பக்கங்கள்

சனி, 16 ஜூலை, 2011

காலம் மனிதனிடம் கேட்கும் கேள்வி!




காலம் மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டது! நீ விரும்புவது விடுதலையையா... ஜெயிலையா?’ என்று! விடுதலையைத்தான் விரும்புகிறேன்என்று மனிதன் சொன்னான்.
அவனிடமே மரணத்தைக் கண்டு அஞ்சுவாயா?’ என்றது காலம். ஆமாம்என்று பதிலளித்தான் மனிதன்.
பந்த சிறைக்குள் சிக்கிக் கிடக்கும் உங்களுக்கு முதுமையை தந்து வாழ்க்கையில் முற்றுபெறும் விடுதலையை அளிக்கிறேன். ஆனால் அதற்கு மரணம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு அழுது புரள்கிறீர்களே.! ஏன்?’ என்று கேட்டது காலம்.
மனிதன் பதிலளிக்காமல் தலை குனிந்து நின்றான்!
பறவைபோல் ஆனந்தமாக பறந்து திரியும் ஆன்மா பந்த சிறைக்குள் சிக்கி தாய் வயிற்றில் குழந்தையாகிறது. தாய் வயிற்று குழந்தைக்கு முதல் சிறை அது நிறைவாகும் போது திறந்த வெளி ஜெயிலான இந்த பூ உலகுக்குள் பிரவேசம். உண்மையில் இந்த உலக வாழ்க்கை மிக மிக குறுகலான நெருக்கடியான பந்தச் சிறை. பிறக்கும் குழந்தையானது இருவருக்கு மகன், சிலருக்கு தம்பி, அடுத்தவர்களுக்கு மருமகன்மாமாசித்தப்பா…! அவர்கள் ஒவ்வொருவரும் உறவு முறை என்றதொரு கம்பிக் கூண்டோடுதான் அவனை நெருக்குகிறார்கள். சில கூண்டு ஜெயில்கள் அவனை அடைக் கின்றன. சிலவற்றுக்குள் அவனே போய் அடைபட்டுக்கொள்கிறான். வளரும் போது உறவுக் கூண்டுகள் அவனை பலவாறு இறுக்கிக்கொள்கின்றன. பந்தச் சங்கிலிகள் பலவாறு அவனை முறுக்கிக்கொள்கின்றன.
அவைகள் மட்டுமா...?
பெண்ணின் அன்பில் விசாரணைக் கைதியாக இருந்து காதல் சிறைக்குள் சிக்குகிறான். இன்னொரு குடும்பத்தால் துப்பறிந்து விசாரிக்கப்பட்டு கல்யாண ஆயுள் சிறைக்குள் விரும்பிப் போகிறான். சில இடங்களில் பாசமிரட்டலோடு உள்ளே தள்ளப்படுகிறான். பெரும்பாலான பந்த சிறைகளுக்குள் காற்று புகுவதில்லை. வெளிச்சமும் இல்லை. இருட்டு, கும்மிருட்டு, மனப் புழுக்கம்.
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ காலம் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது. எந்த கவலையும் இன்றி ஆடிப்பாடி ஆனந்தமாய் வளர சிறு வயது பருவம் கிடைத்தது. ஆனால் இளமைப் பருவத்தில் நின்றுகொண்டு கடந்து போன சிறு வயதை நினைத்து ஏங்குகிறார்கள். முதுமை வந்த பின்பு அனுபவிக்க மறந்து போன இளமையை நினைத்து இயலாமை பெருமூச்சு விடுகிறார்கள். மரணம் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளவோ பந்தச் சிறையில் இருந்து விலகிப் போகவோ மனமின்றி தான் இன்னும் சில காலம் முதுமையுடனாவது வாழலாமேஎன்று நினைக்கின்றார்கள். மரணம் தேடினாலும் வரப்போவதில்லை. விலகினாலும் தள்ளிப்போவதில்லை!
முதலில் கேள்வி கேட்ட காலம் இப்போது கை நீட்டிக் காட்டியது சமீபத்தில் திருமணமான ஒரு வீட்டை. அங்கு கணவன்- மனைவி- மாமியார் என மூவர். பெண்களான இருவருக்குள்ளும் ஓயாத மாமியார் மருமகன் சண்டை.காலம் சொன்னது வயதில் மூத்த பெண்களுக்கு விலகிக்கொள்ளும் பக்குவம் வரவே இல்லை’ 25 வயதுவரை நான் என் மகனை வளர்த்தேன் கவனித்தேன்.
அப்பாடா இப்போது அவனுக்கு ஒரு மனைவி கிடைத்துவிட்டாள். இனி அவனை அவள் பார்த்துக்கொள்வாள். எனக்கு இனி கவலையில்லை. நல்ல ஓய்வுஎன்று அந்த சுமையை மருமகள் தோளில் ஏற்றிவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல் ஏன் அப்படி நடஇப்படிச் செய்என்று சிறை கண்காணிப்பாளர் போல் நடந்து கொள்கிறார்கள்.மகன் தன் மூலமாகப் பிறந்ததால் தான் மரணமடையும் வரை அவனுக்கு விடுதலை கொடுக்கமாட்டேன் என்றால் எப்படி?’ கேட்டது காலம். பதிலுக்கு திகைத்து நின்றான். மனிதன்.
விலகுதல் என்பது பேராண்மை. அந்தந்த பருவத்திற்கு வரும்போது அந்தந்த பொறுப்பிற்கு வரும் போது சிலவற்றில் இருந்து விலகும் மனம் வேண்டும். வயதாகும் பேது உணவில், உணர்வில், எண்ணங்களில், நடத்தையில் விலகுதல் ஏற்பட்டால் 75 சதவீத பக்குவம் வந்துவிடும். விலகிப்பாருங்கள் பிரச்சினைகள் உங்களிடமிருந்து முற்றிலுமாக விலகிப் போய்விடும். சிலருடனான உறவுகளில், சில ஆசைகளில், சில பந்தங்களில் இருந்து விலக முடியாததால் பலர் எத்தனை இழ்புகளை சந்திக்கிறார்கள்!
விலகுவது என்பது சரி. ஆனால் ஒரு சில பந்தங்களில இருந்து விலகவே முடியாதே!என்ற ஒரு கேள்வி எழுவது இயல்புதான். சிலவற்றிற்கு விதிவிலக்கு எல்லா விஷயத்திலும் உண்டு.ஒரு பெண் சொன்னாள். என் கணவர் எனக்கு செய்யக்கூடாத கொடுமையை செய்துவிட்டார். அவரிடம் இருந்து நான் விலக விரும்புகிறேன். ஆனால் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. அதன் எதிர்காலம் கருதி என்னால் எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லைஎன்கிறாள்.
25 வயதில் திருமணமாகி 28 வயதில் தாயானதால் 30 வயதோடு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட முடியுமா? ஒரு குழந்தைக்கு தாயானதால் அதோடு அந்தப் பெண்ணின் வாழ்க்கையே முடிந்துவிடுமா? தாய்மை வாழ்க்கையின் முடிவா?
ஒரே வாழ்க்கையை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ரோஜாவும் இருக்கிறது. அதில் முள்ளும் இருக்கிறது. ஒருவர் ரோஜாவில் முள் இருக்கிறதேஎன்று அந்த முள்ளையே நினைத்து வருந்தலாம். இன்னொருவரோ முள்ளில் ரோஜா இருக்கிறதேஎன்று ரோஜாவை ரசித்து மகிழவும் செய்யலாம்! முள்ளும் இருக்கிறது. மலரும் இருக்கிறது இரண்டிற்கும் இடையில்தான் வாழ்க்கை இனிக்கிறது.!
விலகல் என்பது பந்தத்திற்கு மட்டுமல்ல பருவத்திற்கும் பொருந்தும் உடலுக்கும் பொருந்தும் உடலில் இருந்து உயிர் விலகிச் செல்ல விரும்பும் போது ஏற்படும் மரணத்திற்கும் பொருந்தும்.மரணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உடல் மூலம்தான் நினைத்துப் பார்க்கிறான்.
உலகமே மனித உடலைச் சுற்றித்தான் இயங்குகிறது. பிறந்த போது 3 கிலோ. இன்று 60. 70 கிலோவாக வளர்ந்திருக்கிறோம். இத்தனை கிலோவாக இந்த உடலை வளர்க்கத்தான் எத்தனை மெனக்கெட்டிருக்கிறோம். உச்சி முதல் உள்ளங்கால் வரை எவ்வளவு கவனம் செலுத்துகிறோம். இந்த உடலுக்காகத்தான் தூங்கினோம். இந்த உடலுக்காகத்தான் விழித்தோம். விலை உயர்ந்த சோப் தேய்த்துக் குளித்து கமகமக்கும் பவுடர் பூசி, முகத்திற்கு மட்டும் ஐஸ் கியூப் ஒத்தடம் கொடுத்து ஆளையே அசத்தும் சென்ட் அடித்து பளிச்சென்று பகட்டாய் உடை அணிவித்து.! அடடே அத்தனையும் இந்த உடலுக்காகத்தானே!
உடலை பராமரிக்க பணம் வேண்டும். அதற்காக வேலை பார்த்தோம். உடலை குஷிப்படுத்த கோடை வாசஸ்தலங்களுக்கெல்லாம் பயணப்பட்டோம். ருசியாக நிறைய சாப்பிட வேண்டும் என்பதற்காக எத்தனை ஹோட்டல்களில் ஏறி இறங்கி சாப்பிட்டிருக்கிறோம். உடலுக்கு நோய் என்று எத்தனை டாக்டர்களைப் பார்த்து ஆலோசனை பெற்றோம். தலையில் ஒரு நரை. முகத்தில் ஒரு கருப்பு புள்ளி. சர்மத்தில் லேசான சுருக்கம் எத்தனை கவலை அடைந்தோம். எவ்வளவு பணத்தை இறைத்தோம்!
வயதுக்கு வந்து உடலில் பருவம் ஏறி அமர்ந்த போது எத்தனை கர்வப்பட்டோம். குழந்தையாக இருந்த போது சுவை தெரியாத முத்தம் நிறைய கிடைத்தது. சுவை தெரிந்த பின்பு திருமணமாகும் வரை அதற்காக ஏக்கத்தோடு காத்திருக்க வேண்டியிருந்தது. கல்யாணத்திற்கு ஜோடி தேடிய போதுகூட அம்மா இவன் உயரத்திற்கும், உடல் அமைப்பிற்கும் பொருத்தமான பெண் வேண்டும் என்று அளவு எல்லாம் பார்த்தானே! எவ்வளவு முக்கியத்துவம் இந்த உடலுக்கு!
எல்லா செல்வத்தையும் காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுப்பதில்லை. பலருக்கு ஓரவஞ்சனை செய்கிறது. ஆனால் எல்லா பருவ வாழ்க்கையையும் எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பிறப்பு முதல் முதுமை வரை எல்லோருக்கும் எல்லா வருவத்தையும் காலம் அள்ளிக் கொடுக்கிறது. அதை வைத்து அனுபவிக்கிறார்களா? அல்லது அல்லல்படுகிறார்களா என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.
posted by : abu safiyah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக