பக்கங்கள்

செவ்வாய், 6 டிசம்பர், 2011

நபிகளின் உள மருத்துவம்



இன்றைய உலகில் உளமருத்துவம் மிகப்பெரும் இடத்தைப் பிடித்துள்ளது. உடல் உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோயாளிகள் உளநோயாளிகள் என்று நோயாளர்கள் இரு பெரும் வகைப்பாட்டுக்குள் இன்று அடக்கப்படுகின்றனர்.
இது மன அழுத்த்த்தின் யுகம் என்றும் ஆய்வாளர்களால் அழைக்கப்படுகின்றது. அந்தளவுக்கு இன்று உலக அளவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக்க் காணப்படுகின்றனர். எனவேதான் உள மருத்துவத் துரையில் விசேட நிபுனத்துவம் பெறுவதற்கான போட்டியும் அதிகரித்துள்ளன.
மனநல காப்பகங்களும் மனநல சிகிச்சை நிலையங்களும் பல்கிப் பெருகிவிட்டன. இணைய வலை அமைப்பிலும் உள மருத்துவ சிகிச்சை முறைகள் உச்சபட்ட வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. இந்த உள மருத்துவத் துறையானது பாரம்பரிய மருத்துவத் துறையோடு இணைந்தும் தனியாகவும் வளர்ந்து வருகின்றது.
பாரம்பரிய மருந்து பாவணைகளோடு இணைந்து மின்சிகிச்சை, உளப் பகுப்பாய்வு, மெஸ்மரிசம், கிப்னோடிசம் என்று ஒரு காலத்தில் வளர்ந்து வந்த இத்துறை இன்று நோயாளியின் இயல்பிலும் நடத்தையிலும் செல்வாக்குச் செலுத்தும் மனநலக் குறைபாட்டுடன் தொடர்பு படும் சமூகப் பொருளாதார பண்பாட்டுக் காரணிகளை துல்லியமாக ஆராய்ந்து இணங்கண்டு தீர்க்க்க் கூடிய நிலைக்கு வளர்ந்து வருகின்றது.
சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்த இத்துறை உள்நாட்டுப் போர், இனங்களுக்கிடையிலான மோதுகை, இயற்கை அனர்த்தங்கள், புலப்பெயர்வுகள் போன்ற சமூக அரசியல் காரணங்களால் ஆசிய நாடுகளிலும் இவ்வுள மருத்துவம் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
கிராமிய வாழ்விலிருந்து விடுபட்டு நகர்ப்புற நாகரிக வாழ்வுக்கு தள்ளப்படும் போதும் இந்த உள மருத்துவத்தின் தேவை அதிகரிக்கின்றது. விவசாய யுகத்திலிருந்து கைத்தொழில் யுகத்திற்கு நகர்ந்த போதே ஐரோப்பாவில் இப்பிரச்சினை ஏற்பட்டது. முதலாம் இரண்டாம் உலகமகா யுத்தங்களும் கைத்தொழில் புரட்சியும் மனிதனையும் இயந்திரமாக நோக்கியமையும் ஐரோப்பாவில் உள மருத்துவத்தின் தேவை அதிகரிக்க காரணமாகியது எனலாம். மத்த்திற்கும் விஞ்ஞானத்திற்கும் நடந்த மோதல் மேற்கு மனிதன் ஆன்மீக பெருமானங்களை எல்லாம் தூக்கி எரியும் நிலைக்கு தள்ளியது. இதனால் வாழ்க்கையில் விரக்தியும் சோர்வும் அந்நியமாதலும் அங்கு ஏற்படத் தொடங்கியது. அங்கு வழங்கப்பட்ட மருந்துகள் உரிய பலனைத் தரவில்லை.
மருந்துக்கு அடிமையாகி உடலையும் பணத்தையும் நிம்மதியையும் இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. மருத்துவ உலகத்தால் தீர்க்க முடியாத நோய்கள் என்று ஒரு பெரும் பட்டியல் உருவாகியது. இதை ஆராய மெடிகல் அந்தரபொலஜி என்றொரு புதுத்துறை உருவாக்கப்பட்டது. மனிதனின் நோய்க்கு உடலும் அதற்கு வெளியிலிருந்து உடலைத்தாக்கும் கிருமிகள் மட்டுமே காரணம் என்றிருந்த நிலையில் மனிதனின் சமையம் மற்றும் பண்பாட்டு மானுடவியல் அம்சங்களும் நோயில் செல்வாக்குச் செலுத்துகின்ற விடயம் மேற்கு மருத்துவர்களால் உணரப்பட்டது.
உளமருத்துவர்கள் கூறுவதைப் போல மருந்துகளால் மட்டும் நோய் குணமடைந்து விடுவதில்லை. மருந்துகளில் நீண்ட காலம் நோயாளி தங்கியிருப்பதும் சரியல்ல. அதையும் தாண்டி மனிதனின் நோய்க்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று ஆராயத் தொடங்கினார்கள். அதன் விளைவாக மனம்தான் அடிப்படை என்பதைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் கவலை, பதற்றம், பயம் போன்றவற்றை உருவாக்குகின்றது. அவ நம்பிக்கை, விரக்தி, சோர்வு போன்றவற்றையும் மனம்தான் உற்பத்தி செய்கின்றது. சிலர் வாழ்விலிருந்து விடுதலை பெற்றுவிட வேண்டும் என்று அதுகோரி நிற்கின்றது. இவ்வாறு வாழ்வை அழித்துக் கொள்ள மருந்துகளையும் நாடச் செய்கின்றது. இவைதான் உள மருத்துவத்தின் தோற்றுவாய் ஆகும்.
இஸ்லாமிய பாரம்பரியத்தில் உள மருத்துவத்தைக் குறிக்க அம்ராலுல் குலூப் உளநோய்கள் என்ற பதம் அல்லது முஹ்லிக்காதுந் நப்ஸ் உள்ளத்தை அழிப்பவை என்ற பதம் கையாளப் படுகின்றது. நபிகள் உளமருத்துவத் துறையிலும் ஆர்வம் காட்டினார் என்பதை முஸ்லிம் மருத்துவர்களும் மருத்துவத் துறை சாராத முஸ்லிம் அறிஞர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நாம் இவ்வாய்வுக்கு பெரும் உசாவலாக பயன்படுத்துகின்ற இமாம் இப்னு கையும் அல்ஜவ்சி ஒரு மருத்துவருக்கு இருக்க வேண்டிய இருபது பண்புகளையும் தகைமைகளையும் தனது நூலில் குறிப்பிடுகின்றார். அதில் பதினேழாவது பண்பு மற்றும் தகைமை பற்றிக் குறிப்பிடும் போது "ஒரு மருத்துவருக்கு உள்ளத்தின் நோய்கள் பற்றிய அறிவும் அதற்கான மருந்துகள் பற்றிய நிபுனத்துவமும் இருத்தல் வேண்டும். இது உடலுக்குச் சிகிச்சை செய்வதில் பிரதான அடிப்படையாகும். ஏனெனில் உடல் உணர்ச்சிகள், மனவெழுச்சி, உடலின் இயல்பு முதலியன உள்ளத்திலிருந்தே உருவாகின்றது என்பது தெளிவான அம்சமாகும்.
மருத்துவர் உள நோய்களைப் பற்றியும் அதன் சிகிச்சை முறை பற்றியும் அறிந்திருந்தால்தான் அவர் பரிபூரண மருத்துவராவார். அவர் இயற்கை சிகிச்சையிலும் உடல் நிலவரங்களை அறிவதிலும் எவ்வளவு கூர்மையான அறிவு படைத்தவராக இருந்தாலும் அவர் அரைவாசி மருத்துவரேயாவார். எனவே முழுமையான மருத்துவர் உள்ளத்தைத் தொலைத்துவிட்டு ஆன்ம பலத்தையும் அதன் சீர்மையையும் புறக்கணித்துவிட்டு நோய்க்கு மட்டும் சிகிச்சையளிக்க மாட்டார். தர்ம்ம், நற்பணி, அறம் என்பவற்றால் அதனைப் பலப்படுத்துவார்.
இறை ஏற்பு, மறுமை ஏற்பு ஒரு மருத்துவருக்குரிய பண்பாகும். நற்பணி புரிவதும் தியானம், பிரார்த்தனை, இரஞ்சுதல், சரணடைதல், பாவமன்னிப்புத் தேடல் ஆகியவையே நோய்க்கான சிகிச்சைகளில் மகத்தானதாகும். இச்செயற்பாடுகளுக்கு நோயை விளக்குவதில் பெரும் தாக்கம் உண்டு. மருத்துவர்கள் இவற்றின் மூலம் நிவாரணமளிப்பதே மிகவும் சிறந்தது. ஆனால் இவற்றுக்கு நோயாளியின் மனத்தை தயார்படுத்தி ஏற்கச் செய்ய வேண்டும். வாழ்வு பற்றிய நம்பிக்கையை வழங்க வேண்டும். அந்நம்பிக்கையின் பயனை உணர்த்தவும் வேண்டும் என்று கூறிச் செல்கிறார்.

நபிகளின் உள மருத்துவம் - பகுதி: 2
இஸ்லாமிய மருத்துவ்வியலாளர்கள் உடலையும் உள்ளத்தையும் இணைத்தே அதாவது உடல் உருப்புக்களில் வரும் நோய்களையும் உள நோய்களையும் இணைத்தே நோக்கியுள்ளனர். இன்றைய மருத்துவத்தில் இது பிரிக்கமுடியாத அம்சமாக மாறிவிட்டது. Psycho-Somatic Disease என்று இத்துறை அழைக்கத்தொடங்கியே பல தசாப்தங்களாகிவிட்டது. உளநிலை, உடல் உறுப்புக்களின் தொழிற்பாட்டிலும் தாக்கம் செலுத்துகின்றது என்பது உறுதிப்பட்ட பின்பே இது வளர ஆரம்பித்த்து. பதற்றம், மனக்கவலை, தூக்கமின்மை, பயம் போன்ற அம்சங்கள் இரத்த அழுத்த்த்தை அதிகரிக்கின்றது. அல்லது குடல் புண்களை கூட்டுகின்றது. அல்லது கொலோன் கோளாறுகளை அதிகரிக்கின்றது. அல்லது நெஞ்சு எரிவை ஏற்படுத்துகின்றது. குருதியில் வெள்ளத்தின் அளவையும் அதிகரிக்கின்றது.
உள நோய்களில் பலவகையான மனச்சிதைவுகள், மன ஊனங்கள் காணப்படுகின்றன. பேச்சுத்திணறல், திக்குவாய் பிரச்சினைகளுக்கும் உளப்பிரச்சினைகளே காரணமாகும். உடல் கோளாறு என்று நோயாளி முறையிடும் போது வைத்தியர் பரிசோதனை செய்து பார்த்தால் உடலுக்கும் நோய்க்கும் தொடர்பில் என்பது தெரியவரும். எக்ஸ்ரே, ஸ்கேனிங், ஆய்கூட பரிசோதனை என்று ஏகப்பட்ட பரிசோதனைகளைச் செய்து பார்த்த பின்பும் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவே தெரியவரும். ஆனால் நோயாளி தனக்கு நோய் இருப்பதாகவே வாதாடுவார். அவர் தரப்பு பொய் என்பதை ஏற்க மாட்டார். இந்த கட்டத்தில்தான் மருத்துவர் நோய்க்கான அடிப்படைக் காரணி மனம் சார்ந்த்து என்று கண்டுபிடிப்பார்.
உடலுக்கும் மனத்துக்கும் உள்ள இந்தப் பிணைப்பு அல்லது உடல் உபாதைகளுக்கும் மனக்கோளாறுகளுக்கும் இடையிலான அத்தியந்த உறவு பற்றிய கோட்பாடுதான் இஸ்லாமிய மருத்துவத்தின் அல்லது நபிகள் மருத்துவத்தின் அச்சானியாகும். நோயாளியின் உள நிலையை மேம்படுத்தினால் உடல் கோளாறால் பீடிக்கப்பட்ட நோயாளியும் குணமடைவார் என்பதை அன்றை முஸ்லிம் மருத்துவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். கூடிய சீக்கிரம் குணமடையும் நோயை அவர்கள் ஆற்றுப் படுத்தினார்கள். நோயாளியின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஊட்டினார்கள். நோயாளிக்கு வாழ்வில் பிடிப்பையும் நம்பிக்கையும் ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுத்தார்கள்.
நபிகள் கூறியதாக அபு ஸைதுல் குத்ரி பின்வருமாறு அறிவிக்கின்றார். "நீங்கள் நோயாளிடம் சென்றால் அவருக்கு நீடித்த ஆயுள் உண்டென வாழ்த்துங்கள். அது நோயாளியின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறுகிறார். நோயாளிக்கு நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளைக் கூறி அவனை மகிழ்விப்பது நோயைத் துரிதமாக்க் குணப்படுத்துவதில் அல்லது நோயின் கடுமையைக் குறைப்பதில் பெரும் தாக்கத்தை விளைவிக்கிறது என்பதை நமது முன்னோர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். அது நோயாளியின் மனத்தை பலப்படுத்தும் விசயமாகும். எந்த நோயாளியை அதிகமாக நோய்விசாரிக்க வருகின்றார்களோ அந்த நோயாளி மிக அவசரமாக்க் குணமடைந்து விடுவதாக இன்று மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நபிகள் நோயாளியுடன் மிகவும் கணிவுடன் உரையாடியுள்ளார். நோயாளி தனது நோயைப் பற்றிச் சொல்லி முடியும் வரை நபிகள் பொருமையுடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நோயாளி தனது பிரச்சினையை கூறிமுடிந்த்தும் நோயாளியின் நெற்றியில் தனது கையை வைப்பார்கள். அல்லது நோயாளியின் நெஞ்சில் கையை வைப்பார்கள். பின்னர் அவருக்காக பிரார்த்திப்பார்கள். அதன் பின்புதான் அவரது நோய்க்குப் பயன்படக்கூடிய மருந்துகளை பரிந்துரைப்பார்கள். மொத்த்த்தில் நோயாளியின் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நோய் குணமடையும் என்ற நம்பிக்கையையும் தனது உடல் மொழியால் ஏற்படுத்திவிடுவார்கள். என்றுதான் திப்புன் நபவி தொடர்பாக எழுதப்பட்ட நூல்களில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றது.
நோய், நோய்க்கான மருத்துவம் பற்றி எழுதிய முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் நோயின் உளப்பரிமாணத்தைக் குறிப்பிடத் தவறவில்லை. சிலபோது அதை முக்கிய காரணியாக்க் கூட சில நோய்களின் போது குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். உதாரணமாக வலி நோய்கள் மனித உடலில் உள்ள தொழிற்பாட்டுப் பிரச்சினை, உருப்புக்களின் கோளாறுகள் என்ற பல காரணிகளோடு தொடர்புபட்ட ஒன்றாகும். ஆனால் இன்றைய உளவில் ஆராய்ச்சிகள் வலிகளுக்கு மனமும் காரணம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்னும் சில ஆய்வாளர்கள் ஐம்பதுக்கு ஐம்பது வீதம் மனம்தான் காரணம் என்று கூறுகின்றனர். இதனை அன்றைய முஸ்லிம் மருத்துவ ஆய்வாளர்கள் தமது நூல்களில் வலிகளுக்கு மனம் ஒரு காரணம் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக இப்னு கையும், வலிகளுக்கான காரணங்கள் பற்றிக் கூறும் போது கவலை, சோகம், வஸ்வாஸ், யோசனை, அருவருப்பு ஊட்டும் எண்ணங்கள் போன்ற உளக்காரணங்களால் வலி நோய்கள் ஏற்படுகின்றன என்று கூறுகின்றார்.
உள நோய்க்கான அல்லது உள மருத்துவத்திற்கான இஸ்லாமிய கோட்பாட்டின் அடிப்படை என்ன என்ற கேள்வியை நாம் எழுப்பிச் சிந்திக்கும் போது இதுவரை நாம் கூறிய சான்றுகளும் நபி மொழி ஆதாரங்களும் உள நோய்கள் பற்றி நபிகளின் மருத்துவம் கவனத்தில் எடுத்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இன்றுவரை உள மருத்துவத்திற்கான அடிப்படை முஸ்லிம் சமூகங்களில் பேணப்பட்டு வருகின்றது.
இஸ்லாத்தின் மருத்துவக் கண்ணோட்டத்தில் மனிதன் நல்லியல்பிலேயே பிறக்கின்றான். பின்னர் அவன் சமூகத்தோடு கூடிவாழ்கின்றான். அவனது அனுபவங்கள் பெருகுகின்றன. அவனிடம் சில நிபுணத்துவங்கள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் உடல் மற்றும் உளத்திறன்களைப் பெருகின்றான். பொருளும் ஈட்டுகின்றான். மனிதர்களில் பலசாலி, பலவீன்ன், அறிவாளி, அறிவுத்தரத்தில் குறைந்தவன், சாந்தமானவன், கோபாவேசம் கொண்டவன், தனிமையை நாடுபவன், சமூக ஜீவி, ஆரோக்கியமானவன், நோயாளி என மனித வாழ்வின் நீண்ட பயணத்தில் கட்டுச்சாதம் இல்லாமல் பயனிக்க முடியாது என்பதை நிரூபித்து வருகின்றது.
மருத்துவத்தில் இரு தளங்கள் உள்ளன. ஒன்று நோய் மற்றும் சிகிழ்ச்சையைப்பற்றிய அவதானிப்புகள். இன்னொன்று அந்நோய் வரும் முறை மற்றும் குணமாகும் முறை பற்றிய கருத்துருவகங்கள். ஒவ்வொரு சிகிச்சைமுறைக்கும் அதற்கேற்ற அவதானிப்புகளும் கருத்துருவகங்களும் உள்ளன என்பதை நாம் அறிவோம். இக்கருத்துருவகங்கள் நெடுங்கால பயன்பாட்டின் மூலம் மெல்ல கோட்பாடாக ஆகின்றன. இத்தகைய கோட்பாடுகளுக்கு அவை உருவாகும் சமூகத்தின் பொதுவான உலகப்பார்வையுடன் நேரடியான உறவு உண்டு. அதாவது அந்தச்சமூகம் எந்தக்கோணத்தில் வாழ்க்கையைப்பார்க்கிறதோ அந்தக்கோணத்திலேயே நோயையும் சிகிச்சையையும் கண்டு அதற்கான விளக்கங்களை உருவாக்கிக் கொள்கிறது.
நபிகளின் உள மருத்துவம் - பகுதி: 3
ஆயுவேதம், சித்தமருத்துவம் போன்ற இந்திய மருத்துவமுறைகள் வாதம்-பித்தம்-கபம் என்ற மூன்று கூறுகள் உடலில் சமநிலையில் இருக்கவேண்டும் என்றும் அந்தச்சமநிலை குலையும்போதுதான் நோய் வருகிறது என்றும் அச்சமநிலையை மீண்டும் உருவாக்குவதே சிகிச்சை என்றும் கூறுகின்றன. இந்தத் தரிசனம் புராதன இந்திய உலகியல் தத்துவசிந்தனையான சாங்கிய தரிசனத்தில் இருந்து பெறப்பட்டது.
நாம் நம் கல்விமுறை காரணமாக ஐரோப்பிய சிந்தனை மாதிரிகளை முழுமுற்றானவை என்று எண்ண பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே அலோபதியின் வழிமுறைகள் மட்டுமே அறிவியல்பூர்வமானவை என எண்ணுகிறோம். பிற மருத்துவக் கோட்பாடுகளைப்போலவே அலோபதியும் அது உருவான பண்பாட்டின் காலகட்டத்தின் பொதுவான சிந்தனைத்தளத்தில் இருந்து முளைத்த ஒன்றுதான். அந்தக்கோணத்தில் உடலை நோக்கி அதற்குரிய விடைகளைப் பெறுவதுதான்.
இயந்திரவியல் உருவாகி வலுப்பெற்ற காலகட்டத்தின் சிருஷ்டிதான் அலோபதி. மேலைச்சிந்தனையில் எப்போதும் செல்வாக்குசெலுத்தும் இரட்டைமை [Dychotomy] அதன் அடிப்படைத் தரிசனமாக உள்ளது. உடலை அதிநுட்பமான ஓர் இயந்திரமாகக் காணும் நோக்கு அலோபதியின் அடிப்படை. ஓர் இயந்திரம் இயல்பாக செயல்பட்டுக்கொண்டே இருக்கக் கூடியது. அதன்செயல்பாட்டுக்கான தடை வெளியே இருந்து வரவேண்டும். அந்த தடையைக் களைந்தால் அது மீண்டும்செயல்பட ஆரம்பிக்கும். இவ்வாறு உடலுக்கு வெளியே இருந்து வரும் தடை என்பது கிருமிகளாகும்.
ஒருநேர் நிலைச்சக்தி ஓர் எதிர்நிலைச்சக்தி இரண்டும் மோதிக்கொள்வதன் முரணியக்கமே எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது ஐரோப்பிய சிந்தனையின் சாரமாக உறையும் உலக நோக்கு. இயற்கைXமனிதன், ஆண்Xபெண், மனம்Xஉடல் என இரட்டைமைகளை தொடர்ச்சியாக ஐரோப்பிய சிந்தனை உருவாக்கியது. அவ்வாறுதான் கிருமிXஆரோக்கியம் என்ற இரட்டைமை உருவாக்கபப்ட்டது. சிகிச்சை என்பது கிருமிகளுடனான போர் என்று கூறப்பட்டது.
இஸ்லாமும் தனக்கான ஓர் உலக நோக்கையும் வாழ்வு பற்றிய பெருமானத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. வாழ்வு ஒரு சோதனைக் களம் என்றும் அதில் எதிர் நீச்சல் போடுவதே வாழ்க்கை என்றும் போதிக்கின்றது. உடலின் வாழ்வைவிட மனத்தின் வாழ்வு நீண்டது என்றும் போதிக்கின்றது. தனிமனித கூட்டு வாழ்வு குறித்த விழுமியங்களையும் வழங்கியுள்ளது. அதில் நீதியை நிலைநாட்டல் என்ற பெருமானத்தை மிக உயர்ந்த பெருமானமாக ஆக்கியுள்ளது. இதனையே சான்றோர்கள், தீர்க்கதரிசிகள் நிலைநாட்டப் பிறந்தார்கள் என்றும் கூறுகின்றது. நீதிக்கான இந்தப் போராட்டத்தில் வரும் சோதனை, கவலை, துக்கம், விரக்தி மனிதனுக்கு உண்டு எண்பதை இஸ்லாமிய உலக நோக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால்தான் இந்த உலக நோக்கைக் கொண்ட முஸ்லிம் சவுகங்களில் விரக்தி, தற்கொலை மிக்க் குறைவாக இருக்கின்றது.
விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம் வாழ்க்கைத்தரம் என்பவற்றில் மேம்பாடு அடைந்த மேற்கத்திய சமூகங்களில் உள நோய்கள் அதிகமாக்க் காணப்படுகின்றன. இது உள்ளக வறுமையையே காட்டுகின்றது. இருபது வருடங்கள் நோய்களைப் பற்றி ஆராய்ந்த ஆங்கில அறிஞர் இறை நம்பிக்கையைத் தவிர வேறு சிறந்த மருந்தொன்று கிடையாது என்ற முடிவுக்கு வருகிறார்.
இந்த அனுவத்தை ஏற்றுக் கொண்ட அவர் தனது நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்கிறார். பின்னர் தனது அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்கிறார். அந்நூலின் பெயர் உத்து இலல் தீன் இது அறபு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது. இதில் உள மருத்துவம் என்று தனித்தலைப்பிட்டு விளக்கியுள்ளார். நபிகள் மருத்துவம் இந்த இஸ்லாமிய கோட்பாட்டை அல்லது உலக நோக்கை பிரயோகித்துப் பார்க்கின்ற மருத்துவமாகும்.
மனிதனை அவனது யதார்த்த்த் தளத்தில் வைத்து உடல், அறிவு, மனம், அவன் வாழும் சூழல், அவனது உணர்ச்சிகள், அவனில் ஏற்படும் தாக்கங்கள் என்று பல பரிமாணங்களில் நோக்கும் கண்ணோட்டமாகும். மனிதனை புறவயமாகவும், அகரீதியாகவும் தாக்கும் பல விடயங்கள் இருக்கின்றன. எனவே இஸ்லாமிய போதனைகள் அவற்றை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளன. மனித மனத்துக்கு ஆரோக்கத்தையும் பலத்தையும் கொடுக்கும் வகையில் நபிகள் வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். அநீதியை, சுரண்டலை, மோசடியை எதிர்த்துப் போராடக்கூடிய துணிச்சலையும் சக்தியையும் இஸ்லாம் மனித உள்ளத்தில் விதைக்கின்றது.
ஆனால் மனித உடலுக்கான சிகிச்சைகளின் போது வழங்கப்படும் மருந்துகள் அவற்றின அளவுகளில் கூடுதல் குறைவு ஏற்பட்டாலும் நோய் குணமடையாது. மருந்தின் அளவைவிட கூடுதலாக உற்கொண்டால் உயிராபத்துக்கள் கூட ஏற்படலாம். மருந்துகள் தற்காலிக நிவாரணத்தையே வழங்குகின்றன. மின்சாரக்குணப்படுத்தல் குறித்த நிலமைகளில் மட்டும்தான் பயனளிக்கும். இல்லாவிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். சிலபோது நிரந்தர நோயாளிகளாக மாற்றிவிடும்.
உடலுக்கான சிகிச்சை என்பது குறிப்பிட்ட எல்லைவரைதான் செல்லுபடியாகின்றது. ஆனால் உள மருத்துவம் அதற்கப்பாலும் மனிதனை ஆரோக்கியமாக மாற்ற உதவுகின்றது. வாழ்க்கைச் சுமைகளிலிருந்து மனிதனை இறக்கி, ஆசுவாசப்படுத்த அது உதவுகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவை உங்கள் உள்ளங்களுக்கு ஓய்வைக் கொடுங்கள். உள்ளத்தை மகிழ்வியுங்கள். ஏனெனில் உள்ளங்கள் சோர்வடைந்து விடுகின்றன என்று நபிகள் கூறுகின்றார். இக்கூற்று உள மருத்துவத்திற்கான மிகச்சிறந்த ஆலோசனைகளாகும். இதைத்தான் இன்றைய உளவளத்துறையினரும் செய்து வருகின்றனர்.
போர்ச்சூழல், அணர்த்தங்கள், வாழ்க்கைப் பிரச்சினைகளின் போது அல்லல்படும் மனிதர்களை ஆற்றுப்படுத்த மகிழ்வளிப்பு நிகழ்ச்சிகளே செய்யப்படுகின்றன. அது மனிதனை குழந்தைப் பருவ விளையாட்டுக்கள், உடல் அசைவுகள் மூலம் குணப்படுத்தும் வழிமுறையாகும். குறிப்பிட்ட மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பிடித்தமான பொழுது போக்குகள், கலை அம்சங்கள், என்பவற்றின் மூலம் படிப்படியாக அவரை தேற்றவும் ஆற்றுப்படுத்தவும் மிகச்சிறந்த வழிமுறைகளாக இன்று பின்பற்றப்படுகின்றன. இதை நாம் நபிகள் கால மகிழ்வளிப்பு அரங்கில் விரிவாக விளக்கியுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக