பக்கங்கள்

வியாழன், 28 ஜூலை, 2011





பயிரை ஊன்றிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி)அவர்களைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்?" என்று கேட்டார்கள். அதற்கவர்கள், "நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன்" என்றார்கள். "இதனை விட சிறந்த பயிரை உமக்கு நான் சொல்லித் தரவா?" என்று கேட்க, "சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே!என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக!இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும்" என்றார்கள்.
 (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :இப்னுமாஜா 3797)  
என் இனிய இஸ்லாமிய உள்ளமே,
உனக்கு என் மனம் நிறைந்த சாந்திப்பூக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
"அல்லாஹ்வின் நினைவில் நனைந்திருக்கும் நாவுகள் பாக்கியம் பெற்றவை" என்று எங்கோ வாசித்ததாக உன் மடலில் எழுத்துக் கோர்த்திருந்தாய்.
திக்ர் என்றால் அகில உலகையும் படைத்தாளும் இரட்சகனை ஞாபகிப்பதாகும்.
அந்த இனிய திக்ர் பற்றி எனக்குத் தெரிந்த சில விடயங்களை, எனக்கும் உனக்குமாய் இங்கு ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன்.
அல்குர்ஆனின் சில வார்த்தைகளை ஓசை நயத்துடன் ஓதுவதை மட்டும் திக்ர் என்பதாய் விளங்கி வைத்திருக்கும் ஒரு சமூக அமைப்பில், திக்ரின் உண்மை வடிவமும் நோக்கமும் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.
உதடுகளில் சிறகடிக்கும் வார்த்தைகள் உள்ளங்களைத் தட்ட முடியாமலிருக்கும் சோகம் நேர்ந்திருக்கிறது.
அல்லாஹ்வின் பார்வையில் எடை கனக்கும் திக்ர் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.
திக்ர் என்ற அறபுச் சொல்லின் அர்த்தம் நீ அறிவாயா?
திக்ர் என்பது அல்லாஹ்வின் சொல்லான அல்குர்ஆனையும் அதை அழகுடன் ஓதுவதையும் குறிக்கும்
திக்ர் என்பது முழுவதுமாய் சிரம் தாழ்த்தும் தொழுகையைக் குறிக்கும்.
உளம் உருகி இருகரம் ஏந்தி அல்லாஹ்வைப் பிரார்திப்பதும் திக்ர்தான்.
இறை புகழ் பாடுவதால் ஈரமாயிருக்கும் நாவும் திக்ரில்தான் திளைத்து இருக்கிறது.
அறிவைத் தேடுவதும் அதனைத் தெளிவாகக் கற்பிப்பதும்கூட திக்ர் என இஸ்லாம் சொல்கிறது.
படைத்தாளும் இறைவனின் ஏவல்களை ஏற்று நடப்பதும் விலக்கியவை தவிர்த்தலும் திக்ரின் இன்னொரு வடிவம்தான்.
உள்ளத்தால் அல்லாஹ்வை எண்ணிப் பார்ப்பதும் திக்ர்தான்.
திக்ரின் உள்ளடக்கத்தை இப்படிச் சொல்கிறார் ஓர் இஸ்லாமிய அறிஞர்:
கண்களின் திக்ர் அல்லாஹ்வை நினைத்து அழுவதிலிருக்கிறது.
செவிகளின் திக்ர் அல்லாஹ்வின் புகழை செவிமடுப்பதிலிருக்கிறது.
நாவின் திக்ர் அல்லாஹ்வைப் புகழ்வதிலிருக்கிறது
கைகளின் திக்ர் அல்லாஹ்வாக்காய் கொடுப்பதிலிருக்கிறது.
உடலின் திக்ர் அல்லாஹ்வுக்கு நாணயமாய் நடப்பதிலிருக்கிறது.
உள்ளத்தின் திக்ர் அல்லாஹ்வின் மீது அச்சமும் நம்பிக்கையும் வைப்பதிலிருக்கிறது.
ஆன்மாவின் திக்ர் அல்லாஹ்வை முழுவதுமாய் ஏற்று அவனுக்காய் வாழ்வதிலிருக்கிறது.
மொத்ததில் ஒரு முஸ்லிமின் வாழ்க்கையே திக்ர்தான் என்ற பேருண்மையைப் புரிந்து கொள்.
உன்னை விட ஒருவன் அல்லது ஒருத்தி அழகில், செல்வத்தில், குடும்பப்பாரம்பரியத்தில் அல்லது செல்வாக்கில் உயர்ந்திருப்பதைக் கண்டால் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துடித்து வரட்டும் மாஷா அல்லாஹ்
பொறாமையின் மஞ்சனித்த உன் விழிகள் அமைதி கொள்ளும்.
இனியில்லை என்று அழுக்கு உடையும் பசியடைத்த கண்ணுமாய் வருகிறானே அந்தக் குருட்டுப்பிச்சைக்காரன், அவனைப் பார்.
உன் உள்ளம் அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தும்.
அந்த நீலம் பூசிய வானம் பார்
கிரணக்கரம் நீட்டும் நிலவின் புன்னகை பார்.
அந்திக் குருவியின் சிறகைப்பார்
புதிய குழந்தையின் சிலிர்ப்பு பார்�….
சொல்!
அல்ஹம்துலில்லாஹ்!
சொல்!
அல்லாஹு அக்பர்!
உரக்கச்சொல்!
அந்த மலை முகடுகள்
அந்த மேகப்பஞ்சு..
காற்று துளைத்துச் செல்லும் விமானம்
எல்லாம் எதிரொலிக்கட்டும்��….
உண்மையான திக்ரின் வலிமை புரியாததால்தான் இன்று வேறு விடயங்கள் எம் திக்ராகி விட்டிருக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.
அல்லாஹ்வின் நினைவு பயிரிடப்பட வேண்டிய உள்ள நிலங்களில் இன்று களைகள் ஓங்கித் தளைத்திருக்கின்றன.
களைகள்தாம் பயிர்கள் என்றும் பயிர்தாம் களைகள் என்றும் சடவாத உலகம்
சத்தியம் செய்து என்னையும் உன்னையும் நம்பச் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறது.
அல்லாஹ்வைப் புகழ வேண்டிய நாவுகளில் ஆபாச வார்த்தைகள், விரசமான கேலிகள்
அடுத்தவன் உயர்வில், சந்தோஷப் படாது தீப்பிடித்து எரியும் இதயங்கள்.
கொடுப்பது எப்படிப் போனாலும் சுரண்டி எடுப்பதிலேயே சந்தோசப் படுகின்ற கரங்கள்.
சுஜூதில் தலை வைத்து விட்டு, உலகம் முழுவதும் சுற்றி வரும் உள்ளம்.
இப்படி இப்படியாய்.
இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு, உதட்டில் முணுமுணுப்பாய் ஒட்டியிருக்கும்அல்ஹம்துலில்லாஹ்வுக்கும் உருட்டும் தஸ்பீஹ்மணியில் தேய்ந்து போயிருக்கும் சுப்ஹானல்லாஹ்வுக்கும் என்ன பெறுமதி இருந்து விடப்போகிறது?
ஒன்று புரிந்து கொள்..
கிழிந்து போன உடைகளுடன் அரேபியப் பாலைவனங்களிலே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஆட்சிப் பீடத்தில் அமரச் செய்தது இந்த திக்ர்தான்.
ஹமாஸின் இதயத்துடிப்பு அஹ்மத் யாஸீனுக்கு நரைத்த வயதிலும் நரைக்காத உள்ளத்தைத் தந்தது இதே திக்ர்தான்.
கல்வியமைச்சைத் தூக்கி எறிந்து விட்டு தூக்குக்கயிற்றுக்கு கழுத்தை நீட்டும் துணிவை செய்யித் குதுபுக்கு எது கொடுத்தது?
திக்ர்��
திக்ர் ... ஒரு வாளை விட வலிமையானது
ஒரு பாறையின் நெஞ்சையும் ஈரப்படுத்தக் கூடியது
என் இனிய நண்பா,
அர்ஷில் நிழல் பெறும் ஏழு பேரில் அல்லாஹ்வை நினைத்து தனிமையில் விழிநீர் சிந்திய இளைஞனை எண்ணிப்பார்
நமக்கும் அந்தப் பாக்கியம் வேண்டாமா?
அல்லாஹ்வை எமது உள்ளங்களிலிருந்து அழித்து விடுவதற்காய் அத்தனை ஊடகங்களும் அணிசேர்ந்திருக்கின்றன.
தொடும் தூரத்தில் நீண்டிருக்கும் துப்பாக்கிக் குழலை அறியாது துள்ளி விளையாடும் குழந்தைகளாய்.நானும் நீயும் சடவாதத்தின் முன் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கும் துக்கத்தை வெட்கம் விட்டுச் சொல்கிறேன்.
பொறுத்தது போதும்
இறந்து கிடந்த உள்ளங்களை அல்லாஹ்வின் நினைவு கொண்டு உயிர்ப்பிப்போம்.
மெல்லிய பனிதூவும் அதிகாலைகளில் அல்லாஹ்வை நினைத்து உயிர் ஏங்கி அழட்டும்
அறிவைத் தேடுவதிலும் அதனைக் கற்பிப்பதிலும் எமது உள்ளங்கள் தாகிக்கட்டும்.
அல்லாஹ்வின் தீன் இந்தப்பூமியில் நிலை நாட்டப்பட முன் எமது இதயங்களில் விதையாகி வேர் விட்டு விருட்சமாய் வளர வேண்டும்.
இனியவனே,
வா
மீண்டுமொருமுறை ஓங்கிச் சொல்வோம்
அல்லாஹு அக்பர்
- சமீலா யூசுப் அலி - இலங்கை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக