வியாழன், 19 ஜனவரி, 2012

மனிதக் கறி தின்னும் கார்ப்பரேட் மருத்துவர்கள்

கருத்துகள் இல்லை:

தூத்துக்குடி சேதுலட்சுமி படுகொலை மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது அரசு மருத்துவர்கள் காட்டும் அயோக்கியத்தனம் ஆகியவற்றை முன்வைத்து இக்கட்டுரை பதியப்படுகிறது. ஏற்றுக்கொள்பவர்கள் share செய்யுங்கள். நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.“சாலை விபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.” “மூளைச் சாவு ஏற்பட்ட இளைஞரின் உறுப்புகள் தானம்’’  -இது போன்ற செய்திகளை மாதம் ஒருமுறையேனும் நீங்கள் படித்திருப்பீர்கள்.


டாக்டர் தம்பதியான அசோகன்-புஷ்பாஞ்சலியின் ஒரே மகன் ஹிதேந்திரன் மரணம்தான் இத்தகைய தானத்துக்கெல்லாம் மூலகாரணம். ஹிதேந்திரன் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட விஷயம், மீடியாக்கள் மூலம் பரவி, மிகப்பெரிய விழிப்பு உணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தியது.

2010, ஏப்ரல் மாதக் கணக்கீட்டின்படி, 86 பேரிடமிருந்து 479 பேர் உறுப்பு தானம் பெற்று பயனடைந்திருப்பதாக அரசுக் குறிப்பு தெரிவிக்கிறது. அதே சமயம், உரிய நேரத்தில் உறுப்புகளைப் பயன்படுத்த முடியாமல் சட்ட நடவடிக்கைகள் தடுப்பதாக அரசுக்குப் புகார்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, கடுமையாக இருந்த பழைய விதிமுறைகளைத் தளர்த்தி உத்தரவிட்டது தமிழக அரசு.

வெளிப் பார்வைக்கு இது உயிர் காக்கும் விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் ஈவிரக்கமற்ற கொலை வியாபாரம் ஒளிந்திருப்பதாக சமூக அக்கறை கொண்ட சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
‘‘இங்கு மூளைச் சாவு என்பது லாபகரமான ஒரு தொழில்’’ என்கிறார்கள் இம்மருத்துவர்கள்.

‘‘மூளை என்பது சிறுமூளை, பெருமூளை என இரண்டு வகையாக செயல்படுகிறது. இரண்டுமே செயலிழந்தால்தான் அது மூளைச் சாவு. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, சிறுமூளை அல்லது மூளைத் தண்டு செயலிழந்தாலே போதும். சட்டப்படி அதை மூளைச்சாவு என்று அறிவிக்கிறார்கள்.

சிக்கல் என்னவென்றால், சிறுமூளை இறந்த பிறகும் பெருமூளை வேலை செய்யும் என்பதுதான். அப்படிப் பெருமூளை வேலை செய்தால், சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கிறார் என்றே அர்த்தம்.

உதாரணமாக, ஒரு கர்ப்பிணிக்கு பெருமூளை மட்டும் செயல்படுவதாக வைத்துக்கொள்வோம். அவரால் இயற்கையாக குழந்தை பெற முடியும், பால் கொடுக்கவும் முடியும். ஆண் என்றால், விந்தணுக்களை எடுத்து டெஸ்ட் டியூப் பேபி உருவாக்க முடியும். அடுத்த சந்ததியே இந்த நபரால்தான் என்கிற சூழ்நிலையில், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்துக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் இல்லையா?

எனவே, “சிறுமூளை செயலிழந்ததாகக் கூறி சாவு என அறிவிப்பது இயற்கை விதிகளுக்கு முரணானது மட்டுமல்ல.  சட்ட விரோதமானதும்கூட’’ என்று எச்சரிக்கிறார் பிரபலமான ஒரு நரம்பியல் நிபுணர்.

‘‘நரம்பியல் சட்ட விதிமுறைகளின்படி, பெருமூளை செயலிழந்துவிட்டதை நியூக்ளியர் ஸ்கேன் செய்துதான் உறுதிப்படுத்த முடியும். ஆனால், இந்தியாவைப் பொறுத்த அளவில் இதில்மிக பழங்காலத்து நடைமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள்.

ஜப்பானில், மூளைச் சாவு சம்பந்தமான குழப்பம் ஏற்பட்டபோது 100 நபர்களை நியூக்ளியர் ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது, 22 பேர் அதில் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. இதுபோன்ற சோதனைகள் இந்தியாவில் செய்யப்படுவதில்லை. எனவேதான், மூளைச் சாவு சட்டத்தில் திருத்தம் செய்தால் மட்டுமே இந்த அவலத்தைப் போக்க முடியும்” என்கிறார் அவர்.

சரி, “தானம், தானம்” என்கிறார்களே மருத்துவர்கள். உண்மையில் அது தானம்தானா?

‘‘இல்லை. தானம் என்கிற பெயரில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து பெறப்படும் மனித உறுப்புகள், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது’’ என்கிறார்கள் சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள்.

  ‘கெடாவர்’ என்கிற மனித கசாப்பு கடை:

அது என்ன கெடாவர் கசாப்பு கடை?

மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகளை ‘கெடாவர்’ என்று அழைக்கிறது மருத்துவ உலகம். இந்தக் கெடாவர் பிசினஸ்தான் தற்போதைய கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஹாட்டஸ்ட் பிசினஸ்.

பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகளில், உடல் உறுப்பு தேவைப்படுகிறவர்களுக்கு என தனியாகவே கெடாவர் ரெஜிஸ்ட்ரேஷன் கவுன்ட்டர் வைத்திருக்கிறார்கள். உறுப்பு தேவைப்படுபவர்கள் இந்த கவுண்ட்டர்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

இதற்காக, ஒருவர் ஒரு லட்சமோ அல்லது பத்து லட்சமோ டெபாசிட் செய்யவேண்டும். அதே சமயம், டெபாசிட் செய்துவிட்டு குறைந்தது ஆறு மாதம் முதல் ஐந்து வருடங்கள் வரை கெடாவருக்காக இவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.  இன்று சராசரியாக ஒவ்வொரு கார்ப்பரேட் மருத்துவமனையிலும் தலா ஒரு உறுப்புக்கு 50 முதல் 80 பேர்வரை முன்பதிவு செய்திருப்பதாகக் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.இதிலும்கூட, வசதியான நபர் என்றால், ஒரே ஆள் பத்துப் பதினைந்து மருத்துவமனைகளில் டெபாசிட் செய்திருப்பாராம்.

இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகையை எப்போது வேண்டுமானாலும் நோயாளிகள் திரும்பப் பெற முடியும். என்றாலும், முக்கால்வாசிப்பேர் திருப்பி வாங்குவது இல்லை. காரணம், கேட்ட உறுப்பு கிடைக்கவேண்டிய நாளில், ‘லம்ப்பாக இருபது லட்சம்’ கொடுத்து பெரும் பணக்காரர்கள் யாராவது லவட்டிக்கொண்டு போய்விடுவதே. எனவே, டெபாசிட் செய்தவர் மீண்டும் காத்திருப்புப் பட்டியலிலேயே இருப்பார்.

இப்படியாக, டெபாசிட் தொகையாகவே நாடு முழுவதும் பல நூறு கோடி ரூபாய் தனியார் மருத்துவமனை கணக்குகளில் கொள்ளையடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த டெபாசிட்டுகளுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பதுதான்.

எந்த முதலீடும் இல்லாமல், நோயாளியின் தலையில் மிளகாய் அரைத்து, மாதம் ஒன்றுக்கு வட்டியாகவே பல லட்சங்கள் வருமானம் பார்க்கிற பிஸினஸ். மருத்துவம் படித்த மூளை என்னமாக சார்டட் அக்கவுண்ட் செய்கிறது பார்த்தீர்களா?

ஒரு மருத்துவமனை ஊழியர் இப்படிச் சொன்னார்: ‘‘சில சக்சஸ்ஃபுல் ஆபரேஷன்களைப் பற்றிப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். வெளிநாட்டினருக்கு கல்லீரல் மாற்று அறுவை, இதய அறுவை செய்ததை சாதனையாக காட்டியிருப்பார்கள். ஆனால், நம் நாட்டில் தானமாகப் பெறப்பட்ட உடல் உறுப்பை, வெளிநாட்டினருக்கு எப்படிக் கொடுக்கிறீர்கள்? என்று ஒரு நாயும் கேள்வி எழுப்புவதில்லையே! ஏன் சார்?

இங்கே நம்முடைய மக்களிடமிருந்து மூளைச்சாவு என்கிற பெயரில் இலவசமாகப் பெறப்படும் உடல் உறுப்புகளை, வெளிநாட்டுகாரன்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்வரை விற்கிறானுங்க சார் அயோக்கியப் பயலுவ.’’

மனித உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம் என்று இருக்கும்போது, வெளிநாட்டினருக்கு எப்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

‘‘இங்கே உறுப்புகளைப் பெற்றுக்கொள்ள ஆள் இல்லை என்றால், அதை வெளிநாட்டினருக்குப் பொருத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கேட்டுக்கொண்டன. எனவே, கருணை அடிப்படையில் அரசு இதற்கு அனுமதி அளித்திருக்கிறது’’ என்கிறார் கார்ப்பரேட் மருத்துவமனையில் புரியும் ஒரு மருத்துவர்.

நல்ல கருணையாக இருக்கிறதே! உள்நாட்டில் அவனவன் லட்சக்கணக்கில் கெடாவருக்காக டெபாசிட் செய்துவிட்டு, வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருப்பானாம். அரசாங்கம் என்னடாவென்றால், அந்நியர்களுக்கு கருணை காட்டுவானாம்!

இதற்குத் தீர்வே இல்லையா?

‘‘இரண்டு விஷயங்கள்.

ஒன்று, கெடாவர் என்பது மருத்துவமனைகளையும் தாண்டி மாஃபியாக்களின் கையில் உள்ளது. மருத்துவச் சட்டத்தில் பல ஓட்டைகள் இருப்பதால் இந்த மாஃபியாக்களை ஒழிப்பது கடினம். ஒரு லட்சத்தில் முடிக்க வேண்டிய ஆபரேஷன்களை இன்றைக்கு 20 லட்சமாக்கியதும் இந்த மாஃபியா கும்பல்தான்.

இன்னொன்று நோய்க்கான காரணம். என்டோசல்ஃபான் மாதிரியான தடை செய்யப்பட்ட மருந்துகள் தாராளமாக இந்தியாவில் புழங்குகின்றன. உள்நாட்டில் கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் உள்ளிட்ட பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு இந்த மருந்துகள்தான் காரணம். இத்தகைய மருந்துகளின் பின்னணியில் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் சக்திகள், அதிகாரிகள், தனியார் முதலாளிகள் கூட்டாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே, அரசு இதற்கென ஒரு நிபுணர் குழுவை நியமித்தோ அல்லது சி.பி.ஐ வசம் ஒப்படைத்தோ ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விடிவே இல்லை.’’  இதை நான் சொல்லவில்லை. கார்ப்பரேட்டில் பணிபுரியும் மனைதநேமுள்ள ஒரு மருத்துவர் சொல்கிறார்.
கெடவர் கொள்ளைக்காரர்களின் கொடூர முகத்தை தோலுரித்த மருத்துவ உலகம்:ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது தந்தைக்கு கல்லீரல் பிரச்னை. மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டும். இந்த சூழ்நிலையில்தான் அந்தப் பத்திரிகைச் செய்தியைப் பார்க்கிறார். ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில்(இந்த மருத்துவமனை இப்போது சென்னைக்கும் வந்து வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது), இதுபோன்ற ஆபரேஷன்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து குளோபல் மருத்துவமனையில் தன் தந்தையை அட்மிட் செய்கிறார் ஸ்ரீனிவாசன். பரிசோதனைகளுக்கு மட்டும் 95 ஆயிரம் ரூபாய் பில் கட்டுகிறார். அப்போது, லலிதா ரகுராம் என்கிற ‘கெடாவர் கோ-ஆர்டினேட்டர்’ ஸ்ரீனிவாசனைச் சந்திக்கிறார். இவர் சென்னையைச் சேர்ந்த மோகன் பவுண்டேஷன் எனப்படும் என்.ஜி.ஓ ஊழியர். சென்னையில் ஒரு கெடாவர் இருப்பதாகவும், பத்து லட்சம் கட்டினால் அதை வாங்கித் தருவதாகவும் ஸ்ரீனிவாசனிடம் கூறுகிறார்.

இதை நம்பி, நகையை விற்று, கடனும் வாங்கி அப்பாவுக்காகப் பணத்தைக் கட்டுகிறார் ஸ்ரீனிவாசன்.

சில நாட்கள் கழித்து, கெடாவர் ரெடியாகிவிட்டதாகவும், அதைத் தனி விமானத்தில்(எவ்ளோ பெரிய பிசினஸ் பார்த்தீர்களா?) கொண்டுவர ஏழு லட்ச ரூபாய் கட்டும்படியும் கேட்கிறார் லலிதா. ஆனால், ஸ்ரீனிவாசனால் கட்ட முடியவில்லை. ஆனால், அப்பாவின் நிலைமை சீரியசாகிவிட, உடனடியாக மாற்றுக் கல்லீரல் பொருத்தியே ஆகவேண்டிய கட்டாயம்.

அப்போதுதான், ‘‘கவலையை விடுங்க. உங்க அம்மாவோட கல்லீரலை எடுத்து உங்க அப்பாவுக்குப் பொருத்திடலாம். இதுபோல நாங்க 55 ஆபரேஷன்களை வெற்றிகரமா செஞ்சிருக்கோம். ஆபரேஷன் செலவுகளை மட்டும் கட்டினால் போதும்’’ என்று மருத்துவமனையில் உறுதி கொடுக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறது.

ஆனால், அடுத்து நடந்ததுதான் ஒண்ணாம் நெம்பர் ‘மனிதாபிமானம்’.

ஸ்ரீனிவாசனின் அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுபோகும் வழியில், (சமயம் பார்த்து) 23 லட்சம் கட்டச் சொல்லியிருக்கிறது ஹாஸ்பிட்டல் நிர்வாகம். இரண்டு பேரின் உயிர் என்பதால், அதையும் கட்டியிருக்கிறார் ஸ்ரீனிவாசன். வழக்கம்போல், ‘ஆபரேஷன் சக்ஸஸ்’ எனக்கூறி வெளியே வந்திருக்கிறார் மருத்துவர்.

ஆனால், அடுத்த பதினைந்து நாளில் ஸ்ரீனிவாசனின் அப்பாவுக்கு உயிர் பிரிந்துவிட்டது. கல்லீரல் தானம் கொடுத்த அம்மா கோமாவுக்குப் போய்விட்டார். தொடர்ந்து 20 மாதங்கள்வரை கோமாவிலேயே இருந்திருக்கிறார் அந்த அம்மா.

முடிவில், 20 மாதங்கள் கோமா பேஷண்ட்டைப் பராமரித்ததாகக் கூறி இரண்டாம் கட்டமாக எக்ஸ்ட்ரா 45 லட்ச ரூபாய் கேட்டிருக்கிறார்கள். ஸ்ரீனிவாசன் அதையும் கட்டியிருக்கிறார். ஆனால், இரண்டாவது ஆண்டில் அந்த அம்மாவும் இறந்து போய்விட்டார்.

கெடாவர் பிசினஸ் என்றால் என்ன, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? என்று இப்போது புரிகிறதா? இதுதான் உடல் உறுப்பு தானமும் மருத்துவமனைகளின் ‘மனிதாபிமானமும்’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
back to top