பக்கங்கள்

ஞாயிறு, 31 ஜூலை, 2011

காலம் மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டது!




காலம் மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டது! நீ விரும்புவது விடுதலையையா... ஜெயிலையா?’ என்று! விடுதலையைத்தான் விரும்புகிறேன்என்று மனிதன் சொன்னான்.
அவனிடமே மரணத்தைக் கண்டு அஞ்சுவாயா?’ என்றது காலம். ஆமாம்என்று பதிலளித்தான் மனிதன்.
பந்த சிறைக்குள் சிக்கிக் கிடக்கும் உங்களுக்கு முதுமையை தந்து வாழ்க்கையில் முற்றுபெறும் விடுதலையை அளிக்கிறேன். ஆனால் அதற்கு மரணம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு அழுது புரள்கிறீர்களே.! ஏன்?’ என்று கேட்டது காலம்.
மனிதன் பதிலளிக்காமல் தலை குனிந்து நின்றான்!
பறவைபோல் ஆனந்தமாக பறந்து திரியும் ஆன்மா பந்த சிறைக்குள் சிக்கி தாய் வயிற்றில் குழந்தையாகிறது. தாய் வயிற்று குழந்தைக்கு முதல் சிறை அது நிறைவாகும் போது திறந்த வெளி ஜெயிலான இந்த பூ உலகுக்குள் பிரவேசம். உண்மையில் இந்த உலக வாழ்க்கை மிக மிக குறுகலான நெருக்கடியான பந்தச் சிறை. பிறக்கும் குழந்தையானது இருவருக்கு மகன், சிலருக்கு தம்பி, அடுத்தவர்களுக்கு மருமகன்மாமாசித்தப்பா…! அவர்கள் ஒவ்வொருவரும் உறவு முறை என்றதொரு கம்பிக் கூண்டோடுதான் அவனை நெருக்குகிறார்கள். சில கூண்டு ஜெயில்கள் அவனை அடைக் கின்றன. சிலவற்றுக்குள் அவனே போய் அடைபட்டுக்கொள்கிறான். வளரும் போது உறவுக் கூண்டுகள் அவனை பலவாறு இறுக்கிக்கொள்கின்றன. பந்தச் சங்கிலிகள் பலவாறு அவனை முறுக்கிக்கொள்கின்றன.
அவைகள் மட்டுமா...?
பெண்ணின் அன்பில் விசாரணைக் கைதியாக இருந்து காதல் சிறைக்குள் சிக்குகிறான். இன்னொரு குடும்பத்தால் துப்பறிந்து விசாரிக்கப்பட்டு கல்யாண ஆயுள் சிறைக்குள் விரும்பிப் போகிறான். சில இடங்களில் பாசமிரட்டலோடு உள்ளே தள்ளப்படுகிறான். பெரும்பாலான பந்த சிறைகளுக்குள் காற்று புகுவதில்லை. வெளிச்சமும் இல்லை. இருட்டு, கும்மிருட்டு, மனப் புழுக்கம்.
மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ காலம் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது. எந்த கவலையும் இன்றி ஆடிப்பாடி ஆனந்தமாய் வளர சிறு வயது பருவம் கிடைத்தது. ஆனால் இளமைப் பருவத்தில் நின்றுகொண்டு கடந்து போன சிறு வயதை நினைத்து ஏங்குகிறார்கள். முதுமை வந்த பின்பு அனுபவிக்க மறந்து போன இளமையை நினைத்து இயலாமை பெருமூச்சு விடுகிறார்கள். மரணம் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளவோ பந்தச் சிறையில் இருந்து விலகிப் போகவோ மனமின்றி தான் இன்னும் சில காலம் முதுமையுடனாவது வாழலாமேஎன்று நினைக்கின்றார்கள். மரணம் தேடினாலும் வரப்போவதில்லை. விலகினாலும் தள்ளிப்போவதில்லை!
முதலில் கேள்வி கேட்ட காலம் இப்போது கை நீட்டிக் காட்டியது சமீபத்தில் திருமணமான ஒரு வீட்டை. அங்கு கணவன்- மனைவி- மாமியார் என மூவர். பெண்களான இருவருக்குள்ளும் ஓயாத மாமியார் மருமகன் சண்டை.காலம் சொன்னது வயதில் மூத்த பெண்களுக்கு விலகிக்கொள்ளும் பக்குவம் வரவே இல்லை’ 25 வயதுவரை நான் என் மகனை வளர்த்தேன் கவனித்தேன்.
அப்பாடா இப்போது அவனுக்கு ஒரு மனைவி கிடைத்துவிட்டாள். இனி அவனை அவள் பார்த்துக்கொள்வாள். எனக்கு இனி கவலையில்லை. நல்ல ஓய்வுஎன்று அந்த சுமையை மருமகள் தோளில் ஏற்றிவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல் ஏன் அப்படி நடஇப்படிச் செய்என்று சிறை கண்காணிப்பாளர் போல் நடந்து கொள்கிறார்கள்.மகன் தன் மூலமாகப் பிறந்ததால் தான் மரணமடையும் வரை அவனுக்கு விடுதலை கொடுக்கமாட்டேன் என்றால் எப்படி?’ கேட்டது காலம். பதிலுக்கு திகைத்து நின்றான். மனிதன்.
விலகுதல் என்பது பேராண்மை. அந்தந்த பருவத்திற்கு வரும்போது அந்தந்த பொறுப்பிற்கு வரும் போது சிலவற்றில் இருந்து விலகும் மனம் வேண்டும். வயதாகும் பேது உணவில், உணர்வில், எண்ணங்களில், நடத்தையில் விலகுதல் ஏற்பட்டால் 75 சதவீத பக்குவம் வந்துவிடும். விலகிப்பாருங்கள் பிரச்சினைகள் உங்களிடமிருந்து முற்றிலுமாக விலகிப் போய்விடும். சிலருடனான உறவுகளில், சில ஆசைகளில், சில பந்தங்களில் இருந்து விலக முடியாததால் பலர் எத்தனை இழ்புகளை சந்திக்கிறார்கள்!
விலகுவது என்பது சரி. ஆனால் ஒரு சில பந்தங்களில இருந்து விலகவே முடியாதே!என்ற ஒரு கேள்வி எழுவது இயல்புதான். சிலவற்றிற்கு விதிவிலக்கு எல்லா விஷயத்திலும் உண்டு.ஒரு பெண் சொன்னாள். என் கணவர் எனக்கு செய்யக்கூடாத கொடுமையை செய்துவிட்டார். அவரிடம் இருந்து நான் விலக விரும்புகிறேன். ஆனால் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. அதன் எதிர்காலம் கருதி என்னால் எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லைஎன்கிறாள்.
25 வயதில் திருமணமாகி 28 வயதில் தாயானதால் 30 வயதோடு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று முற்றுப்புள்ளி வைத்துவிட முடியுமா? ஒரு குழந்தைக்கு தாயானதால் அதோடு அந்தப் பெண்ணின் வாழ்க்கையே முடிந்துவிடுமா? தாய்மை வாழ்க்கையின் முடிவா?
ஒரே வாழ்க்கையை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ரோஜாவும் இருக்கிறது. அதில் முள்ளும் இருக்கிறது. ஒருவர் ரோஜாவில் முள் இருக்கிறதேஎன்று அந்த முள்ளையே நினைத்து வருந்தலாம். இன்னொருவரோ முள்ளில் ரோஜா இருக்கிறதேஎன்று ரோஜாவை ரசித்து மகிழவும் செய்யலாம்! முள்ளும் இருக்கிறது. மலரும் இருக்கிறது இரண்டிற்கும் இடையில்தான் வாழ்க்கை இனிக்கிறது.!
விலகல் என்பது பந்தத்திற்கு மட்டுமல்ல பருவத்திற்கும் பொருந்தும் உடலுக்கும் பொருந்தும் உடலில் இருந்து உயிர் விலகிச் செல்ல விரும்பும் போது ஏற்படும் மரணத்திற்கும் பொருந்தும்.மரணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உடல் மூலம்தான் நினைத்துப் பார்க்கிறான்.
உலகமே மனித உடலைச் சுற்றித்தான் இயங்குகிறது. பிறந்த போது 3 கிலோ. இன்று 60. 70 கிலோவாக வளர்ந்திருக்கிறோம். இத்தனை கிலோவாக இந்த உடலை வளர்க்கத்தான் எத்தனை மெனக்கெட்டிருக்கிறோம். உச்சி முதல் உள்ளங்கால் வரை எவ்வளவு கவனம் செலுத்துகிறோம். இந்த உடலுக்காகத்தான் தூங்கினோம். இந்த உடலுக்காகத்தான் விழித்தோம். விலை உயர்ந்த சோப் தேய்த்துக் குளித்து கமகமக்கும் பவுடர் பூசி, முகத்திற்கு மட்டும் ஐஸ் கியூப் ஒத்தடம் கொடுத்து ஆளையே அசத்தும் சென்ட் அடித்து பளிச்சென்று பகட்டாய் உடை அணிவித்து.! அடடே அத்தனையும் இந்த உடலுக்காகத்தானே!
உடலை பராமரிக்க பணம் வேண்டும். அதற்காக வேலை பார்த்தோம். உடலை குஷிப்படுத்த கோடை வாசஸ்தலங்களுக்கெல்லாம் பயணப்பட்டோம். ருசியாக நிறைய சாப்பிட வேண்டும் என்பதற்காக எத்தனை ஹோட்டல்களில் ஏறி இறங்கி சாப்பிட்டிருக்கிறோம். உடலுக்கு நோய் என்று எத்தனை டாக்டர்களைப் பார்த்து ஆலோசனை பெற்றோம். தலையில் ஒரு நரை. முகத்தில் ஒரு கருப்பு புள்ளி. சர்மத்தில் லேசான சுருக்கம் எத்தனை கவலை அடைந்தோம். எவ்வளவு பணத்தை இறைத்தோம்!
வயதுக்கு வந்து உடலில் பருவம் ஏறி அமர்ந்த போது எத்தனை கர்வப்பட்டோம். குழந்தையாக இருந்த போது சுவை தெரியாத முத்தம் நிறைய கிடைத்தது. சுவை தெரிந்த பின்பு திருமணமாகும் வரை அதற்காக ஏக்கத்தோடு காத்திருக்க வேண்டியிருந்தது. கல்யாணத்திற்கு ஜோடி தேடிய போதுகூட அம்மா இவன் உயரத்திற்கும், உடல் அமைப்பிற்கும் பொருத்தமான பெண் வேண்டும் என்று அளவு எல்லாம் பார்த்தானே! எவ்வளவு முக்கியத்துவம் இந்த உடலுக்கு!
எல்லா செல்வத்தையும் காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுப்பதில்லை. பலருக்கு ஓரவஞ்சனை செய்கிறது. ஆனால் எல்லா பருவ வாழ்க்கையையும் எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பிறப்பு முதல் முதுமை வரை எல்லோருக்கும் எல்லா வருவத்தையும் காலம் அள்ளிக் கொடுக்கிறது. அதை வைத்து அனுபவிக்கிறார்களா? அல்லது அல்லல்படுகிறார்களா என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.
posted by : abu safiyah

யதார்த்த மயக்கம்!





படுப்பதுவோ...
போர்த்துவதுவோ...
கண்ணடைப்பதுவோ
அல்ல உறக்கம்,

நடந்ததுவும்...
நடப்பதுவும்...
நடக்க இருப்பதுவும்- என
நர்த்தனமாடும் மனச்
சலனங்கள் ஓய்வதே...
உறக்கம்!

திறந்த கண்களும்...
பரந்த பார்வையும்...
உரத்த நோக்கும்
அல்ல விழிப்பு,

பிறர் வலி உணர்தலும்...
உணர்ந்து நீக்கலும்...
நீக்கி இருத்தலுமே
விழிப்பு!

காண்பதும்...
கேட்பதும்...
நுகர்தலும்...
மூச்சிழுத்து விடுவதும்
அல்ல வாழ்க்கை

நினைப்பதும்...
செய்வதும்...
செய்ததை உலகம்
நினைத்திருக்கச் செய்வதுமே
வாழ்க்கை!

உயிர் கழிதலும்...
உணர்வழிதலும்...
மெய் வீழ்தலும்...
அல்ல மரணம்,

உயிர்களுக்கு உதவாமல்...
இல்லாமலிருத்தல்போல்...
இருப்பதே...
மரணம்!

தெரியாதவை தெரிதலும்...
புரியாதவை புரிதலும்...
விளங்காதவை விளங்கலும்...
அல்ல ஞானம்,

தெரிந்ததை தெரிவித்தலும்...
புரிந்ததை புரியவைத்தலும்.
விளங்கியதை விளக்குவதுமே...
ஞானம்!

மயக்கம் தெளி,
யதார்த்தம் அறி!

-
சபீர்


விடாதே பிடி!






தலைநோன்பு பிடித்தவொரு
கலையாத நினைவு ...
பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!


மண்பானைத் தண்ணீரும்
முதல்நாள் தலைநோன்பும்
ஒன்றுக்கொன்று ஒவ்வா
ஒத்துவராத் தேட்டங்கள்!

வீம்பு பிடித்தேனும்
நோன்பு பிடித்தோம்
அன்னை தடுத்தார்
சொன்னதைக் கேளோம்!

சஹரில் விழித்து பின்
லுஹரில்தான் விழித்தோம்
இடைப்பட்ட நேரம்வரை
பசிதாகம் பொறுத்தோம்!

உச்சி  வெயில்வேளை
ஊருணியில் குளித்தோம்
குளித்த தண்ணீரைக்
குடல்முட்டக் குடித்தோம்

அச்சுவெல்லப் பாச்சோறும்
பச்சரிசிப் பிடிமாவும்
இளநீரின் வழுக்கையும்
இறால் பதித்த வாடாவும்
நோன்புக் கஞ்சி மல்லாவும்
நன்னாரி சர்பத்தும்
முன்னாலே இருக்கும்
தலைநோன்பு திறக்கவென!

படைத்தவன் பெரியவன்
எனும் பாங்கின்
அழைப்போசை கேட்குமுன்
அமுதமாய்க் காதில்விழும்
அடிக்கும் நகராவோசை!

மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!

- சபீர்


சனி, 30 ஜூலை, 2011

தராவிஹ் 20 ரக்அத்கள்



ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு 
பைஹகி 2-499, ஷரஹுன்னியாயா 1-104


உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.

யஸீத் இப்னு ரூமான் 
முஅத்தா, பைஹகி 1-496, ஷரஹுன்னியாயா 1-104



ஹஸ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் மக்கள் (சஹாபாக்கள்) 20 ரகஅத்துக்கள் தொழுபவர்களாக இருந்துள்ளனர். 

சாயிப் இப்னு யஸீத் 
ஸுனன் பைஹகி , பத்ஹுல் பாரி , 5 - 157, ஐனி (புகாரி விரிவுரை) 11 - 127 



அமீருல் முஹ்மினீன் ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழுவிக்கும் படி பணித்தார்கள். வித்ரை ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள்.

அப்துர் ரஹ்மான் சலமி 
சுனன் பைஹகி 



கலீபா உமர் (ரலியல்லாஹு அன்ஹு) , கலீபா உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு), கலீபா அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரின் காலத்தில் தராவிஹ் 20 ரகஅத்துக்களே நடைமுறையிலிருந்து இமாம் ஷாபி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) மக்காவில் தராவிஹ் இருபது ரகஅத் நடைமுறையிலிருப்பதை நான் கண்டேன் என்றும் கூறியுள்ளார்கள். 

ஜாமிஉத் திர்மிதி


வியாழன், 28 ஜூலை, 2011

தாய்மை (கவிதை)











ணினத்திற்கே கிடைக்காத பாக்கியம்
பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு!

ஒரு கவளம் சோற்றைக் கூட - அதிகமாய்
உட்கொள்ளாத வயிறு..!

ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும்
உலக அதிசயம்..!

எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..?

இறைவனின் வல்லமைக்கு இதனை விட
சான்று வேண்டுமா..?

பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்துப் போகிறது
பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..!

வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள் - ஆனால்
இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!

குழந்தையாய்...
சிறுமியாய்...
குமரியாய்...
மனைவியாய் வளரும் உறவு
தாய்மையில்தான் தன்னிறைவு பெறுகிறது..!

கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே
தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்!

நள்ளிரவில் குழந்தையின் அழுகை
எல்லோருக்கும் எரிச்சல்
தாய்மைக்குத்தான் பதட்டம்..!

வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால்
அனைவரும் சிரிப்பார்கள் - ஏன்
மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் - ஆனால்
சிரிக்காதவள் தாய் மட்டுமே...!

தாய்மையின் மகத்துவத்தை எத்தனை
தத்துவமாயும் தத்ரூபமாயும் சொல்லலாம் - எல்லாவற்றையும் விட
அல்லாஹ்வின் தூதர் அழகாய்ச் சொன்னார்கள்
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறதென்று...!

கவிதை: வி.அ.உவைஸ்


ஒரு பதிவரின் கேள்வி!











சின்னதொரு வலையினிலே
சிந்தனைகள் சேர்த்துவைத்தேன்
சில்லறையாகச் சில
தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்!

வலைப்பதிவர் வரம் வாங்கி
வக்கணையாய் வலம் வந்தேன்
வேலைநேரம் ஓய்ந்தபின்னர்
வலையினுள்ளே நான்கிடந்தேன்!

காகிதத்தின் முகத்தினிலே
கிறுக்கிவைத்த எண்ணங்களை
காலவோட்ட சுழற்சியிலே
தொலைத்துவிட்டு நின்றவன்...

கல்வெட்டின் தரத்தினிலே
தளம் கிடைக்கப் பதிந்துவைத்தேன்
வண்ணவண்ணப் பூக்களாலும்
வலைப்பூவை அலங்கரித்தேன்!

கவிதையில் கட்டுரையில்
கருத்துகளைச் சொல்லிவைத்தேன்
இலட்சியமும் இனியவையும்
இடுகைகளாய் இயம்பிநின்றேன்!

பின்னூட்ட அன்பர்களால்
புரத ஊட்டம் உண்டேன்
பத்திரிகைப் பரவசம்
ப்ளாக்குகளில் பெற்றேன்!

இணையவலம் இல்லையெனில்
இதயபலம் குறைந்துவிடும்
ஒற்றையென உலகத்திலே
ஒதுங்கியேதான் போவேன்.

இத்தனையும் இருந்தும்
எழுகிறதொரு கேள்வி
இணைய உலகே சொல்:
"நீயி நல்லவனா கெட்டவனா?"

கேள்வி கேட்ட பதிவரை
கேலியாகப் பார்த்து
இணய உலகு இயம்பியசொல்
இதயத்திலே தைத்தது!

"நாயனின் தீர்ப்பு நாளில்
நரகமுண்டு சொர்க்கமுண்டு
நானிலத்தின் காரியத்தில்
நல்லதுண்டு தீயதுண்டு,

நல்ல எண்ணம் கொண்டோர்
நன்மை கொள்வர்; தீமை கொல்வர்
வன்மை உள்ளம் கொண்டோர்
தீதைத் தானே தேர்ந்து கொள்வர்!

நன்மை-தீமை கலந்தியங்கும்
நானிலத்தில் நான்மட்டுமென்ன
விதிவிலக்கா? சொல்லு!
நான் நல்லவனா கெட்டவனா?

தெரியாத உன் வினாவுக்கென்
தெளிவான விடையுண்டு:
தெரியலையேப்பா, எனக்குத்
தெரியலையே!"

- சபீர்