பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2011

உணரப்படாத தண்டனையும் பாக்கியமும். இப்னு அப்துல் ஹமீத், மதுரை




அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான்.விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார்பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது.அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான்இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.' அறிவிப்பவர்அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல் : திர்மிதி (3085)
மனிதன் சுவையான உணவையும், கவரும் ஆடையையும் சொகுசான இருப்பிடத்தையும் மிகவும் நேசிக்கிறான். இதைச் சிறந்த இன்பங்களாகக் கருதுகிறான். ஆனால் இவையெல்லாம் நமக்கு இன்பமாக இருக்க வேண்டும் என்றால் இன்னொரு பாக்கியத்தை நாம் அவசியம் பெற்றிருக்க வேண்டும் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் அன்பும் அரவணைப்பும் தான் அந்தப் பாக்கியம்.
வசதியான வீட்டையும், சொகுசான சாதனங்களையும், சுவையான உணவையும் பெற்ற ஒருவனுக்கு உறவினர்கள் அல்லது சுற்றத்தாரின் பாசம் கிடைக்கவில்லை என்றால் இந்த உலகமே அவனுக்கு இருண்டுவிடுகிறது.
இன்பங்களைத் துன்பமாக்கும் வெறுப்பு
நமக்கு வைக்கப்பட்ட உணவு பிரியாணியாக இருந்தாலும் சாப்பிட அமரும் போது 'தண்டச்சோறுஎன்று தந்தை நம்மைப் பார்த்து ஏசினால் அல்லது 'இவனைப் பெற்றதற்கு ஒரு மாட்டை வாங்கி இருக்கலாம் பாலாவது கொடுக்கும்என்று தாய் கடிந்து கொண்டால் சுவையான பிரியாணி கூட கசந்து விடுகிறது.
தாய் தந்தை மட்டுமின்றி உடன் பிறந்த சகோதர சகோதரிகளும், கட்டிய மனைவியும், பெற்றெடுத்த பிள்ளையும், நமது நண்பர்களும் சுற்றத்தார்களும் சேர்ந்து கொண்டு ஆறுதலான வார்த்தையைக் கூறுவதற்கு யாருமே இல்லை என்ற அளவிற்கு அனைவரும் நம்மீது வெறுப்பு மழை பொழிந்தால் கண்டிப்பாக இந்த உலக வாழ்க்கை நரக வாழ்க்கையாகத் தான் அமையும்.
இந்த நேரத்தில் உலக இன்பங்கள் எந்த வகையிலும் நமக்கு நிம்மதியை தேடித் தராது. இவையெல்லாம் ஒரு இன்பமாகவே தெரியாது. பிறரது அன்பும் அரவணைப்பும் ஆறுதலான வார்த்தையும் பெரும் பாக்கியம் இதன் மூலம் அறிகிறோம்
உள்ளத்திற்குத் தண்டனை
நரகவாசிகளுக்கு நரகத்தில் கொடுக்கப்படும் பல்வேறு தண்டனைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நரகவாசிக்கு நெருப்பினாலான செருப்பு காலில் மாட்டப்படும் அந்த நெருப்புச் செருப்பின் கடுமையான வெப்பத்தால் உச்சியில் இருக்கும் மூளை கொதிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
நெருப்பானது மனிதனின் தோலைக் கருக்கும் போதெல்லாம் புதிதாகத் தோல் கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் நரகவாசிகள் தண்டிக்கப்படுவார்கள். குர்ஆனைப் புற்கணித்தவனுடைய தலை, பெரும் பாறையால் சுக்கு நூறாக்கப்படும் வட்டி வாங்கி உண்டவனுடைய வாயில் வானவர்கள் கற்களால் அடிப்பார்கள்.
விபச்சாரம் புரிந்தவர்கள் நரகத்தில் வாட்டப்படுவார்கள். பொய்களை பரப்பியவனுடைய வாய் பிடரி வரை கொக்கியால் கிழிக்கப்படும். ஒப்பாரி வைத்தவளுக்கு சொரிச்சட்டையும் தாரினால் ஆன ஆடையும் அணிவிக்கப்படும். கோள் சொல்லியவர்கள் நரகத்தில் செம்பினால் ஆன கூரிய நகங்களால் தம்மைத் தாமே கீறிக் கொள்வார்கள்.
இப்படி எத்தனையோ விதமான தண்டனைகளை நரகவாசிகள் அனுபவிப்பதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்தத் தண்டனைகள் அனைத்தும் நரகவாசியின் உடவை வருத்திக் தரப்படுகின்றன.
ஆனால் எந்த உறுப்பையும் சேதப்படுத்தாமல் உள்ளம் மட்டும் அனுபவிக்கும் ஒரு தண்டனையைப் பற்றித் தான் விரிவாக இந்த இதழில் பார்க்க இருக்கிறோம்.
நரகத்தில் நரகவாசிகள் மீது மற்றவர்கள் வெறுப்புடன் நடந்து கொள்வார்கள். இது தான் அந்த தண்டனை. இது இலேசானது என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. உறுப்புக்களைக் காட்டிலும் உள்ளம் அடையும் வேதனை தான் அலாதியானது.
இதனால் தான் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடுஎன்று கூறுவார்கள். அதாவது தீயினால் ஏற்பட்ட காயம் இலகுவாக ஆறிவிடும். ஆனால் கெட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட மனக்காயம், தழும்பு மறையாமல் இருப்பது போல் என்றும் மறையாது என்பது இதன் பொருள்.
இந்த உலகத்தில், ஒரு நாய் சிரமப்பட்டாலும் அதற்காகப் பரிவு காட்டுபவர்களை நாம் காண்கிறோம். ஆனால் மறுமையில் நரகவாசிகளுக்கு இரக்கம் காட்டுவதற்கு எந்த உயிரும் இருக்காது. அரவணைப்பு என்ற பேச்சிற்கே நரகத்தில் இடம் கிடையாது.
அல்லாஹ்வின் வெறுப்பு உண்டு
அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்வின் வெறுப்பை நரகவாசிகள் சம்பாதித்துக் கொள்வார்கள் இவர்கள் அல்லாஹ்விடம் பேசுவதைக் கூட அல்லாஹ் விரும்பமாட்டான்.
'எங்கள் இறைவா! எங்கள் துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. நாங்கள் வழிதவறிய கூட்டமான இருந்தோம்என்று (நரகவாசிகள்) கூறுவார்கள்.'எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு! நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நாங்கள் அநீதி இழைத்தவர்கள்' (என்றும் கூறுவார்கள்). 'இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் சோதீர்கள்!என்று அவன் (அல்லாஹ்) கூறுவான். அல்குர்ஆன் 23:106
நயவஞ்கர்களான ஆண்களையும், பெண்களையும், அல்லாஹ்வைப் பற்றி தீய எண்ணம் கொண்ட இணைகற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அவன் தண்டிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). தீங்கு தரும் துன்பம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டு, அவர்களைச் சபிக்கிறான். அவர்களுக்கு நரகத்தைத் தயாரித்துள்ளான். அது தீய தங்குமிடமாக உள்ளது. அல்குர்ஆன் (48:6)
'அவர்களில் அதிகமானோர் (ஏன இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதை நீர் காண்கிறீர். தமக்காக அவர்கள் செய்த வினை கெட்டது. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். வேதனையில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.அல்குர்ஆன் (5:80)
தங்களைத் தாங்களே வெறுத்துக் கொள்வார்கள்
நாம் வருந்துகின்ற அளவிற்கு ஒரு விஷயத்தைச் செய்து விட்டால் நம்மீது நமக்கே கோபம் வருகிறது. நம்மை நாமே திட்டிக் கொள்கிறோம். மிகவும் கைசேதப்படக் கூடிய அளவில் நம் தலையில் நாமே குட்டு போட்டுக் கொள்கிறோம்.
'மூஸாவே! உமது இறைவனிடம் பிரார்த்திப்பீராக!
எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை
நம்புவோம் என்று கூறினர்.' (அல்குர்ஆன் 7:134)
நரகவாசிகள் மறுமையில் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைப் பார்க்கும் போது அவர்களின் மீது அவர்களுக்கே வெறுப்பு வரும்.
ஷைத்தானின் வெறுப்பும் கிடைக்கும்
தீயவர்கள் நரகம் செல்வதற்குக் காரணமாக இருந்த ஷைத்தானும் ஆறுதலான எந்த வார்த்தையையும் கூற மாட்டான். நரகத்தில் அவனும் கடிந்து கொள்வான். அவனுடைய வெறுப்பையும் நரகவாசிகள் பெறுவார்கள்.
'அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடமும் வாக்கு மீறிவிட்டேன். உங்களை அழைத்தேன் எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர் முன்னர் என்னை (இறைவனுக்கு இணையாக்கியதை மறுக்கிறேன்என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.அல்குர்ஆன் (14:22)
மற்ற நரகவாசிகளின் வெறுப்பு கிடைக்கும்
நரகவாசிகளில் ஒருவர் இன்னொருவரை சபித்துக் கொண்டும் ஏசிக்கொண்டும் இருப்பார்கள். அங்கு யாரிடமிருந்தும் ஆறுதலான வார்த்தையை நரகவாசிகள் செவியுற மாட்டார்கள். இந்த உலகத்தில் தீமையான காரியங்களில் நண்பர்களாக இருந்தவர்கள் மறுமை நாளில் ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருப்பார்கள்.
'உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும் போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் 'எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழி கெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்என்று (அவன்) கூறுவான். அல்குர்ஆன் (7:38)
'இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில் உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார். உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார். உங்கள் தங்குமிடம் நரகமாகும் உங்களுக்கு உதவி செய்வோர் இல்லை.அல்குர்ஆன் (29:25)
வானவர்களின் வெறுப்பை பெறுவார்கள்
வானவர்கள் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள். இவர்களைத் தான் அல்லாஹ் நரகத்தின் காவலர்களாக நியமித்துள்ளான். இவர்களும் நரகவாசிகளிடம் கடிந்து விழுவார்கள். இந்த வானவர்களிடம் எதைக் கொடுத்தாலும் எவ்வாறு பேசினாலும் நரகத்தை விட்டு நரகவாசிகள் தப்பிக்க இயலாது.
'உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்என்ற நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்'உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் 'ஆம்என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். அல்குர்ஆன்(7:38)
'நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.அல்குர்ஆன் (66:6)
சொர்க்கவாசிகளின் வெறுப்பு
நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் மத்தியில் ஒரு தடுப்புச் சுவர் இருக்கும் நரகத்தில் நரகவாசிகள் படும் கஷ்டத்தைப் பார்த்து சொர்க்கவாசிகள் இரக்கப்பட மாட்டார்கள். (ஆதாரம்: புகாரி 2072)
இந்த உலக வாழ்வில் நல்லவர்கள் சரியான வழியில் நடந்த போது தீயவர்கள் கேலி செய்து சிரித்தார்கள், மறுமையில் அந்தத் தீயவர்கள் நரகத்தில் துன்புறும் போது நல்லவர்கள் அவர்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிப்பார்கள்.
'அந்நாளில் (ஏக இறைவனை) மறுப்போரைக் கண்டு நம்பிக்கை கொண்டோர் சிரிப்பார்கள்.'அல்குர்ஆன்(83:34)
நரகத்தின் வெறுப்பு உண்டு
நரகவாசிகள் மீது நரகம் கடும் கோபமாக இருக்கும். நரகவாசிகளைத் துன்புறுத்துவதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தூரத்திலிருந்து நரகவாசிகளைப் பார்த்து உடனே அவர்கள் மீதுள்ள வெறுப்பால் நரகம் சப்தமிடும் வெடித்துச் சிதற ஆரம்பிக்கும்.
கடும் பசியில் உள்ள புலி தனக்குரிய உணவைப் பார்த்த உடன் பயங்கரமான குரலை எழுப்புகிறது. கோபம் வரும் போது சிங்கம் கர்ஜிக்கிறது. இது போன்று நரகம், நரகவாசிகளைக் காணும் போது கர்ஜிக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு நரகவாசிகளின் மீது அதற்குக் கோபம் இருக்கும்.
தமது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது. (அது) கெட்ட தங்குமிடம் அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கழுதையின் கத்துதவைச் செவியுறுவார்கள்.
'கோபத்தால் அது வெடித்து விட முற்படும் ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம்{எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.'அல்குர்ஆன்(67:6-8)
'நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்' .அல்குர்ஆன்(25:12)
'நீ நிரம்பி விட்டாயா?' என்று நரகத்திடம் நாம் கேட்கும் நாளில் 'இன்னும் அதிகமாகவுள்ளதா?' என்று அது கூறும். அல்குர்ஆன் (50:30).
சிரமங்களைத் தவிடுபொடியாக்கும் அரவணைப்பு
உலக இன்பங்களைப் போதிய அளவில் அடைய முடியாமல் ஏழ்மையிலும் வறுமையிலும் வாடும் ஒரு தொழிலாளி, வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வருகிறான். அவன் சாப்பிட அமரும் போது வைக்கப்பட்ட உணவு கூழாக இருந்தாலும் புளித்த கஞ்சியாக இருந்தாலும் அவன் மிகவும் மகிழ்ச்சியோடு உண்ணுகிறான்.
ஏனென்றால், 'இப்படிப்பட்ட பிள்ளையைப் பெற்றதற்காக இறைவனுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும்'என்று தாய் அவனைப் புகழ்ந்து பேசுகிறாள். வீட்டிற்கு வந்து விட்டாலே அன்பு மழை பொழியத் தொடங்குகிறது.
வீட்டை விட்டு வெளியில் வந்தால் நண்பர்கள், அண்டை வீட்டார்கள், உறவினர்கள் மற்றும் பலரின் பாசமும் பரிவும் அவனுக்குக் கிடைக்கிறது.
இந்நிலையில் உள்ளவன் பல சிரமங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளானாலும் மற்றவர்கள் காட்டும் அன்பு, அவன் படக்கூடிய கஷ்டங்களை மறக்கடித்து விடுகிறது அல்லது அவற்றைத் தாங்கிக் கொண்டு மேலும் வாழ்வில் முன்னேறுவதற்கான ஊட்டத்தை அவனது உடலுக்குத் தருகிறது.
எனவே நம்மைச் சுற்றியிருப்பவர்களின் அரவணைப்பு தான் இந்த உலக வாழ்கையை நமக்கு இன்பகரமாக ஆக்குகின்ற மாபெரும் பாக்கியம் இப்படிப்பட்ட பாக்கியத்தை அல்லாஹ் சொர்க்கவாசிகளுக்குத் தர இருக்கிறான்.
சொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தில் அவர்களைச் சுற்றி இருப்பவர்களின் அன்பு கிடைக்கிறது. இதை நல்லவர்களுக்குக் கிடைக்கும் பாக்கியமாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ்வின் அன்பு
நாம் எல்லோரும் அல்லாஹ்வை விரும்புகிறோம். ஆனால் அல்லாஹ் நம்மை விரும்புகிறானா என்பது தான் கவனிக்க வேண்டிய அம்சம். நல்லவர்களுக்கு மட்டும் அல்லாஹ்வின் திருப் பொருத்தம் கிடைக்கிறது.
'இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.' (அல்குர்ஆன் 7:135)
அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்என்று அல்லாஹ் கூறுவான்.அல்குர்ஆன் (5:19)'நம்பிக்கை கொண்;ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.அல்குர்ஆன் (9:72)
சொர்க்கத்தில் நல்லவர்களுக்குள் கிடைக்கும் பாலாறு, தேனாறு மது ஆறு, கனி வர்க்கங்கள், தூய்மையான துணைகள் ஆகிய அனைத்தையும் விட சிறந்த பாக்கியம் ஒன்று வழங்கப்படும். அல்லாஹ்வின் திருப்பொருத்தமே அந்தத் தலை சிறந்த பாக்கியம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, சொர்க்கவாசிகளே!என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ்'திருப்தி அடைந்தீர்களா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ள போது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் 'அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்என்பான். அவர்கள் 'அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள் மீது என் திருப்பதியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான். (அறிவிப்பவர்அபூசயீத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு,நூல் : புகாரி - 6549)
வானவர்களின் அன்பு
தூய்மையான படைப்பான வானவர்கள் சொர்க்கவாசிகளுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள். அழகான முறையில் சொர்க்கவாசிகளுக்கு வரவேற்பு கொடுப்பார்கள்.
'நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).' அல்குர்ஆன் : (13:24)
மற்ற சொர்க்கவாசிகளின் அன்பு
சொர்க்கத்தில் பகைமைக்கும் வெறுப்புணர்வுக்கும் இடமே இல்லை. ஏனென்றால் அவர்களின் உள்ளங்களிலிருந்து குரோத மனப்பான்மையையும் கெட்ட எண்ணங்களையும் அல்லாஹ் அகற்றி விட்டான். அங்கு சகோதரர்களாக அன்புடன் நடந்து கொள்வார்கள்.
'அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதங்களை நீக்குவோம் கட்டில்களில் நேருக்கு நேர் நோக்கி சகோதரர்களாக இருப்பார்கள்.அல்குர்ஆன் (15:47)
உலக வாழ்விலும் கிடைக்கிறது
மறுமையில் சொர்க்கவாசிகளைச் சுற்றி இருப்பவர்களின் அன்பு சொர்க்கவாசிகளுக்குக் கிடைப்பதை போல் இந்த உலகத்திலும் நல்லவர்களுக்கு இந்தப் பாக்கியத்தை அல்லாஹ் வழங்குகிறான்.
இவ்வுலகில் வாழும் போதே நல்லவர்கள் அல்லாஹ்வின் பிரியத்தைப் பெற்று விடுகிறார்கள். இதனால் வானவர்களும் இவர்களை நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து பூமியில் உள்ள மக்களும் நல்லோர்களை நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
நரகத்தில் நரகவாசிகளுக்கு அவர்களைச் சுற்றி இருப்பவர்களின் வெறுப்பு கிடைப்பது போல் இந்த உலகத்திலும் தீயவர்களுக்கு இந்தத் தண்டனையை அல்லாஹ் தருகிறான்.
கெட்டவனாக வாழ்பவனை அல்லாஹ் வெறுக்கிறான். இதனால் வானவர்களும் அவனை வெறுக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பூமியில் உள்ள மக்களும் தீயவர்களை வெறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!நீங்களும் அவரை நேசியுங்கள்என்று அறிவிப்பார்கள். (ஆதாரம் : புகாரி2074)
'விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகின்றது.அறிவிப்பவர்அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி (3209)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார். பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான். இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.அறிவிப்பவர்அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல் : திர்மிதி (3085)
கெட்டவனை பூமியில் உள்ளவர்கள் வெறுப்பார்கள்
கெட்டவனை பூமியில் உள்ளவர்கள் வெறுப்பார்கள். அவன் இறந்து போனால் தான் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இத்தகையவர்கள் மறுமை வாழ்வை அடைவதற்கு முன்பாகவே மக்களுடைய வெறுப்பை உலக வாழ்விலேயே பெற்றுக் கொள்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் '(இவர்) ஓய்வு பெற்றவராவார்;; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்என்று சொன்னார்கள் மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! ஓய்வு பெற்றவர்: அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்'இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வு பெற்று இளையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனிடமிருந்து மற்ற அடியார்கள், நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு பெறுகின்றனஎன்று சொன்னார்கள். அறிவிப்பவர்அபூ கத்தாதா ரளியல்லாஹு அன்ஹுநூல் : புகாரி (6512)
எனவே இத்தகைய தண்டனையை இந்த உலகத்திலும் மறுமையிலும் நாம் பெற்றுவிடக் கூடாது. பிறரது அன்பை இந்த உலகத்திலும் மறுமையிலும் பெற்று வெற்றி பெறுவது நமது நோக்கமாக இருக்க வேண்டும். இறைவனுக்கு பிடித்தமான அடிப்படையில் நடப்பதன் மூலம் இந்த வெற்றியை நாம் அடையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக