணம், தமிழக மக்கள் கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதாலோ என்னவோ?.
குறிப்பாக, நகைக்கடன் என்ற பெயரில் ஏழைகளையும், வறுமையில் வாடுபவர்களையும் இந்நிறுவனங்கள் பிழிந்து எடுத்து விடுகின்றன. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத கேரளத்தைச் சேர்ந்தவர்கள்தான் நகைக்கடனில் முதலிடத்தில் உள்ளனர்.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பெருமை மிக்கவை என்ற பீடிகையுடன் இந்த வியாபாரத்தில் தந்திரமாக சில நிதி நிறுவனங்கள் கொடி நாட்டியுள்ளன. பெரும்பாலும் இந்த வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் ஒன்றும் சிரமமே கிடையாது. காரணம், அத்தனை விரைவாக கைமேல் காசு. போதாக்குறைக்கு தமிழக நடிகர்களின் விளம்பர படங்களும் இந்த வங்கிகளுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளன.
தமிழர்களுக்கு தண்ணீர் தரமுடியாது என்ற எதிரான போக்கை தொடர்ந்து கடைப்பிடிக்கிறது கேரளம். ஆனால், அம் மாநிலத்தவரின் மொத்த வர்த்தகம் தமிழகத்தை நம்பியே உள்ளது. ஏன், நம் மாநிலத்தில் இச்சேவைக்கு ஆளே கிடையாதா? அல்லது மக்கள் மீது நம்பிக்கை இல்லையா என்ற கேள்விதான் எழுகிறது. கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்ற பெயரில் ஏற்கெனவே இங்கு தனியாக வட்டி வழங்கும் வியாபாரம் நடந்து வருவது
தனிக்கதை.
இந்நிலையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி குறைந்தபட்சம் ஒரு சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை தங்க நகைகளின் பெயரில் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் பின்னணி, பாதுகாப்பு போன்றவற்றை யாரும் கவனத்தில் கொள்வாரில்லை.
இதற்கு உதாரணம், அண்மையில் கரூரில் நடைபெற்ற பெரும் கொள்ளை. போலீஸôரின் கடும் நடவடிக்கைக்குப் பிறகு கொள்ளையர்கள் பிடிபட்டனர். கடைசியில் நகைகளை இழந்தவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. உண்மையில் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் இதுபோன்ற நிதி நிறுவனங்கள் ஒரு சிறிய அறையில் நடத்தப்படுகின்றன.
மேலும் ஏராளமான நகைகள் இங்கு பெறப்பட்டு பணம் வழங்கப்படுகிறது. சுலபமான நடைமுறை இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு காரணம், நம்மூர் வங்கிகளின் சோம்பேறித்தனமும், பொறுப்பற்ற தன்மையும்தான். ஒரு விவசாயி அல்லது நடுத்தர நபர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் நகைகளை அடகு வைக்கச் சென்றால் அங்கு கேட்கப்படும் ஆவணங்கள், சான்றுகள் இதர விவரங்களைக் கேட்டதும் மயக்கம்போட்டு விழாத குறையாகப் பலர் ஓடிவந்து விடுகின்றனர்.
மதிப்புமிக்க நகையை வைத்துப் பணம் பெற இத்தனை விதிமுறைகள் தேவையா என்பதே பலரின் கேள்வி. வெறுமனே சான்றிதழ்களை வைத்து பணம் கேட்டால்தான் வங்கிகள் யோசிக்க வேண்டும். ஆனால் வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். மற்றொருவர் அறிமுகம், தரம்பரிசோதனை செய்பவருக்கு கட்டணம் அப்படி, இப்படி என்று கிட்டத்தட்ட அரைநாள் முழுவதும் நகையையும் கொடுத்துவிட்டு பணத்துக்குக் காத்துக்கிடக்க வேண்டும். அத்துடன் வட்டி விகிதம் குறைவு என்றாலும், கிடைக்கும் தொகையும் குறைவு என்பதால், பலரும் தனியார் நிதி நிறுவனங்களை நாட வேண்டிய நிலை உள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கியாகட்டும், கூட்டுறவு வங்கிகளாகட்டும் விதிமுறைகளில் தளர்வு, விரைவு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நகைக்கு, பாதுகாப்பு என்பதால்தான் மக்கள் வங்கிகளை நாடி வருகிறார்கள். எனவே, அதை முறையாகச் செயல்படுத்த வங்கி நிர்வாகங்கள் முன்வருவதுடன், மக்களைக் காத தொலைவுக்கு ஓட வைக்கக் கூடாது.
எனவே, தனியார் நிதி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள், குறைந்த வட்டி போன்ற நிபந்தனைகளை விதித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு வங்கிகளில் மக்கள் சுலபமாக நகைக்கடன் பெற வழி செய்ய வேண்டும்.
இல்லையேல் நகைக்கடனால் நாளுக்குநாள் மக்கள் நலிவடைய நேரிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக