பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2011

வள்ளல் யார்?



அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வினவினார்கள்:
தாராளக் குணம் கொண்டவர்களில் உங்களில் எல்லோரையும் விடச் சிறந்த வள்ளல் யாரென உங்களுக்குத் தெரியுமா?’
நபித்தோழர்கள் விடையளித்தார்கள்:
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தான் நன்கு அறிந்தவர்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
வழங்கும் குணம் கொண்டவர்களில் இறைவனே எல்லோரையும் விடச் சிறந்த வள்ளல். ஆதமின் வழித்தோன்றல்களில் எல்லோரையும் விடச் சிறந்த வள்ளலாக நான் இருக்கிறேன். எவர் அறிவைப் பெற்று அதனை மற்றவர்களுக்கும் எடுத்துரைத்தாரோ அவர்தான் எனக்குப் பிறகு எல்லோரையும் விடச் சிறந்த வள்ளலாவார். அவர் மறுமை நாளில் ஒரு அமீர் (தலைவர்) என்கிற அந்தஸ்தோடு (மிடுக்காக) வருவார் அல்லது மறுமை நாளில் எப்படி வருவாரெனில் அவர் சுயமாகவே ஒரு சமுதாயம்என்கிற அந்தஸ்து பெற்றவராக இருப்பார்’ (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகி)
இந்த நபிமொழியில் வழங்கி வாழ்வதன் சிறப்பும், வள்ளல் தன்மையின் சிறப்பும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அதே சமயம் உலகிலேயே மிகச்சிறந்த செல்வம் எது என்பதும் இந்த நபி மொழியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் விலை மதிப்பற்ற பொருள் அறிவுதான். இங்கு அறிவு என்பது மார்க்க அறிவையே குறிக்கும். இறைத்தூதர்களுக்கு அறிவும், ஞானமும், விவேகமும் வழங்கப்பட்டதாக திருமறை குர்ஆனில் பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
நபித்துவம் என்பதே அறிவும், ஞானமும், விவேகமும்தான் என பல இடங்களில் உருவகம் செய்யப்பட்டுள்ளது. அறிவின் அடிப்படையில்தான் மனிதனக்கு மற்றெல்லா படைப்புகளை விடவும் தனிச்சிறப்பும், மேன்மையம் மகத்துவமும் வழங்கப்பட்டுள்ளது.
அறிவை எதனாலும் பூட்டி வைக்க முடியாது. அறிவைத் தேடிப் பெறுவது என்பதற்கு அதன்படி வாழ்ந்து காட்டுவது என்பதுதான் அசல் பொருள் ஆகும். அறிவும், ஞானமும், விவேகமும், மதிநுட்பமம் உண்மையில் பேரொளி, வெளிச்சம் போன்றவையே. ஒளி எங்கெல்லாம் பாய்கிறதோ அங்கெல்லாம் ஒளிமயமாகி விடுகிறது.
இதைப்போலவே ஒரு மனிதனுக்கு உண்மையான அறிவொளி கிட்டும் போது அதனால் அவனுடைய மனதின் இண்டு இடுக்குகள் யாவும் ஒளிமயமாகி விடுகின்றன. அதுமட்டுமின்றி அவனடைய ஒட்டுமொத்த வாழ்விலிருந்தே அறியாமை எனும் இருள்கள் யாவும் கழன்று சிதறி விடுகின்றன.
ஒரு மனிதன் பசியோடு இருக்க, அவனுக்கு முன்னால் கமகமவென்று மணக்கும் பிரியாணியோ, வடை பாயாசத்துடன் கூடிய அறுசுவை உணவோ வைக்கப்பட்டிருக்க அவன் அதனைச் சாப்பிட்டு பசியாறாமல் அந்த உணவு வகையறாக்களைக் குறித்து பேசிக் கொண்டே அமர்ந்திருப்பானா? அது சாத்தியம் தானா?
ஆனாலும் பாருங்கள். நம்மைச் சுற்றிலும் எத்தனையோ அறிஞர்களைப்பார்க்கலாம். வெளிப்படையாகப் பார்க்கும்போது இவர்கள் மெத்தப் படித்தவர்களாக, மார்க்க அறிஞர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய நடைமுறை வாழ்வில் அவர்கள் அறிஞர்கள்தாம்என்பதற்கான எவ்விதமான சான்றும் கிடைக்காது.
இதன் பொருள் என்ன?
எந்த வகையில் சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டுமோ, அத்தகைய முறையில் அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை என்பதுதானே!
மனிதன் எதனையெல்லாம் கற்றானோ அது அவனுடைய செயல்களுக்கான உந்து சக்தியாக ஆகிவிட வேண்டும். அவனை செயல்பட வைக்கக் கூடியதாக அந்த அறிவுஇருக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் அறிதல்’, ‘கற்றறிதல்’, ‘கல்வி’.
இவ்வாறு ஒருவன் கற்கும்போது அந்த அறிவு வெளிப்படையான தகவல்கள் என்கிற அளவோடு நின்று விடுவதில்லை. அது அவனுடைய இதயத்தின் நுட்பமான உணர்வுகளையெல்லாம் மீட்டி விடுகிறது. பிறகு மனிதன் மிகச்சிறந்த உணர்வுகள், மனோபாவங்கள் ஆகியவற்றைக் கொண்டவனாக ஜொலிக்கத் தொடங்கி விடுகிறான்.
அந்த அறிவுஒரு தூய்மையான உலகு குறித்து அறிமுகப்படுத்துவதோடு நின்று விடுவதில்லை. அவனை அந்த தூய்மையான உலகுக்குள் புகுத்தி விடவும் செய்கிறது. பிறகு அவனால் அந்த உலகிலிருந்து வெளியேறுவது இயலாதவொன்றாக ஆகி விடுகிறது.
அவனுடைய இதயத்துக்கும், உணர்வுக்கும் எத்தகைய தூய்மையான சூழல் கிட்டி விடுகிறதெனில் அதில் எந்த வித முரண்பாடோ, கோணலோ, தடங்கலோ அறவே இருப்பதில்லை. எந்தவிதமான தேக்கமோ, இடப்பற்றாக்குறையோ, புழுக்கமோ இல்லாத ரம்மியமான சூழல் அது! அத்தகையச் சூழலில் மனிதன் இறைவனிடமிருந்து நேரடியாக அருள் பெறுவதைப் போன்று உணரத் தொடங்கி விடுகின்றான்.
இறைவன் மகத்தானவன், பேரருள் மிக்கவன். அவன் மனிதனுக்கு அருளாத நன்மை ஏதேனும் உண்டா? நம்முடைய சுயஇருப்பே அவனுயை அருள்வளம் மற்றும் வள்ளல் குணத்துக்கு உயிர்த்துடிப்புள்ள சான்றாக விளங்குகிறது. அதுமட்டுமல்ல, அவன் தான் நாம் வாழ்வதற்காக, நம்முடைய முழு வாழ்வுக்காக எல்லாவிதமான வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளான்.
அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்’ (அல்குர்ஆன் 2:29)
நீங்கள் பார்க்கவில்லையா? வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும், வெளிப்படையான மற்றும் மறைவான தன்னுடைய அருட்கொடைகளை உங்களுக்கு அவன் நிறைவாக்கித் தந்துள்ளான்.’ (அல்குர்ஆன் 31:20)
இறைவனுக்குப் பிறகு இறையடியார்களில் எல்லோரையும் விடச் சிறந்த வள்ளலாக இருப்பது இறைவனின் தூதர்தான். இறைத்தூதர் மூலமாகத் தான் நமக்கு இறைவனைப் பற்றிய புரிதலும், தெரிதலும் கிடைக்கிறது.
இறைவனைப் பற்றிய அறிவையும், புரிதலையும் கற்றுத் தருவதோடு இறைத்தூதர் நின்றுவிடுவதில்லை. இறைவனுக்கு எந்தெந்த பண்புகளும், நடத்தைகளும் விருப்பமானவையோ அந்தப் பண்புகளை மேற்கொண்டு நம் முன்னால் அழகிய முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறார். ஒரு நபர் இறைவனை எந்தளவுக்குப் புரிந்து கொள்கிறாரோ, இயல்பாகவே அந்தளவுக்கு அதிகமான வள்ளல் குணம் கொண்டவராக இருப்பார். இறைத்தூதர்கள் இறைவனை மற்ற எல்லோரையம் விட அதிகமாக அறிந்தவர்களாக, புரிந்து கொண்டவர்களாக இருந்தனர்.
உங்களுக்கு எல்லோரையும் விட அதிகமாக இறைவனுக்கு அஞ்சுபவனாகவும், உங்கள் எல்லோரையும் விட அதிகமாக இறைவனை அறிந்தவனாகவும் நான் இருக்கின்றேன்என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றுள்ளார்கள். (நூல்: புகாரி)
இறைத்தூதருக்குப் பிறகு மனிதர்களில் மற்ற எல்லோரையும் விட வள்ளல் குணம் கொண்டவர் யார் என்பதனையும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நயமாக எடுத்துரைத்துள்ளார்கள். யார் கல்வி கற்ற பிறகு மவுனமாக மூலையில் முடங்கி விடாமல், தான் கற்றதை மற்றவர்களுக்கும் கற்பிக்கும் வேள்வியிலும், தொடர் முயற்சியிலும் ஈடுபட்டு அறிவை பரப்புகிறாரோ அவர்தான் மற்ற எல்லோரையும் விட அதிகமான வள்ளல் குணம் கொண்டவர்.
அறிவை விட மிகச் சிறந்த செல்வம் உலகில் கிடையாது. எனவே அவனுடைய வள்ளல் குணத்துக்கு நிகரான வள்ளல் குணம் வேறெதுவும் கிடையாது. அவன் அறிவைப் பரப்புகிறான். இறைவனின் அடியார்களை நேர்வழியின் பக்கம் அழைக்கின்றான். அவர்களுடைய வெற்றிக்கான, வளத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறான்.
இத்தகைய மனிதன் வள்ளலாக மட்டும் இருப்பதில்லை. ஒரு தலைவனாக, வழிகாட்டியாக ஜொலிக்கிறான். இதன் காரணமாகத்தான் அவன் மறுமை நாளில் ஒரு அமீர் (தலைவர்) என்கிற அந்தஸ்தோடு, சிறப்போடு, மிடுக்கோடு அந்த மாபெரும் அவையில் நுழைவான்.
அவனுடைய அந்தஸ்து ஒரு தனிநபர்என்கிற அந்தஸ்தாக முடங்கி விடாது. மாறாக அவன் இயல்பிலேயே ஒரு சமுதாயம்எனும் அந்தஸ்தைப் பெற்றிருப்பான். ஏனெனில், உலகில் அவன் தன்னுடைய நலன், தன்னுடைய வளம் பற்றிய அக்கரை மட்டுமின்றி மனிதகுலம் முழுவதற்குமாகவும் கவலைப்பட்டான், வேதனைப்பட்டான், அக்கரைக்கொண்டான். அவனுடைய உழைப்பின் காரணமாக பெரும் மனிதகுழுவே பயனடைந்தது. ஆகவே மறமையிலும் அவனுக்கு இந்த உயர்வான அந்தஸ்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக